அருமை அறியாமல் ஏமாறுதல்
-------
"மழக்கை இலங்கு பொன்கிண்ணம் என்று அல்லால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்" என்று மணிவாசகப் பெருமான், தமது அறியாமைக்கு இரங்கிப் பாடினார். திருவாசகத்தில், திருச்சதகம் என்னும் பகுதியில் வருகின்ற அற்புதமான வாசகம், மணிவாசகம் இது.
குழந்தையின் கையில் பொன் கிண்ணம் கிடைத்தால், அதன் அருமையை அறியாமல் நழுவ விட்டுவிடும். பொன் கிண்ணம் சிதைந்து போகும். அந்தக் கவலையானது தாய்க்கு உண்டாகி, குழந்தை செல்லுகின்ற இடம் எல்லாம் பின்தொடர்ந்து சென்று துணையாக நிற்பது போன்று, இறைவன் நமக்குத் தோன்றாத் துணையாக இருந்தும், குருவாக எழுந்தருளி வந்தும், நன்னெறிப்படுத்துவதன் அருமையை அறியாமல், "எத்தனையோ காலம் எல்லாம் பாழுக்கு இரைத்து, பரம்பரனைப் பணியாது" கிடந்தோம்.
இதை, விவேக சிந்தாமணி என்னும் நூல் பின்வரும் பாடலால் உணர்த்தும்.
"தண்தாமரையின் உடன் பிறந்தும்
தண்தேன் நுகரா மண்டூகம்,
வண்டோ கானத்து இடை இருந்து
வந்தே கமல மது உண்ணும்;
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றாரே".
தவளையானது, குளிர்ந்த தாமரையினுடன் ஒரே குளத்தில் தோன்றி வளர்ந்து இருந்தாலும், தவளையானது தன் அருகில் உள்ள தாமரையின் குளிர்ந்த தேனை உண்ண அறியாது. ஆனால், வெகுதொலைவில் காட்டில் வாழும் வண்டானது, அத் தாமரையினிடம் வந்து, அதன் குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து இருக்கும்.
அதுபோல, அறிவில்லாத அற்பர்கள், முந்தியே பழகி இருந்தாலும், நல்ல குணம் பொருந்தியவரின் அருமையை அறிய மாட்டார்கள். கல்வி அறிவில் சிறந்தவர்களோ, நெடுநாள் பழக்கம் இல்லாவிட்டாலும், நல்லவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, மகிழ்ந்து, அங்கேயே உறவாடி, அவருடன் நட்புக் கொண்டு, அவரோடு என்றும் கலந்து மகிழ்ந்து இருப்பர்.
இதனை வள்ளல்பெருமான் பின்வரும் திருவருட்பாவில் வைத்துக் காட்டி அருளி உள்ளார்.
"பூமாந்தும் வண்டுஎன, நின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாம் மாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார், ஐயோ! நான்
காமாந்த காரம்எனும் கள் உண்டு கண்மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!"
இதன் பொருள் ---
திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள எழுத்தறியும் பெருமானே! பூ இருக்கும் இடம் தேடிச் சென்று, அதில் ஊறுகின்ற தேனை அருந்தும் வண்டுபோல நினது பொன்னருளைப் புண்ணியவான்கள் அருந்தி, உன்னுடைய திருவடி நீழலைச் சார்ந்து நின்று மகிழ்கின்றார்கள். ஐயோ, நான் காம இருள் என்னும் கள்ளை உண்டு கண்ணை மூடி, பெறுவது பெறாது ஏமாந்து ஒழிந்தேன்.
இவ்வாறு தமது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். பூ என்றாலே, அது தாமரையைத் தான் குறிக்கும். மற்ற எல்லாம் அதனதன் பெயரோடு பொருந்தி, மல்லிகைப்பூ, ரோசாப்பூ என்புத போல வரும்.
