சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா? கூடாதே.
-----
அரும்பெரும் பொருள் எதுவானாலும், அதனை இகழ்தல் கூடாது. காரணம் நமக்கு இருப்பது சிற்றறிவு. அரிய பொருளை அறிந்து பயன் பெறுவதே அறிவுடைமை. இகழ்தல் சிறுமதியோருக்குச் சாலும். அரும்பெரும் சோதியாகிய இறைவன் எங்கே இருப்பான் என்றால், எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து இருப்பான் என்பர் பெரியோர். அந்தர்யாமித்துவம் என்று சொல்லப்படும். எல்லாப் பொருள்களிலும் கலந்துநிறைந்து இருக்கும் நிலை. எப்படி இருப்பான் என்பதை,
"ஈறாய்,முதல் ஒன்றாய்,இரு பெண்ஆண்,குணம் மூன்றாய்,
மாறாமறை நான்காய்,வரு பூதம்அவை ஐந்தாய்,
ஆறுஆர் சுவை, ஏழ்ஓசையொடு,எட்டுத்திசை தானாய்,
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிம்மிழலையே".
என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய் (ஈறாய்),ஒடுங்கிய உடலைத் தான் ஒருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய் (முதல் ஒன்றாய்), சத்தி சிவம் என இருவகைப்பட்டவனாய் (இரு பெண் ஆண்), சத்துவம்,இராஜசம், தாமதம் என்னும் முக்குண வடிவினனாய் (குணம் மூன்றாய்), எக்காலத்தும் மாறுபடாத நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவினனாய், வான், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பூதங்களாய், நாக்கு என்னும் பொறியைக் கவருகின்ற உப்பு, துவர்ப்பு, கார்ப்பு,கைப்பு, புளிப்பு,தித்திப்பு என்னும் ஆறுசுவைகளாய், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம்,பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியிலும், குரல், துத்தம், கைக்கிளை,உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழ் மொழியிலும் வழங்கப் பெறுகின்ற ஓசைகள் ஏழாகவும், நேர்திசைகள் நான்கு, கோணத் திசைகள் நான்கு என எட்டுத்திசைகள் ஆகியவற்றில் நிறைந்தவனாய், கண்ணும் ஒளியும், கதிரும் சூரியனும், ஒளியும் சூடும் போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளில் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும்,உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. இது மேற்குறித்த பாடலின் பொழிப்புரை.
அசுரர் குல அதிபன் ஆன இரணியன், எல்லாம் தானே எனக் கொண்டு, எல்லோரும் தனது பெயரையே மந்திரமாகக் கொண்டு ஓதவேண்டும் என்று கட்டளை இட்டான். அக் கட்டளையின்படி, அரிய வேதங்களை ஓதி இருந்தும், அவற்றின் உட்பொருளாக உள்ள இறைவன் திருநாமத்தை ஓதாது, உயிருக்குப் பயந்து, தான் ஓதிய வேதங்களின் வழி நிற்காமல், "இரணியாய ரூபா நமோ" என்று ஓதியவன் ஒரு வேதியன். ஆனால்,அரக்கனாகிய இரணியனுக்கு மகனாக அவதரித்த பிரகலாதரோ, "அரி அரி நாராயணா" என ஓதினார்.
இதைக் கேட்ட இரணியன் வெகுண்டு, "அவன் எவன்? அதற்கு ஆதாரம் ஏது? இதோ இந்தத் தூணில் உள்ளானோ? சொல்" என வெகுண்டு, தூணைத் தனது காலால் உதைத்தான்.
"என் பெருமான் எல்லாப் பொருள்களிலும் உள்ளான்" என்றார் பிரகலாத ஆழ்வார்.
இதைப் பின்வரும், திருப்பகழ்ப் பாடல் ஒன்றினாலும், கம்பராமாயணப் பாடலாலும் காணலாம்....
அருமறை நூல்ஓதும் வேதியன்
இரணிய ரூபாந மோஎன,
அரிகரி நாராய ணாஎன ...... ஒருபாலன்,
அவன்எவன் ஆதாரம் ஏதுஎன
இதன்உள னோஓது நீஎன,
அகிலமும் வாழ்வான நாயகன் .....எனஏகி
ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போறு வாள்அரி
உகிர்கொடு வாராநி சாசரன் ...... உடல்பீறும்
உலகுஒரு தாளான மாமனும்
உமைஒரு கூறான தாதையும்
உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே. ---திருப்புகழ்.
"சாணிலும் உளன், ஓர்தன்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக்
குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன
சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின்" என்றார்,
"நன்று" எனக் கனகன் சொன்னான்.
--- கம்பராமாயணம், இரணியன் வதைப் படலம்.
