இளைதாக முள்மரம் கொய்க
-----
திருக்குறளில் "பகைத்திறம் தெரிதல்" என்னும் ஓர் அதிகாரம். பகைவரது திறத்தைத் (வலிமை, திறமை) தெரிந்து நடந்துகொள்ளுதல் கூறப்பட்டது.
ஒரு பொருளை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால், மாட்சிமைப் படாத பகையை ஆக்குவதால் உண்டாகின்ற குற்றத்தையும், பகைமையைக் களைவதில் உண்டாகும் குற்றத்தையும் கூறினார். அதாவது, முன்னரே பகையாகி நின்ற பகையை நட்பாக்கிக் கொள்ளுதல், நட்பும் அல்லாமல் பகையும் அல்லாமல் நடுவாக்கிக் கொள்ளுதல், பகைவனிடத்தில் செய்யவேண்டியதைச் செய்தல், களையக் கூடியதைக் களைதல், அவ்விதம் களையக் கூடிய காலத்தை நோக்கி இருத்தல், பகையினைக் களையாமையால் உண்டாகும் குற்றம் ஆகிய திறங்களை அறிந்து தெரிதலைக் கூறினார்.
கொள்ளக் கூடாத பகையைக் கொண்டுவிட்டு, அதனால் தீமையை அடைவது நல்லதல்ல. எனவே, நன்மை இல்லாத அதனை ஒருவன் விளையாட்டாகக் கூடச் செய்து கொண்டாலும், அந்த விளையாட்டே தீமையைத் தருவதாக அமையும் என்றார்.
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "களைய வேண்டியதொரு முள் மரத்தை, அது இளையதாக உள்ளபோதே களைந்து எறிக. அல்லாமல், முதிர்ந்த நிலையில் களையத் தொடங்கினால், அது களைகின்றவரது கையினைத் தான் களையும்" என்கின்றார் நாயனார்.
உவமைக்கும், உவமேயத்திற்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது உவமை அணி. உவமையை மட்டும் கூறி, உவமேயத்தைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும் இங்கே முள் மரத்தைக் காட்டி, பிறிது ஒன்றை அறிவுறுத்துகின்றார் நாயனார்.
நம் கண் முன்னால் வளர்கிறது ஒரு முள்செடி. சிறியது தானே என்று அதை உடனே பிடுங்கி எறியாமல்,வளர்ந்த பின் நீக்குவோம் என்று வாளாயிருந்தால், பின்னர் நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும். அது நன்றாக வளர்ந்து வயிரம் பாய்ந்த மரமாகி விட்டபிறகு, முள்மரத்தை ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அரிவாள் கொண்டு வெட்ட முனைந்தால், முள் கையைக் குத்திக் காயப்படுத்துகிறது. வெட்டுகின்ற கூயும் நோகும். சிறியதாக இருந்த பொழுதே வெட்டியிருக்க வேண்டும் என அப்போது எண்ணுகிறோம். வளர்ந்துவிட்டால் பின்னே மிகப் பாடுபட்டு அழிக்க நேரிடுகின்றது.
நகத்தால் கிள்ளி எறியவேண்டிய செடி ஒன்றினை, மரமாக வளரவிட்டு விட்டால், பிறகு கோடரி கொண்டு வெட்டி எறியவேண்டி வருவதால், இடையூறு செய்கின்ற முட்களோடு கூடிய மரங்களை, அவை தோன்றும்போதே களைந்து எறிது வெகு சுலபமாய் முடியும். அவ்விதம் செய்யாது, அவை முதிர்ந்து வயிரம் பற்றிய பிறகு, அவற்றைக் களையப் புகுகின்றவர் கைகளில் காயத்தை உண்டாக்கித் துன்பப் படுத்துவது போல,பகைவர் எனப்படுபவர் மெலியராய் இருக்கும்போதே, அவரைத் தலை எடுக்க ஒட்டாமல் தவிர்த்தல் வேண்டும். பகை வலிமைப்பட்ட பின், அழிக்கப் புகுந்தால் அது துன்பத்தையே தரும்.
