48. வலி அறிதல் --- 03. உடைத்தம் வலியறியார்

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "உடையதாகிய தமது வலிமையை அறிந்து கொள்ளாதவராகிதமக்கு உள்ள செயற்கைக் கிளர்ச்சியால் செயலைத் தொடங்கி,மன எழுச்சி குன்றி,இடையிலே செயல் ஒழிந்தவர் பலர்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவுஆண்மைபெருமை ஆகிய மூன்று வித வல்லமையும் பொருந்தியுள்ளவர் சிலரே. அவருள்ளும் அறிவு என்பது மிகச் சிலர்க்கே உரியது. ஆதலால்அறிவற்ற பலர் தமது வலிமையை அறியாமலே ஒரு தொழிலைத் தொடங்கிக் கெட்டுப் போவது திண்ணம். அவ்விதம் கெடாதவிதம் முடித்தல் வேண்டுமானால்தமது வலியை நன்கு ஆராய்ந்தே தொழிலைச் செய்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

உடைத்தம் வலி அறியார்ஊக்கத்தின் ஊக்கி,

இடைக்கண் முரிந்தார் பலர்.              

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     உடைத்தம் வலி அறியார்- கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே

 

     ஊக்கத்தின் ஊக்கி--- மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி

 

     இடைக்கண் முரிந்தார் பலர்--- அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.

 

     ('உடையஎன்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான்என்று எடுத்துத்

துக்கம்உற்று வீடினனே,சோமேசா! --- ஒக்கும்

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

 

 

இதன்பொருள்---

 

    சோமேசா! உடை தம் வலி அறியார் --- கருத்தா ஆதலை உடைய தம் வலியின் அளவு அறியாதேஊக்கத்தின் ஊக்கி --- மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கிஇடைக்கண் முரிந்தார் பலர் --- அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்,

 

    நான் சலந்தரன் --- நான் சலந்தராசுரன்சக்கரத்தை ஏற்பன் --- நீர் பூமியில் கீறிய இச் சக்கரத்தைத் தாங்குவேன்,  என்று எடுத்து --- என்று சொல்லிச் செருக்கினால் எடுத்துதுக்கம் உற்று வீடினன் --- துன்பமடைந்து அழிந்தான் ஆகலின்ஒக்கும் --- இந்த நீதி ஒப்பதாகும் என்றவாறு.

 

     சிறப்புடைய அறிவுடையார் சிலர் ஆதலின்முரிந்தார் பலர் என்றார். அதனால்தம் வலி அறிந்தே தொடங்குக என்றது எஞ்சி நின்றது.

 

    சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாதுசிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில்சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்?" என்று வினவஅவன்"சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ?கூடுமாயின்தரையில் யான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீறஅதை அவன் தோளின்மீது எடுக்கஅப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்து ஒழிந்தான். அதனை அறிந்த திருமால்தாம் அவன் மனைவியாகிய பிருந்தையினிடத்து மோகத்தைத் தணித்துக் கொள்ளுதற்குத் தக்க தருணம் அதுவே என நினைத்துஅச் சலந்தரன் வடிவம் தாங்கிச் சென்று எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கையில் வஞ்சனை அறிந்த பிருந்தை உடனே தீப்புக்காள். திருமால் பிரிவாற்றாது அவள் சாம்பரில் புரண்டார்.  

 

         இடுகாட்டுள் மாதர் எலும்பில் புரள்மால்,

         சுடுகாட்டுள் ஆடுவாற் சுட்டின் - ஒடுகாட்டும்

         சம்பந்தா என்புநின் பால்தந்து ஆக்கிக்கொண்டிலன்என்

         கும்பம்தாம் என்னும் முலைக் கொம்பு.

 

என்னும் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளை நோக்குக.  இது இலிங்க புராணத்து உள்ளது.

 

     அடுத்துஇத் திருக்குளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

பைதல் எனக்கருதி பார்க்கவ ராமன் சிலையோடு

எய்துதவம் தோற்றான்இரங்கேசா! --- வையத்து

உடைத்தம் வலிஅறியார்ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முறிந்தார் பலர்.

 

இதன் பொருள் ---  

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! பார்க்கவ ராமன் --- பரசுராமன்பைதல் எனக் கருதி --- இராமபிரானைச் சிறு பையன் என்று எண்ணிசிலையோடு --- தன் கையில் கொணர்ந்த விஷ்ணு வில்லோடு,எய்து தவம் தோற்றான் --- வருந்திச் செய்த தவத்தையும் இழந்தான், (ஆகையால்இது) வையத்து --- உலகத்தில்உடை தம் வலி அறியார் --- ஆள்வினை உடைய தமது படைவலி முதலியவற்றை அறிந்து கொள்ளாதவராகிஊக்கத்தின் ஊக்கி --- மனவலிமையால் தம்மின் வலியாரோடு சண்டை செய்து,இடைக்கண் முறிந்தார் பலர் --- வெற்றி பெறமாட்டாமல் நடுவிலே தோற்றவர் அநேகர் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை--- தமது பலம் அறிந்து சண்டை செய்யவேண்டும்.

