38. செங்கோல் அரசனே தெய்வம்

 



“நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

    வளநாட்டில், நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்

    புவியாளும் வண்மை செய்த

தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்;

    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்

   ஆழ்நரகில் மூழ்கு வாரே!”


இதன் பொருள் —-

நால் கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளிலும் வல்லவர்கள் புகழுமாறு சிறப்புற்று விளங்கும் திருத்தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில், நல்ல நீதிமார்க்கமுடன் நடந்து - நல்ல அறநெறியுடன் ஒழுகி, செங்கோல் வழுவாமல் புவி ஆளும் வண்மை செய்த - நடுநிலை தவறாமல் உலகத்தை  ஆளும் கொடையாளியான, தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் - துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள்; கொடுங்கோன்மை செலுத்தி நின்ற - தவறான ஆட்சி நடத்துகின்ற, மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் - கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும், ஆழ்நரகில் மூழ்குவார் - ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.

      “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்'  என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி.  “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்றார் திருவள்ளுவ நாயனார். தீர்க்கம் - துணிவு,  உறுதி.

No comments:

Post a Comment

38. செங்கோல் அரசனே தெய்வம்

  “நாற்கவியும் புகழவரும் தண்டலையார்     வளநாட்டில், நல்ல நீதி மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்     புவியாளும் வண்மை செய்த தீர்க்கமுள்ள...