அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குடங்கள் நிரைத்து (குரங்காடுதுறை)
முருகா!
இப் பிறவியிலேயே திண்ணிய ஞானத்தைப் பெற்று,
தேவரீரது திருவடிய அடைய அருள்.
தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார ...... செயநீலங்
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு ...... மகலாதே
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன்
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான ...... மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி ...... யளிசூழத்
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து, ஆர-
வடங்கள் அசைத்தார ...... செய நீலம்
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழைக்காது,
குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே,
உடம்பும் அறக் கூனி நடந்து, மிகச்சாறி,
உலந்து, மிகக் கோலும் ...... அகலாதே,
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும்
உரங்கொள் பொற்பாதம் ...... அருள்வாயே.
விடங்கள் கதுப்பு ஏறு படங்கள் நடித்து ஆட,அவ்
விதங்கொள் முதற்பாயல் ...... உறைமாயன்,
வில்அங்கை முறித்து ஓடி, இடங்கள் வளைத்து ஏறு
விளங்கு முகிற்கு ஆன ...... மருகோனே!
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கும் மயிற்பேடை
தழங்கும் இயல்பாடி, ...... அளிசூழத்
தயங்கு வயல்சாரல் குரங்கு குதித்து ஆடு
தலங்கள் இசைப்பு ஆன ...... பெருமாளே.
பதவுரை
விடங்கள் கதுப்பு ஏறு --- நஞ்சு கன்னத்தில் ஏறிய
படங்கண் நடித்து ஆட --- காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும்,
அ(வ்)விதம் கொள் முதல்பாயல் உறை மாயன் --- அவ்விதம் கொண்ட சிறந்த ஆதிசேடன் என்ற பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால்,
வில் அங்கை முறிந்து ஓடி --- மிதிலை நகரில் சிவதனுசைத் தனது அழகிய கையால் எடுத்து முறித்து,
இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் --- தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக விளங்குமாறு செய்வித்த
முகிற்கு ஆன மருகோனே --- மேக நிறமுடைய திருமாலுக்கு உகந்த திருமருகரே!
தடம்கொள் வரைச்சாரல் --- நீர் நிலைகள் மிகுந்துள்ள மலைச் சாரல்களில்
நளுங்கும் மயில்பேடை --- குளிரால் நடுங்குகின்ற மயில் தன் பேடையோடு,
தழங்கும் இயல்பாடி அளி சூழ --- ஒலி செய்யுவும், வண்டுகள் சூழ்ந்து முரலவும்,
தயங்கும் வயல் சாரல் --- விளங்கும் வயல்புறங்களைக் கொண்ட சாரலில்
குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே --- குரங்குகள் குதித்து விளையாடும் தலங்களில் உவந்து வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து --- இரு குடங்கள் வரிசையாக அமைந்தால் போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து,
ஆர வடங்கள் அசைத்தார --- அவற்றின் மீது முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழைக்காது --- காதணிகள் உள்ள அழகிய காதுகளிலே உள்ள குழைகளோடு,
செய நீலம் குளிர்ந்த முகப் பார்வை வலையாலே --- முகத்திலே செம்மையான நீலோற்பலம் போன்றுள்ள கண்களின் பார்வை வலையாலே, (காம மயக்கம் கொண்டு)
உடம்பும் அறக் கூனி நடந்து --- உடல் மிகவும் கூன் அடைந்து, நடையும் சரிந்து,
மிகச் சாறி உலந்து --- தோலும் மிகவும் வற்றி,
மிகக் கோலும் அகலாதே --- கையில் பற்றியுள்ள கோலும் நீங்காமல்,
உறங்கி விழிப்பு ஆய, பிறந்த பிறப்பேனும் --- உறங்கி விழித்துக் கொண்டது போன்ற தன்மையுள்ள இந்தப் பிறப்பிலாவது
உரம் கொள --- திண்ணிய ஞானம் பெறும்படியாக
பொன் பாதம் அருள்வாயே --- தேவரீரது அழகிய திருவடியைத் தந்து அருளுவீராக.
பொழிப்புரை
நஞ்சு கன்னத்தில் ஏறிய காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அவ்விதம் கொண்ட சிறந்த ஆதிசேடன் என்ற பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால், சிவதனுசைத் தனது அழகிய கையால் எடுத்து முறித்து, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக விளங்குமாறு செய்வித்த மேக நிறமுடைய திருமாலுக்கு உகந்த மருகரே!