 

         விளக்கவுரை--- இராமபிரானைச் சிறுபிள்ளை என்று உல்லங்கணம் (அவமதிப்பு) செய்து வந்து எதிர்த்த பரசுராமன் பட்டபாடு இராமாயணத்தில் எல்லாரும் அறிந்தது. சிங்கம் சிறியதாயினும்அதை அசட்டை செய்து வந்து எதிர்த்த யானைக்குச் சமானமானார் பரசுராமர். இராமபிரான் வலிக்கு முன்னே தம் வலி எம்மாத்திரம் என்று கொஞ்சமேனும் அறிந்து கொள்ளாமல்அவர் தம் மனவலியால் வாய்க்கு வந்தபடி ஏசிப் பேசிக் கடைசியில் தோற்றுக் கூசினார். அவர் கையில் கொணர்ந்த விஷ்ணு வில்லை இராமபிரான் அநாயாசமாய் வாங்கி வளைத்து நாணேற்றி,அதில் புறப்பட்ட அம்புக்கு அவருடைய தவத்தை இலக்காக்கினார். ஆகையால்,அவர் வில்லோடு தவத்தையும் இழந்து அவமானம் அடைந்தார்.

 

     அடுத்திஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்துஇராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

 

வாரிசுதை வவ்வும் உவணத்தை எதிர் வானவர்கள்

மூரிஇழந்து எய்த்தார்முருகேசா! --- தேரின்

உடைத்தம் வலிஅறியார்ஊக்கத்தின் ஊக்கி,

இடைக்கண் முரிந்தார் பலர்.

 

இதன் பொருள் ---

 

         முருகேசா --- முருகப் பெருமானேவாரி சுதை வவ்வும் உவணத்தை --- கடலில் தோன்றும் அமுதத்தைக் கவர்ந்த கருடனைஎதிர் வானவர்கள் --- எதிர்த்த தேவர்கள்மூரி இழந்து --- வலிமை கெட்டுஎய்த்தார் --- இளைத்தார்கள். தேரின் --- ஆராய்ந்து பார்க்குமிடத்துஉடை தம் வலி அறியார் --- தமக்குள்ள ஆற்றலை அறிந்து கொள்ளாமல்ஊக்கத்தின் ஊக்கி --- ஊக்கத்தால் முயற்சி செய்துஇடைக்கண் முரிந்தார் பலர் --- அதனை முடிக்க முடியாமல் இடையிலே அழிந்தவர்கள் பலர்.

 

         கடலில் தோன்றிய அமுதத்தைக் கவர்ந்த கருடனை எதிர்த்த தேவர்கள் தங்கள் ஆற்றல் கெட்டொழிந்தார்கள். தம்முடைய ஆற்றலின் அளவை அறியாமல் காரியத்தை முடிக்க முயற்சி செய்து இடையிலே கெட்டொழிந்தவர்கள் பலர் என்பதாம்.

 

தேவர்கள் கதை

 

         காசிப முனிவருடைய மனைவியருள்ளே கத்துரு என்பவள் ஒருநாள் இந்திரனுடைய உச்சைசிரவம் என்னும் குதிரையைப் பார்த்தவுடன்விநதை என்பவளை நோக்கிஇதன் வால் வெண்மையோ கருமையோ என்று கேட்டாள். அவள் வெண்மை என்று சொன்னாள். இவள் கருமை என்று சொன்னாள். அப்பொழுது தோற்றவள் மற்றவளைச் சுமப்பதாக இருவரும் முடிவு செய்துகொண்டார்கள். கத்துரு தன்னுடைய மகன் கார்க்கோடகனால் அதன் வாலைக் கருமையாக்குவித்து விநதைக்குக் காட்டினாள். தன்னைச் சுமக்கும்படி அவளை அடிமை ஆக்கிக் கொண்டாள். பெருவிரல் அளவு உள்ளவர்களாகிய வாலகில்லியர் காசிபமுனிவர் செய்யும் வேள்விக்குரிய பொருளைக் கொண்டு வரும்பொழுதுபசுவின் குளம்பு அழுந்திய குழியில் உள்ள நீரில் உடம்பு முழுவதும் அமிழ்ந்தக் கண்டு இந்திரன் நகைத்தான். முனிவர்கள் சினந்துஇந்த வேள்வியிலே இந்திரனுக்குப் பகைவனாக ஒருவன் தோன்ற வேண்டுமென்று அவி சொரிந்தனர். அதனால் கருடன் பிறந்தான். அவ்வாறு உதித்த கருடன் தன் தாயாகிய விநதையைச் சிறையினின்றும் விடுவித்தற்குப் பாம்புகள் கேட்டபடியே விண்ணுலகத்தை அடைந்து காவலைக் கெடுத்து அமுதத்தைக் கவர்ந்து மீளுங்கால்இந்திரன் முதலியோர் கருடனுடைய பகையை வியாழ பகவானால் அறிந்திருந்தும் வீணாக எதிர்த்துப் போரிட்டுத் தம்முடைய ஆற்றல் இழந்து இளைத்தனர்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...                                                 

"போக்குஅற்ற என்துயர் போக்கிவந்து ஆட்கொள்புகழும்நல்லோர்
வாக்கிற்கு இயை புல்லை மாலேஉடைத்தம் வலிஅறியார்
ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்உலகில்
ஆக்கப் பெருவலி நீ என்று கண்டு உணராதவரே".

