“பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்,
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக
நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு,
நீடுவினை அணுகாது, தேகபரி சுத்தமாம்,
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம்விளை யாடுவன், முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு,
சஞ்சலம் வராது,பர கதியுதவும், இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்,
மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர!ஈசனே!”
இதன் பொருள் —-
மேரு இனிய மத்து என வைத்து அமுதினைக் கடையும் மால்மருகன் ஆன முருகா! - மேருமலையை அழகிய மத்தாகக் கொண்டு அமுதைக் கடைந்த திருமாலின் திருமருகர் ஆன முருகப் பெருமானே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
பத்தியொடு சிவசிவா என்று பரிவொடு திருநீற்றைக் கையால் எடுத்து - மனமார்ந்த பத்தி உணர்வுடன் ‘சிவசிவ’ என்று நாவாரச் சொல்லி, விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, பாரினில் விழாத படி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக - நிலத்தில் சிந்தாதவாறு மேல்நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம், நெற்றியில் அழுந்தல் உற மூவிரல்களால் நித்தமும் நினைவாய்த் தரிப்பவர்க்கு - நெற்றியில் நன்கு பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாள்தோறும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீடுவினை அணுகாது - நீண்ட நாளைய பழவினை நெருங்காது; தேக பரிசுத்தம் ஆம் - உடம்பு தூயது ஆகும்; அங்கே நிமலன் நீங்காமல் சத்தியொடு நித்தம் விளையாடுவன் - அவர்களிடத்தில் பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்; முகத்திலே திரு தாண்டவம் செய்யும் - முகத்திலே திருமகள் நடம்புரிவாள்; சஞ்சலம் வராது - மனக் கலக்கம் உண்டாகாது; பரகதி உதவும் - மேலான வீடுபேற்றை உதவும்; இவரையே சத்தியும் சிவனும் எனலாம் - இவர்களையே சத்தியும் சிவனும் எனப் போற்றி வணங்கலாம்.
திருநீற்றை அன்புடன் அணிவோர் இம்மை மறுமை இன்பங்களை எளிதில் அடைவார் என்று கூறப்பட்டது. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தீருநீற்றுத் திருப்பதிகத்தை ஓதித் தெளிக.
No comments:
Post a Comment