திருவலஞ்சுழி --- 0884. மகர குண்டலம்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மகர குண்டலம் (திருவலஞ்சுழி)

 

முருகா!

விலைமாதர் கூட்டுறவு அற அருள்வாய்.

 

 

தனன தந்தன தானா தானன

     தனன தந்தன தானா தானன

     தனன தந்தன தானா தானன ...... தனதான

 

 

மகர குண்டல மீதே மோதுவ

     வருண பங்கய மோபூ வோடையில்

     மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ

 

மதன்வி டுங்கணை யோவா ளோசில

     கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை

     மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத

 

முகர வண்டின மோவான் மேலெழு

     நிலவ ருந்துபு ளோமா தேவருண்

     முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார்

 

முடிவெ னுங்கட லோயா தோவென

     வுலவு கண்கொடு நேரே சூறைகொள்

     முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ

 

நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்

     தசமு கன்படை கோடா கோடிய

     நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய்

 

நெடிய னங்கனு மானோ டேயெழு

     பதுவெ ளங்கவி சேனா சேவித

     நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே

 

சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்

     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்

     சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர்

 

தெளியு மந்த்ரக லாபா யோகிகள்

     அயல்வி ளங்குசு வாமீ காமரு

     திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

மகர குண்டலம் மீதே மோதுவ,

     வருண பங்கயமோ? பூ ஓடையில்

     மருவு செங்கழு நீரோ? நீ விடு ...... வடிவேலோ?

 

மதன் விடும் கணையோ? வாளோ? சில

     கயல்கள் கெண்டைகளோ? சேலோ? கொலை

     மறலி என்பவனோ? மானோ? மது ...... நுகர் கீத

 

முகர வண்டு இனமோ? வான் மேல் எழு

     நிலவு அருந்து புளோ? மாதேவர் உண்

     முதிய வெங்கடுவோ? தே மாவடு ...... வகிரோ?பார்

 

முடிவு எனும் கடலோ? யாதோ என,

     உலவு கண்கொடு நேரே சூறைகொள்,

     முறை அறிந்த பசாசே போல்பவர் ...... உறவு ஆமோ?

 

நிகரில் வஞ்சக மாரீச ஆதிகள்,

     தசமுகன் படை கோடா கோடிய,

     நிருதரும் படஓர் ஏவு ஏவியெ ...... அடுபோர்செய்

 

நெடியன், ங்கு அனுமானோடே எழு-

     பது வெளம் கவி சேனா சேவித,

     நிருபன் அம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே!

 

சிகர உம்பர்கள் பாகீர ஆதிகள்,

     பிரபை ஒன்று பிராசாத ஆதிகள்,

     சிவசடங்கமொடு ஈசான ஆதிகள், ...... சிவமோனர்,

 

தெளியும் மந்த்ர கலாபா யோகிகள்,

     அயல் விளங்கு சுவாமீ! காமரு

     திருவலஞ்சுழி வாழ்வே! தேவர்கள் ...... பெருமாளே.

 

பதவுரை

 

     நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் --- வஞ்சகச் செயல்களில் நிகரில்லாது விளங்கும் மாரீசன் முதலிய அரக்கர்கள்,

 

     தசமுகன் --- பத்துத் தலைகளை உடைய இராவணன்,

 

     படை கோடா கோடிய நிருதரும் பட --- அவனது கோடிக் கணக்கான படைகளில் இருந்த அரக்கர்களும் அழிந்துபட,

 

     ஓர் ஏ ஏவியே அடு போர் செய் நெடியன் --- ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்திக் கொல்லுமாறு போர் புரிந்த நெடியோனாகிய மாயோனும்,

 

      அங்கு அனுமானோடு எழுபது வெ(ள்)ளம் கவி சேனா சேவித நிருபன் --- அந்தப் போர்க்களத்தில் அனுமனோடு எழுபது வெள்ளம் வானரச் சேனைகளும் வணங்கும் அரசனும்,

 

     அம்பரர் கோமான் --- தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய

 

     ராகவன் மருகோனே --- இராகவருடைய திருமருகரே!

