வெற்றித் திருநாள்
---
இச்சா ஞான கிரியா சத்திகளை ஒன்பது நாள்கள் வழிபட்டு, இறையருளைப் பெற்று, "வெற்றித் திருநாள்" என்னும் "விஜயதசமி"யாக இன்று கொண்டாடுகின்றோம்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றார் அமரகவி. உழவுக்கு வந்தனை செய்கின்ற திருநாள் தைத் திங்கள் திருநாள். இந்த நாள் தொழிலுக்கு வந்தனை செய்கின்ற திருநாள். செய்கின்ற தொழில் மேலும் வெற்றி பெற்று விளங்க வழிபடுவோம். தொடங்கப் போகும் தொழில் வெற்றிபெற வழிபடுவோம்.
"ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்தி முத்தி
தானம் தருமம் தழைத்த குரு --- மானமொடு
தாய்எனவும் வந்து என்னைத் தந்த குரு என்சிந்தை
கோயில் என வாழும் குரு".
என்று குருவை முதலில் வணங்கி,
"ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை,
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை,
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே"
என்று மூத்தபிள்ளையாரையும் வணங்கி,
"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை, - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்".
"பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்துஅருள் பாரதி! வெள் இதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள், இருப்ப என் சிந்தையுள்ளே,
ஏதாம் புவியில் பெறல் அரிதாவது எனக்பகு இனியே".
என்று கம்பர் பாடி அருளிய "சரசுவத் அந்தாதி"ப் பாடல்களையும், சகலகலாவல்லி மாலைப் பாடல்களையும் பாடி, கலைமகளைத் துதித்து,
"செல்வத் திருமகளே! செந்தா மரையினளே!
பல்கிப் பெருகவளம் பாலிக்கும் பண்பினளே!
சொல்லிப் பெறுவதற்குத் தோன்றவில்லை எனக்கு,
நல்கு உயர் செல்வம் எல்லாம் நாளும் அடியவர்க்கே".
என்று திருமகளைத் துதித்து,
"மட்டுஆர் குழல் அங்கயற்கண் அம்மே! இம்மட்டு என்று தொகைக்கு
எட்டாத எனது துயரம் நின்பால் சொல்லியே சலிக்க,
ஒட்டாரம் நீ செய்யலாகாது, பார் உன்அடிமை தன்னை
நட்டாற்றில் கைவிட்டிடாதே, பழி வெகுநாள் நிற்குமே".
"பேய்அல்லவோ ஒருவேளை வரம் தந்து பேசிடும், கல்
லாய் அல்லவோ நின்மனம் கெட்டி ஆனதும் அற்புதம்தான்,
நீ அல்லவோ மதுரேசர் பங்கு உற்றவள், நீ எனக்குக்
தாய் அல்லவோ, பிள்ளை நான் அல்லவோ, சிவசாம்பவியே".
"வாழ்நாள் அடைவர், வறுமை உறார், நன்மனை, மக்கள், பொன்,
பூண், ஆள், இடம், புகழ், போதம் பெறுவர், பின் புன்மை ஒன்றும்
காணார், நின் நாமம் கருதுகின்றோ, ஒற்றிக் கண்ணுதல்பால்
மாண்ஆர்வம் உற்ற மயிலே, வடிவுடை மாணிக்கமே".
"பொய்யாத மொழியும், மயல் செய்யாத செயலும், வீண்
போகாத நாளும், விடயம்
புரியாத மனமும், உள் பிரியாத சாந்தமும்,
புந்தி தளராத நிலையும்,
எய்யாத வாழ்வும், வேறு எண்ணாத நிறைவும், நினை
என்றும் மறவாத நெறியும்,
இறவாத தகவும், மேல் பிறவாத கதியும், இவ்
ஏழையேற்கு அருள்செய் கண்டாய்,
கொய்யாது, குவியாது, குமையாது மணம் வீசு
கோமளத் தெய்வ மலரே!
கோவாத முத்தமே! குறையாத மதியமே!
கோடாத மணிவிளக்கே,!
ஐஆனனம் கொண்ட தில்லைஅம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே!
அகிலஅண்டமும் சராசரமும் ஈன்றுஅருள், பர
சிவானந்த வல்லி உமையே!."
"எங்கும் ஒத்து நின்றருளும் ஈசுவரியே! மாமதுரை
அங்கயற்கண் நாயகியே! அம்மையே! - துங்க
ஒளியே! பெருந்திருவே! ஓதிமமே! உண்மை
வெளியே! பரப்பிரம வித்தே! - அளிசேரும்
கொந்தளக பந்திக் குயிலே! சிவயோகத்து
ஐந்துருவே! மூவருக்கும் அன்னையே! - எந்தன் இடர்
அல்லல்வினை எல்லாம் அகற்றியே, அஞ்சல் என்று
நல்ல சவுபாக்கியத்தை நல்கியே, - வல்லபத்தின்
ஆசு மதுரம் சித்ர வித்தாரம் என்று அறிஞர்
பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு - நேசமுடன்
தந்து, என்னை ஆட்கொண்டு, சற்குருவாய் என் அகத்தில்
வந்து இருந்து, புத்தி மதிகொடுத்து, - சந்ததமும்
நீயே துணையாகி நின்று ரட்சி, அங்கயற்கண்
தாயே! சரணம் சரண்."
என்று மலைமகளாகிய பார்வதி தேவியைத் துதித்து, வாழ்நாள் சிறக்க, நாமும், நம்மைச் சார்ந்தோரும் செய்யும் தொழில் சிறக்க வழிபடுவோம்.
No comments:
Post a Comment