இங்கே இன்னொரு உண்மையையும் அறிந்து கொள்ளுதல் நலம். புறப்பகையைக் களைய வேண்டி வரும்போது களையலாம். ஆனால், மாந்தர்க்கு அகப்பகைகளாக உள்ள காமம், குரோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்னும் இவைகள் உள்ளிருந்து கொண்டே நம்மை அறியாமல், சிறுசிறிதாக வேண்டாத செயல்களில் ஈடுபடுத்தி, பின்னர் பெரியதொரு துன்பத்தைத் தருபவை. இவைகளையும் கல்வி, அறிவு, ஒழுக்கங்களால், அவை தோன்றியபோதே நாமாக அறிந்து போக்கிவிட வேண்டும். அல்லது நமக்கு வேண்டியவரோ, பெரியவர்களோ அறிவித்தாலும் உடனே போக்கி விடவேண்டும். புறப் பகைவரை வளர விடுதல் கூடாது. அகப் பகைவரையும் வளர விடுதல் கூடாது. முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும்.
இளைதாக முள்மரம் கொய்க, களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து.
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன்
எவ்வம் மிக உற்றான்,இரங்கேசா! - வவ்வி
இளைதாக முண்மரங் கொல்க களையுர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
இதன் பொருள்---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! விக்கிரமன் --- விக்கிரமார்க்கன், தெவ்வை --- தன் பகைவனாகிய சாலிவாகனனை, இளந்தை என்று செப்பி --- இளையவனாய் இருக்கிறான் என்று சொல்லி (பொறுத்திருந்து), எவ்வம் மிக உற்றான் --- அதிக துன்பம் அடைந்தான், (ஆகையால், இது) முள் மரம் --- களைய வேண்டுவதாகிய முள் மரத்தை, இளைது ஆக --- இளையதாகிய நிலைமையிலேயே, வவ்வி கொல்க --- பிடித்துக் களைய வேண்டும், காழ்த்த இடத்து --- (அல்லாமல் அது) முதிர்ந்த நிலைமையில் (களையத் தொடங்கினால்) களையுநர் கை கொல்லும் --- களைபவரது கையை அது தானே ஊறுபடுத்தும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை--- தன் வீட்டு விளக்கு என்று முத்தம் கொடுத்தால் சுடாமல் இருக்குமா? செடியில் வளையாதது, மரத்தில் வளையுமா?
விளக்கவுரை--- விக்கிரமார்க்கன் என்பவன், தன் பகைவனாகிய சாலிவாகனன் சிறுபிள்ளை என்று விட்டு இருந்தமையால், அவன் குயவன் வீட்டில் வளர்ந்து பெரியவானாகி, மண்ணால் செய்த யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைச் சேனைகளையும் நடத்திக்கொண்டு வந்து, விக்கிரமார்க்கனோடு போர் செய்து வென்று, அவனைக் கொன்று, அவனுக்குப் பின் தானே அரசனானான். இதனால், சாலிவாகனனாகிய முள் மரத்தை விக்கிரமார்க்கன் இளைதாகக் கொல்லாமையினால், அது காழ்த்து வளர்ந்து, விக்கிரமார்க்கனுடைய உயிரையே கொன்றுவிட்டது. (கதையாக இருந்தாலும், கருத்தை மட்டும் கொள்ளலாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காண்க....
எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாத லில். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
தனக்கு எதிராகத் தோன்றிய பகையை, அது உண்டாகிய தொடக்கக் காலத்திலேயே விரைந்து களைந்து விடவேண்டும். அப்படிச் செய்தால் அது முதிராது. மேலும், அந்தப் பகைவரின் நண்பர்களை எல்லாம், அவர்கள் மிகவும் விரும்பத்தக்க செயல்களைச் செய்து, பிரித்து விடுதலும் நல்லது. அப்படிப் பிரித்துத் தன்மைப்படுத்தி விட்டால், அந்தப் பகையானது எதையும் செய்யும் ஆற்றல் அற்றதாய் விடும். அந்தப் பகையால் எந்தத் தீமையும் நேராது.
