பேதையின் நட்பே இனிமை தருவது
-----
திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாமை ஆகும். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறியாத ஒருவன் பேதை எனப்படுவான்.
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அறிவில்லாதவனோடு கொண்ட நட்பே இனிமை தருவது ஆகும். ஏனெனில், அவனை விட்டுப் பிரியும் காலத்தில் துன்பம் சிறிதும் தருவதாக ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.
நல்ல நட்பானது வளர்பிறை போல நாளுக்கு நாள் வளர்வது. நல்ல நட்பினர் கூடினால் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இனி இவரை நாம் எப்பொழுது கூடுவோம் என ஒருவர்க்கொருவர் நினைத்துக் கொண்டே பிரிந்து செல்வர். அறிவில்லாதவர்கள் கொண்ட நட்பானது தேய்பிறை போல் நாளடைவில் குறைந்து போவதால், பிரிய நேருங்கால் துன்பம் தோன்றுவது இல்லை.
"பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது" என்பது சுந்தரர் தேவாரம். "பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும்" என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையார்.
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா,- இலங்கருவி
தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு. --- பழமொழி நானூறு.
தம்மோடு கலந்து பழகி மனம் ஒன்றுபட்ட நண்பினரைப் பிரிதல் துன்பம் தருவதாம். நட்பிற்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் இன்மையின்,துன்பந்தரும் பேயே ஆயினும், பழகிவிட்ட அதனைப் பிரிதல் துன்பத்தைத் தருவது ஆயிற்று. விலங்காக இருந்தாலும், அது தம்மோடு நட்புப் பூண்டார் துன்புறும்போது அவரைக் கைவிட்டு நீங்காது. ஆகையால் பேயேயாயினும் துன்புறுங்கால் அதனைக் கைவிட்டு நீங்குதல் கூடாது. 'அழிவின் அவை நீக்கி,ஆறு உய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு'என்றபடி துன்பம் வருங்கால் அதனை நீக்க முயற்சி செய்தும், துன்பம் நீங்கவில்லையானால்,அதனோடு உடன் இருந்து அத் துன்பத்தை அடையவேண்டும். அதுவே நட்பிற்கு இலக்கணம்.
எனவே, பழகினவர் யாராயிருந்தாலும் அவரை விட்டுப் பிரிதல் என்பது எப்பொழுதும் துன்பம் தருவதே. ஆனால் பேதையரோடு கொண்ட நட்பை விலக்கிப் பிரியும் காலத்தில்,அவருடன் நட்புச் செய்தவரது உள்ளம் சிறிதும் வருந்துவதில்லை. பேதையுடனான நட்பானது பிரிந்தால் இனிதாகவே இருக்கும். நிலையாகப் பிரிந்தால் இன்னும் இன்பம். பேதை என்பவன்,நன்மை தீமைகளை உய்த்து உணரமுடியாதவன். அதனால்,அவனோடு கூடியிருந்த சமயத்தில் துன்பம் தரக் காரணம் ஆகிறான். அத்தகைய பேதையரிடமிருந்து நீங்குவது நல்லதுதான் என்று வஞ்சப் புகழ்ச்சியாக, அதாவது புகழ்வார் போலப் பழித்துக் கூறி அருளினார் நாயனார்.
வாழ்நாளில் நாம் பலருடன் நட்புக்கொள்கிறோம். நட்பு கொண்டபோது அவன் பேதை என்று தெரியாது. தெரிந்திருந்தால் நட்புச் செய்திருக்க மாட்டோம். நட்புக் கொண்டு பழகும்போது தெரியாத பேதைமை, பின்னர் உணர்ந்து கொண்ட போது, அந் நட்பிலிருந்து எப்பொழுது விலகலாம் என்று தோன்றும். "கூடிப் பிரியேல்" என்று ஔவைப் பாட்டி சொன்னபடி, பழகிவிட்டதால் நட்பை எப்படி முறித்துக் கொள்வது என்ற எண்ணமும் உண்டாகும். பேதையினது செயல்கள் பொறுக்கமுடியாத அளவு சென்றாலும், நமது தகுதியைக் காத்துக் கொள்வதற்கும்,பெருங்கேடு உண்டாகாவண்ணம் இருப்பதற்கும், பேதையோடு கொண்ட நட்பினை முறித்துக் கொள்வதுதான் நல்லது. அப்பேதை, தானே வெளியேறா விட்டால் "'ஒன்று ஈத்தும், ஒருவுக ஒப்பிலார் நட்பு" என்று நாயனார் அருளியதற்கு இணங்க ஏதாவது கொடுத்து நீங்கும்படி செய்யலாம், பேதையே பிரிந்து செல்கின்றான் என்றாலோ அல்லது நாமே அவனது தொடர்பை நீக்கிக் கொண்டாலோ, அப்பிரிவு இனிதுதான். தீராத் துயர் தீர்ந்தது போல் உணரலாம். "தெரியாமல் பழகத் தொடங்கினோம், நல்ல வேளை, தப்பினோம்" என்ற நிம்மதி உண்டாகும். அப்பிரிவு நிலையானது என்னும்போது மகிழ்ச்சி இன்னும் மிக உண்டாகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போன்றது என்பதால் அது பெரிதும் இனிதாகிறது.
