செய்ந்நன்றி அறிதல்

 


"செய்ந்நன்றி அறிதல்"

----

 

     ஒரு மனிதனிடத்தில் இருக்கவேண்டிய குணங்களுள் முதன்மையானது நன்றியறிவு. மனிதனை உயர்த்துவது நன்றி மறவாமையே. ஆன்முலை அறுத்த பாவம். கள் குடித்த பாவம். கொலை புலை புரிந்த பாவம் ஆகிய எல்லாப் பாவங்களுக்கும் கழுவாய் உண்டு. கழுவாய் இல்லாத – உய்தி இல்லாத பாவம் நன்றி மறத்தல் ஒன்றே. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பார் திருவள்ளுவ நாயனார்.

 

      மேலும்நன்றி செய்தவன் பின்னொரு காலத்தில் கொன்றதை ஒத்த கொடுமையைப் புரிந்தாலும்அவன் முன்னர் தமக்குப் புரிந்த நன்றியை நினைத்துஅவனுக்குத் தீங்கு புரியாமல் நல்லவர்கள் ஒதுங்கிஅவன் முன் செய்த நன்றியைப் பாராட்டி அவனுக்கு நன்மையே செய்வர் என்பதைக் காட்ட"கொன்றன்ன இன்னா செயினும்அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்" என்று அருளினார் நாயனார்.

 

     நன்றி மறந்த பாவிகள் ஒருபோதும் ஈடேறமாட்டார்கள். அவர்கள் விரைவில் அழிவர். அவரைக் கொல்வதற்குகூற்றுவன் வரவேண்டாம். அவர் மறந்த நன்றியே அவரைக் கொன்று போடும்.

 

ஒன்றுஒரு பயன்தனை உதவினோர் மனம்

கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்

புன்தொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே

கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ?.

 

என்பது கந்தபுராணம்.

 

      ஒரு நன்மையை ஒரு காலத்தில் செய்தவருடைய மனம் வருந்துமாறு ஒரு செயலை ஒருவன் செய்வானானால், அவனைக் கொல்வதற்கு இயமன் தேவையில்லை. அந்த நன்மையே அவனைக் கொன்றுவிடும்.

 

      நன்மை தரும் செயல்கள் பலவற்றைச் செய்தவர், தன்னை அறியாமல்  ஒரு தீங்கு செய்ய நேர்ந்தாலும்அற்ப அறிவு உள்ளவர் அந்த தீங்கையே பெரிதாக எண்ணி,  முன் செய்த எல்லா நன்றிகளையும் உடனே மறந்து விடுவர் என்பதை,

 

ஒன்று உதவி செய்யினும் அவ்உதவி மறவாமல்

பின்றை அவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக ஒருநவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முதுகயவர் நினையாரே.

 

என்று வில்லிபாரதம் கூறும்.

 

இதன் பொருள் ---

 

     ஒருத்தர் ஓர் உதவி செய்தாரே ஆனாலும், அந்த உதவியை மறந்திடாமல்பிறகு முன்னர் அந்த உதவியைச் செய்தவர் செய்தபல குற்றங்களையும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால், பழமையான கீழ்மக்களோ ஒருவர் செய்த உபகாரம் மிகப் பலவாய் இருந்து, அந்த உபகாரம் செய்தவர் ஒரு குற்றத்தைச்   செய்வாரே ஆனாலும், முன்னர் அவர் செய்த மிகப் பல நன்மைகளையும் மறந்துவ,அவர் செய்த ஒரு தீமைக்காக அவர் மீது கோபிப்பதே அல்லாமல்அவர் செய்த நன்மையை எண்ணி மன அமைதி கொள்ளமாட்டார்.

 

     எனவே, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினார். இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில் "தனக்கு ஒருவர் ஒர் உதவியும் செய்யாது இருக்கதான் பிறருக்குச் செய்த உதவிக்குஇந்த மண்ணுலகத்தையும்அந்த விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அதுஅந்த உதவிக்கு ஈடு ஆகாதுஎன்கின்றார்.


