அடக்கமே உயிருக்கு ஆக்கம் தரும்

 


அடக்கமே உயிர்க்கு ஆக்கம் தரும்.

-----

 

     மனம்வாக்கு,காயம் என்னும் மூன்று கரணங்களாலும்நினைவும்சொல்லும்செயலும் தீயவழியில் சொல்லாமல் அடக்கம் உடையவனாய் இருக்கவேண்டுதல் பற்றி, "அடக்கம் உடைமை" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து அருளினாரல் திருவள்ளுவ நாயனார். மூன்று கரணங்களாலும் ஒருவன் அடங்கி இருக்கவேண்டும் என்றும்அதுவே உயிருக்க ஆக்கமாகிய வீடுபேற்றினைத் தரக் கூடியது என்றும் அறிவுறுத்த,

 

"காக்க பொருளா அடக்கத்தைஆக்கம்

அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு".

 

என்னும் திருக்குறளை அருளினார் நாயனார்.

 

     இத் திருக்குறளின் வழி, "அடக்கத்தை நற்பொருளாகக் காத்துக் கொள்ள வேண்டும்அந்த அடக்கத்தை விட உயிருக்கு ஆக்கத்தைத் தருவது ஏதும் இல்லை" என்று அருளினார் நாயனார்.

 

     ஐம்பெரும் பூதங்களின் வழிஉலகம் இயங்குவதுபோல்ஐம்புலன்களின் ழிமனித வாழ்க்கை இயங்குகின்றது. ஐம்புலன்களை "வேடர்" என்பார் ஆன்றோர். வேடர்கள் தமது உள்ளத்தில் கருணை சிறிதும் இல்லாதுதன்னலம் கருதிபிறரை வழிப்பறி செய்வர். ஐந்து புலன்களான வேடர்கள்உயிரானது நல்வழியில் செல்லாமல் படிக்குதீய வழிகளில் செலுத்திஉயிருக்கு ஆக்கம் சேராதபடிதுக்கத்தை விளைவிப்பார்கள். அதனால் உயிருக்கு உண்மை இன்பமானது கானல்நீராக இருக்கும்.

 

"மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி,தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர"...

 

என்பார் பட்டினத்து அடிகள்.

 

"வேடர் என நின்ற ஐம்புலன்,

     நாலு கரணங்களின் தொழில்

     வேறுபட நின்று,உணர்ந்து அருள் ...... பெறுமாறு,ன்

வேடை கெட வந்து,சிந்தனை

     மாயை அற வென்று,துன்றிய

     வேத முடிவின் பரம்பொருள் ...... அருள்வாயே".

 

என்பார் அருணகிரிநாதப் பெருமான், "ஆடல்மதன்" எனத் தொடங்கும் திருப்புகழில்.

 

இதன் பொருள் ---

 

     வேடர்கள் போல் நிற்கும் சுவைஒளிஊறுஓசைநாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும்மனம்புத்திசித்தம்அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களின் செயல்களும் என்னைத் தாக்காத வகையில்அவற்றை வேறாகக் கண்டு,நான் வேறுபட்டு நின்று,உன்னை உணர்ந்து,தேவரீரது திருவருளைப் பெறும்படிஎனது ஆசைகள் கெட்டுப் போகுமாறுஎனது உள்ளத்தில் இருந்து,எனது சிந்தையை மயக்கும் மாயையின் ஆற்றலை வெற்றிகொண்டுசிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.

 

     உயிர்கள் இன்பப் பொருளைத் துன்பப் பொருள் என்றும்துன்பப் பொருளை இன்பப் பொருள் என்றும் மாறி உணர்தற்குக் காரணம்ஆணவ மலம் உயிர் அறிவை வேறுபடுத்திப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணரவொட்டாது தவறாக உணரச் செய்தலே ஆகும்.

