பெருமையும் சிறுமையும் பிறப்பினால் அல்ல
-----
திருக்குறளில், "பெருமை" என்னும் ஓர் அதிகாரம். பெருமை என்பது, பெரிய தன்மையைக் குறிக்கும். பெரிய தன்மையாவது, செய்வதற்கு எளிய செயல்களை விட்டு, அரிய செயல்களைச் செய்தல், கர்வம் இல்லாது இருத்தல், பிறருடைய குற்றங்களைச் சொல்லாது இருத்தல் போன்ற நற்குணங்களைக் குறிக்கும். தமது நிலையில் இருந்து எக்காலத்தும் தாழ்வதற்கு மனம் கொள்ளாத நிலையே ஒருவனுக்குப் பெருமை தருவது ஆகும். இதை "நிலையில் தாழாது அடங்கியான் தோற்றம், மலையினும் மாணப் பெரிது" என்றார் திருவள்ளுவ நாயானார். இந்தப் பெருமையானது ஒருவனுக்குக் குடிப் பிறப்பினால் மட்டுமே அமைவது இல்லை. அவன் செய்கின்ற செயலினால் அமையும். செயல் என்பது செய்தற்கு அரிய செயல் என்று மேலே கூறினோம். "செயற்கு அரிய செய்வார் பெரியர்" என்றும் முன்னரே திருவள்ளுவ நாயனார் காட்டி அருளினார் என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம்.
"பெருமையும் சிறுமையும் தான்தர வருமே" என்றது "வெற்றிவேற்கை" என்னும் நூல். மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவதில்லை).
எனவே, எல்லா மக்களுக்கும் பிறப்பின் இயல்பு என்பது பொதுவாக ஒத்து இருந்தாலும், பெருமை, சிறுமை என்று சொல்லப்பட்ட சிறப்பு இயல்புகள், அவரவர் செய்கின்ற தொழில்களில் வேறுபாட்டால் ஒவ்வா என்கின்றார் நாயனார். எந்த சாதியில் பிறந்தவராக இருந்தாலும், பஞ்சபூதச் சேர்க்கையால் ஆகிய உடம்பு எல்லாருக்கும் ஒரு தன்மையாகவே இருக்கும். அவர்களிடத்தில் உண்டாகின்ற நற்செயல்களால் பெருமையும், தீய செயல்களால் சிறுமையும் வரும். நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் தீய செயல்களைச் செய்வானானால், அவனுக்குப் பெருமை உண்டாகாது.
எடுத்துக் காட்டாக, பெரியபுராணத்துள், சண்டீச நாயனார் வரலாற்றைக் காணலாம். சண்டீச நாயனார் அவதரித்த திருச்சேய்ஞ்ஞலூர் என்னும் திருத்தலப் பெருமையை, தெய்வச் சேக்கிழார் பெருமான், பின்வருமாறு காட்டினார்.
செம்மை வெண்ணீற்று ஒருமையினார்,
இரண்டு பிறப்பின் சிறப்பினார்,
மும்மைத் தழல் ஓம்பிய நெறியார்,
நான்கு வேதம் முறைபயின்றார்,
தம்மை ஐந்து புலனும்பின் செல்லும்
தகையார், அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழ்உலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
இதன் பொருள் ---
செம்பொருளை அடைதற்குக் காரணமாகிய திருவெண்ணீற்றில் ஒன்றுபட்ட ஒழுக்கம் உடையவராய், இரு பிறப்பின் சிறப்புடையவராய், ஆகவனீயம்,காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்னும் மூவகைத் தீயையும் வளர்த்து வரும் நன்னெறி உடையவராய், நான்மறைகளையும் முறையாகப் பயின்றவராய், ஐம்புலன்களும் தம் வழிநிற்கும் தகுதி உடையராய்த், தாம் செய்யும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களிலும் உண்மை நிறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு ஏழுலகமும் போற்றும் சீலமுடையவராய் வாழும் அந்தணர்கள் வாழுகின்ற சிறப்புடையது அவ்வூர்.