     செய்யாமல் செய்த உதவி --- முன் ஓர் உதவியும் ஒருவன் செய்யாது இருக்கின்றான். அவனுக்கு ஓர் இடர்ப்பாடு வந்து நேர்கின்றது. அதை அறிந்த ஒருவன், தக்க சமயத்தில் வந்து, கேளாமலே முன் வந்து, பயன் எதையும் கருதாது ஓர் உதவியைச் செய்கின்றான். அந்த சமயத்தில் உதவியைப் பெற்றவருடைய மனமானது, கடவுளே ஓர் உருக்கொண்டு இவர் உருவில் வந்து உதவியதாக எண்ணி இன்புறும். அந்த உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஒரு சேரத் தந்தாலும் ஈடாகாது. எனவே, அந்த உதவியை என்றும் மறத்தல் ஆகாது.

 

திருக்குறளைக் காண்போம்....

 

செய்யாமல் செய்த உதவிக்குவையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள். 

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகுமார பாதரி என்னும் பெரியார் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில்,பெரியபுராணத்துள் வரும் கணநாத நாயனாரின் வரலாற்றை வைத்துப் பாடியுள்ள பாடல்...

 

"நாட்டில்அடி யாரைஎல்லாம் நாதன் பணிவிடையே

காட்டிவாழ் வித்தார் கணநாதர் - வேட்டுஇவர்தாம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது".  

 

       சோழமண்டலத்திலே சீர்காழியிலே அந்தணர் குலத்திலே கணநாத நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருத்தோணியப்பருக்கு மிகுந்த அன்பினோடு நாள்தோறும் திருப்பணிகள் செய்பவர். தம்மை விரும்பி வந்து அடைபவர்களைத் திருநந்தனவனம் வைத்தல்பூக்கொய்தல்திருமாலை கட்டுதல்திருமஞ்சனம் எடுத்தல்திருவலகு இடுதல்திருமெழுக்கு இடுதல்திருவிளக்கு ஏற்றல்திருமுறை எழுதுதல்திருமுறை வாசித்தல் முதலாகிய திருத்தொண்டுகளுள் அவரவருக்கு ஏற்ற திருத்தொண்டுகளிலே பயில்வித்து அவர்களைச் சிவனடியார்கள் ஆக்குவார். இல்லறத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சைவசமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளைத் தினந்தோறும் முப்போதும் பேரன்போடு விதிப்படி பூசைசெய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கயிலாயமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

 

     தன்னை நாடி வந்தவர்கள் எல்லோரும் இதற்கு முன்னர் தனக்கு உதவியவர் தானா என்றும் பாராமல்நாடி வந்தவரை எல்லாம் நன்னெறியில் பயிற்றுவித்துஅவர்களைச் சிறந்த சிவனடியார்களாககணநாத நாயனார் செய்த பணிக்கு இந்த மண்ணுலகமும்அந்த விண்ணுலகமும் ஈடாகாது.

 

            தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க, ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதி சூடாமணி என்று வழங்கப்படும் "இரங்கேச வெண்பா" என்னும் நாலில் இருந்து ஒரு பாடல்... 

 

நாடிச் சிறைக்கருடன் நாகக் கொடுங்கணையை

ஈடழித்தான் அன்றோ? இரங்கேசா! - நடுங்கால்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. 

 

இதன்பதவுரை---  

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சிறைக் கருடன் --- சிறகுகளை உடைய கருடன்நாடி --- (இராமபிரான் தன்னை நினைத்ததை) ஆராய்ந்துநாகக் கொடும் கணையை --- (இந்திரசித்தன் விட்ட) நாகபாசமாகிய கொடிய பாணத்தை,ஈடழித்தான் அன்றோ --- சின்னபின்னப் படுத்தினான் அல்லவா? (ஆகையால்இது) நாடுங்கால் --- ஆராயுமிடத்தில்செய்யாமல் செய்த உதவிக்கு --- நாம் ஓர் உபகாரமும் செய்யாமலிருக்கஒருவர் சமயத்தில் நமக்குச் செய்த உபகாரத்திற்குவையகமும் வானகமும் ஆற்றல் அரிது --- இந்தப் பூலோகத்தையும் தெய்வ லோகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் போதாது (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- நன்றி மறப்பது நன்று அன்று.

