சொல்லோடு நில்லாமல் வாழ்ந்து காட்டுதல் வேண்டும்

 


சொல்வதோடு வாழ்ந்து காட்டுதல் வேண்டும்

-----

 

"கனவினும் இன்னாது மன்னோவினை வேறு

சொல் வேறு பட்டார் தொடர்பு".

 

என்னும் திருக்குறளின் வழி, "சொல்வது வேறாகவும்செய்வது வேறாகவும் உடையவருடைய தொடர்பானது, (நினைக்கும் போது மட்டும் அல்லாமல்) கனவு நிலையிலும் கூடத் துன்பத்தைத் தருவதாகும்" என்கின்றார் நாயனார்.

 

     நம்மோடு தொடர்பில் உள்ள ஒருவர், பேசும்போது நயமாகப் பேசி, பின்னர் செயலொன்றைச் செய்யும் காலம் வரும்போதுமுன்பு தான் சொன்னதற்கு மாறாகச் செயல்படுகின்றார் என்றால், அவர் கொடிய இயமனைப் போன்றவர். அத்தகையவருடைய தொடர்பானதுவிழித்து இருந்து நல்ல நினைவோடு உள்ள காலத்தில் துன்பம் தருவது மட்டுமல்லாமல்தூங்கும்போதும்,கனவு நிலையில் அந்த நினைவு வந்து தோன்றி மிகுந்த துன்பத்தைத் தரும். எனவேஅவ்விதமான தீயாரோடு கொண்டுள்ள தொடர்பினை அறவே விட்டு ஒழிக்கவேண்டும்.

 

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்".

 

     "மூதுரை" என்னும் நீதிநூலில் ஔவையார் பாடிய மேற்குறித்த பாடலின் பொருள் ---

 

     நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருக்கின்அவ் வீட்டில் இல்லாத பொருள் என ஒன்றுமில்லைன. எல்லாம் உண்டு. அப்படிப்படல் மனையாள் இல்லாமற் போனாலும்மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினாலும்அவ் வீடானது, புலி தங்கிய புதர்போல் ஆய்விடும்.

 

     நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்தகு அரிய காடே ஆகும். நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள வீட்டில், நற்குண செய்கைகளோடு விளங்கும் மக்களைக் கொண்டதாக இருக்கும். இல்லையானால், காட்டில் வாழும் விலங்குகளைப் போல நற்குண நற்செய்கைகள் எவையும் இல்லாமல் போகும்.

 

"பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்".

 

     ஔவையார் பாடியதாகச் சொல்லப்படும் தனிப் பாடல்களில் இது ஒன்று. "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்" என்று, பெண்பால் புலவராகிய அவரே பாடி இருத்தலால், இல்லறத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இருத்தல் இன்றியமையாத ஒன்றாகும். கணவனுக்கு ஏற்ற மனைவியாக இருந்தால், எந்த நிலையிலும் கூடி வாழலாம். மனைவி ஏறுமாறாக நடந்தால், கணவன் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி என்பது மேற்குறித்த பாடலின் பொருள். வறுமை நிலையிலும் மனம் ஒத்து வாழ்ந்திருந்த இளையான்குடி மாற நாயனார், சிறுத்தொண்ட நாயனார், குங்கிலியக்கலய நாயனார் வரலாறுகள் சான்று பகரும். கருத்து ஒற்றுமை இல்லாமல் வாழ்க்கை நடத்துவது, பாம்போடு வாழ்வது போன்றது. அது பலரின் பரிகாசத்திற்கும் இடம் தருவது. "புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார் முன் ஏறு போல் பீடு நடை" என்று நாயனார் அருளியுள்ளதும் சிந்தனைக்கு உரியது. புகழத்தக்க செய்கைகளை உடைய மனைவி இல்லாதவர்க்கு, தம்மை இகழ்ந்து பேசுவார் முன்பு ஆண்சிங்கம் போன்ற பெருமித நடை இல்லையாகும். ஆக,எவ்வகையில் பார்த்தாலும், இல்லறத்தில் மனையாளுக்கே ஏற்றம் மிக உண்டு. பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், வேலையாளாகவும் கருதுவது முற்றிலும் அறியாமை ஆகும். ஆங்கிலத்தில் "BETTER HEALF" என்று கூறியுள்ளதையும், சிவபரம்பொருள் தமது திருமேனியில் சரிபாதியை அம்மைக்குத் தந்துள்ளதையும், திருமாலின் திருமார்பில் திருமகள் உறைவதையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