இவ்வளவு சிறப்பு மிக்க அந்தணர்கள் வாழ்கின்ற அந்த ஊரில், அந்தணர் குலத்தில், காசிப கோத்திரத்தில் பிறந்த எச்சதத்தன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் என்பதையும் காட்டுகின்றார்.
பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்,
அருமை மணியும் அளித்து, அதுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளன் ஆனான்.
இதன் பொருள் ---
இத்தகைய பெருமை மிக்க அப்பதியில் வாழும் மறையவர்களில், சிறப்புடைய இல்லற நெறியில், அறம் நிலவிய காசிப கோத்திரத்தின் தலைமை சான்ற நன்மரபினில், அருமையான இரத்தினத்தையும் தந்து, அதுவே நஞ்சினையும் தரும் பாம்பைப் போல நல்வினை தீவினை எனும் இருவினைகளையும் செய்யும் ஒருவனாக எச்சதத்தன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான்.
எனவே, ஒருவனுக்குப் பெருமையோ சிறுமையோ, பிறந்த குலத்தினால் உண்டாவதில்லை. செய்யும் செயல்களின் காரணமாக உண்டாவது என்பதை அறியலாம். இந்த உண்மையை,
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
என்னும் திருக்குறளால் காட்டினார் நாயனார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் ஒரு நிகழ்வை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடிய பாடல்...
நீர்ஊர் முதலையது முன்உண்ட பிள்ளையை,பின்
ஆரூரர் பாவால் அழைப்பித்தார், - பார்ஊர்
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து திருவாரூரில் இருந்து, சேரநாட்டுக்குப் புறப்பட்டார். சோழநாட்டைக் கடந்து கொங்க நாட்டை அடைந்தார். இக்காலத்தில் அவிநாசி என வழங்கும், திருப்புக்கொளியூரில் சென்றார். அங்கே ஒரு தெருவிலே இரண்டு வீடுகளில், ஒன்றிலே மங்கல ஒலியும், ஒன்றிலே அழுகை ஒலியும் எழுதலைக் கேட்டார். "என்ன?" என்று வினவினார். அங்குள்ளார், "ஐந்து பிராயமுடைய இரண்டு அந்தண குலப் பிள்ளைகள் குளத்திலே குளித்தார்கள். அப்போது ஒரு பிள்ளையை முதலை விழுங்கியது. மற்றைப் பிள்ளை தப்பினான். பிழைத்த பிள்ளைக்கு இந்த வீட்டில் உபநயனச் சடங்கு நடைபெறுகின்ற ஒலி இது. இறந்த பிள்ளையை நினைந்து அந்த வீட்டார் அழும் ஒலி இது" என்று சொன்னார்கள். இறந்த பிள்ளையின் தாய் தந்தையர் இருவரும் சுந்தரரை வந்து வணங்கினர். "தேவரீரைக் காண மிக்க ஆவல் கொண்டு இருந்தோம். அப்பேறு இன்று கிடைத்தது" என முகமலர்ந்து உபசாரம் கூறினர். அப்பெற்றோர் வருத்தம் நீங்கும்படி அப்புதல்வனை முதலை விழுங்கிய வாவியின் கரையை அடைந்தார் சுந்தரர்.
"உரைப்பார் உரைஉகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்!,
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!,
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!,
கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே"
என்னும் திருப்பாட்டுப் பாடி முடிதற்குமுன்,சென்ற ஆண்டுகளின் வளர்ச்சியுடன் பிள்ளையை முதலை கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. யாவரும் மகிழ்ந்தனர்.
அவிநாசி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அந்தணருக்கு உண்டான துன்பத்தை, அந்த ஊரில் வாழ்ந்திருந்த அந்தணர்களில் ஒருவராலும் தீர்த்து வைக்க முடிவில்லை. ஒர் அந்தணரின் துயரத்தை, அந்தணரின் மேம்பட்டவரான சுந்தரமூர்த்தி நாயனார் வந்து தீர்த்து அருளினார். எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பு இயல்பு ஒக்குமே எனினும், பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பு இயல்புகள் ஒவ்வா. அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டால் எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.
