திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 48 -- வலி அறிதல்
முந்திய அதிகாரத்தில் கூறப்பட்ட நால்வகை உபாயங்களுள், நான்காவது உபாயம் ஆகிய தண்டித்தலை மேற்கொள்ளுதற்கு உரிய வினை வலிமை, தன் வலிமை, மாற்றான் வலிமை, துணை வலிமை ஆகிய நான்கு வித வலியையும் அளந்து அறிதல், இந்த அகிதாரத்தில் கூறப்பட்டது.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "தான் செய்யக் கருதிய தொழிலின் வலியையும், அத் தொழிலைச் செய்து முடிக்கும் தனது வலியையும், அத் தொழிலை விலக்கும் பகைவனது வலியையும், இருவர்க்கும் துணையாக உள்ளோரது வலியையும் ஆராய்ந்து, தனது வலி மிகுமாயின், தொழிலைச் செய்வதை மேற்கொள்க" என்கின்றார் நாயனார்.
எக்காலத்தும் ஒருவன் தான் எண்ணிய தொழிலைச் செய்ய முற்படுங்கால், தோல்வி என்பதை நிச்சயமாகவும், வெற்றி என்பதை சந்தேகமாகவும் கொண்டு செய்து முடித்தல் வேண்டும். எப்போதும் தனது வலியை மட்டுமே உறுதியாகக் கொண்டு செய்யும்போது, அந்த இறுமாப்பால், தக்க உபாயங்களை நாடாது செய்யும் செயலில் தோல்வி உண்டாகலாம்.
திருக்குளைக் காண்போம்...
வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்,
துணைவலியும் தூக்கிச் செயல்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வினை வலியும்--- தான் செய்யக்கருதிய வினைவலியையும்,
தன் வலியும்--- அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும்,
மாற்றான் வலியும்--- அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்,
துணை வலியும்--- இருவர்க்குந் துணையாவார் வலியையும்,
தூக்கிச் செயல்--- சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால், தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
நீச உருவம் நிலன் ஆள் திரிசங்கு
தேசிகனால் பெற்றான்,சிவசிவா! --- பேசின்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
சத்தியவிரதன் என்னும் திரிசங்கு, வசிட்டன் சாபத்தால் நீசன் ஆனான். கௌசிகன் துணையால் வான் போகலுற்றான். தேவர்களால் அந்தரத்தில் தடைப்பட்டு நின்றான்.
நீதிநெறியுடன் ஆட்சி புரிந்து வந்த திரிசங்கு மன்னன் தனக்கு முதுமை ஏற்பட்டு விட்டதாகக் கருதினான். சகல புண்ணியங்களையும் செய்தவன் சொர்க்க போகம் அனுபவிப்பான் என்று அவனது தந்தையான அருணன் அடிக்கடி கூறுவது அவனது நினைவிற்கு வந்தது. உடம்போடு சொர்க்கம் செல்ல வேண்டுமென்ற ஆசை திரிசங்கு மன்னனுக்கு ஏற்பட்டது. இதுவரை யாருமே அடையாத ஆசை இது. ஒரு நன்னாளில் தனது மைந்தன் அரிச்சந்திரனுக்கு முடிசூட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தான். அரச பொறுப்பிலிருந்து விடுபட்ட திரிசங்கு நேராக வனத்திற்குச் சென்றான். அங்கு தனது குலகுருவான வசிட்ட முனிவரைச் சந்தித்தான். உடம்போடு சொர்க்கம் செல்லும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவனது விசித்திரமான ஆசை முனிவருக்கு வியப்பை அளித்தது. அவர் சிரித்துக்கொண்டே, "திரிசங்குவே! இது நடக்ககூடிய காரியமல்ல. பூலோகத்தில் பிறந்த எவரும் உடம்போடு சொர்க்கம் செல்வது என்பது முடியவே முடியாது" என்று கூறிவிட்டார்.