 

     மக்கள் ஞானத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணாதிருப்பதற்குக் காரணம்அந்த ஞானத்தின்மேல் அவர்களுக்கு வேட்கை உண்டாகாமை. நீர் வேட்கை இல்லாதவர் நீரை நாடமாட்டார்பசி எடுக்காதவர் உணவை நாடமாட்டார். அதுபோலஞானத்தில் வேட்கை இல்லாதவர் அதனைப் பற்றி எண்ணமாட்டார்அதனை அடைவதற்கும் முயல மாட்டார்.

 

     ஞானத்தில் வேட்கை உண்டாகாமைக்குக் காரணம்உயிரறிவை அஞ்ஞானத்துள் படுத்துவதாகிய ஆணவ மலமே. ஆணவ மலம்,மேலான ஞானத்தில் நாட்டம் செல்லாதபடி தடுக்கும்கீழான உலகப் பொருளையே நாடி நிற்கும்படி செய்யும். இவ்வாறு ஆணவ மலம் அறியாமையைச் செய்வதுடன்அந்த அறியாமையையே அறிவு போலக் காட்டி நிற்கும். அதாவதுதன்னை உடையவர் உயர்ந்த நூல்களை ஓதி உணர்ந்தவராக இருந்தாலும்அவற்றின் பொருளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லிப் பெருமையடையும் நிலையைப் பெற்றிருந்தாலும்அவ்வழியிலே நில்லாது அவரைத் தவறி நடக்கும்படி செய்யும்தான் மேற்கொண்ட ஒழுக்கம் தீயதாயினும் அதனைச் சரியானது என்றே எண்ணச் செய்யும்.

 

            பொருளியல்பைத் தவறாக உணர்தல் அஞ்ஞானம் ஆகும். உயிர் அஞ்ஞானத்தில் கட்டுண்டு நிற்கின்ற வரையில் அது உறவல்லாத அசத்தோடு (நிலையற்ற பொருள்களோடு) உறவாடித் துன்புறும்தான் பெறத்தக்க பேரின்பம் எங்கும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்றலை அறியாதிருக்கும்

 

     இந்த உடம்பாகிய வீட்டில் ஐம்புல வேடர் வாழ்கின்றனர். அவர்கள் செய்யும் அநியாயம் அளப்பில. புலன்களை வேடர் என்பது தொன்றுதொட்டு வந்த ஆன்றோர் வழக்கு.

 

"குருதி புலால் என்பு தோல் நரம்புகள்

     கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய

     குடர்நிணம்,ரோமங்கள்,மூளை,என்பன ......பொதிகாயக்

குடில் இடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல

     அடவியில் ஓடும் துராசை வஞ்சகர்

     கொடியவர் மா பஞ்ச பாதகம் செய,...... அதனாலே

 

சுருதி புராணங்கள் ஆகமம் பகர்

     சரியை க்ரியா அண்டர் பூசை,வந்தனை,

     துதியொடு நாடும் தியானம் ஒன்றையும்......முயலாதே,

சுமடம் அது ஆய்,வம்பு மால் கொளுந்திய

     திமிரரொடே பந்தமாய் வருந்திய

     துரிசு அற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே".

 

எனவும் திருவானைக்காத் திருப்புகழில் அருளி உள்ளார்.

 

இதன் பொருள் ---

 

     இரத்தமும்தசைகளும்எலும்புகளும்தோலும்நரம்புகளும்கிருமிகள்,  மயக்கம் நிறைந்த கூடை போல்குளிர்ச்சியாகிய நோய் நெருங்கிட குடல்கொழுப்புமயிர்கள்மூளை முதலியன நிறைந்தஉடல் என்னும் குடிசையுள் மெய்வாய்கண்மூக்குசெவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்களானவர்,  ஆணவக் காட்டிலே ஓடித் திரிந்து,  கெட்ட ஆசையும் வஞ்சனையும் உடையவர்கள்கொடுமையானவர்களாகிய அந்த ஐவர்கள் பெரிய ஐந்து பாதகங்களைச் செய்யஅதனாலேவேதங்கள்புராணங்கள்  ஆகம நூல்கள் வகுத்துக் கூறுகின்ற சரியைகிரியை என்ற வழிகள்,  தேவபூசைவழிபாடுதோத்திரம்உள்ளத்தில் நாடுகின்ற தியானம் ஆகிய இவற்றுள் ஒன்றையும் முயன்று அனுசரிக்காமல்அறிவின்மை உடையவனாய்வம்பும் மயக்கமும் பற்றிய அக இருளருடன் கூடிக் கட்டுப்பாடு உற்று பயனில்லாதுபிறப்பு இறப்பில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அறவே நீங்கவும்ஆனந்தமயமாகிய முத்தி வீட்டை அடியேன் பெற்று உய்யவும் அருள் புரிவீராக.