எனவே, பேதையின் உறவு மிகவும் இனியது. பிரியும்போது துன்பம் தருவது என்று ஒன்று இல்லை என்பதை அறிவுறுத்த,
"பெரிது இனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண்
பீழை தருவது ஒன்று இல்".
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக,கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்கப்
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை? --- தெரியில்
பெரிது இனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண்
பீழை தருவது ஒன்று இல்.
உண்டோ பீழை என்பதை, பீழை உண்டோ என மாற்றுக. பீழை --- வருத்தம்.
வாகீசர் என்றும், திருநாவுக்கரசர் என்றும் அப்பர் என்றும் வழங்கப் பெறும் நாயனார்,சமண சமயத்தை விட்டு, மீட்டும் சைவரான உடன், அவரது சூலைநோய் நீங்கியதும் அன்றி, முடிவில் அவர்க்கு வீடுபேறும் கிடைத்தது. பலகாலம் கூடியிருந்த சமணர்களை விட்டு அவர் பிரிய நேர்ந்த போது அவருக்குத்துன்பம் இல்லை. எனவே, அறிவில்லாதாரோடு கொண்ட நட்பு நல்லது.
இதே கருத்தை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக,திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க்கு இன்பம்இன்றித்
துன்பம்என்பது இல்லையே, சோமேசா! - நன்காம்
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்.
இதன் பொருள்---
சோமேசா! பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் --- பின் பிரிவு வந்து நேர்ந்தபோது, அது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது --- ஆகலான் பேதையாயினார் தம்முள் கொண்ட நட்பு மிக இனிது.
நன்கு ஆம் --- நன்மையும் ஆம், வாகீசர்க்கு --- திருநாவுக்கரசு நாயனாருக்கு, வன் சமணர் பிரிவால் --- கொடிய சமணரது பிரிவினால், இன்பம் அன்றி --- இன்பமல்லாது, துன்பம் என்பது இல்லை --- துன்பம் எனப்படுவது ஒன்றில்லை ஆகலான் என்றவாறு.
திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் வேளாள மரபில், குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் திருமகனாய் அவதரித்த திருநாவுக்கரசு நாயனார் சகல கலைகளிலும் வல்லாராய்ப் பாடலிபுத்திரம் என்னும் பதி புகுந்து, சமணரொடு கூடி, தருமசேனர் என்னும் பெயரோடு சமண குருவாய் விளங்குவதைக் கேட்ட திவகவதியார் என்னும் அவர் தமக்கையார் தம் தம்பியைச் சமணப் படுகுழியினின்றும் எடுத்தருளல் வேண்டும் என்று சிவபெருமானை நாள்தோறும் பிரார்த்தித்தார். அவ்வாறு இருக்கையில் தருமசேனருக்குச் சூலை நோய் கண்டு சமணர் செய்த முயற்சி ஒன்றானும் நீங்காதாக,தம் தமக்கையார் தொண்டு செய்திருந்த திருவதிகை வீரட்டானம் அடைந்து, அவரைக் கண்டு திருநீறு பெற்று, வீரட்டானேசுவரர் சந்நிதி அடைந்து,
கூற்றாயின வாறு விலக்ககிலீர்;
கொடுமைபல செய்தன நான்அறியேன்;
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன், அதி கைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
என்று தொடங்கும் பாடலைக் கொண்ட திருப்பதிகத்தைப் பாட, அப்போதே சூலைநோய் விட்டொழிந்தது. அது அறிந்த சமணர்கள், தம் அரசனாகிய பல்லவனுக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி, நாயனாரை வருவித்து நீற்றறை வைத்தல், நஞ்சூட்டல், யானைக் காலில் இடறுதல், கல்லோடு கடலில் இடுதல் முதலிய பல கொடுமைகள் செய்தும் நாயனார் திருப்பதிகங்கள் ஓதிச் சிவாநுக்கிரகத்தால் ஒரு தீங்கும் இன்றி இருந்தார். இதைக் கண்ட பல்லவன் நாயனாரை வணங்கிச் சைவனாகிப் பாடலிபுத்திரத்து இருந்த சமண் பள்ளிகளையும் பாழிகளையும் அழித்து அங்குக் குணபரவீச்சரம் என்னும் திருக்கோயிலைக் கட்டினான்.
