048. வலி அறிதல் --- 04. அமைந்தாங்கு ஒழுகான்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "சூழல் அமைந்தபடி வாழாதவனும்வலிமைகளின் அளவை அறியாதவனும்தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தனக்கு அமைந்துள்ள சூழலுக்கு ஏற்ப வாழவேண்டும். தன்னுடைய வலியையும் மாற்றான் வலியையும் ஆராயவேண்டும். அவ்வாறு இல்லாமல்தனது வலியையே பெரிதாக மதித்துக் கொண்டு விரைந்து கெட்டுப் போவான் என்றதால்ஒருவன் தன்னோடு ஒத்தார் இடத்து நட்பாய் இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்க விருப்பம் இல்லையாயின்பிறரிடத்துப் பகை கொள்ளும் முன் அவரது வலியை அறிதல் வேண்டும். அவற்றை அறியாது தனது வலியையே பெரிதாக மதித்துக் கொண்டுபிறரோடு மாறுகொண்டு,செயலைத் தொடங்குபவன்எடுத்துக் கொண்ட செயல் முற்றுப் பெறாது விரைந்து அழிந்து விடுவான்.

 

திருக்குறாளைக் காண்போம்... 

 

 

அமைந்து ஆங்கு ஒழுகலான்அளவு அறியான்தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.                  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---    

 

     ஆங்கு அமைந்து ஒழுகான்--- அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது

 

     அளவு அறியான்--- தன் வலியளவு அறிவதும் செய்யாது

 

     தன்னை வியந்தான்--- தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்

 

     விரைந்து கெடும்--- விரையக் கெடும்.

 

         (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்என்றார். 'விரையஎன்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல்வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு செயற்பாலதுஇவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகை கொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்து கெடும்என்றார். தன்வலி அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஒன்னார் அடநின்ற போழ்தின்,ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க;--- துன்னினார்

நன்மை இலராய் விடினும்,நனிமலராம்

பன்மையில் பாடு உடையது இல். --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     ஒன்னார் அட நின்ற போழ்தின் --- பொருந்தாத பகைவரிடத்தில் போரிடும்போதுதம்மைக் கொல்ல நின்ற பொழுதில்ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க --- வீரத்தில் மிக்கவனாக இருந்தாலும்தனித்து நின்ற ஒருவன்தன்னை எத்துணையும் வியந்து கூறுதல் கூடாது. துன்னினார் நன்மையிலராய்விடிலும் --- கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றவர் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனி பலவாம் பன்மையில் பாடுடையது இல் --- மிகப்பலராய் இருத்தலை விட வலிமையுடையது ஒன்று இல்லை.

 

கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்;- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.  --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     அறைகல் அருவி அணிமலை நாட --- பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!நிறைகுடம் நீர் தளும்பல் இல் --- நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் --- நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்கு உரிய செயல்களாம். அறியாதார் --- கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார்பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் --- மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

 

    நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடமோதளும்பித் தளும்பிஇருக்கின்ற நீரும் இல்லாமல் போகும். கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அறிவில்லாதவர்கள் தம்மைத் தாமே பெரிதும் மதித்துப் பேசிஇழிவைத் தேடிக் கொள்வார்கள்.

 

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், -– தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவதுஇன்பம்

நயவாமை அன்றே நலம்.        --- நீதிநெறி விளக்கம்

 

 

இதன் பொருள் ---

 

     தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் --- தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளுதல்தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று --- குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போல ஆகும்ஆதலால்தன்னை வியவாமை அன்றே --- வியப்பாவது தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்இன்பம் நயவாமை அன்றே நலம் --- இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

 

    தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோஅதுபோலவேதனக்கு மதிப்பு மிகுமென்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் மிகாது அழிந்தே போகும் என்பது. 

 

கற்றாங்கு அறிந்துஅடங்கிதீதுஒரீஇநன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றிபணிஅறநின்றுஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்று ஆங்கு அறிந்து --- அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்துஅடங்கி --- அவற்றிற்கேற்ப அடக்கமாய்தீது ஒரீஇ --- (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டுநன்று ஆற்றி --- (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்துபெற்றது கொண்டு மனம் திருத்தி --- கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்திபற்றுவதே பற்றுவதே பற்றி --- தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டுபணி அற நின்று --- சரியை முதலிய தொழில்கள் மாள அருள் நிலையில் நின்றுஒன்று உணர்ந்து --- தனிப் பொருளாகிய இறைவனை அறிந்துநிற்பாரே --- நிற்கின்ற ஞானியரேநீள்நெறி சென்றார் --- வீட்டையும் வழியில் நின்றவராவர்.

 

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியனஅவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை,வாய்மை முதலியன. 

 

 

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்.           ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் --- தான் கற்ற கல்விகளும்காட்சி பரந்த தன் சாயலும்தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் --- அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால்மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் --- தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால்மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

 

         பேதைமைபிறர் கருத்தறியாதுஅவர் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மையுடையது.

 

 

செந்நெறி நோக்கி ‘‘அமைந்தாங் 

     கொழுகான் அளவறி கில்லான்

தன்னை வியந்தான் விரைந்து 

     கெடும்எனல் சத்தியம் கண்டாம்,

மன்னிய மேரு வரையோ 

     டிகலி வளர்ந்தெழு விந்தம்

முன்னுள தோற்றமும் வீறும் 

     முழுதும் இழந்தது மன்னோ.    --- காஞ்சிப் புராணம்.   

 

இதன் பொருள் ---

 

     நன்னெறியை ஆராய்ந்து அதனில் மனமடங்கப் பெற்று நடவாதவனாய்தன் அளவை அறியானாய்த் தன்னையே மதித்துப் பிறரொடு பகை கொண்டவன் விரையக் கெடுவன் என்னும் திருவள்ளுவர் திருவாக்கு மெய்ம்மொழி ஆதலைக் கண்டோம். நிலைபெற்ற பெருமையுடைய மேருமலையொடு பகைத்து வளர்ந்து எழுந்த விந்தமலை,முன்னிருந்த தோற்றத்தையும்பெருமையையும் முழுதும் இழந்தது அந்தோ!

 

பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை

தரியாது உயர்வகன்று தாழும்,- தெரியாய்கொல்,

பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய்! விந்தமலை

தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.          ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

         திருமகளால் உண்டாகும் உயர்வை அழகினால் நீக்கிய பெரிய முலைகளை உடையவளே!  அகத்திய முனிவர் முன்னே தன்னை வியந்த விந்த மலையானதுஅவர் தனது கைகளால் அழுத்தத் தாழ்ந்து தனது உயர்வை நீங்கியது. அதுபோலபெரியோர் முன்னை தன்னைத் தானே வியந்த பேதையும் இழிந்து தாழ்வை அடைவான்.

 

         புனைந்துரைத்த - புகழ்ந்து பேசிய. உயர்வு தரியாது அகன்று - பெருமை நிலைபெறாமல் நீங்கி. தாழும் - இழிவடைவான். பொன்னுயர்வு - திருமகளின் பெருமையை.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...