 

 

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து என,

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு,

அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே".

 

என்பது சிவஞானபோதம்.

 

     ஆன்மா ஐம்பொறி முதலிய கருவிகளைச் சார்ந்து அவற்றையே தானாகவும்அவற்றால் உண்டாகும் சிற்றறிவாகிய புலன் அறிவையே தனது அறிவாகவும் கொண்டுதனது உண்மை இயல்பை மறந்து வாழும் நிலைஅரசகுமாரன் ஒருவன் சிறுவயதிலேயே காணாமல் போய்காட்டிலே வேடர் கூட்டத்திலே அகப்பட்டு அவர்களோடு கூடி வளர்ந்து,தன்னையும் வேடர் மகனாகவே கருதித் தான் அரசன் மகன் என்பதையே மறந்து வாழ்வதைப் போன்றது.

 

       அரசகுமாரன் உயர்ந்த மன்னர் குலத்தைச் சேர்ந்தவன்தன் தந்தையோடு கூடியிருந்து அரசச் செல்வத்தை அனுபவித்தற்கு உரியவன். அவ்வுரிமையை இழந்து,அவன் இழிந்த வேடர் குலத்தில் வளர்ந்துஅவர்க்கு உரிய இழிதொழில்களையே செய்து வாழ்கிறான். அதுபோலஆன்மா அறிவுடைய சித்து என்னும் மேலான இனத்தைச் சேர்ந்தது. பாசமாகிய உடம்பும் கருவிகளும் அறிவற்ற சடம். ஆகையால்,அவை இழிந்த அசித்து என்னும் இனத்தைச் சேர்ந்தவை. சித்தாகிய ஆன்மா தன் தலைவனும் தந்தையும் ஆகிய இறைவனைச் சார்ந்து அவன் வழங்கும் பேரின்பச் செல்வத்தை அனுபவித்தற்கு உரியது. அவ்வுரிமையை இழந்துஇழிவுடைய ஐம்பொறி முதலான கருவிக் கூட்டத்தில் அகப்பட்டுச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாகிச் சிறுமைப்பட்டு வாழ்கிறது.

 

       வேடர் கூட்டத்தில் வளரும் அரசகுமாரன் அறியாப் பருவத்தினனாய் இருக்கும் பொழுது அவனது தந்தையாகிய அரசனே அவனிடம் சென்று,"நீ எனது மகன்" என்று உணர்த்தி அவனை அழைத்தால் அவன் வர இசைவானாஅந்த அறியாப் பருவத்தில் யார் அவனுக்கு உண்மையை உணர்த்தினாலும் உணரமாட்டான்.  அவ்வேடர் சூழலை விட்டுப் பிரியச் சிறிதும் மனம் வராது. ஆதலால்,உண்மையை உணர்த்தினால் உணரக்கூடிய பருவம் அவனுக்கு எப்பொழுது வாய்க்கும் என்று பொறுத்திருந்துஅப்பருவம் வந்தவுடனே அவனிடம் சென்று அவனை அழைத்தால் அக் கணமே அவன் தான் உலகை ஆள்வதற்கு உரியவன் என்ற உண்மையைத் தெளிய உணர்வான்அவ்வேடர் சூழலை விட்டு அப்பொழுதே  நீங்குவான்தான் இதுகாறும் பிரிந்திருந்த உண்மைத் தந்தையை அடைவான்அரசாளும் திருவைப் பெற்று மகிழ்வான்.