பேதையின் இலக்கணம் குறித்து, பின்வரும் பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். அறிவில்லாத பேதைக்கு ஆயிரம்தான் அறிவுரை சொன்னாலும், அவரிடத்தில் நல்ல அறிவு விளங்காது. நல்லறிவு விளங்காத ஒருவரோடு நட்புக் கொள்வது துன்பத்தையே தரும்.
கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
காஞ்சிரம் கைப்புவிடுமோ?
கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்
கதிபெறும் குதிரை ஆமோ?
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்
கொடுவிடம் அலாது தருமோ?
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
கோணாமலே நிற்குமோ?
ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா
யோனிகண் ஆகிவிடுமோ?
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
உள்ளியின் குணம் மாறுமோ?
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்
மார்க்க மரியாதை வருமோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே--- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கட்டி எரு இட்டுச்செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ --- வெல்லக் கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது. கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ---கழுதையைக் கட்டிப் போட்டு,வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது. குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ--- பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது. குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ --- நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது. ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ--- நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது. உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ--- இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும்,பூண்டின் குணம் மாறுமா? மாறாது.
அது போலத்தான்,
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ ---அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.
தக்காரும்தக்கவர் அல்லாரும்தம் நீர்மை
எக்காலும்குன்றல்இலர்ஆவர், - அக்காரம்
யாவரேதின்னினும்கையாதாம்,கைக்குமாம்
தேவரேதின்னினும்வேம்பு. --- நாலடியார்.
தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப,தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.
இடம்படமெய்ஞ்ஞானம்கற்பினும்என்றும்
அடங்காதார்என்றும்அடங்கார்; - தடம் கண்ணாய்
உப்பொடுநெய்பால்தயிர்காயம்பெய்து அடினும்
கைப்புஅறாபேய்ச்சுரையின்காய். --- நாலடியார்.
அகன்ற கண்களை உடைய பெண்ணே! என்னதான் உப்பும், நெய்யும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் பேய்ச்சுரைக்காயின் கசப்புத் தன்மை நீங்காது. அது போலவே, கீழோர் எவ்வளவு தான் ஞான நூல்களைக் கற்றாலும், பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.
அறிவிலிகள் என்னதான் நல்ல புத்தி சென்னாலும் நன்னெறியில் நடக்கமாட்டார்கள். என்னதான் அறிவு நூல்களைக் கற்றாலும் மனம் அடங்க மாட்டார்.
மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது "நீதிவெண்பா" என்னும் நூல்.
அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.
பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.
நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்
நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா;
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.
வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல்லானது தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.
கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,
கமழ்நீர் பாய்ச்சி,
பொற்பு ஊரர உள்ளியினை விதைத்தாலும்
அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக
வரும் எனவே சொல்லினாலும்,
நற்போதம் வாராது,அங்கு அவர் குணமே
மேலாக நடக்கும்தானே.
என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு,கஸ்தூரியை எருவாக இட்டு,வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர்.
இப்படிப்பட்ட குணங்களை உடைய பேதையரோடு, அவர் இன்னார் என்று அறியாமல் நட்புக் கொண்டுவிட்டு, பின்னர் அவரது தன்மையை அறிந்து பிரிய நேர்ந்தாலோ,அல்லது அவராகவே நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலோ, அப் பிரிவால் துயரம் ஏதும் உண்டாவதில்லை. ஆதலால், பேதையோடு கொண்ட நட்பே இனிமை தருவது என்று வஞ்சப் புகழ்ச்சியாகச் சொல்லிக் காட்டினார் நாயனார்.
No comments:
Post a Comment