நீர் நிலைகள் மிகுந்துள்ள மலைச் சாரல்களில் குளிரால் நடுங்குகின்ற மயில் தன் பேடையோடு, ஒலி செய்யுவும், வண்டுகள் சூழ்ந்து முரலவும், விளங்கும் வயல்புறங்களைக் கொண்ட சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் தலங்களில் உவந்து வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
இரு குடங்கள் வரிசையாக அமைந்தால் போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, அவற்றின் மீது முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய காதணிகள் உள்ள அழகிய காதுகளிலே உள்ள குழைகளோடு, முகத்திலே செம்மையான நீலோற்பலம் போன்றுள்ள கண்களின் பார்வை வலையாலே, (காம மயக்கம் கொண்டு) உடல் மிகவும் கூன் அடைந்து, நடையும் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் பற்றியுள்ள கோலும் நீங்காமல், உறங்கி விழித்துக் கொண்டது போன்ற தன்மையுள்ள இந்தப் பிறப்பிலாவது திண்ணிய ஞானம் பெறும்படியாக உமது அழகிய திருவடியை அருள்வாயாக.
விரிவுரை
உறங்கி விழிப்பு ஆய, பிறந்த பிறப்பு ---
உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. --- திருக்குறள்.
ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்.
உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய் விரைந்து மாறிமாறி வருவது போல, சாக்காடும் பிறப்பும் இயல்பாய் விரைந்து மாறிமாறி வரும்.
கோடுஉயர் கோங்கு அலர் வேங்கை அலர்
மிகஉந்தி வரும் நிவவின் கரைமேல்
நீடுஉயர் சோலை நெல்வாயில் அரத்--
துறை நின்மலனே, நினைவார் மனத்தாய்,
ஓடுபுனல் கரையாம் இளமை,
உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி
வாடிஇருந்து வருந்தல் செய்யாது
அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே. --- சுந்தரர்.
தனிப்பெருந் தாமே முழுது உறப் பிறப்பின்
தளிர், இறப்பு இலை உதிர்வு என்றால்
நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்
நெஞ்சிடிந் துருகுவ தென்னோ !
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. ---- திருவிசைப்பா.
பிறப்பு தளிரைப் போன்றது. இறப்பு, அந்தத் தளிரானது முதிர்ந்து உதிர்வது பொன்றது. அருமை. அருமை. அருமை. ஓதி உணரத் தக்க அற்புத வாசகங்கள்.
இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின்,
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு. --- நாலடியார்.
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறஞ் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டுஎன உணர்தலின் உரவோர் களைந்தனர்...--- மணிமேகலை.
விடங்கள் கதுப்பு ஏறு படங்கண் நடித்து ஆடு ---
படம் கண் --- படத்தினை உடைய பாம்பின் மீது.
யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்து, பாம்பினுடன் போர்புரிந்து வென்று அப்பாம்பின் படத்தின்மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.
காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.
அ(வ்)விதம் கொள் முதல்பாயல் உறை மாயன் ---
அவ்விதமே சிறந்த ஆதிசேடன் என்ற பாம்புப் படுக்கையில் மாயவனாகிய திருமால் பள்ளி கொண்டு அருள்கின்றார்.
விலங்கை முறிந்து ஓடி ---
வில்+அங்கை. வில்லைத் தனது அழகிய திருக்கையால் எடுத்து முறித்தவர் இராம்பிரான்.
முகிற்கு ஆன மருகோனே ---
முகில் -- மேகம். மேகவண்ணராகிய திருமாலின் திருமருகர் முருகப் பெருமான்.
நளுங்கும் மயில்பேடை ---
நளுங்குதல் --- நடுக்கம் எய்தல்.
குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே ---
வடகுரங்காடுதுறை, தென்குரங்காடுதுறை என இரு திருத்தலங்கள் உள்ளன.
வடகுரங்காடுதுறை
கும்பகோணத்துக்கு அடுத்த ஐயம்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து நாலு கல் தொலையில் உள்ளது. வழியில் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருத்தலம் உள்ளது. ஆடுதுறைபெருமாள் கோயில் என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.
இறைவர் : தயாநிதீசுவரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.
இறைவியார் : ஜடாமகுடேசுவரி, அழகுசடைமுடியம்மை.
தல மரம் : தென்னை.
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.
தென்குரங்காடுதுறை
தென்குரங்காடுதுறை என்பது ஆடுதுறை புகைவண்டி நிலையம் இப்பெயராலேயே உள்ளது. திருவிடைமருதூருக்குக் கிழக்கே இரண்டு கல் தொலையில் உள்ளது. ஆடுதுறை என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவு.
இறைவர் : ஆபத்சகாயேசுவரர்
இறைவியார் : பவளக்கொடியம்மை,
தல மரம் : வெள்வாழை
தீர்த்தம் : சகாய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.
திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.
கருத்துரை
முருகா! இப் பிறவியிலேயே திண்ணிய ஞானத்தைப் பெற்று, தேவரீரது திருவடிய அடைய அருள்.
No comments:
Post a Comment