 

       அதுபோலஅரும்பருவம் என்பது ஆன்மாவுக்கும் வேண்டும். ஐம்பொறியும் மனமும் முதலான கருவிகளெல்லாம் அறிவில்லாதவை.  நமக்கு வேறானவை. நாம் அறிவுடைய சித்துப்பொருள். நாம் இவற்றோடு கூடியிருப்பது செயற்கையே. நமக்குரிய இயற்கை அல்ல என்ற உண்மையை உணர்வதற்குப் பக்குவம் வேண்டும். ஆதலால் உயிர்க்குயிராய் உள் நிற்கும் இறைவன் அப் பக்குவம் வரும்வரை காத்திருந்து பக்குவம் வந்தவுடன் மானுட வடிவில் குருவுமாய் வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான்

 

     "சிவத்தைச் சார்ந்து தூய இறவாத பேரின்பம் நுகர்வதற்கு உரிய நீ ஐம்பொறிகளும் பிறவும் ஆகிய வேடர் கூட்டத்தில் சேர்ந்து பாச ஞானம் உடையவனாய் நின் இயல்பும் நம் இயல்பும் மறந்து துயர் உழந்தாய்" என உணர்த்துவான்.

 

       அவ்வான்மா உணர்த்தியதை உணர்த்தியவாறே உணரக்கூடிய பக்குவம் பெற்றிருந்த காரணத்தால்உலகப் பற்றை உண்டாக்கி மயக்குகின்ற பாசமாகிய இக்கருவிகள் நமக்குப் பகையானவை என்ற உண்மையை உணர்ந்து அவற்றை விட்டு நீங்கும். கருவிகள் தன்னின் வேறானவை என்று உணர்ந்த அளவிலே அவ்வான்மா தனக்கு என்றும் உறவாக உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சார்ந்து விடும்.

 

       கருவி கரணங்களை வேறாக உணர்ந்த ஆன்மா வேறு முயற்சியின்றியே இறைவனை அடையும் என்பது எப்படி முடியும் ஊசலில் அமர்ந்து ஆடுகின்ற ஒருவன்அந்த ஊசலின் கயிறுகள் முழுதும் அறுந்து விடுமாயின்அப்பொழுதே தரையை அடைவான். தரையைச் சார்வதற்கு அவன் செய்ய வேண்டிய முயற்சி ஏதும் இல்லைஅதுபோலவேகருவிகளின் நீங்கிய ஆன்மா அப்பொழுதே வேறு முயற்சியின்றி இறைவனாகிய தனது இனிய உறவை அடைந்துவிடும்.

 

       இறைவனை அடைதல் என்றால்,இடம் பெயர்ந்து சென்று அவனைச் சேர்தல் என்பது அல்ல. அவன் எங்குமாய் நிறைந்து நிற்கும் பெருமையை உடையவன். அவன் உயிருக்கு வேறாய் நில்லாது உயிர்க்கு உயிராய் என்றுமே உடனாய் நிற்பவன். அவனைத் தன்னுள்ளே உணர்ந்துஅவனிடத்தே அழுந்துதலே அவனைச் சென்று அடைதல் ஆகும். அம்முறையில் அப்பக்குவ ஆன்மா சிவத் தைத் தலைப்பட்டுப் பேரின்பம் நுகர்ந்திருக்கும்.

 

     எனவேமெய்வாய்கண்மூக்குசெவி என்னும் ஐம்புலன்களின் கருவியாக மனிதன் அமைந்து விடுவானானால்அது அவனுக்குத் துன்பமாகவே முடியும். ஐம்புலன்கள் வழியே மனிதன் இயங்காமல்ஐம்புலன்களை இயக்கிச் செலுத்த வேண்டும். ஐம்புலன்களும் மனித வாழ்வுக்குத் துணை செய்யவே இறைவனால் படைக்கப்பட்டன. அவற்றை உணர்ந்துஅறநெறியில் வாழ்வது தனது கடைமையாய் இருக்க,அவற்றிற்கு மனிதன் அடிமை ஆதல் கூடாது.