கம்பராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்வு, இந்த உண்மையைத் தெளிவிக்கும்படியாக உள்ளது. தன்னை மறைந்திருந்து கொன்றது தகாது என்று பல நியாயங்களை எடுத்துச் சொன்ன வாலிக்கு, "நல்லது இது தீயது இது என்ற நியாயம் அனைத்தும் உனக்குத் தெரிந்து உள்ளது. அறிவினால் சிறந்தவர்கள் என்று கருதப்படுவோராக இருந்தாலும், செய்யத் தகுவது இது, தகாதது இது என்று தேர்ந்து செய்யாவிட்டால், அவர்கள் விலங்குத் தன்மையை உடையவர்களே. விலங்குப் பிறப்பாக இருந்தாலும், மேலான தருமநெறியில் பிறழாது ஒழுகினால், அவர்கள் தேவர்களினும் மேலானவராக மதித்துப் போற்றப் பெறுவர்".
"குற்றமே செய்யும் இயல்பினை உடைய கீழ்க்குலத்தில் பிறந்தோராக இருந்தாலும், பெருமை வளர்வதற்கு உரிய நல்லறச் செயல்களில் ஈடுபடுவோர் உண்டு. ஆற்றல் மிக்க முனிவர்களிலும், பலவகையான நற்செயல்களில் மிகுந்த தேவர்களிலும், தீய செயல்களைச் செய்தோர் உள்ளனர். நீயோ, குரங்கினத்தில் பிறந்தவனாக இருந்தாலும், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபிரானைக் குறித்து அருந்தவம் இயற்றி, அவர் அருளால் அளவில்லாத ஆற்றலைப் பெற்று இருந்தாய். அப்படி இருந்தும், அறத்திற்கு மாறான செயலை நீ செய்து, அறத்தை அழித்து விட்டாய் என்று கூறி, மேலும் கூறுகின்றார்.
இனையது ஆதலின் எக் குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான்.
--- கம்பராமாயணம், வாலி வதைப்படலம்.
இதன் பதவுரை ---
இனையது ஆதலின் --- உண்மை இத்தன்மையது ஆதலால்; எக் குலத்து யாவர்க்கும் --- எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் எல்லோர்க்கும்; மேன்மையும் கீழ்மையும் --- உயர்வும், இழிவும்; வினையினால் வரும் --- அவரவர் செய்யும் செயல்களால் வரும். அனைய தன்மை அறிந்தும் --- அத் தன்மையை நீ உணர்ந்திருந்தும்; மனையின் மாட்சி --- பிறன் மனையாளின் கற்பு மாண்பினை; அழித்தனை --- அழித்தாய்; என்றான் --- என்று உரைத்தான்; மனு நீதியான் --- மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.
நற்செயலால் மேன்மையும் தீச்செயலால் கீழ்மையும் வரும். மாட்சி. பெருமை இங்கே சிறப்பினால் கற்பை உணர்த்திற்று. பாவங்கள் பலவற்றுள் பிறன்மனை நயத்தல் என்பது கொடிய பாவமாகும். அத்தகைய கொடிய பாவத்தை வாலி புரிந்ததால், தண்டிக்கத் தான் அம்பு தொடுத்தது குற்றமல்ல என இராமன் உணர்த்தினான். 'அறத்தைக் காத்தலாகிய தொழிலில் மனு விதித்த நெறியிலிருந்து இராமன் தவறுபவன் அல்லன் என்பதை அறிவிக்கவே 'மனுநீதியான்'என உரைத்தார் கம்பர்.
பிறப்பினால் மட்டுமே ஒருவருக்குச் சிறப்பு உண்டாவதில்லை என்பதை, "குமரேச சதகம்"கூறுமாறு காணலாம்.
