உடம்பு உள்ளபோதே இறையருளைப் பெற முயல்க
--------
உடம்பின் நிலையாமையை உணர்ந்து திருவருளைத் தேடிக் கொள்ளவேண்டும்.
"மண் ஒன்று கண்டீர், இருவகைப் பாத்திரம்,
திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது,
விண்ணின்று நீர்விழின் மீண்டு மண் ஆனாற்போல்
எண்இன்றி மாந்தர் இறக்கின்றவாறே."
நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் என்னும் அருள்நூலில் வரும் பாடல் இது.
இதன் பொருள் ---
இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டன. ஆயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட்டு, மற்றொன்று அவ்வாறு சுடப்படாது இருந்தால், அதன்மேல் வானத்தில் இருந்து மழை விழும்போது, சுடப்பட்ட பாண்டம் கேடு இல்லாமல் இருக்க, சுடப் படாத பாண்டம் கெட்டு, முன்பு போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இது போல்வதே.
குறிப்பு ---
தீவினை சேர்ந்தது --- (தீ+வினை) தீயினால் சுடப்பட்டது.
எண்ணின்றி --- (எண்+இன்றி) எண்ணம் இல்லாமல், குறிக்கோள் இல்லாமல்.
எண்ணுதல் --- நினைத்தல், மதித்தல், தியானித்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல்.
எந்த ஓரு பொருளும் தோன்றுவதற்கு, முதற்காரணம், நிமித்தகாரணம், துணைக்காரணம், என மூன்று காரணங்கள் உண்டு.
மண்குடம் என்ற ஒரு பொருள் தோன்ற, மண் முதற்காரணம். குயவன் நிமித்த காரணம். அவன் பயன்படுத்தும், தண்டமும், சக்கரமும் துணைக் காரணம்.
அதுபோலவே, உலகம் தோன்ற மாயை முதற்காரணம். இறைவன் நிமித்த காரணம். அவனுடைய சத்தி துணைக் காரணம். எனவே, "மண் ஒன்று கண்டீர்" என்றார்.
மண்ணால் செய்யப்பட்ட இரண்டு பாத்திரங்கள். அவற்றில் ஒன்று சூளையில் வைத்துச் சுடப்பட்டது. மற்றொன்று அவ்வாறு சுடப்படவில்லை. வானத்தில் இருந்து மழை விழுந்தபோது, சுடப்பட்ட பாத்திரம் அழியாமல் நிலைபெற்று இருக்கின்றது. சுடப்படாத பச்சை மண்ணால் ஆன பாத்திரமானது, மழை நீரில் கரைந்து, உருச் சிதைந்து முன்பு போல மண்ணாகி விடுகின்றது.
அதுபோலவே, மாயையில் இருந்து, இறைவனால், அவனது அருட்சத்தி துணைக் கொண்டு உயிர்கள் அவற்றின் வினைக்கு ஈடாக உடம்பைப் பெற்று உலகில் வருகின்றன. மாயை என்னும் சொல்லுக்கு, தோன்றி மறைதல் என்பது பொருள். மாயாகாரியமாகிய பொருள்கள் யாவும் தோன்றி மறையும் தன்மையை உடையன. உயிர்களுக்கு இறைவனால் ஆக்கப்பட்ட உடம்புகளும், அவ்வவற்றின் வினைக்கு ஈடான காலம் வரையில் இருந்து பின்பு பயனற்றுப் போவன.
மட்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கட் பிறப்பில் அமைந்த உணர்வை, அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அருளுணர்வு உடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பது இப்பாடலின் கருத்து.
இறைவனுடைய அருட்பெருந் தீயினால், வினையின் காரணமாக உயிர்க்கு உண்டாகிய உணர்வைச் சுட்டுக் கொண்டால், உயிரானது திண்மையை அடைந்து, புலன் உணர்வாகிய மழைத்துளி பட்டால், உடம்பு அழிந்து மீண்டும் பிறவிக்கு வராது. இல்லையானால், மழைத்துளியாகிய புலன் உணர்வால், உடம்பு சிதைந்து, மீண்டும் பிறவியை எடுத்து உழலவேண்டி அமையும்.
கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பாவிலும் இந்தக் கருத்தையே காணலாம்...
எழிலைஆழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந்து உருகி
அழலைஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு
ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்குஇருள் நடுநல்யா மத்துஓர்
மழலையாழ் சிலம்ப வந்துஅகம் புகுந்தோன்
மருவுஇடம் திருவிடை மருதே.
இதன் பொருள் ---
அழகான வேலைப்பாடு அமைந்த பசுமட்கலமானது, வானத்தின் மழைத்துளி தன்மீது பட்ட அளவில் நனைந்து கரையும். அந்தப் பச்சை மண்ணால் ஆன கலமே, நெருப்பிலிட்டுச் சுட்ட பின்பு தண்ணீரிலேயே பலகாலம் ஊறிக் கிடந்தாலும் கேடு படாமல் இருப்பதுபோல, அறிவில்லாதவனாகிய அடியேனுடைய உள்ளமானது, மகளிருடைய கலவியாகிய செயலில் ஆழ்ந்து இடர்ப்படாதவண்ணம் இருள் செறிந்த பெரிய நடு இரவில், ஒப்பற்ற இனிய யாழ் ஒலி ஒலிக்க வந்து என் உள்ளத்துப் புகுந்த பெருமான் விரும்பிக் கோயில் கொண்டுள்ள இடம் திருவிடைமருதூர் ஆகும்.
அழலை ஆழ்பு --- நெருப்பில் ஆழ்ந்து இருந்த பின்பு.
புனலொடும் கிடந்தாங்கு --- நீரிலே மூழ்கினாலும் அதனுடன் கேடின்றி இருந்தாற்போல.
ஆதனேன் நெஞ்சம் --- அறிவில்லாதவனாகிய எனது உள்ளம்.
இடர்ப்படா வண்ணம் --- புலன் இன்ப மயக்கமாகிய துன்பத்தில் புகாதபடி.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு, மாதராரது கலவியில் மிக ஆழ்ந்தபோதும் உள்ளம் அதனால், திரிவுபடாமை. பிறவி எடுத்த யார்க்கும் பிராரத்த வினை உண்டு. அதனை அனுபவித்தே கழிக்கவேண்டும். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர், புலன் இன்பத்தை அனுபவிக்கும் போது, அது உடல் ஊழாகவே கழியும்,
"கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"அநுராகப் பரவை படியினும், வசம் அழியினும், முதல் அருணை நகர்மிசை கருணையொடு அருளிய பரம ஒரு வசனமும், இரு சரணமும் மறவேனே" என்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில்.
அருணகிரிப் பெருமானுக்கு முருகன் குருவாகத் தோன்றி சிறந்த உபதேசம் புரிந்தருளினார். உபதேசித்த உபதேச மொழியை ஒரு போதும் மறவேன் என்கின்றார்.
அடியேன் மாதர் மயலால் வாடினாலும், அம்மாதருடைய பேரையே உருப்போட்டாலும், அவர் இட்ட பணிகளைப் புரிந்து திரிந்தாலும், அவருடன் விளையாட்டு வசனங்களை உரையாடினாலும், படுக்கையில் அம்மாதர்கள் தரும் காம இன்பக் கடலில் முழுகினாலும், அப்பனே! உன் உபதேச மொழிகளையும், திருவடிகளையும் மறவேன் என்கின்றார்.
ஆனால், உபதேசம் கேட்டபின் மாதர் மயலில் மயங்கினார் என்று கருதக் கூடாது. மறக்கச் செய்வது மாதர் மயல். எல்லோரும் மயங்குவர். அப்படி அடியேன் மயங்கினாலும் உன் உபதேசத்தையும், திருவடியையும் மறவேன் என்று தனக்கு உள்ள உறுதிப்பாட்டை உரைக்கின்றார்.
இறைவனது அருளைப் பெற்றவர் உலக விடயங்களில் ஆழ்ந்து இருந்தாலும், இறைவனை மறவார்.
No comments:
Post a Comment