நெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்
-----
திருக்குறளில், "படைச் செருக்கு" என்னும் அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "பகைவரை எதிர்க்கும் வீரத்தைப் பேராற்றல் என்று கூறுவர். அப்படிப்பட்ட பகைவர்க்கும் ஒரு துன்பம் வந்தபோது, முகம் கொடுத்து, அத் துன்பத்தைத் தீர்க்க உதவுவது, அந்தப் பேராண்மை கொண்ட படைக்குக் கூர்மை ஆகும்" என்கின்றார் நாயனார்.
வீரனானவன் தான் போர் புரிவது என்று வந்துவிட்டால், பகைவனிடத்தில் சிறிதும் கருணை காட்டாது போர் புரிதல் வேண்டும். அவ்விதம் போர் புரியும் காலத்தில், பகைவன் தனது கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாது, படைகளை எல்லாம் இழந்தும், சேனைகளை எல்லாம் இழந்தும் நிற்கும் நிலை வந்தால், அவனுக்குக் கருணை காட்டி அவனுக்கு வேண்டும் உதவியைச் செய்யவேண்டும். இதுவே போர் முறை ஆகும். பகைவனது கையில் படைக்கலம் இல்லாது போனால், தன்னிடத்தில் உள்ள படைக்கலம் ஒன்றினைக் கொடுத்துப் போர் புரியவேண்டும். அதுவும் இல்லாவிட்டால், அவனுக்குத் தக்கவாறு உதவ வேண்டும். அதுவே, பேராண்மைக்கு அழகு ஆகும்.
போர் என்று வந்தால் படைக்கலத்தால் கொன்று பகைவனை வெல்லவேண்டும். துயர் என்று வந்தால், அன்பால் உதவி, பகைவன் மனத்தை வெல்லவேண்டும். பகைவனை வெல்வது வீரம். துயர்ப்படும் அவனுக்கு அருள்வது வீரத்திலும் வீரம்.
"பகைவனுக்கு அருள்வாய்" என்பதை, திருவள்ளுவ நாயனார் பின் வரும் திருக்குறள் வழிக் காட்டியது அருமையிலும் அருமை.
"பேர் ஆண்மை என்ப, தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு".
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றினைக் கொள்ளலாம்.
மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடு விளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப் காட்டினார். அவ் ஆகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனம் அளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத் தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக் கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா! நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச் சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித் தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
முத்தநாதனால் வஞ்சிக்கப்பட்டு, உயிரிழந்த போதும், நாயனார் வெற்றி கொண்டவராகவே ஆனார் என்பதைப் பின்வரும் பெரியபுராணப் பாடலால் அறியலாம்.
கைத்தலத்து இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
"மெய்த்தவ வேடமே மெய்ப்
பொருள் எனத் தொழுது வென்றார்".
இதன் பொருள ---
அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப் போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.
"இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே நல்நெறி காத்த சேதி நாதனார் பெருமை"யினைப் போற்றி, சுந்தரமூர்த்தி சுவாமிகள், “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் வைத்துப் போற்றினார். "நல்நெறி" என்று சேக்கிழார் காட்டியது சைவநெறியாகிய அன்புநெறி.
இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் "பழமொழி நானூறு" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.
தெற்றப் பகைவர்இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள்; - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத்து ஆயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு.
இதன் பொருள் ---
பாம்பு --- பாம்பானது, தெற்ற நவைக்கப்படுந் தன்மைத்து ஆயினும் --- தெளிவாகத் துயர் செய்யப்படும் தன்மையது ஆயினும், சான்றோர் அவை படின் சாவாது --- அறிவுடையோர் கூட்டத்தில் சென்றால் இறவாது; (அதுபோல), மேன் மக்கள் --- உயர்குடிப் பிறந்தோர், தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் --- தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் --- தமக்குப் பல பிழைகளைச் செய்தவராய் இருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.
'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்னும் பழமொழிக்கு விளக்கமாக அமைந்தது இப் பாடல்.
இங்ஙனம் கண்ணோட்டம் (கருணை) செலுத்துவது ஊராண்மை எனப்படும். ஊராண்மை என்பது, "உபகாரியாம் தன்மை" என்றார் பரிமேலழகர்.
இலங்கையர் வேந்தனான இராவணன், போர் செய்யச் சென்றால் தோல்வியைக் காணாதவன். ஆற்றல் மிகுந்தவன். "முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் 'எக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும்" படைத்தவன் அவன்.
