சமயப் பிணக்கு நற்கதியைத் தராது.
-----
சமயங்களுக்கு இடையில் பூசல். சமயங்களில் கொள்கைப் பூசல். அவரவர் தாம் கருதியதே சரி என்று கொண்டாடி, தமக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டதால், சமயங்களில் உட்பிரிவுகள் தோன்றின. சமயப் பூசல்களால், மனிதகுலம் இதுவரையில் பட்டபாடு சொல்லி முடியாது. சமயக் கருத்தையும், கடவுள் உண்மையையும் தெளிந்து கொள்ளாத சமயிகளால் உண்டான இந்த ஊறு இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
"அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும் படிக்குஇச்சை வைத்து,உயிர்க்கு உயிராய்த்
தழைத்ததுஎது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றதுஎது? சமய கோடிகள் எ(ல்)லாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்ல ஒரு சித்தாகி,இன்பமாய்
என்றைக்கும் உள்ளதுஎது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎது, அது
கருத்திற்கு இசைந்தது, அதுவே
கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்".
இது தாயுமான அடிகளார் அருளிய பாடல். எல்லாப் பொருள்களிலும், எங்கும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற பரம்பொருளின் தன்மைகளை இந்தப் பாடலில் விரித்துக் கூறுகின்றார்.
இதன் பொருள் ---
வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள்,தொலைவில் உள்ளவை,நிலவுலகம், கீழுலகம் ஆகிய அண்மையில் உள்ளவை என்று சுட்டிக் கூறி அறியமுடியாதபடி, எவ்விடத்திலும் பேரொளியாய், முழுநிறை இன்பமாகி, தனது அறிவு ஆற்றலொடு பிரிப்பு இல்லாமல் நிறைவாய் உள்ளது எந்தப் பொருளோ? தன்னுடைய அருள் வெளியிலே, எல்லா உலகங்களும், நிலைக்குமாறு பெருங்கருணை வைத்து, உயிருக்குள் உணர்வாகி விரிந்து இருப்பது எந்தப் பொருளோ? மனத்தால் நினைப்பற்கும், வாயால் சொல்வற்கும் எட்டாமல் நிலைபெற்று உள்ளது எந்தப் பொருளோ? பல்வேறு சமயங்களும் எம்முடைய தெய்வம், எம்முடைய தெய்வம்என்று, எவ்விடங்களிலும் எப்போதும் விடாது நின்று வழக்கிடும்படியாக அவரவர் கற்பித்துக் கொண்ட தெய்வமாக நின்றது எந்தப் பொருளோ? இம்முறையாக எவ்விடத்தும், முடிவு பெறாத பெரிய வழக்காகி, எத்தொழிலும் வல்லதும், தானே தனக்கு நிகராய் விளங்குகின்ற ஒப்பற்ற பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பெருவடிவாக, எக்காலத்தும் ஒன்றாய், மாறாஇயல்பாய் இருப்பது எந்தப் பொருளோ? பின்னும், இரவு பகல் அல்லாது (நினைப்பு மறப்பு, இன்பம் துன்பம், பிறப்பு இறப்பு என்ற எல்லா நிலைகளையும் கடந்து )நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருளோ? அந்தப் பொருளே எல்லாருடைய கருத்திற்கும் இசைவாக உள்ளது. ஆதலால் அப் பரம்பொருளையே, காணப்பட்ட பூதங்களும், பூதத் தொடர்புகளாகவும், மௌன வடிவமான வெளியீடாகவும் தியானித்து நாம் கைகூப்பி வணங்குவாம்.
பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போல, பரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்து, அந்த உணர்விலேயே திளைத்து, நுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாக, ஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME)ரூபம்(FORM) இல்லாத கடவுளை, ஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காக, சமய நெறிகள் வகுக்கப்பட்டன.
அவ்வாறு வகுக்கப்பட்ட, அறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாது, சமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள், அவரவர் உணர்ந்தபடியே, சமய நெறிகளில் நல்லது இது, தீயது இது என்று, சொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து,
"ஒன்றதே பேரூர்,வழி ஆறு அதற்கு உள
என்றது போல இருமுச் சமயமும்;
நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே".
என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.
சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று,கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும்ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று,பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்றுசமயவாதிகளைப் பார்த்துச்சாடுகின்றார்.
எல்லாச் சமயங்களும்,மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன. அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது,அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு,மருண்டு வாதித்துப் பிணங்குவோர்,மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி,"குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.
அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,
"சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்"
என்கிறார் மணிவாசகப் பெருமான். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள்என்பது இதன் பொருள்.
கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும்பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.
சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி,
சொல்லிய ஆகமங்கள் எல்லாம் சூழப் போயும்,
ஒத்து முடியும் கூட ஓரிடத்தே
ஒருபதிக்குப் பலநெறிகள் உள ஆனாற்போல்,
பித்தர்குணம் அதுபோல,ஒருகால் உண்டாய்,
பின்னொருகால் அறிவின்றிப்பேதை யோராய்க்,
கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்,
கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.
என்கின்றார் "சிவஞானசித்தியார்" என்னும் நூலில், அருள்நந்தி சிவாச்சாரியார்.
பொருள் ---
சுத்தஞானத்தையே தனக்குச் சுதந்திர வடிவாக உடைய இறைவன் அருளிய ஆகமங்கள் எல்லாம் பல்வேறு சமயங்களுக்கும் ஒத்து முடியக் கூடியதாக இருந்தாலும், மையமாகச் சொல்லப்படும் ஒரு பொருளை நோக்கியே முடியக் கூடியதாய் அமைந்து, ஞானபாதத்தையே விளக்குவதாக உள்ளன. அது, எதுபோல என்றால், ஒரு ஊருக்குப் பல வழிகள் அமைந்து, அந்த வழிகள் அனைத்தும் அந்த ஊரையே நோக்கிச் செல்வது போன்றது ஆகும். எல்லா ஆகமங்களின் முடிவும் ஞானபாதமே என்று அறிந்து முத்தி அடைந்து இருக்கும் ஆன்மாக்களைப் போல அல்லாமல், சமயவாதிகள் எந்த ஒரு சமயத்தின் கொள்கையிலும் ஆழங்கால் படாது, சமயக் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்து கொண்டு, வேடத்தைப் பூண்டு கொண்டு, ஒரு சமயம் தெளிந்த அறிவு உள்ளவர் போல் காணப்படுவார்கள். மற்றோர் சமயம் மயக்க அறிவு உடையவராக இருப்பார்கள். இது எப்படி என்றால், பித்துப் பிடித்து உள்ள ஒருவன் செயலானது, ஒரு சமயத்தில் அறிவு உள்ளது போல் தோன்றும். மற்றொரு சமயம் அவரது செய்கை அறிவற்றது போல் தோன்றும். அது போல, சமய உண்மைகளைத் தெளிவாக அறியாதவர்கள்,அறிந்தது போலும், அறியாதது போலும். முத்தியைத் தருகின்ற உண்மை நெறியினை அறியாது, தத்தமது சமயமே சிறந்தது என்று கத்துவர். அப்படிப்பட்டவர்களும், அவர்களது சொற்களால் கவரப்பட்டவர்களும், மகாமேரு மலையை நோக்கிச் செல்லுகின்ற வழியில் போகத் தலைப்பட்டு, வழி அறியாது தடுமாற்றத்தை அடைந்து, மற்றொரு வழியில் சென்று கடலில் விழுந்தவர் போன்றவர் ஆவர்.
இத்தகு சமய நெறியாளர்களைப் பார்த்து அருணகிரிநாதப் பெருமான் மிகவும் சாடுகின்றார். அவர்கள் கூட்டத்தை விட்டு விலகி இருக்கவேண்டும் என்கின்றார். அவர் அருளிய சில திருப்புகழ்ப் பாடல்களைக் காண்போம்.
"கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்". --- மதுரைத் திருப்புகழ்.
பொருள் ---
கலகலகல என்ற ஆரவாரத்துடன், எதிர்ப்பட்டவர்களுடன் எல்லாம் வாதிடும்படியான குற்றத்தினை உடைய சமயவாதிகள் உரக்கக் கத்திப் பேசுகின்ற பல சொற்களுடன் கூடிய குறைவும் ஆரவாரமும் நிரம்பியபொய்ச் சாத்திர நூல்கள் ஒழியவும், ஐம்பெரும் பூதங்கள் ஒழியவும், வெறும் சொற்களில் அடங்காதவையாகிய கரண வாதனைகள் ஒழியவும், தேவரீர் எனக்கு உபதேசித்து அருளிய ஞானப் பொருளின் இன்பம் இருந்தவாறு கூறும் தரத்ததோ?
உலகியலில் பஞ்சபாதகர்கள் உண்டு. சமயநெறிகளிலும் பஞ்சபாதகர்கள் உண்டு, அவர்கள் "சமய பஞ்ச பாதகர்கள்" என்கின்றார் அருணகிரிநாதர்.