 

            விளக்கவுரை--- சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் சென்றதனால்அவ் அம்மையாரை மீட்கஇராமபிரான் அவனோடு போர் செய்ய நேரிட்டது. இந்தப் போரில் இராவணன் மகன் இந்திரஜித்தன் என்பவன் நாகபாசத்தை விட்டு இளையபெருமாளையும் பிறரையும் மூர்ச்சை ஆக்கினான். அது கண்டு வருந்திய தாசரதிகருடபகவானை நினைத்தார். அவர் நமக்கு என்ன என்று இருந்துவிடாமல்உடனே போர்க்களத்துக்கு வந்து ஆகாயத்தில் பறந்து திரிந்தார். அவருடைய சிறையடிக் காற்றால் நாகபாசத்தின் வேகம் அடங்கிச் சின்னபின்னப்பட்டுப் போயிற்று. இளையபெருமாள் முதலியோர் தூங்கி விழித்தவர்கள் போல் எழுந்துபிறகு பெரும்போர் செய்து இராவணன் முதலியோரைக் கொன்று விளங்கினார்கள். 

 

     கருடபகவான் இராமபிரானுக்குச் செய்த இந்த உதவியே செய்யாமல் செய்த உதவியாகும்.

 

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்துசென்ன மல்லையர் பாடி அருளிய,"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.. 

 

பூடணம்போல் வீடணன்மேல் போனவேல் ஏற்றநன்றி

தேடமுடி யாதே, சிவசிவா! - நாடின்,எதிர்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

 

       இராவணன் தன் தம்பியாகிய விபீடணன் மேல் விடுத்த வேல் எப்படிப்பட்டது என்றால்,  மயன் என்பவன் கொடுத்ததுவிளங்குகின்ற வேள்வித் தீயில் நான்முகன் படைத்ததுதிருமாலின் சக்கரப்படையையும்இந்திரனின் வச்சிரப் படையையும் நிகர்த்ததுமாற்றாரின் வெற்றியை மாற்றுவதுஊழிக் காலத்தில் தோன்றும் தீயினுக்கு நிகரானதுசெலுத்திய அளவில் ஒருவனை அழித்தே திரும்புவது. அது மேலே பட்டபோது படப்பெற்றவன் நான்முகனே ஆயினும் அவனையும் அழிக்கவல்லது. அந்த வேலை இராவணன் வணங்கிதன் எதிரே போர்க்களத்தில் நின்ற தன் தம்பியாகிய விபீடணன் மேல் ஏவினான். அது தன் உயிரைப் போக்கியே தீரும் என்பதை உணர்ந்து அஞ்சிய விபீடணனை நோக்கி, "அஞ்ச வேண்டாம்அதைத் தடுக்கும் வழி அறிந்து போக்குவேன்" என்றான் இலக்குமணன்.

 

       "அடைக்கலமாக அடைந்த விபீடணனைக் காத்தல் காரணமாக என் உயிர் நீங்குமானாலும்அடைக்கலத்தைக் காத்த புகழ் நிலைத்திருக்கும். மேல் உலகத்திலும் அந்த அறம் என்னைத் தொடர்ந்து வரும். நல்லவர்கள் என் செயலைக் கண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பர். என் ஒப்பில்லாத மார்பில் அந்த வேலை ஏற்றுக் கொள்வேன்" என்று இலக்குமணன் அந்த வேலுக்கு முன்னே நின்றான்.