கண்ணன், வாசுதேவருக்கும், தேவகிக்கும் திருமனாக அவதரித்தவர். கண்ணனுடைய அத்தையாகிய குந்திதேவிக்கு, சூரியன்பால் பிறந்தவன் அருச்சுனன். எனவே, இருவரும் சமகாலத்தவர் ஆகின்றனர். பாண்டவர்களின் உறவுமுறை காரணமாகவும், அவர்கள் நல்லவர்கள், தன்னையே நம்பி இருப்பவர்கள் என்பது காரணமாகவும், பாரதப் போரில் வில்லை எடுக்காமல், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை மட்டும் திருக்கையில் கொண்டு, அருச்சுனனுக்குத் தேரோட்டியாக வந்து தனது சௌலப்பியத்தை வெளிப்படுத்தினான் கண்ணன்.
பாரதப் போரின் தொடக்கத்தில் அருச்சுனனுக்கு அஞ்ஞானமும் அச்சமும் பற்றும் வந்து ஒட்டிக் கொள்கின்றது. அவனது அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்யறிவு புகட்ட, கண்ணன், குருவாகவும் இருந்து ஞானோபதேசம் புரிகின்றான்.
ஞானகர்ம சந்நியாச யோகத்தைப் பற்றி அருச்சுனனுக்குச் சொன்ன கண்ணன், "நீ என்னுடைய பக்தனாகவும், என்னுடைய தோழனாகவும் இருக்கின்றாய். எனவே, இந்தப் பழைய யோகமானது என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. இது மேலான வேதவாக்கியம். அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குச் சொன்னேன். அவன் மனுவுக்குச் சொன்னான். அவன் இட்சுவாகுவுக்குச் சொன்னான். இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த இராஜயோகத்தை இப்போது உனக்குச் சொன்னேன்" என்கின்றான்.
அருச்சுனனுக்கு உடனே மானிடப் பிறவிக்கே உள்ள அஞ்ஞானம் காரணமாக சந்தேகம் வந்து ஒட்டிக் கொண்டது. அவன் கண்ணனைப் பார்த்துக் கேட்கின்றான், "உமது பிறப்பு பிந்தியது. (நானும் நீரும் சமகாலத்தவர்) விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீர் எப்படி அவருக்குச் சொல்லி இருக்க முடியும்"
கண்ணன், "எனக்கும் உனக்கும், அருச்சுனா! பல பிறவிகள் கழிந்து போயின. அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறியமாட்டாய். நான் பிறப்பு அற்றவன். அழிவு அற்றவன். உயிர்களுக்கு எல்லாம் ஈசன். எனினும் பிரகிருதியை வசப்படுத்தி, அவதரிக்கின்றேன்" என்று சொன்னார். மேலும், "பாரதா! எப்பொழுது எல்லாம், அறம் அழிந்து போய், பாவம் மேல் எழுகின்றதோ, அப்பொழுது எல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கின்றேன். நல்லாரைக் காப்பதற்கும், தீயவரை ஒடுக்குதற்கும், அறத்தை நிலைநாட்டுவதற்கும் நான் யுகம் தோறும் அவதரிக்கின்றேன்" என்று சொல்லி மேலும் பலவாறாக அருச்சுனனுக்கு அறிவில் தெளிவை உண்டாக்குகின்றார்.
சூரிய புத்திரனான அருச்சுனனுக்கே அறியாமை இருந்தது என்றால், நம்மைப் போன்ற சாதாரண மானிடப் பிறவிக்குச் சொல்லவா வேண்டும்?
நமது உறவிலும், நட்பிலும், நமது அண்மையிலும் நல்லோர் இருந்தாலும், அவரது அருமையை உணர்வதில்லை. உதாசீனப் படுத்தி விடுவோம். தாமரை உள்ள குளத்திலேயே உள்ள தவளையைப் போல. ஆனால், அயலில் உள்ளோர் அருமை அறிந்து பயன் பெறுவர். எங்கோ காட்டில் உள்ள வண்டினைப் போல.
No comments:
Post a Comment