இருப்பினும் திரிசங்கு தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான். அவன் மேலும் பல தவயோகிகளைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்களும் அது நிறைவேற முடியாத ஆசை என்று கூறிவிட்டனர். இறுதியாக விசுவாமித்திர முனிவரைச் சந்தித்தான். அவர் பாதங்களில் விழுந்து வணங்கி, திரிசங்கு தனது விருப்பத்தைத் தெரிவித்தான். மற்ற முனிவர்கள் கூறியவற்றையும் முனிவரிடம் தெரிவித்தான். வசிட்ட முனிவரே திரிசங்குவின் விருப்பத்தை வீண் கனவு என்று கூறிவிட்டதை விசுவாமித்திரர் எண்ணிப் பார்த்தார். அவரால் முடியாததைத் தான் செய்து காட்ட வேண்டும் என்று முடிவிற்கு வந்தார். தன் தவ வலிமையால் திரிசங்குவை உடம்போடு சொர்கத்திற்கு அனுப்புவதாக வாக்களித்தார். திரிசங்குவிடம் தனது விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு கரம் குவித்து வணங்கி நிற்குமாறு விசுவாமித்திரர் கூறினார். திரிசங்குவும் அவ்வாறே வணங்கி நின்றான். விசுவாமித்திரர் இதுவரை தான் செய்த தவங்களின் பயன்கள் யாவற்றையும் திரிசங்குவிற்கு அர்ப்பணித்து "சொர்க்கம் செல்க" என்றார். உடனே திரிசங்கு வானவீதியை நோக்கி கிளம்பினான். சொர்க்க வாயிலை அவன் நெருங்கும்போது தேவலோக வேந்தன் இந்திரன் மனித உடம்புடன் திரிசங்கு வருவதைக் கண்டு கோபம் அடைந்தான். தன்னுடைய வச்சிராயுதத்தால் அவனைத் தாக்கினான். அடி தாங்க முடியாமல் திரிசங்கு அலறிக் கொண்டே பூமியை நோக்கி தலைகீழாக வந்து கொண்டிருந்தான். அதனைக் கண்ட விசுவாமித்திரர் ஆத்திரமடைந்து "நில்" என்றார். திரிசங்கு அந்தரத்தில் நின்றான். முனிவர் தனது தவ வலிமையால் திரிசங்குவிற்குத் தனியாக ஒரு சொர்க்கத்தைப் படைத்துத் தந்தார்.
விசுவாமித்திரர் தனது தவவலிமையைய மட்டுமே துணாயாகக் கொண்டு செய்ததால், திரிசங்கு அந்தரத்தில் இருக்க வேண்டியதாயிற்று.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
தற்றூக்கித் தன்துணையும் தூக்கி,பயன்தூக்கி,
மற்றவை கொள்வ மதிவல்லார்,--- அற்றன்றி,
யாதானும் ஒன்றுகொண்டு,யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
தன் தூக்கி --- தன்னால் இக்காரியங்கள் முடியுமா என்று முதலில் ஆராய்ந்து,தன் துணையுந் தூக்கி --- தனக்குத் துணை ஆவாரையும் ஆராய்ந்து, பயன் தூக்கி --- செய்தால் விளையும் பயனையும் ஆராய்ந்து, மதிவல்லோர் அவை கொள்ப --- அறிவிற் சிறந்தோர் அவற்றை மேற்கொள்வர், அற்றன்றி --- அங்ஙனம் ஆராய்தல் இல்லாமல், யாதானும் ஒன்று கொண்டு --- இயலாத செயல்களுள் யாதானும் ஒன்றை மேற்கொண்டு, யாதானும் செய்தக்கால் --- செய்யும் முறை யறியாது ஏதாவது செய்தால், யாதானும் ஆகிவிடும் --- தான் தான் நினைத்ததின்றி அதற்கு மாறாகித் துன்பமே உண்டாகும்.
(க-து.) எக்காரியத்தையும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும்.
'யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்' என்பது பழமொழி.
மாற்றலர் வன்மை ஓராய்,
மற்று அவர் படைஞர் தங்கள்
ஆற்றலை உணராய்,நின்தன்
அரும்பெரும் தலைமை உன்னாய்,
போற்றிடும் அமைச்சரோடும்
புரிவன சூழாய்,வாளா
சீற்றம் அங்கு அது மேல் கொண்டு
செல்லலும் திறலின் பாற்றோ. --- கந்தபுராணம்.
இதன் பொருள் ---
பகைவரின் வலிமையை ஆராய்ந்து பார்க்கமாட்டாய். அவருடைய மடைகளின் வலிமையை ஆற்றல் இன்னதென்று உணர மாட்டாய். உனது தலைமையையும் எண்ணிப் பார்க்கமாட்டாய். உன்னைப் போற்றுகின்ற அமைச்சர்களோடும் செய்ய வேண்டியதை ஆராயமாட்டாய். உன்னுடைய கோபத்தை மட்டுமே கொண்டு செல்வது வீரம் ஆகுமா? ஆகாது.
No comments:
Post a Comment