தனிமரம் காடு ஆகாது. தனிமரம் தோப்பு ஆகாது என்பவை பழமொழிகள்.
"காமவுட் பகைவனும்...... இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய்" என்று வள்ளல்பெருமான் பாடியதன் அருமையை,இதை வைத்து உணர்க.
களையை அறுவடை செய்த பின்னரும் தாளை விட்டுவைத்தால், அதன் அடியில் வளமற்ற பயினாரனது கிளைக்கும். எனவே, உழவர்கள், அதனையும் அழித்து அழுகச் செய்வார்கள். அதுபோலவே, பகையையும் தொடக்கத்திலேயே அடியோடு ஒழிக்கவேண்டும். அரைகுறையாக விட்டுவைத்தால், ஆபத்து தொடரும் என்கின்றது பின்வரும் பாடல்..
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்
இருந்து அமையார் ஆகி இறப்ப வெகுடல்,
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.--- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
பரந்து பட்டு அருவிகள் இழிதரும் மலை நாடனே! தம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின்னரும், அதனால் மனம் நிறைவு கொள்ளுதலோ, சோம்பி இருத்தலோ கூடாது. அவர்களையும் அழித்து ஒழிப்பதே சிறப்பு.அது எப்படிப்பட்டது என்றால், கதிர் அரிந்து வைத்த அரிதளையும் விடாமல் உழுது, நீருள் அழுந்து இருக்குமாறு செய்து அழுக விடுதலைப் போன்றது ஆகும்.
சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபாடு உடையர்,- நிறைகயத்து
ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும்
யானை நிழல்காண்பு அரிது. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
தமது பகைகள் சிறியனவாய் இருப்பினும், அவற்றினின்றுந் தம்மைக் காத்துக் கொள்ளுதலை அறியாதவர், மிகவும் பிழைபாடு உடையவர் ஆவார். ஆழமான நீர்நிலையில், சிறிய தவளை குதித்தாலும், அது யானையின் நிழலைத் தோன்றாதவாறு செய்து விடும்.
நீர் நிலை ஓரத்தில் ஒரு யானை நிற்கின்றது. அதன் நிழல் நீரில் காணப்படுகின்றது. அந்த நேரம் பார்த்து, ஒரு சிறுதவளை ஒன்று தண்ணீரில் குதிக்கின்றது. குதித்தவுடன் நீர் கலங்கி யானையின் நிழல் சிதைவுறுகின்றது. தவளையோ யானையினும் எவ்வளவோ சிறியது. அது குதித்தலால் நீர்நிலை முற்றும் நிறைந்து காணப்பட்ட யானையின் நிழல் சிதைவுறுவதுபோல், சிறிய பகைவராய் இருந்தாலும் அவராலும் கேடு உண்டு என்பது கொள்ளப்படும்.
"சிறு பாம்பு என்றாலும் பெருந்தடி கொண்டு அடி" என்பது பழமொழி. பூ நாகம் சிறிது. அதன் விடமோ உயிரையே வாங்கிவிடும். ஒரு சிறுவன்,ஒருவரைப் பற்றி ஓர் அவதூறு சொல்வானாயின்,உலகம் அந்தப் பேச்சினைக் கேட்டு நம்பிக்கை கொள்வதாக இருந்தால், அவதூறு அப்படியே காட்டுத் தீப்போல் பரவி, அவர்க்குப் பகைவர் பலரையும் உண்டாக்கி விடும். சிறியவன் தானே பேசினான் என்று வாளா இருத்தல் கூடாது.
இராமாயணத்தின் முதல் நாள் போரில், அங்கதனால், சுபாரிசன் என்னும் அரக்க வீரன் கொல்லப்பட்டான் என்னும் செய்தியைத் தூதுவர்கள் சொல்லக் கேட்ட இராவணன், குரங்கினால் மேருமலையைப் போன்ற பலம் உள்ளவன் இறந்தான் என்றால், குரங்குப் படைகளை எளிதாக எண்ணி இகழுதல் கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
‘கருப்பை போல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ? --- கம்பராமாயணம், முதற்போர் படலம்.