"இறைவன், ஒரு சாண் அளவுடைய பொருளிலும் இருப்பான்; பிரிக்க இயலாதபடி ஒன்றுபட்ட தன்மையை உடைய ஓர் அணுவை, நூறு பகுதிகளாகப் பிரித்த ஒரு பகுதியிலும் இருப்பான்; மிகப் பெரிய மேரு மலையிலும் இருப்பான்; இங்கு நின்ற இந்தத் தூணிலும் இருப்பான்; நீ இப்போது சொன்ன இந்தச் சொல்லிலும் இருப்பான்; (நான் சொன்னபடி) அப் பெருமானுடைய எங்கும் நிறைந்திருக்கும் இந்தத் தன்மையை விரைவிலே காண்பாய்" என்று பிரகலாத ஆழ்வார் கூறினார். "நல்லது" என்று கூறி இரணியன் ஏளனமாக சிரித்தான்.
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானைத் திருமுதுகுன்று உடையான்தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே" என்றும் அப்பர் பெருமான் பாடியருளி உள்ளார். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறியார்க்கே" என்றும் பாடி உள்ளார். எனவே, இறைவனை நாளும் இதயக் கமலத்தில் வைத்துப் பூசிக்கும் அடியார்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு பெருமான் எழுந்தருளி உள்ளார்.
"மலர்மிசை ஏகினான் மாணடி" என்றார் திருவள்ளுவ நாயனார். பரிமேலழகர் பெருமான் "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு சேறலின்" என்று சமயம் கடந்த ஓர் உண்மையை நிலைநாட்டினார்.
ஔவைப் பிராட்டியார் நமக்குக் காட்டியபடி, தொண்டர்களிடத்தில் இறைவன் அடக்கம் பெற்றுள்ளதால், இறைவனைத் தம் மனத்தகத்தே கொண்ட அடியவர்களின் திருவடி, நமது தலைமேலே பொருந்துமானாலே, பிரமனுடைய எழுத்தானது அழிந்து போகும் என்று பாம்பன் சுவாமிகள் பின்வருமாறு பாடி உள்ளார்....
பெரிதினுக்கு எல்லாம் பெரிய சிவன் அடியார்
உள் அடக்கம் பெறுவான் என்னா,
அரிய ஔவை சொன்னபடி,நின்அடியருள்
அடக்கம் ஆவாய்! அன்னோர்
திருவடியை அடிமை முடி பொருந்தும் எனில்,
பிரமலிபி சிதைவு ஆகாதோ?
சரவண சண்மய துரிய அமலசிவனே!
கருணை தாராய் மன்னோ.
தமது தந்தையாகிய பரம்பொருளுக்கே குருவாக உபதேசம் செய்தவன் முருகப் பெருமான் என்பதை மனத்தில் உன்னி, "குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா" என்று அருணகிரிநாதப் பெருமான் பாடினார். அவருடைய வேண்டுகோளையும், ஏக்கத்தையும் கண்ட முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கும் குருவாக எழுந்தருளி உபதேசம் செய்தார். "உபதேச மந்திரப் பொருளாலே, உனாநான் நினைந்து அருள் பெறுவேனோ, செபமாலை தந்த குருநாதா, திருஆவினன்குடிப் பெருமாளே" எனத் தமக்கு உபதேச மந்திரத்தை அருளியதோடு, செபமாலையும் தந்த பெருமானின் எல்லை இல்லாக் கருணையைப் போற்றிப் பாடுகிறார். அகத்திய முனிவருக்கும் முருகப்பெருமானே குருநாதன். ஆனால் முருகப் பெருமானுக்கு குரு என யாரும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒப்பும் உயர்வும் அற்ற, பரம்பொருளின் திருவடிகளைத் தமது இதயத்திலே தரித்துக் கொண்ட, பெருமைக்கும் வழிபாட்டுக்கும் உரிய அடியவர்களின் திருவடிகளைத் தியானித்தல் செய்தாலே உயிர்க் குற்றங்கள் யாவும் ஒழிந்து போகும். பிறப்பதும் இறப்பதும் ஆகிய தொழில் அற்றுப் போகும் என்பதை உணர்ந்து நாம் ஈடேறக் கருணைத் திருவுள்ளம் கொண்ட பாம்பன் சுவாமிகள் பின்வரும் அருட்பாடலைத் தந்து உள்ளார்.
இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருட்
குருஎன உற்று இருந்தாய் அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத--
லால், உன்அடி உளமே கொண்ட
கனத்த அடியவருடைய கழல்கமலம்
உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மரிப்பதுவும் ஒழிந்திடுமே,
குறக்கொடியைச் சேர்ந்திட்டோனே.
இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்பதற்கு விடை பகருகின்றது "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்....
இந்து இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்
இந்து இரவி காந்தத்து இலங்குமே --- இந்து இரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்
நேத்திரத்தோர் பாலே நிறைவு.
இதன் பொருள் ---
திங்கள், ஞாயிறு என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்தத் திங்கள், ஞாயிறு ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும். அதுபோல, திங்கள் ஞாயிறு என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அக் கடவுளின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.
(இந்து - சந்திரன். இரவி - சூரியன். கிரணம் - ஒளி. நேத்திரம் - கண். நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன். நேத்திரத்தோர் - அடியவர்.)
