அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரிசன பரிச (பொது)
முருகா!
விலைமாதர் கூட்டுறவை மறந்து,
உமது திருவடி நினைவில் இருக்க அருள்வாய்.
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு மதனுய ரம்பொன் மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ......மொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள
அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட லளறுப டிந்து வாயமு
தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி
இருவரு மருவிய ணைந்து பாழ்படு
மருவினை யறவும றந்து னீள்தரு
மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ......மொருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால்
பருகுத லரியது கந்த தீதிது
உளதென குறளிகள் தின்று மெதகு
பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா
பகிரதி சிறுவவி லங்க லூடுறு
குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு
பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அரிசன பரிச, அலங்க்ருத, அம்ருத
கலசமும், அதன் உயரம் பொன் மாமுடி
அதும் என,இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ......ஒருகோடி
அடைபடு,குட யுகளங்கள் ஆம் என,
ம்ருகமத களபம் அணிந்த,சீதள
அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி,
இரவொடு பகல் ஒழிவு இன்றி,மால்தரும்
அலைகடல் அளறு படிந்து,வாய்அமுது
இனிது என அருள, அருந்தி,ஆர்வமொடு ......இதமாகி
இருவரும் மருவி அணைந்து பாழ்படும்,
அருவினை அறவும் மறந்து,உன் நீள்தரும்
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ......ஒருநாளே?
சுரர் குலபதி,விதி,விண்டு,தோல் உரி
உடைபுனை இருடிகள், அண்டர்ஆனவர்
துதிசெய,எதிர்பொர வந்த தானவர் ...... அடிமாள,
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை
நடமிட,நிணமலை துன்றவே, அதில்
துவர்இது,புளிஇது,தொய்ந்தது ஈது,இது,...... இதுவீணால்
பருகுதல் அரியது,உகந்தது ஈது, இது
உளது, என குறளிகள் தின்று,மெதகு
பசிகெட,ஒருதனி வென்ற சேவக! ...... மயில்வீரா!
பகிரதி சிறுவ! விலங்கல் ஊடு உறு
குறமகள் கொழுந! படர்ந்து மேல்எழு
பருவரை உருவ எறிந்த வேல்வல ...... பெருமாளே.
பதவுரை
சுரர் குலபதி--- தேவர் குலத் தலைவனான இந்திரன்,
விதி--- பிரமதேவன்,
விண்டு--- திருமால்,
தோல் உரி உடை புனை இருடிகள்--- மானின் தோலை ஆடையாகப் புனைந்த முனிவர்கள்,
அண்டர் ஆனவர் துதி செய---தேவர்கள் துதி செய்து வணங்க,
எதிர் பொர வந்த தானவர் அடி மாள --- எதிர்த்துப் போர் புரிய வந்த அரக்கர்கள் அடியோடு மாள,
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட--- அளவில்லாத பேய்க்கூடங்கள் நடம் இட,
நிண மலை துன்றவே--- மாமிச மலைகள் நிறைந்து இருக்க,
அதில் துவர் இது--- அதில் துவர்ப்புச் சுவை உள்ளது இது,
புளி இது--- புளிப்புச் சுவை உள்ளது இது,
தொய்ந்தது ஈது--- தொய்ந்து போனது இது,
இது இது வீணால் --- இது உண்பதற்குப் பயனற்றது,
பருகுதல் அரியது--- இது உண்ண முடியாதது,
உகந்தது ஈது இது உளது என--- உண்பதற்கு உகந்ததாக இது உள்ளது என்று,
குறளிகள் தின்று --- பூத பிசாசுகள் தின்று,
மேதகு பசி கெட--- மிக்க பசியானது தீர,
ஒரு தனி வென்ற சேவக--- ஒப்பற்ற நிலையில் தனித்து வெற்றி கொண்ட வீரம் மிக்கவரே!
மயில் வீரா --- மயில் ஏறும் வீரரே!
பகிரதி சிறுவ--- கங்கா நதி பாலகரே!
விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந--- வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!
படர்ந்து மேல் எழு பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே --- வானத்தில் படர்ந்து எழுந்த பெரிய கிரவுஞ்ச மலையில் பட்டு உருவும்படியாக வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
அரிசன பரிச அலங்க்ருத---மஞ்சள் பூசியுள்ள அலங்காரமான,
அம்ருத கலசமும்--- அமிர்த கலசம் போன்றதும்,
மதன் உயர் அம் பொன் மா முடியதும் என--- மன்மதனுடைய சிறந்த பொன்முடி என்றும் சொல்லும்படியாக விளங்கி,
இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும்--- இளைஞர்களின் உள்ளத்தையும் உயிரையும்,
ஒரு கோடி அடைபடு குட யுகங்களாம் என--- ஓர் கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் என்னும்படியாக,
ம்ருகமத களபம் அணிந்த--- கத்தூரிக் கலவையை அணிந்துள்ள,
சீதள அபிநவ கனதன மங்கைமாருடன் விளையாடி--- குளிர்ந்த,புதுமை வாய்ந்ததான பருத்த மார்பகங்களை உடைய விலைமாதர்ளுடன் விளையாடி.
