எதையெல்லாம் செய்யாதவன் எப்படிப்பட்டவன்

 

 

எதையெல்லாம் செய்யாதவன் எப்படிப்பட்டவன் ஆவான்?

----

 

"கருதியநூல் கால்லாதான் மூடன் ஆகும்,
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்,
ஒருதொழிலும் இல்லாதான் முகடி ஆகும்,
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்,
பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலப்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்,
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பன் ஆகும்,
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவி ஆமே."


"விவேக சிந்தாமணி" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.

  

இதைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும், எல்லோராலும் மதிக்கப்பட்டு வந்த நூல் இது ஆகும். எனது சிறு வயதில், கிராமப் புறங்களில் வாழ்ந்திருந்த, எழுத்து அறிவு இல்லாதவர்கள் கூட, இந்த நூலில் வரும் பாடல்களை மிகவும் அனாயாசமாகச் சொல்லக் கேட்டு உள்ளேன்.

 

இப் பாடலின் பொருள் ---

 

1.   பெரியோர்களால் உயர்வாக மதிக்கப்பட்ட நூல்களைக் கற்று நல்லறிவு பெறாதவன் மூடன். (பெரியோர்கள் என்பவர் அறிவால் முதிர்ந்தவர்கள். வயதில் முதிர்ந்தவர்கள் அல்ல)

 

2.   பேசவேண்டியதை அறிந்து பேசாமல், மனதில் நினைத்ததை எல்லாம் பேசுபவன் இழிமகன் ஆவான். ("கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய், கேளாரும் வேட்ப மொழிவது ஆம் சொல்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

3.   ஒரு தொழிலையும் இல்லாதவன் முதேவி ஆவான்.

4.   ஒரு காரியத்திற்கும் உதவாதவன் சோம்பேறி ஆவான்.

 

(இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. ஒரு தொழிலையும் செய்யும் எண்ணம் இல்லாமல் இருப்பவன், தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவியாக இருக்கமாட்டான். சேம்பேறியாக உள்ளவனிடத்தில் மூதேவி வந்து இருப்பாள். "மடி உளாள் மாமுகடி என்ப" என்றார் திருவள்ளுவ நாயனார். மடி --- சோம்பல்.  மாமுகடி --- பெரிய மூதேவி.)

 

5.   கற்றறிந்த பெரியோர்கள் முன் நின்று, தான் நூல்களைக் கற்றிருந்தும், மரத்தைப் போலப் பேசாது இருப்பவன் பேயன் ஆவான். (நூல்களைக் கற்றானே தவி, அறிவு விளங்கவில்லை. பேய் என்பது தான் பிடித்ததையே செய்யும். "கவையாகி, கொம்பு ஆகி, காட்டு அகத்தே நிற்கும் அவை அல்ல, நல்ல மரங்கள். சபை நடுவே நீட்டு ஒலை வாசியா நின்றான், குறிப்பு அறிய மாட்டாதவன் நல் மரம்" என்றார் ஔவையார்.)

 

6.   உள்ளன்பு இல்லாமல், உதட்டளவில் மட்டும் அன்பான சொற்களைக் கூறி, மிக்க அன்பு உடையவனைப் போலத் தழுவிக் கொள்ளுபவன் ஏமாற்றுக்காரன் ஆவான். (உள்ளத்தில் அன்பு இல்லாதவன் பட்டமரம் போன்றவன் என்பார் திருவள்ளுவ நாயனார். "அன்பு அகத்தி இல்லா உயிர் வாழ்க்கை, வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று" என்னும் திருக்குறளைக் காண்க. பட்ட மரத்தால் பயனில்லை என்பது போல, பசப்புக்காரனாலும் பயனில்லை.)

 

7.   பசித்து வந்தோருக்குத் தன்னிடம் உள்ளதை இட்டு, உண்ணாதவன் பாவம் செய்தவன் ஆவான். (பாவி இருக்கும் இடத்தில் மூதேவி வந்து சேர்வாள். புண்ணியம் செய்தவன் இருக்கும் இடத்தில், மனம் விரும்பி வந்து குடியிருப்பாள். "அகன் அமர்ந்து செய்யாள் உறையும், முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள் வாக்கை எண்ணுக. செய்யாள் --- திருமகள்)

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...