அப்பேர்க்கொத்தவன், ஒரு நொடியில் இராமபிரான் விடுத்த அம்பு ஒன்றினால், மணிமுடியை இழந்தவனாக, சூரியன் இல்லாத பகலையும், சந்திரன் இல்லாத இரவையும் போல நின்றான்.
தனது செருக்கு அழிந்த இராவணன், கவிந்த முகத்தோடு நின்றான். விழுதுகளைக் கொண்டு மிக்கு உயர்ந்த நின்ற ஆலமரம் போன்ற உடலைக் கொண்டிருந்த அவன், "அறநெறியைக் கடந்த பாவிகளின் செய்கை இப்படித்தான் முடியும்" என்று கூறி உலகத்தவர் ஆரவாரம் செய்யும்படியாக, உடம்பு கருத்து, தனது கால்விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டு நின்றான்.
தனது எதிரில் வெட்கித் தலைகுனிந்து, அவமானத்தால் மேனி ஒளி இழந்து நின்ற இராவணன் நிலையைக் கண்ட இராமபிரான், "வெறும் கையுடன் நிற்கும் இவனைக் கொல்வது எதற்கு?" என்று மனத்தில் எண்ணி, "இன்று உனது தீமை கெட்டது போலும்" என்று சொல்லி, மேலும் புகழ்மிக்க வாசகத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.
நாயனார் திருக்குறளோடு ஒத்துவரும், இந்தக் காட்சியைப் பின்வரும் பாடல்களால், கம்பநாட்டாழ்வார், தமது "இராமாயண" காப்பியத்தில், நமது மனக்கண் முன் நிறுத்துகின்றார்.
'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.
இதன் பொருள் ---
அறத்தினால் அன்றி --- (இராமபிரான் இராவணனை நோக்கி) அறநெறியினால் அல்லாமல்; மறத்தினால் --- பாவ நெறியினால்; அருஞ்சமர் கடத்தல் --- அரிய போர்களில் வெல்லுதல்; அமரர்க்கும் அரிது --- தேவர்களுக்கும் இயலாததாகும்; என்பது --- என்பதனை; மனத்திடை வலித்தி --- உள்ளத்திலே உறுதியாகப் இப்போதாவது பதித்துக் கொள்வாயாக; பாவி! --- பாவச் செயல்கள் புரிந்தவனே!; கிளையொடும் நின் நெடும் பதிபுக பறத்தி --- உனது சுற்றத்தாரொடும் பெரிய ஊருக்குள் செல்ல இப்போது நீ விரைகிறாய்; இறத்தி --- நீ இப்போதே என்னால் இறந்து இருப்பாய்; தனிமை கண்டு இரங்கி யான் அது நினைக்கிலென் --- நிராயுதபாணியாக நீ நிற்கும் அவலத்தைக் கண்டு இரங்கி, உன்னைக் கொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
எதிரிக்கு ஒரு துன்பம் வந்தபோது, தக்க சமயம் வந்தது
என்று அவனைக் கொல்லாது, உபகாரம் செய்து உயிருடன்
அனுப்புதல் பேராண்மை என்பதாகும்.
"பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால், ஊராண்மை மற்றதன் எஃகு" என்ற திருக்குறளும், அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இங்கும் நினைக.
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன, மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன், நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
இதன் பதவுரை ---
ஆள் ஐயா --- மூன்று உலகங்களையும் ஆள்கின்ற ஐயனே! உனக்கு அமைந்தன --- உனக்குத் துணையாக அமைந்திருந்த படைகள் அனைத்தும்; மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை --- பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போயினமையைக் கண்டாய் அல்லவா; ( எனவே, நீ போர் செய்ய இயலாதவன் ஆகின்றாய். ஆதலால்) இன்று போய் நாளை போர்க்கு வா --- இன்று உனது அரண்மனைக்குச் சென்று, (மேலும் போர் புரிய விரும்பினால்) போர்க்கு நாளைக்கு வருவாயாக; என --- என்று; நல்கினன் --- (இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான்; (யார் என்னில்) நாகு இளங்கமுகின் --- மிகவும் இளைய பாக்கு மரத்தின் மீது; வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல் --- வாளை மீன்கள் தாவிப் பாயும்
(நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.
தன் மனைவியை வஞ்சித்து இன்னும் சிறை வைத்துள்ள மாபாதகன், நிராயுதனாகக் கண்முன் நிற்பது அறிந்தும், அவனைக் கொல்லாது, "இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என சொன்ன அருள் மனம் சான்றோர் பலரின் உள்ளம் கவர்ந்தது.
No comments:
Post a Comment