உயர்ந்த பட்டாடையும் கிழியும்
----
சிக்கு இல்லாமல், இழை முடிச்சு விழாமல் ஒழுங்குபடுத்தி, அழகாக கரை (BORDER) போட்டு நெய்யப்பட்ட பட்டு உடையோ ஆடையோ எதுவாக இருப்பினும் கிழிந்து போகும். ஆடையை நல்லதாக, அழகானதாகத் தேர்ந்தெடுத்து வாங்கி, அணிந்துகொள்கிறோம். அது சற்றேனும் கிழிந்து விட்டாலோ, அழுக்குப் பட்டு விட்டாலோ, மனம் பொறுப்பதில்லை.
உடம்பை எப்படி ஆடை மறைத்துப் பாதுகாக்கிறதோ, அதுபோல ஆன்மாவை/உயிரை மூடி மறைத்துப் பாதுகாக்கிறது உடம்பு. ஓர் ஆடை போய்விட்டால் வேறு ஆடை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் உயிர் போய்விட்டால்......?????
விலை உயர்ந்த பட்டாடை என்பதற்காகப் பார்த்துப் பார்த்துப் பாதுகாக்கின்றோம். என்னதான் உயர்ந்த ஆடையாக இருந்தாலும், நாளடைவில் நைந்து அழிந்து போகும். அது போல இந்த உடம்பும் என்னதான் நன்றாக இருந்தாலும், முதுமை வந்து தோல் சுருங்கி பார்வை மங்கி அழிந்து போகும்.
பட்டாடையை என்றோ ஒரு நாள் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது போல, இந்த அழகான உடம்பை என்றோ ஒரு நாள் நன்னெறியில் செலுத்துகின்றோம்.
இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" என்ற நாமத்தை உடையவன் ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும் செய்கின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது? இதற்குள் நரைத்து விட்டதே? தேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன என்பதை அவர் அறியார்.
பிறந்த நாள் கணக்கில், ஓர் ஆண்டில் ஒரு நாள் கழிந்தாலும், அது நமது வாழ்நாளில் ஓர் ஆண்டின் முடிவாகவும், அடுத்த நாள் ஓர் ஆண்டின் தொடக்கமாகவும் அமைவதையும் பார்த்து வருகின்றோம். நேற்று வரை ஐம்பது வயது என்றோம். இன்று ஐம்பத்தொன்று ஆகிவிடுகின்றது.
விலை உயர்ந்த பட்டாடை ஆனாலும், என்னதான் பாதுகாத்து வைத்தாலும், நாளடைவில் கிழிந்து போகும். கருத்த தலைமயிர் ஒரு நாள் வெளுத்துப் போகும். வாழ்வில் ஒருநாள் கழிந்தாலும், ஓர் ஆண்டு கழிந்ததாகக் கணக்கு ஆகும்.
வாழ்க்கையின் நிலையாமையை, திருமூல நாயனார் இந்த எடுத்துக் காட்டுகளால் நமக்கு அறிவுறுத்துகின்றார். திருமந்திரப் பாடலைக் காண்போம்...
"மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும்; அதனைப் பெரிது உணர்ந்தார் இ(ல்)லை;
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்புமொர் ஆண்டு எனும் நீரே".
இதன் பொருள் ---
பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை. என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர் ஆண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொருவர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், தமது அறிவும் ஆற்றலும் இன்று உள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அறியாமை இரங்கத் தக்கது!
புடவை கிழிந்து விட்டால், தூக்கி எறிந்து விடுவோம். அதை வைத்துப் பாதுகாப்பதில் பொருள் இல்லை. உடம்பில், உயிர் உள்ளவரை அவரவருக்கு உரிய பெயரை இட்டு அழைப்பார்கள். உயிர் போய் விட்டால், எந்தப் பெயரும், எப்பேர்ப்பட்டவர்க்கும் இல்லை. பொதுவாக, "பிணம்" என்ற ஒரு பெயர்தான் வழங்கப்படும். பிணம் நாறுவதற்கு முன், அதுவரை வாழ்ந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அதன்பிறகு எதுவுமே இல்லை என்கின்றார், திருமூல தேவர்..
"புடைவை கிழிந்தது, போயிற்று வாழ்க்கை,
அடையப்பட்டார்களும் அன்பிலர் ஆனார்,
கொடைஇல்லை, கோள்இல்லை, கொண்டாட்டம் இல்லை,
நடைஇல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே".
இதன் பொருள் ---
ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்து ஒழிந்ததே ஆம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணை எனத் தெளியப்பட்ட எவரும் தம்மிடத்தில் அன்பு இல்லாதவர் ஆகின்றார். நாட்டில் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை. அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை. பிற உலக நடையும் இல்லை. ஆகையால். உடம்பு உள்ளபோதே, அறத்தினைப் புரிந்து, அருள் பெற முயலுக.
கல்வி அறிவும் ஒழுக்கமும் பெறவேண்டி, ஒரு குழந்தைக்கு, மாணவனுக்கு உரிய சீருடைகளையும், புத்தகம் முதலியவற்றையும் கொடுத்து, பள்ளிக்கு அனுப்புகின்றோம். மாணவனுக்கு உரிய நெறியில் ஒழுகி, கல்வி அறிவில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் சிறவந்தவனாக அவன் ஆகாவிட்டால், பயனில்லை. மாணவனாக வாழ்வதை விடுத்து, தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தால், அவன் மாணவனாகி எந்தப் பயனும் இல்லை.
அதுபோல, ஆன்மாவை உயர்ந்த மனிதப் பிறவியில் செலுத்தி வைத்து உதவி புரிகின்றான் இறைவன். வாழவேண்டிய நெறியில் வாழ்ந்து, இறைவன் திருவருளைப் பெற்று, நற்கதியை அடைய முயலவில்லையானால், பெறுதற்கு அரிய இந்த மானிடப் பிறவியால் பயனில்லை.
பட்டாடை நைந்து கிழிந்து போவதைப் போலவும், கருத்த தலைமயிர் வெளுத்துப் போவதைப் போலவும், நாள் ஒன்று கழிந்தால், ஆண்டு ஒன்று ஏறுவதைப் போலவும், என்னதான் அழகுபடுத்திப் பாதுகாத்து வைத்தாலும், இந்த உடம்பு ஒரு நாள் பயனற்றுப் போகும். தலைமயிர் வெளுத்துப் போகும். வாழ்நாளும் கழிந்து போகும்.
ஏனவே, நிலையாமை ஒன்றே நிலையானது என்பதை உணர்ந்து, நன்னெறியில் ஒழுகி, வாழ்வதே செம்மையானதாகும். எத்தனை காலம் வாழ்வோம், எப்போது சாவோம் என்பதை நம்மால் அறிய முடியாது, "யார் அறிவார் சாநாளும், வாழ்நாளும்?" என்று அறிவுறுத்துகின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
வாழ்கின்ற நாளில் அறிவோடு வாழவேண்டும். வாழ்ந்து கழிந்த பிறகு நற்கதியை அடையவேண்டும். "இருந்திட்டுப் பெறவே மதியாயினும், இறந்திட்டுப் பெறவே கதியாயினும், இரண்டில் தக்கதோர் ஊதியம் நீ தர இசைவாயே" என்று அருணகிரிநாதப் பெருமான் வேண்டியபடி, நாம் வாழுகின்ற நாளில் அறிவோடு வாழவும், வாழ்நாள் முடிந்த பின்னர் நற்கதியைப் பெறவும், இறையருள் துணையோடு முயலுவோம்.
No comments:
Post a Comment