அப்படிப்பட்டஅடியவர்கள் என்றும் எளிய தோற்றத்துடனேயே இருப்பார்கள். அவர்களிடத்தில் பகட்டு இருக்காது. இறையருளைப் பெறுவதற்கான சாதனங்கள் இருக்கும். அவர்களது தோற்றத்தைக் கண்டதுமே, இறைவனைக் கண்டதாகவே எண்ணி வணங்கி வாழ்தல் வேண்டும். இதை,
எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
திருநீறும் சாதனமும் கண்டால், உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்து, அடிமைத் திறம்நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர், அவர் தேவர் என்று சொல்லி
இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
என்னும் திருத்தாண்டகத்தால் காட்டி அருளினார் அப்பர் பெருமான்.
யாவராக இருந்தாலும், நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பி நோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
திருக் கன்றாப்பூர் என்னும் திருத்தலத்தில், நடுதறி அப்பராக இறைவன் எழுந்தருளி உள்ளார். அத்திருத்தலத்தை வழிபட்டு, அப்பர் பெருமான் பாடியருளிய பாடல் இது.
அவ்வாறு இல்லாமல், இறையடியார்கள் ஆகிய பெரியவர்களை, சிறியவர்கள் என்றும் ஏழைகள் என்றும் இகழ்ந்து கூறுவதும்,சாதி குலம் பார்ப்பதும் பெரும் கேட்டில் முடியும் என்கின்றது "தண்டலையார் சதகம்"என்னும் நூலில் வரும் இப் பாடல்...
அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்
எக்குலத்தார் ஆனால் என்ன?
உருப்பயிலும் திருநீறும் சாதனமும்
கண்டவுடன் உகந்து போற்றி,
இருப்பதுவே முறைமை; அல்லால் ஏழை என்றும்,
சிறியர் என்றும் இகழ்ந்து கூறின்,
நெருப்பினையே சிறிது என்று முன்தானை
தனில் முடிய நினைந்த வாறே.
இதன் பொருள் ---
திருத்தண்டலையில் எழுந்தருளிய அருவமாகிற சிவபிரானுடைய திருத்தொண்டர்கள், எந்தக் குலத்தவரானாலும் குறையில்லை. அவர்கள் வடிவிலே விளங்கும்திருநீற்றினையும் மற்றச் சின்னங்களையும் பார்த்தவுடன், சிறப்பித்து வாழ்த்தி இருப்பதே தகுதி ஆகும். அல்லாமல்,ஏழை எனவும், உருவத்திலும் அறிவிலும் சிறியவர் எனவும் பழித்து உரைத்தால், நெருப்பு சிறியது என எண்ணி, முன்தானையில் முடிய நினைத்தற்குச் சமமாகும்.
"அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க, அபராதம் வந்து, கெட்ட மதி மூடும்; அனைவோரும் வந்து, சீச்சீ என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமாப் போல்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
இறையடியார்கள், பெரியவர்கள். இவர்களின் அருமையை மூடர்கள் அறியாமல் இகழ்ந்து இருப்பர் என்கின்றதற்கு ஒரு பாடலை, "குமரேச சதகம்" கூறுகின்றது.
மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர்,
மட்டிக் குரங்கு அறியுமோ?
மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,
மலடிதான் அறிவது உண்டோ?
கணவருடை அருமையைக் கற்பான மாதுஅறிவள்,
கணிகையா னவள் அறிவளோ?
கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை, வரும்
களவான நாயறியுமோ?
குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,
கொடிய பூனையும் அறியுமோ?
குலவுபெரி யோர் அருமை நல்லோர்களே அறிவர்,
கொடுமூடர் தாம் அறிவரோ?
மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர
வனம் ஊடு தழுவும்அழகா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இதன் பொருள் ---
மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனமூடு தழுவும் அழகா --- நீயே கணவன் என்று வேடர்குலத்தில் வளர்ந்த வள்ளிநாயகி பின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே! மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! --- திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!
மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ --- மணமுடைய மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்கள். அன்றி அறிவற்ற குரங்கு அறியுமோ? மக்களுடைய அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? --- குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்கள். அல்லாமல் மலடி அறிவாளோ?, கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ --- கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; விலைமாது அறிவாளோ?, கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ --- நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ --- பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள். கொடியதான பூனையும் அறியுமோ? (அது போலவே) குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்;கொடுமூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினரே அறிவார்கள். கொடிய கயவர்கள் அறிவார்களோ?
ஒருசந்தி --- ஒருவேளை. (நோன்பு) ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒருசந்தி, ஒருவேளை என்பது வழக்கம். "ஒரு சந்திப் பாண்டம்" என்பது "ஒரு சந்திப் பானை" என்று தண்டலையார் சதகத்திலும் சொல்லப்பட்டு உள்ளது. நோன்புக்குச் சமைக்கவெனத் தனியேவைத்திருக்கும் சமையல் கலம். நாய் நக்கக் கூடாது என்பதற்காக, விரதம் முடிந்த பின்பு, அந்தப் பானையைப் பரண்மீது வைத்து விடுவார்கள்.காரணம், நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர்கள் எல்லோரையும் ஒருதன்மையராகவே கருதுவர். பெரியவர் சிறியவர் என்ற வேற்றுமையை அவர்கள் அறியமாட்டார். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள்.
No comments:
Post a Comment