 

     "கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்" என்றார் ஔவையார் "மூதுரை" என்னும் நூலில். --- இல்லறத்தை இனிதாக நடத்துவதில் கருத்து ஒற்றுமையோடு இல்லாத மனைவியால் துன்பம் உண்டாகும்.

 

     "இல்வாழ்க்கை" என்னும் அதிகாரத்தில் இல்வாழ்க்கையின் சிறப்புக்களை விரித்து ஓதிய திருவள்ளுவ நாயனார், அந்த இல்வாழ்கையானது சிறப்பாக நடப்பதற்குத் துணையாக நிற்பதொரு மனைவியால் விளையும் நன்மையைக் குறித்து, "வாழ்க்கைத் துணை நலம்" என்று ஓர் அதிகாரத்தையும் வைத்து, இல்லாளின் சிறப்பையும்அருளினார்.

 

       இல்லறத்திற்குத் தக்க நல்ல குணங்களையும்நல்ல செய்கைகளையும் உடையவளாய் இருந்து, "கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை"யாதலால்தன்னைக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள்அந்த இல்லற வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள் என்றார்.நல்ல குணங்களாவன --- விருந்தினரை உபசரித்தல்துறவியரைப் போற்றுதல்,இரந்தோர்க்கு ஈதல் முதலியன. நல்ல செயல்களாவன --- அறுசுவை உணவு வகைகளைச் சுவையாகச் சமைத்தலும்,வீட்டைப் பாதுகாத்தல்,வீட்டில் உள்ள பொருள்களைப் பாதுகாத்தல்அக்கம் பக்கத்தாரொடு நட்பாய் இருத்தல் முதலியன.குடும்ப வருவாய் அறிந்துஅதற்குத் தக்கபடி செலவு செய்தல்.

 

     திருக்குறளின்படிக்கு வாழ்ந்து காட்டியவர் திருவள்ளுவ நாயனார் என்பதற்கும், துறவறத்தைக் காட்டிலும், இல்லறமே நற்கதிக்கு வழிகாட்டும் என்பதற்கும் திருவள்ளுவ நாயனார் வரலாற்றில் சொல்லப்படும் நிகழ்வே சான்றாகும்.

 

     நாயனார் வாசுகி அம்மையாரோடு இல்லறம் நடத்தி வரும் காலத்தில், ஒருவர் அவரிடம் வந்து இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா என்ற தெளிவு வேண்டி வெகுநாள் காத்து இருந்தார். திருவள்ளுவ நாயனார் அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல், அவரே அறிந்து கொள்ளட்டும் என்று வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒருநாள், வாசுகி அம்மையார் கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொண்டு இருக்கும்போது, நாயனார் அழைக்க,பாதி கிணற்று அளவில் தண்ணீர் தூக்கிய கயிற்றை அப்படியே விட்டு வந்ததையும், ஒருநாள் அம்மையார் நாயனாருக்குப் பழைய சோறு பரிமாறிக் கொண்டு இருக்கையில், "இது சுடுகின்றது" என்று நாயனார் சொல்லஅம்மையார் உடனே விசிறி கொண்டு விசிறி நின்றதையும், மற்றொருநாள் நாயனார், பகலில் தறி நெய்துகொண்டு இருக்கும்போது, கையில் இருந்த குழல் தவறிக் கீழே விழுந்ததை எடுக்கதனது மனைவியாரை நோக்கி, "தீபம் கொண்டு வா" என்று சொல்லஅம்மையார் உடனே தீபம் கொண்டு வந்ததையும் கண்டு, கணவன் கருத்து வழி நிற்கும் மனையாள் வாழ்ந்தால் இல்லறமே பெரிது, இல்லையேல் துறவறமே பெரிது என்று எண்ணிக் கொண்டு நாயனாரை வணங்கிப் போனார்.

