குரு யார்?

 

 

குரு யார்

---

 

     உயிர்கள் நலம் பெறுவதற்குத் தொடக்க நிலையிலும், முடிந்த நிலையிலும் வழியாய் அமைவது இறைவழிபாடு ஒன்றுதான். அது, குரு, இலிங்கம், சங்கமம் என மூன்று இடங்களில் அமையும் என்று சைவ சித்தாந்தம் வரையறுத்து உள்ளது.

 

     இந்த மூன்றில் இலிங்கம் என்பது அருவுரு. உருவமும் அருவமும் கலந்த நிலை. குரு, சங்கமம் என்பது உருவ நிலையைக் குறிக்கும். குரு, இலிங்கம், சங்கம்ம் என்னும் மூன்று நிலையும், தாவரம், சங்கமம் என்று இருவகையாகப் பகுக்கப்பட்டு உள்ளன. தாவரம் என்பது அசையாப் பொருளைக் குறிக்கும். இலிங்கம் தாபரம் ஆகும். சங்கமம் என்பது அசையும் பொருளைக் குறிக்கும். அடியார்களும் அவர்களில் ஒருவரான குருவும் சங்கமம்.

 

     எனவே, இறைவன், "தாபர சங்கமங்கள் எனும் இரண்டு உருவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்" என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. இதில் குருவடிவம் சங்கமத்துள் அடக்கம். இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடுகளுடன், குரு வழிபாடு வேறுபடுத்திக் கூறப்பட்டு உள்ளது. "மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்" என்பதில் "பூசை" என்றது, குரு, இலிங்க, சங்கம வழிபாட்டை. "அருள்" என்றது, "உலக இன்பம், வீட்டு இன்பம்" என்னும் இரண்டையும் தருகின்ற அருள் ஆகும்.

 

     குரு என்பவர், ஒருவருக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவிக்கின்றவர். ஞானத்திற்கு மட்டும்தான் குரு தேவை என்பதில்லை. உலகியலில் கூட ஒவ்வொருவர்க்கும் குரு வேண்டியவர் ஆவார். உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஒரு குருவை உடையவராக இருக்கின்றனர். எல்லோருக்கும் முதலில் அறிவைத் தருபவர் தாயும், தந்தையும். எனவே, தாய்தந்தையர் "இருமுதுகுரவர்" எனப்பட்டனர். அதன் பின்னர் எழுத்தை அறிவிக்கின்றவர் குரு. உயர்கல்வி கற்பிக்கின்ற ஒருவரோ, சிலரோ குரு ஆகின்றனர். வாழ்க்கைக்கு வேண்டிய அறிவைக் கற்பிக்கின்றவர் குரு. அலுவலுகத்தில் கோப்புகளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பவரும் குரு. "தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்றபடி, குரு இல்லாமல் யாருக்கும் எதுவும் விளங்குவது இல்லை. "குரு இல்லா வித்தை பாழ்" என்பது முதுமொழி. "குரு இல்லா வித்தை..... வையத்து இருந்து என் பயன்" என்பது குமரேச சதகம்.

 

     அறிவிக்க அறியும் இயல்பினை உடையது ஆன்மா. எனவே, ஒருவர் இது இன்னது என்று அறிவித்தால் ஒழிய அறிந்துகொள்ள முடியாது. அப்படி அறிவிப்பவர் குரு ஆவார்.

 

     இதனை, தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியார், மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான "திருவருட்பயன்" என்னும் நூலில், ஆசிரியரின் இன்றியமையாமை குறித்து பின்வருமாறு விளக்குகின்றார்.

 

"எமக்கு என்? எவனுக்கு எவை தெரியும் அவ்வ

தமக்கு அவனை வேண்டத் தவிர்".

 

இதன் பொருள் ---

 

     எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ, அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு, அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம், அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும்.

 

பதப் பொருள் ---

 

எவனுக்கு எவை தெரியும் --- எவன் ஒருவனுக்கு எக் கலைகள் நன்கு தெரியுமோ,

 

அவ்வ தமக்கு --- அக் கலைகளைத் தாம் தெரிந்து கொள்ளுதல் பொருட்டு,

 

அவனை வேண்ட --- அவனது துணையையே உலகத்தார் நாடி நிற்றல் எங்கும் காணப்படும் இயல்பாக இருக்க,

 

எமக்கு தவிர் என்? --- ஞானத்தைப் பெற விரும்பும் எமக்கு , அதனை உணர்த்த வல்ல ஞானாசிரியரின் துணையைத்    தவிர்த்தல் எவ்வாறு கூடும்?

 

     வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் ஓர் இளைஞன், உணவகத்தில் உண்பது உடலுக்கும், பொருளாதாரத்திற்கும் பொருந்தாது என்பதை அறிந்து, சமையல் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள விரும்பினான். கடைக்குச் சென்று "சமையல் செய்வது எப்படி" என்பது பற்றிய வகைவகையான புத்தகங்களில் சிலவற்றை வாங்கி வந்தான். அவற்றைப் படித்துப் பார்த்தபோது அவனுக்குக் குழப்பந்தான் உண்டானது. ஒன்றில் உள்ளது போல, மற்றொன்றில் இல்லை. ஏதோ ஒரு வகையாகத் தாளில் குறிப்பெடுத்துக் கொண்டு சிற்றுண்டி செய்து பார்த்தான். நூல்களைப் படித்துப் பார்த்து, பொருள்களை வாங்கிய அவனால் எதையும் ஒழுங்காகச் சமைத்து உண்ண முடியவில்லை. சமைத்த பொருளைக் கீழே கொட்டுவதைத் தவிர வேறுவழியில்லை. பார்த்துப் பார்த்து, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். சமையல் புத்தகங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்தான். சமையல் தெரிந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.