 

     "அறிவு வழிச் செல்கின்றவனுக்கு வாழ்க்கை ஓர் இன்ப நாடகம். உணர்ச்சி வழிச் செல்பவனுக்கு அது ஓர் அவல நாடகம்" என்றார் வால்டேர் என்னும் அறிஞர்.

 

     அறிவுக்கும் உணர்வுக்கும் எப்போதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அறிவு வென்றால் மனிதனுக்கு ஆக்கம். உணர்வு வென்றால் மனிதனுக்குச் சீரழிவு. உணர்ச்சி என்னும் மதம் பிடித்த யானையைத் தன் போக்கில் போகவிடாமல்அறிவுமனத் திண்மை என்னும் அங்குசத்தால் அடக்கிப் பணிகொள்ள வேண்டும்.

 

அடக்கமாக இருந்தால் அமரர் உலகை அடையலாம். அடங்காதவனாக இருந்தால் நரகலோகம் வாய்க்கும்.

 

"அடக்கம் அமரருள் உய்க்கும்அடங்காமை

ஆர்இருள் உய்த்து விடும்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     மன அடக்கம் உடையவரையே நட்பாகக் கொள்ளுதல் வேண்டும் என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.

 

"இம்மை அடக்கத்தைச் செய்துபுகழ் ஆக்கி,

உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் -- மெய்ம்மையே

பட்டாங்கு அறம் உரைக்கும் பண்பு உடையாளரே

நட்டார் எனப்படு வார்."

 

     இந்தப் பிறவியில் மனம் மொழி மெய்களால் அடக்கத்துடன் வாழ்ந்துபுகழினைப் பெருக்கிமறுபிறப்பில் வீடுபேற்றினை அடைவித்தலால்இயல்பாகவே இந்த உலகத்தில் அத்தகைய உண்மை அறத்தினை உரைக்கும் பண்பினை உடையவர்களே நட்பினர் என்று கூறப்படுவதற்கு உரியவர் ஆவார்.

 

     செல்வம் உடையார் உலகில் தருக்கித் திரிவது இயல்பே. "நான் ஈட்டிய செல்வம் ஏழு தலைமுறைக்கும் வரும்" என்று கூறி ஆர்ப்பரிப்பவர் உண்டு. 

 

     அத்தகைய செல்வர்களும் பணிந்து போகவேண்டும் என்கின்றார் திருவள்ளுவர். எல்லாருக்கும் பணிவுடைமை வேண்டப்படுவதே ஆயினும்செல்வர்களுக்குக் கட்டாயம் பணிவு தேவை என்கிறார் அவர். தாங்கள் ஈட்டிய செல்வத்தைக் காப்பதற்குப் பணிவு உடைமையே துணை செய்யும்.

 

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து"

 

என்பது திருக்குறள். 

 

     "ஒட்டகம் ஊசி முனையில் நுழைந்தாலும் நுழையலாம். ஆனால்பணக்காரன் பரலோகத்தில் நுழையவே முடியாது என்று விவிலியம் கூறும். "தன்னைத் தாழ்த்திக் கொள்பவன் எவனோஅவனே பிறரால் உயர்த்தப் படுவான்" என்றார் இயேசுபிரான்.

 

     காரணம்இறைவன் முன் எல்லோரும் சிறியவர்களே.  இறைவனே மிகப் பெரியவன். "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய்" என்பார் அப்பரடிகள். 

 

     நம்மால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் கொடுப்பவன் இறைவன். அவனருள் இருந்தால் துரும்பு கூடப் பெரிய தொழிலைச் செய்யும் என்னும் கருத்தில், "அருள் பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்அருள் பெற முயலுக" என்று இறைவன் தமக்கு அருளியதாக வள்ளல்பெருமான் பாடுவார்.

 

     அப்படிப்பட்ட இறைவன் எங்கும் எதிலும் நிறைந்துசர்வ அந்தர்யாமியாக விளங்குகின்றான். அவனுடைய அருளால் செல்வம் வந்தது என்று தெளிந்தால்பணிவு இருக்கும்.

 

     பணிவுடன் வாழ்ந்துபரமனைப் பணிந்துஉயர்வோமாக.

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...