சிங்கார வனம் அதில் உதிப்பினும் காகமது
தீஞ்சொல்புகல் குயில் ஆகுமோ?
திரையெறியும் வாவியிற் பூத்தாலுமே கொட்டி
செங்கஞ்ச மலர் ஆகுமோ?
அங்கான கத்தில் பிறந்தாலும் முயலானது
ஆனையின் கன்று ஆகுமோ?
ஆண்மையா கியநல்ல குடியில் பிறந்தாலும்
அசடர்பெரி யோர்ஆவரோ?
சங்குஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்
சாலக்கி ராமம் ஆமோ?
தடம்மேவு கடல்நீரி லேஉப்பு விளையினும்
சாரசர்க் கரை ஆகுமோ?
மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம்
வைத்தமெய்ஞ் ஞானகுருவே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர ஈசனே.
இதன் பொருள் ---
மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே --- குற்றமற்ற இனிய தமிழ் முனிவராகிய அகத்திய முனிவருக்கு மெய்ப்பொருளை உபதேசித்த உண்மை ஞானகுருநாதரே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
காகம் அது சிங்கார வனம் அதில் உதிப்பினும் தீஞ்சொல் புகல் குயில் ஆகுமோ --- காகம் ஆனது அழகிய மலர்ச் சோலையில் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயில் ஆகுமோ? கொட்டி திரை எறியும் வாவியில் பூத்தாலும் செங்கஞ்ச மலர் ஆகுமோ --- நீர் நிறைந்து அலைவீசும் பொய்கையிலே மலர்ந்ததாலேயே கொட்டியானது, செந்தாமரை மலரைப்போல் சிறப்புப் பெறுமோ?, முயலானது அம் கானகத்தில் பிறந்தாலும் ஆனையின் கன்று ஆகுமோ --- அழகிய காட்டிலே பிறந்ததாலேயே முயலானது, யானைக் கன்றைப்போல் ஆகுமோ? அசடர் ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் பெரியோர் ஆவரோ --- வீரம் பொருந்திய உயர்ந்த மரபிலே பிறந்தாலும், அறிவற்ற பேதைகள், பெரியோராக மதிக்கப்படுவரோ? சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ --- சங்குகள் உலாவும் பாற்கடலிலே தோன்றியதாலேயே கருநிறம் பொருந்திய நத்தையானது சாலக்கிராமம் ஆகுமோ? தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ --- விரிந்து பரந்துள்ள கடலிலே வெண்ணிறமுள்ள உப்புத் தோன்றினாலும் அது இனிய சர்க்கரை ஆகுமோ?
காக்கையும் குயிலும் நிறத்தால் கருமையாகவே இருப்பன. காக்கையானது "காகா" என்று கரையும். அதில் இனிமை இருக்காது. ஆனால், குயில் இனிமையாகக் கூவும். தாமரை பூக்கின்ற தடாகத்திலேதான் கொட்டியும் பூக்கின்றது. தடாகத்தில் பூத்ததாலேயே கொட்டி, தாமரை ஆகாது. கடலிலே தோன்றுகின்ற நத்தையானது கருநிறம் பொருந்தி இருக்கும். சாளக்கிராமம் திருமால் அடியார்க்கு மிகவும் விருப்பமானது. கூழாங்கல்லைப் போன்று கருமையாக இருக்கும். திருமால் பள்ளிகொண்டு இருக்கும் பாற்கடலில் பிறந்து கருநிறம் பொருந்தி இருப்பதாலேயே, நத்தையை சாளக்கிராமம் என்று திருமால் அடியார் கொள்ள மாட்டார்கள். கடல் நீரிலே தோன்றி வெண்மை நிறம் பொருந்தியதாக இருப்பதால், அது சருக்கரை ஆகாது. உப்பும் சருக்கரையும் நிறத்தில் வெண்மையாகவே உள்ளவை. சருக்கரை இனிப்பதால் அதை தனித்தும் உண்ணலாம். ஆனால், உப்பை தனித்து உண்ண முடியாது. பண்டத்திற்குச் சுவை கூட்டவே அது பயன்படும்.