இரவொடு பகல் ஒழிவின்றி--- இரவு பகல் ஒழிவு இல்லாமல்,
மால் தரு அலைகடல் அளறு படிந்து--- அறிவு மயக்கத்தை உண்டுபண்ணுவதாகிய காமக் கடலின் சேற்றில் படிந்து,
வாய் அமுது இனிது என அருள அருந்தி--- அவர்களின் வாயில் ஊறும் எச்சிலை இனிது எனத் தரப் பருகி,
ஆர்வமொடு இதமாகி--- விருப்பும் இன்பமும் கொண்டு,
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை --- இருவரும் தழுவி அணைத்து இருந்து பாழாவதற்கு இடமான செயல்களை,
அறவும் மறந்து--- அறவே மறந்து,
உன் நீள்தரும் இணைமலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே--- தேவரீரது ஒளி பொருந்திய திருவடிகளை உள்ளத்தில் நினைந்து வாழுகின்ற ஒரு நாளும் உண்டாகுமோ?
பொழிப்புரை
தேவர் குலத் தலைவனான இந்திரன், பிரமதேவன், திருமால், மானின் தோலை ஆடையாகப் புனைந்த முனிவர்கள், தேவர்கள் துதி செய்து வணங்க,எதிர்த்துப் போர் புரிய வந்த அரக்கர்கள் அடியோடு மாள, அளவில்லாத பேய்க்கூடங்கள் நடம் இட, போர்க்களத்தில் மாமிச மலைகள் நிறைந்து இருக்க, அதில் துவர்ப்புச் சுவை உள்ளது இது, புளிப்புச் சுவை உள்ளது இது, தொய்ந்து போனது இது, இது உண்பதற்குப் பயனற்றது, இது உண்ண முடியாதது என்று ஒதுக்க வேண்டியவைகளை ஒதுக்கி விட்டு, உண்பதற்கு உகந்ததாக இது உள்ளது என்று தெளிந்து, அந்தப் பிணங்களை பூத பிசாசுகள் தின்று, மிக்க பசியானது தீர,ஒப்பற்ற நிலையில் தனித்து வெற்றி கொண்ட வீரம் மிக்கவரே!
மயில் ஏறும் வீரரே!
கங்கா நதி பாலகரே!
வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!
வானத்தில் படர்ந்து எழுந்த பெரிய கிரவுஞ்ச மலையில் பட்டு உருவும்படியாக வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
மஞ்சள் பூசியுள்ள அலங்காரமான அமிர்த கலசம் போன்றதும், மன்மதனுடைய சிறந்த பொன்முடி என்றும் சொல்லும்படியாக விளங்கி, இளைஞர்களின் உள்ளத்தையும் உயிரையும், ஓரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் என்னும்படியாக,கத்தூரிக் கலவையை அணிந்துள்ள,குளிர்ந்த,புதுமை வாய்ந்த, பருத்த மார்பகங்களை உடைய விலைமாதர்ளுடன் விளையாடி. இரவு பகல் ஒழிவு இல்லாமல்,அறிவு மயக்கத்தை உண்டுபண்ணுவதாகிய காமக் கடலின் சேற்றில் படிந்து, அவர்களின் வாயில் ஊறும் எச்சிலை இனிது எனத் தரப் பருகி, விருப்பும் இன்பமும் கொண்டு, இருவரும் தழுவி அணைத்து இருந்து பாழாவதற்கு இடமான செயல்களை, அறவே மறந்து, தேவரீரது ஒளி பொருந்திய திருவடிகளை உள்ளத்தில் நினைந்து வாழுகின்ற ஒரு நாளும் உண்டாகுமோ?
விரிவுரை
அரிசன பரிச ---
அரிசனம் --- மஞ்சள், பரிசம் --- பூச்சு.
அலங்க்ருத---
அலங்கிருத --- அலங்காரம், சிங்காரம்.
ம்ருகமத களபம் அணிந்த---
ம்ருகமதம், மிருகமதம் --- கத்தூரி.
களபம் --- சந்தனம்.
ஒரு தனி வென்ற சேவக---
சேவக, சேவகம் --- வீரம்.
பகிரதி சிறுவ---
பகிரதி --- பகிரதன் கொண்டு வந்த நதி என்பதால் கங்கைக்கு, பகிரதி என்று பெயர்.
"கங்கா நதி பால" என்றார் கந்தர் அனுபூதியில்.
சிவபரம்பொருளின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்ததால், அவருக்கு முதலில் தணிவு தேவைப்பட்டது. தீப் பிழம்பை முதலில் தமது பொற்கரத்தால் எடுத்து, வாயுதேவனிடம் தந்தார் சிவபரம்பொருள். அவன் மெல்லக் கொண்டு போய், தீக் கடவுளிடம் தந்தான். அவனாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, கங்கையில் கொண்டு சேர்த்தான். அவளும் கொண்டு அமைய முடியவில்லை என்பதால், பூலோகத்தில் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தாள். வானில் இருந்து, வாயுவுக்கு வந்து, பின்னர் தீயின் வசம் இருந்து, அதன் பின்னர் நீருக்குச் சென்று, பூவுலகத்திற்கு முருகப் பெருமான் வந்து சேர்ந்தார்.
கங்கையில் தணிவு பெற்றதால், "கங்கை நதி பாலன்", "பாகிரதி சிறுவன்" எனப்பட்டார் முருகப் பெருமான்.
விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந---
விலங்கல் --- மலை. இங்கே வள்ளிமலையைக் குறிக்கும்.
கருத்துரை
முருகா! விலைமாதர் கூட்டுறவை மறந்து, உமது திருவடி நினைவில் இருக்க அருள்வாய்.
No comments:
Post a Comment