 

     மற்றொரு நாள், திருவள்ளுவ நாயனார், தாம் நெய்த ஆடையை விற்பதற்குக் கடைத் தெருவிற்குப் போய், விற்பனைக்கு உரிய ஆடையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கநாயானார் அருளிய திருக்குறளைப் படித்த ஒருவன், இவரிடத்தில் இவர் கூறிய நூலுக்கு ஏற்ற ஒழுக்கம் உள்ளதா என்று ஆராய எண்ணி, நாயனாரிடம் வந்து, "இந்த ஆடையின் விலை என்ன?" என்று கேட்க"ஒரு பணம்" என்றார் நாயனார். அவன் நாயனார் வைத்திருந்த ஆடையை வாங்கிக் குறுக்கே கிழித்து, "இந்தப் பாதியின் விலை என்ன?" என்று கேட்டான். நாயனார் "அரைப் பணம்" என்றார். அந்தப் பாதியையும் கிழித்து, "இதன் விலை என்ன?" என்று கேட்டான். நாயனார் மிகப் பொறுமையாக,"கால் பணம்" என்றார். நாயனாரின் பொறுமையை வியந்து அவன், ஆடையை வாங்காமலே சென்றான். 

 

     நாயனாரது பொறுமையை மேலும் சோதிக்க வேண்டும் என்று எண்ணிய அவன், மறுநாள் காலையில் அவரது இல்லத்திற்குச் சென்று, வாசுகி அம்மையாரைத் தொந்தரவு செய்து வம்புக்கு இழுத்தான். தறி நெய்து கொண்டு இருந்த நாயனார், தறியை விட்டுச் சென்று, அவனை நையப் புடைத்தார். உதை வாங்கிய அவன், நாயனாரை நோக்கி, "ஐயா! நீர் 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' என்று கூறிய திருக்குறள் பயனற்றதாகி விட்டதே" என்றான். அதற்கு நாயனார், "நீ திருக்குறளை முழுதும் படிக்கவில்லை போலும். 'செய் தக்க அல்ல செயக் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்னும் திருக்குறளைப் படித்து இருந்தால், இந்தக் காரியத்தை நீ செய்திருக்க மாட்டாய்" என்றார். திருக்குறளில், சொல்லப்படாத வாழ்வியல் செய்தி ஒன்றும் இல்லை என்பதை அறிந்த அவன், வீணே பெரியாரைப் பழித்த பாவத்திற்கு ஆளானோமே என்று வருந்தி, நாயனாரிடத்தில் மன்னிப்புக் கேட்டுச் சென்றான்.

 

     "சொல்லுதல் யார்க்கும் எளிய,அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்று நாயனார் திருக்குறளில் அருளியது போல,அழகான வாய்பேச்சை விட்டு, வாழ்ந்து காட்டுதல் நல்லது. அறிவுரை என்பது ஒன்றுதான் இலவசமாக எங்கும் கிடைப்பது. அறிவுரை சொல்லுவது எளிது. வாழ்ந்து காட்டினால், பின்பற்றுவோர்க்கு மிக எளிதாக அமையும்.

 

     திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு, தெளிபொருள் விளக்கம் என்னும் நூல், 1904-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலின் ஆசிரியர், சென்னை, சிந்தாதரிப்பேட்டை வடிவேலு செட்டியார் அவர்கள் விளக்கியுள்ள "திருவள்ளுவ நாயானார் வரலாறு" என்னும் பகுதியில் இருந்து இது எடுத்துக் காட்டப்பட்டது.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...