இதன் பொருள் ---

     புகலிடம் இல்லாத எனது துயரைப் போக்கிஎன்னை வந்து ஆண்டுகொண்டு அருளியநல்லோர் புகழுகின்ற திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமாலே! எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரிய சிறந்த துணை நீயே என்று அறிந்து,உன்னைத் துணைக் கொள்ளாதவர்,தம்மையே பெரிதாக எண்ணி முயன்று இழிவினை அடைந்தவர். அப்படிப்பட்டவர் இந்த உலகத்தில் பலர் ஆவர்.

     போக்கற்ற --- புகலிடமில்லாத. நல்லோர் வாக்கிற்கு இயைய --- நல்லோர்களுடைய வாக்கிற்குப் பொருந்திய.  ஆக்கப் பெருவலி --- எல்லா நன்மைகளையும் அடைவதற்குரிய சிறந்த துணை.

                                

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று

தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்

போமா(று) அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்

சாமாகண் காணாத வாறு.           ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பெரியாரை ஆமாலோ என்று --- பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்துசிறியார் தாமா முன் நின்று தறுகண்மை செய்து ஒழுகல் --- அறிவில் சிறியவர்கள் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல்சாம் மா --- சாதற்குரிய விலங்குகள்போம் ஆறு அறியா --- செல்லும் வழியினை அறியாதவாறுபுலன் மயங்கி --- அறிவு மயங்கலால்ஊர் புக்கு கண் காணாதவாறு --- ஊரினுள் புகுந்து கண்களை இழந்து வருந்தியதை ஒக்கும்.

 

     பெரியாரோடு மாறுபடுவார் இறுதியை எய்துவர்.

 

     இவர்க்கு எம்மோடு மாறுபடும் தகுதி இல்லை என்று கருதிய வலிமையேதாமாகவே பெரியோர்களுக்கு முன்னிற்குமாறு செய்தது. சாதற்குரிய விலங்குகள் அறிவு மயங்கி ஊரினுள் புகுதல்போல,இறத்தற்குரிய மக்கள் அறிவுடையாரோடு மாறுபடப் புகுவர் என்பதாம். தாமாக என்பது தாமா என ஈறுகெட்டு நின்றது.

  

மன் முரி குவவுத் திண் தோள் 

     வாசவன் பேரன் தன்னோடு

அல் முரி இரவி மைந்தன் 

     அருஞ் சமர்விளைத்த காலை,

செல் முரிந்தென்ன ஏறு 

     தேர் முரிந்துஎடுத்த வாகை

வில் முரிந்துஉள்ளம்தானும் 

     மிக முரிந்துஉடைந்து மீண்டான். ---  வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     மன் --- அரசர்கள்முரி --- அழிதற்குக் காரணமானகுவவு திண் தோள் ---திரட்சியை உடைய வலிய தோள்களை உடையவாசவன் பேரன் தன்னோடு ---இந்திரனது பௌத்திரனான அபிமனுடனேஅரும் சமர் விளைத்த காலை ---(செய்தற்கு) அரிய போரை மிகுதியாகச் செய்தபொழுதுஅல் முரி இரவி மைந்தன் ---இருள் அழிந்ததற்குக் காரணமான சூரியனுக்குப் புத்திரனான கர்ணன்செல் முரிந்து என்ன --- மேகம் மிகச் சிதைந்தாற் போலஏறு தேர் முரிந்து --- (அபிமன்னனின் அம்புகளால் தான்) ஏறியிருந்த தேர் உடைந்துஎடுத்த வாகை வில் முரிந்து ---(கையிற் பிடித்த) வெற்றியைத் தருகிற வில் முரிபட்டுஉள்ளம் தானும் மிக முரிந்து --- மனமும் மிகக் கலங்கிஉடைந்து --- தோற்றுமீண்டான் --- திரும்பினான் [புறங்கொடுத்தான்].

 

     கர்ணன் தனது வலிமையையும்அபிமன்னனில் வலிமையையும் எண்ணிப் பார்க்காது போரிட்டதால்,தனது தேரை இழந்தான். தனது கையில் இருந்த வில்லை இழந்தான். மனமும் வருத்தப்பட்டான். போரில் தோற்றுத் திரும்பினான்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...