அழக் கொண்ட எல்லாம் அழப் போம்

 

 

அழக் கொண்ட எல்லாம் அழப் போம்

---

 

 

      தீய தொழில்களைச் செய்து, பிறர் வருந்துமாறு அடைந்த பொருள் எல்லாம், இந்தப் பிறவியிலேயே அவன் வருந்துமாறு போய்விடும். நற்செயல்களால் வந்த பொருளானது, இழக்க நேரிட்டாலும், பின்பு வந்து பயன் கொடுக்கும்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     பிறர் அழுமாறு தான் கொண்ட பொருள், தான் அழுமாறு போவதால், நல்வழியிலேயே பொருளைத் தேடவேண்டும் என்பது கருத்து.

 

"அழக் கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்

பிற்பயக்கும் நற்பால் அவை".  

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்கள் பழம்பெரும் நூல்கள் சில உள்ளன. அவற்றில் சிலவற்றை அரிதில் முயன்று தேடித் தொகுத்து வருகின்றேன்.

             

     அவற்றுள், இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சூரன் இழந்தான் இழந்தான் சோதி அருளும், தாய-

னார் இழந்த எல்லாம் அடையுமே, ---  தேரின்

அழக் கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்

பிற்பயக்கும் நற்பால் அவை.

 

இதன் பொருள் ---

 

         சூரன் முருகப் பெருமானால் சங்காரம் செய்யப்பட்டவன். தாயனார் --- அரிவாள்தாய நாயனார். 

 

     சூரபதுமன் அரிய தவங்களைச் செய்து பெற்ற வரத்தினால் வந்த பெருவாழ்வை, தேவர்களைச் சிறைவைத்துத் துன்புறுத்தி வந்த தீய செயலால் இழந்தான். அவன் பெற்ற பெருவாழ்வு தீய வழியில் வந்ததால், முற்றுமாக அழிந்து போனது.

 

     சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் மரபில் தாயனார் என்று ஓர் அடியவர் இருந்தார். அவர் சிவபெருமானுக்கு நல்ல அரிசியையும், கீரை மாவடு இவற்றையும் படைத்து வழிபட்டு வந்தார். ஒருநாள் வழக்கம்போல், இவர் இப்பொருள்களைக் கூடையில் ஏந்திக் கோயிலுக்குச் செல்லும் வழியில், பசியின் களைப்பால் கால் இடறவே, கூடையில் இருந்த பொருள் எல்லாம் நிலப்பிளவில் விழுந்து போயின. எம்பெருமான் அமுது செய்யும் பேறு இன்று கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தால் அவர் தம் ஊட்டியை அறுக்கத் தொடங்கும் சமயம், அந்தப் பிளவில் இருந்து அவரைத் தடுக்கச் சிவபெருமானது கையும், மாவடுவைக் கடிக்கும் விடேல் விடேல் என்ற ஓசையும் எழுந்தன. பிறகு அந் நாயனார் தம் மனைவியாருடன் பெறுதற்கரிய பேற்றையும் பெற்றார் என்பது வரலாறு. நிலப்பிளவில் போகட்டு இழந்தவற்றைச் சிவபெருமான் அமுது செய்ததனால், இழந்த எல்லாம் அடையுமே என்றார்.

                                                     

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்வில் நடந்த ஒரு அற்புதத்தைக் காட்டி, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சேரர்கோன் நீதித் திரவியங்கள் சுந்தரர்பால்

சோரர் கவர்ந்துஒளித்தும் சோர்வுஉண்டோ - பாரில்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பால் அவை.                  

 

இதன் பொருள் ---

 

         சேரமான் பெருமாள் நாயனாருக்குத் தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சுவாமிகள் நாயனாரோடும் கொடுங்கோளூரிலே சிலநாள் இருந்தபோது, திருவாரூர் வன்மீகநாதரைத் தரிசனம் செய்கின்ற நினைவு அவருக்கு முறுகி எழுந்தது. சேரமான் பெருமாள் நாயனார் பிரிவாற்றாதவராய் சுவாமிகளைத் திருவாரூருக்குப் போகாதபடி தடுத்தார். அதற்குச் சுவாமிகள் சிறிதும் உடன்பட்டிலர். பின்பு சேரமான் பெருமாள் மிகுதியான பொன் முதலிய திரவியங்களை எல்லாம் ஆட்களின்மீது சுமத்தி அனுப்பச் செய்தார். சுந்தரர் விடைகொடுத்து மலைநாட்டை நீங்கித் திருமுருகன்பூண்டி வழியே திருவாரூர் செல்லத் திருவுளம் கொண்டு போனார். பரமசிவன் பூதகணங்களை நோக்கி,  "நீங்கள் வேடவடிவம் கொண்டு சென்று சுந்தரனுடைய பண்டாரங்களைக் கவருங்கள்" என்று ஆணையிட்டு அருளினார். அவைகள் வழியிலே வேடுவர்களாகித் திரவியங்கள் எல்லாவற்றையும் கவர்ந்து கொண்டு சென்றன. பின்பு சுந்தரர் திருமுருகன்பூண்டித் திருக்கோயில் உள் புகுந்து, சுவாமியை வணங்கி, "கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்" என்று திருப்பதிகம் எடுத்துத் திருப்பாட்டுத் தோறும் "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானிரே" என்று பாடியருளினார். உடனே சிவபரம்பொருளின் திருவருளினாலே அவ் வேடுவர்கள் பறித்த திரவியங்கள் எல்லாம் வாயிலில் வந்து குவிந்தன. சுந்தரர் மகிழந்து அவைகளை எடுத்துச் சென்றார்.

 

         ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருள் எல்லாம் இம்மையிலே அவன் வருந்தும்படிப் போய்விடும். மற்றைத் தூய செயல்களால் வந்த பொருள்கள் முன்பு இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன்கொடுக்கும் என்றார் திருவள்ளுவ நாயனார்.

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...