இதன் பொருள் ---
கருப்பை போல் குரங்கு எற்ற --- எலியைப் போன்ற (இழிந்த) குரங்கு தாக்கி; கதிர் சுழல் பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான் --- சூரியன் சுற்றும் மலையாகிய மேருமலை போன்ற பிரகத்தன் இன்று மாண்டான்; பகையையும் ஆர் அழல் நெருப்பையும் --- பகையினையும் அரிய நெருப்பையும்; அருப்பம் என்று இகழ்ந்தால் --- அற்பம் என்று இழிவு செய்தால்; அது நீதியோ? --- அது நீதி நெறியாகுமோ? (ஆகாது).
தன்னால் முடிசூட்டப்பட்ட சுக்கிரீவன் தன்னை வந்து வணங்கியபோது, இராமன் அவனுக்கு அறிவுரைகளைக் கூறுகின்றான்.
‘சிறியர் என்று இகழ்ந்து நோவு
செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன். --- கம்பராமாயணம், அரசியல் படலம்.
இதன் பொருள் ---
குவவுத் தோளாய் --- திரண்ட தோள்களை உடையவனே! சிறியர்என்று --- (உருவம், வலிமை, அறிவு போன்றவற்றில்) நம்மை விடச் சிறியவர் என்று நினைத்து; இகழ்ந்து --- இகழ்ச்சி செய்து; நோவு செய்வன செய்யல் --- (எவர்க்கும்) துன்பம் செய்யும் காரியங்களைச் செய்ய வேண்டா; இந் நெறி இகழ்ந்து --- இந்த நல்ல நெறியினைப் போற்றாது இகழ்ந்து; யான் ஓர் தீமை இழைத்தலால் --- நான் ஒரு தீங்கினைச் செய்த காரணத்தால்; உணர்ச்சி நீண்டு --- பகைமை உணர்ச்சி வளர்ந்து; குறியது ஆம் மேனி ஆய கூனியால் --- குறுகிய உடம்பினை உடையவளான கூனியால்; வெறியன எய்தி --- வறுமைகளை அடைந்து; வெந்துயர்க் கடலின் நொய்தின் வீழ்ந்தேன் --- கொடிய துன்பமாகிய கடலில் எளிதாக விழுந்தேன்.
சிறியர் என இகழ்வதால் தீமை விளையும் என்பதைத் தன் இளம்பருவ நிகழ்ச்சியால் இராமன் எடுத்துக் காட்டினான். 'பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்'என்ற அடிகள் இந்நிகழ்ச்சியை விளக்கும். சிறியர் என்று இகழ்தல் தீது என நீதி நூல்கள் உணர்த்தும்.
எள்ளற்க என்றும் எளியார் என்று,என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா, - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை, கூறற்க
கூறு அல்லவற்றை விரைந்து. --- நான்மணிக்கடிகை.
இதன் பொருள் ---
என்றும் எளியார் என்று எள்ளற்க --- எக்காலத்தும் பொருள் வலிகளால் குறைந்தவர் என்றுபிறரை இகழுதல் கூடாது. என்பெறினும் கொள்ளார் கை மேலவா கொள்ளற்க --- மிகச் சிறந்தது ஒன்றைப் பெறுவதனாலும், கொள்ளத் தகாதவருடைய கைகள், தன் கைகளுக்கு மேற்பட்டன ஆகும்படி அவர்பால் ஒன்றும் ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. சிறு இல் பிறந்தாரை உள் சுடினும் சீறற்க --- வறுமை மிக்க குடியிற் பிறந்தவர்களை அவர் செய்கை தனது உள்ளத்தை வருத்துவதாயினும் சினம் கொள்ளுதல் கூடாது. கூறு அல்லவற்றை விரைந்து கூறற்க --- சொல்லத் தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லுதல் கூடாது.
எவரையும் எளியர் என்று இகழாதே; சிறந்த பொருளாய் இருந்தாலும்,தகாதவர் கொடுக்க வாங்காதே; தகாதன செய்தாலும் ஏழை மக்களைச் சீறாதே; தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லிவிடாதே.
No comments:
Post a Comment