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர்..... அறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீகம்அது..... அருள்வாயே.. --- விரிஞ்சிபுரம் திருப்புகழ்.
பொருள் ---
சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான கடலைப் போலபெருத்த ஆரவாரத்துடன் வாதம் செய்கின்றவராகியசமயவாதிகளான பஞ்ச மாபாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் அணிந்துள்ளதுமான திருவடித் தாமரைதனைத் தந்து அருள்வாயாக.
சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும்,கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது.
"வம்பு அறாச் சில கன்னம் இடும்,சம-
யத்துக் கத்துத் ...... திரையாளர்,
வன் கலாத்திரள் தன்னை அகன்று,
மனத்தில் பற்றுஅற்று,...... அருளாலே,
தம் பராக்கு அற,நின்னை உணர்ந்து, உரு-
கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,
தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?". --- காஞ்சிபுரம் திருப்புகழ்.
பொருள் ---
வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடுவதுமான சமயவாதம் செய்து அலைகடல் போல கத்திக் கூச்சல் இடுகின்ற சமயவாதிகளின் வன்மையான கலைக்கூட்டத்தினின்று விலகி, மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று, திருவருளினால், தம்மைத் தாமே நோக்கி,நான் என்னும் நோக்கு அற, தேவரீரை உணர்ந்து, உள்ளம் உருகி, அழகிய தாமரை மலர் போன்ற உமது திருவடிகளைச் சேர்பவர்களுடைய திருக் கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு கூட்டி வைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ?
எனவே, சமயவாதிகளின் கவர்ச்சியான சொற்களில் மயங்குதல் கூடாது. சமயக் கணக்கர்கள் கூறுகின்ற வழியில் சென்று இடர்ப்படாமல், சமயப் பொருளை நன்கு தெளிந்து, இறைவனுக்கு உண்மை அடியவர் ஆகி,எவ்வுயிரும் பொது என எண்ணி இருக்கின்ற உண்மை அடியவர்களைச் சார்ந்து இருக்க அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். அடியார் குழுவில் அடியேனையும் சேர்த்து அருள் புரிய,முருகா! உனது திருவுள்ளத்தில் சிறிது கருதலாகாதோ என்று மிக உருக்கமாக அடிகளார் விண்ணப்பம் புரிகின்றார்.
நம்மை வெகு எளிதாக சிவகதியில் சேர்ப்பது அடியார் கூட்டம் தான். பற்றும் ஆசையும் விட்ட அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்து இருந்தால், பற்றும் ஆசையும் அற்ற நிலை தானே வந்து சூழும்.
பற்று --- தன் பொருளில் வைக்கும் விருப்பம்.
அவா ---- பிறர் பொருளில் வைக்கும் விருப்பம்.
முதலில் அவா நீங்க வேண்டும். பிறகு பற்றும் ஒழிய வேண்டும். பற்று அற்றால் வீடுபேறு சித்திக்கும். உடைந்த ஓட்டில் பற்று வைத்திருந்தார் பத்திரகிரியார். அப் பற்றையும் அகற்றிப் பரமன் அவருக்கு அருள் புரிந்தார். "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்கின்றார் நம்மாழ்வார்.
ஒரு குருட்டுப் பசு. இங்கும் அங்குமாக அலைகின்றது. அதற்கு ஊர் சேரும் வழி தெரியவில்லை. ஒரு அருளாளன் அக் குருட்டுப் பசுவை, பசுக்களின் மந்தையில் சேர்த்து விட்டான். முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் உராய்ந்து கொண்டு, அந்தக் கண் அற்ற பசு ஊர் சேர்ந்தது. அதுபோல், ஞானக்கண் அற்றவர் எண்ணற்ற பெருமையுடைய திருத்தொண்டர் கூட்டத்தில் சேர்ந்து விட்டால், எளிதாக முத்தி உலகத்தைச் சேர்ந்து விடலாம். பூவோடு கூடிய நாரும் இறைவன் திருமுடியில் இடம் பெறுவது போல, அடியவர்களோடு கூடி இருந்தால், இறையருளை எளிதில் பெறலாம்.
"கோவுடனே கூடிவரும் குருட்டு ஆவும் ஊர்புகுதும்;
பூவுடனே கூடிய நார் புனிதர் முடிக்கு அணியாமால்". --- சேக்கிழார் புராணம்.