 

       இலக்குவனுக்கு முன்பு விபீடணன்இராவணன் வீசிய வேலைத் தான் ஏற்கச் செல்ல முனைந்தான். அவ் இருவரையும் விலக்கி அங்கதன் முன் செல்கின்றான். அம் மூவரையும் விலக்கிசுக்கிரீவன் முன் செல்கின்றான். சுக்கிரீவனையும் விலக்கி அனுமன் விரைந்து செல்கின்றான். இலக்குவன் காற்றினும் கடியச் சென்று எல்லாரையும் விலக்கி, "நீங்கள் விலகுங்கள். நான் இதனை விலக்குகிறேன்" என்று சொல்லி தேவர்கள் எல்லாம் கண் புடைத்து அழும்படியாகஅந்த வேலைத் தன் முதுகில் ஊடுவிச் செல்லுமாறு மார்பில் ஏற்றான்.

 

       "அடைக்கலமாகத் தேடி அடைந்த என் பொருட்டால் என் நாயகனின் இளவல் ஆகிய இலக்குவன்வேல் ஊடுருவிப் பாய வாடியுள்ளார். இனி உன்னை அழித்து நானும் உயிர் துறப்பேன்" என்று விபீடணன் சினந்து இராவணனோடு பேரிட்டான்.

 

     பின் வரும் பாடல்கள்இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

 

உதவாமல் ஒருவன் செய்த 

     உதவிக்குக் கைம்மா றாக 

மதயானை அனைய மைந்த! 

     மற்றுமுண் டாக அற்றே 

சிதையாத செருவி லன்னான் 

     முன்சென்று செறுநர் மார்பில் 

உதையானேல் உதையுண்டு) ஆவி 

     உலவானேல் உலகின் மன்னோ?       --- கம்பராமாயணம்கிட்கிந்தைப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     மதயானை அனைய மைந்த --- மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! உதவாமல் ஒருவன் செய்த --- (தான் ஒருவனுக்கு) முன்பு எந்தஉதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த;  உதவிக்குக் கைம்மாறு ஆக --- உதவிக்கு மறு உதவியாகசிதையாத செருவில் --- கெடுதல் இல்லாத போரில்அன்னான் முன் சென்று --- (அவனுக்குத் துணையாக) முன்னே

சென்றுசெறுநர் மார்பில் --- (அவனுடைய) பகைவர்களின் மார்பில்உதையானேல் --- படைக்கலங்களைச் செலுத்தவில்லை என்றால்உதையுண்டு --- (அப் பகைவரின் படைக்கருவிகளால் தான்) அடிபட்டுஆவி உலவானேல் --- உயிரைப் போக்கவில்லை என்றால்உலகில் மற்றும் ---உலகத்தில் வேறு கைம்மாறுஉண்டாகவற்றோ --- என்ன உள்ளது? (இல்லை).

 

     உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரைஅழிக்கவேண்டும். அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால், அப்பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும். இவை ஒருவாறு  ஈடாகலாம்.  இவை அல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது வேறு என்ன உள்ளது

 

'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி 

விலை இலாமையும் உன்னினென்மேல் அவை 

நிலை இலாமை நினைந்தனென்நின்னை என் 

தலையினால் தொழவும் தகும் - தன்மையோய்!    --- கம்பராமாயணம்,மீட்சிப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     தன்மையோய்! --- சிறந்த பண்புகளை உடையவனே!;  உலகம் மூன்றும்  உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் --- நீ செய்த உதவிக்குக் கைம்மாறாக முன்று உலகங்களையும் உதவலாம்

என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை அறிந்தேன். மேல் அவை நிலை இலாமை நினைந்தனன் --- அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன். (வேறு செய்வதுஒன்று இன்மையால்) நின்னை என் தலையினால் தொழவும் தகும்--- உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.

 

     அனுமன் அசோகவனம் சென்றுசீதாபிராட்டியைத் தொழுது சோபனம் பாடிஇராமபிரானால் இராவணன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறுகின்றான். செய்தி கேட்டு பிராட்டியின் உடம்பு மகிழ்ச்சியால் பூரிக்கின்றது. களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டி இருந்தாள், ‘ஒன்றும் பேசாதது ஏன்?' என அனுமன் வினவுதலும்பிராட்டியின் மறுமொழியாக மேற்குறித்த பாடல் எழுந்தது.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...