இவை போலவே, உயர்ந்த குடியில் பிறந்து விட்டதாலேயே, அறிவற்றவனையும் உயர்ந்தவன் என்று கொண்டாட மாட்டார்கள் என்றார். பிறப்பினால் யாருக்கும் சிறப்பு வராது. பண்பினால்தான் சிறப்பு.
புலன் வழிச் சென்று அறிவு மயங்குவதால், நன்மை தீமை அறியாது, கண்டதே கண்டு, செய்வதே செய்து வாழ்வது மனித இயல்பு ஆகின்றது. எனவே, புலன் வழி மனத்தைச் செலுத்தாது, இறைவழிபாட்டில் செலுத்துவதைச் செய்யுங்கள் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.
"புகவே வேண்டா புலன்களில் நீர்,
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின், மிக்க எல்லாம்
வேண்டா, போக விடுமின்கள்;
நகவே ஞாலத்து உள்புகுந்து
நாயே அனைய நமை ஆண்ட
தகவே உடையான் தனைச் சாரத்
தளராது இருப்பார் தாம்தாமே".
இதன் பொருள் ---
நாட்டில் உள்ளோர் நகை செய்ய, நாயைப் போன்ற தன்மையோடு வாழ்கின்ற நாம், நம்மை ஆட்கொண்டு அருளும் பெருமையை உடைய இறைவனை அடைந்தால், அவரவர் தளர்ச்சி நீங்கி இருக்கலாம். ஆதலின் அடியவர்களே! நீங்கள் ஐம்புல விடயங்களில் உங்கள் மனத்தைச் செலுத்த செல்ல வேண்டா. பாம்பணிந்த பெருமானுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை மிகுதியாக நினையுங்கள். எஞ்சியவை எல்லாம் நமக்கு வேண்டா. அவைகளை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டு விடுங்கள்.
போகவிட வேண்டியவற்றை, விடமால் பற்றிக் கொண்டு இருக்கின்ற நமது செயல்களால்தான், நமக்குச் சிறுமை உண்டாகின்றது. இந்த அறிவு மயக்கத்தை விட்டொழித்து, இறைவனது பழைய அடியார்களோடு கூடி இருந்து, பொய் வாழ்வை நீத்து, மெய்யுணர்வைப் பெற்று இறைவன் திருவடியைச் சார முற்படுங்கள் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.
"தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?
என்ன மாயம்? இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு அமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே".
இதன் பொருள் ---
ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர்களே! நீங்கள், நாம் யார்?எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை நம்மை விட்டு நீங்க, இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுள்ளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எம்மை ஆள்வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.
சுற்றமும், விதிவகையும் அவரவர் செயல்களால்தான் உண்டாகின்றது என்றபோது, இவற்றிற்கு மறுதலை ஆகிய பகையும், விதிவிலக்கும் கூட அவரவர் செயல்களான்தான் உண்டாகின்றது என்பது தெளிவாகும்.
எனவே, நமது அறிவு, செயல்களை புலன்வழியில் நிறுத்தாமல், அருள் வழியில் நிறுத்தி, தலைமைப் பொருளாக உள்ள இறைவனை மனத்தில் நிறுத்தி, தம்மையே தலைமைப் பொருளாக மதித்து, நான் எனது என்று எண்ணுகின்ற மயக்க அறிவை ஒழிக்கவேண்டும் என்று அருளிச் செய்தார்.
"தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது, "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்னும் திருக்குறள் கருத்தோடும், "பெருமையும் சிறுமையும் தான் தர வருமே" என்னும் வெற்றிவேற்கைக் கருத்தோடும் ஒத்து இருத்தலை அறிக.
தன்னையே பெரிதாக மதித்தால் சிறுமை உண்டாகும். அதை விடுத்து அருள்நெறியில் நின்றால் பெருமை உண்டாகும்.
No comments:
Post a Comment