 

         எளிய சமையலுக்குக் கூட நூல்கள் கைகொடுத்து உதவாதபோது, இசை நாட்டியம் போன்ற நுண் கலைகளை அவை பற்றிய நூல்களைப் பயின்றே ஒருவர் தெரிந்து கொண்டு விடலாம் என்று கூறுவது அறியாமை தானே. அந்தந்தக் கலைகளில் வல்ல ஆசிரியரைத் துணையாகக் கொண்டே, அக்கலைகளை நாம் அனுபவமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு அவ்வாசிரியரிடம் பல காலம் முறையாகப் பயில வேண்டும். அவரது வழிகாட்டுதல் மூலமாகவே அக்கலைகளைப் பற்றிய நுணுக்கங்களைப் பெற முடியும்.

 

     உலகியல் கலைகளின் நிலையே இவ்வாறு இருக்க, உலகியல் கடந்த பொருளாகிய ஞானத்தை ஞானாசிரியர் இல்லாமலே நூல்கள் வழியாகப் பெற்றுவிட முடியும் என்று கூறுவது அப்பட்டமான அறியாமையே என்பது இதனால் விளங்கும். ஞானாசிரியன் இல்லாமல் கற்கும் போது, ஞான நூல்களின் பொருள் விளங்காமல் நிற்கும். அல்லது மாறுபாடாகத் தோன்றும். ஆதலால் ஞானநூல்கள் ஞானகுரு இன்றிப் பொருள் தெளிவைத் தரமாட்டா.

 

     மெய்ந்நிலையை அடைந்தாருக்கும் குரு வேண்டுமா என்னும் ஐயம் எழும். பிறவியிலேயே கண்ணில்லாதவன் ஒருவன் மருத்துவ முறையினால் கண்பார்வை பெற்றான் என்றால், அவன் பொருள்களைக் காணும் திறனை மட்டுமே பெற்றவன் ஆகிறான். ஆனால், இது இன்னபொருள் என்பதை அவனால் உணரமுடியாது. அந்தப் பொருளை அறிந்த வேறொருவன் உணர்த்தவே, அவன் அதனை உணர்தல் கூடும். அதுபோல, பக்குவநிலையில் ஆணவமல மறைப்பு நீங்கப் பெற்றவர், பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணருகின்ற ஆற்றலைப் பெறுவர். ஆனால்,அவற்றின் இயல்பையெல்லாம் உணர்ந்த ஞானாசிரியர் உணர்த்தவே அவற்றை உணர்ந்து கொள்ள முடியும். எனவே, எப்பேர்ப்பட்டவர்க்கும் குரு அவசியம்.

 

     உயிருக்கு உள்ள அறியாமை என்னும் இருள் நீங்குவது குருவின் திருநோக்கால் மட்டுமே என்பதை, உமாபதி சிவாச்சாரியார் பின்வருமாறு காட்டினார்...

 

விடம் நகுலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்

கடனில் இருள் போவது இவன் கண்.

 

இதன் பொருள் ---

 

     பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆனால், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்த விடம் நீங்கும். உயிரில் உள்ள அறியாமையாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக இருந்தபோதிலும், அறியாமை நீங்குவது இல்லை. இறைவனாய் நிற்கும் ஞானகுருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும்.

 

பதப் பொருள் :

 

விடம் --- பாம்பு கடித்து ஏறிய நஞ்சு

 

நகுலம் மேவினும் --- பாம்புக்குப் பகையாகிய கீரியே நேரே வந்து பாம்பு தீண்டியவனது உடல்மேல் விழுந்து புரண்டாலும் (நீங்காது. ஆனால்)

 

மெய்ப்பாவகனின் மீளும் கடனில் --- மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகனது பார்வையால் நீங்கும் முறைமை போல

 

இருள் போவது --- ஆணவமலமாகிய இருள் நீங்குவது

 

இவன் கண் --- (உயிர்க்கு உயிராய், உள் நிற்கும் சிவனால் அன்றி) சிவமேயாய் நிற்கும் ஞானகுருவின் திருநோக்கினால் ஆகும்.

 

         இறைவன்தான் ஆன்ம அறிவில் எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறானே. அவ்வாறு இருக்கின்ற அவன் உள்ளிருந்தபடியே ஆணவமலத்தை நீக்கக் கூடாதா? என்று வினவலாம். அதற்கு விடையாகவே இது அமைந்தது. மாந்திரிகனை உவமை காட்டி மேற்கூறிய ஐயத்தைத் தெளிவிக்கிறார்.

    

     எனவே, எதையும் இன்னது என்று அறிவித்து அறிவு புகட்டும் ஆசிரியர் இன்றி, எந்த நிலையிலும் எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...