வள்ளல் பெருமானும் இறைவனிடத்தில், தம்மை அடியவர் கூட்டத்தில் சேர்த்து அருள் புரியுமாறு வேண்டுகின்றர். இறைவா! கண்ணால் காணவும் கூசுகின்ற கயவர்களிடத்தில் என்னைக் காட்டிக் கொடுப்பது உனது அருளுக்கு அழகு ஆகாது. உனது திருவடியையே தியானித்துக் கொண்டு இருக்கும் உண்மை அடியவர்கள் கூட்டத்தில், "எனது அடியவன் ஆன இவனையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் சொல்லிச் சேர்த்து விடவேண்டும் என்று வேண்டுகின்றார்.
"கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
அண்ணா அருளுக் கழகன்றே! - உண்ணாடு
நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
என்னடியான் என்பாய் எடுத்து". --- சிவசிவ வெண்பா.
பொருள் ---
அண்ணா --- அணுகுதற்கு அரிய பொரம்பொருளே! கண் நாண் இழுதைகள் பால் எனைக் காட்டிக் கொடுக்கில் அருளுக்கு அழகு அன்றே --- காணக் கண்கள் கூசுகின்ற கயவர்கள் இடத்தில் என்னைக் காட்டிக் கொடுத்தால், அது உமது அருளுக்கு அழகு ஆகமாட்டாதே. உள் நாடும் நின் அடியர் கூட்டத்தில் --- (வெளிவேடத்தை விடுத்து) உள்முகத் தியானத்தால் உன்னை விரும்புகின்ற அடியார் கூட்டத்தில், என் அடியான் இவனை நீர் சேர்த்திடுமின் என்பாய் எடுத்து --- எனது அடியவன் ஆன இவனை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எடுத்துக் கூறுவாயாக.
இழுதைகள் --- இழிந்த ஒழுக்கத்தினை உடையவர்கள். இவர்களைக் காணவும் கண் கூணும் என்பதால், "கண் நாண் இழுதைகள்" என்றார்.
பிறப்பு எடுத்து வந்த ஆன்மாவானது, மீளவும் எத்தனை பிறப்புக்களை எடுத்தாலும், இறுதியில் பக்குவபட்டு இறைவன் திருவடியை அடைந்துதான் தீரவேண்டும். அதுவரையில் இறைவன் விடப் போவது இல்லை. பிறவிக் கடலை நீந்த இறைவன் திருவடி துணைபுரியும். இறைவன் திருவடியில் வந்து சேருகின்ற வரையிலும் அடியவர்கள் திருக்கூட்டத்தில் இருந்து கொண்டு, இறைவனது பொருள்சேர் புகழைக் காதாரக் கேட்டுக் கொண்டு இருக்க அருள் புரியுமாறு வேண்டுகின்றார் வள்ளல்பெருமான்.
"இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
நானினது தாழல் நண்ணுமட்டும் நின்னடியர்
பானினது சீர்கேட்கப் பண்".
பொருள் ---
என் அப்பா --- எனது ஆன்மத் தந்தையே! இப் பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் --- இந்த உலகத்தில் பிறப்பு எடுத்து வந்த நாள் முதலாக, தெரிந்தோ தெரியாமலோ, அடியேன் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் நீ மன்னித்து அருள்வாயாக. நின் தாட்கே அடைக்கலம் காண் --- உனது திருவடிக்கே அடைக்கலமாக என்னை ஒப்புவித்தேன். இப் பாரில் நான் தினது தாள் நீழல் நண்ணும் மட்டும் --- இந்த உலகத்தில் வாழுகின்ற நான் உனது திருவடி நிழலை வந்து பொருந்துகின்ற காலம் வரும் வரை, நின் அடியர்பால் நினது சீர் கேட்கப் பண் --- உமது அடியவர்கள் இடத்தில் இருந்து, உமது சிறந்த புகழைச் செவிமடுத்து இருக்க அருள் புரிவாய்.
இந்தச் சமயம் உயர்ந்தது, அந்தச் சமயம் தாழ்ந்தது என்று கத்திக் கூச்சல் இடுகின்ற சமயவாதிகளை, "பாதகர்கள்" என்கின்றார் அருணகிரிநாதர். அவர்கள் சமயங்களின் உண்மைப் பொருளை உணராமல், தாம் உணர்ந்த வழியே ஏற்றத் தாழ்வு கற்பித்துக் கொண்டு மக்களை மயக்கித் திரிவார்கள். அவர்கள் கூட்டத்தை விடுத்து, உண்மை அடியார்களோடு கூடி இருந்து நலம் பெறுதல் வேண்டும்.
No comments:
Post a Comment