 

      சிகர உம்பர்கள் --- வானுலகில் உள்ள தேவர்கள்,

 

     பாகீராதிகள் --- பகீரதன் முதலாகிய அடியவர்கள்,

 

     பிரபை ஒன்று பிராசாதாதிகள் --- ஒளி பொருந்திய திருவருளைப் பெற்றவர்கள்,

 

     சிவ சடங்கமொடு ஈசானாதிகள் --- சிவ பூசையில் உள்ள ஈசானன் முதலியோர்,

 

     சிவ மோனர் --- சிவத்தை நினைந்து மோனத் தவத்தில் உள்ளவர்கள் ஆகியோர்,

 

     தெளியும் --- தெளிவு பெற்றுள்ள,

 

     மந்த்ர கலா பாய் யோகிகள் --- மந்திர சாத்திரங்களில் மனத்தைச் செலுத்தியவர்கள்,

 

     அயல் விளங்கு சுவாமீ --- சூழ விளங்கும் சுவாமியே!

 

      காமரு திருவலஞ்சுழி வாழ்வே --- அழகிய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே!

 

     தேவர்கள் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

 

      மகர குண்டல(ம்) மீதே மோதுவ --- காதில் அணிந்துள்ள மகர முண்டலங்களின் மீது மோதுவது போல் விளங்கும் விலைமாதர்களின் கண்கள்,

 

     அருண பங்கயமோ --- செந்தாமரையோ?

 

     பூ ஓடையில் மருவு செங்கழு நீரோ --- மலர்கள் நிறைந்துள்ள ஓடையில் பொருந்தி உள்ள செங்கழுநீர் மலரோ?

 

     நீ விடு வடிவேலோ --- தேவரீர் அசுரர்கள் மீது விடுத்து அருளிய வேலாயுதமோ?

 

      மதன் விடும் கணையோ --- மன்மதன் எறியும் மலர் அம்புகளோ?

 

     வாளோ --- ஒளி பொருந்திய வாளாயுதமோ?

 

     சில கயல்கள் கெண்டைகளோ சேலோ --- சில கயல் மீன்களோ? கெண்டை மீன்களோ? சேல் மீன்களோ?

 

     கொலை மறலி என்பவனோ --- உயிர்க் கொலை புரியும் எமன் தானோ?

 

     மானோ --- மருண்ட விழியுடைய மானோ?

 

     மது நுகர் கீத(ம்) முகர வண்டினமோ --- மதுவை உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளின் கூட்டமோ?

 

      வான் மேல் எழு நிலவு அருந்து பு(ள்)ளோ --- வானில் எழுந்துள்ள நிலவில் இருந்து பொழியும் அமிர்தத்தை உண்டு வாழும் சகோரப் பறவேயோ?

 

     மாதேவர் உண் முதிய வெம்கடுவோ --- தேவதேவராகிய சிவபெருமான் உண்டருளிய பழைய கொடிய ஆலகால விடமோ?

 

     தேமாவடு வகிரோ --- பிளக்கப்பட்ட மாம்பிஞ்சு தானோ?

 

     பார் முடிவு எனும் கடலோ --- உகமுடிவு ஆகிய பேரூழிக் காலத்தில் உண்டாகும் கருங்கடலோ?

 

     யாதோ என --- வேறு என்னதுவோ என்னும்படியா,

 

      உலவு கண் கொடு --- உலவுகின்ற கண்களைக் கொண்டு,

 

     நேரே சூறை கொள் முறை அறிந்த --- உயிரை நேராகக் கொள்ளை கொள்ளும் வகையினை அறிந்துள்ள,

 

     பசாசே போல்பவர் உறவு ஆமோ --- பேயினை ஒத்த விலைமாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது).

 

 

பொழிப்புரை

 

         வஞ்சகச் செயல்களில் நிகரில்லாது விளங்கும் மாரீசன் முதலிய அரக்கர்கள், பத்துத் தலைகளை உடைய இராவணன், அவனது கோடிக் கணக்கான படைகளில் இருந்த அரக்கர்களும் அழிந்துபட, ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்திக் கொல்லுமாறு போர் புரிந்த நெடியோனாகிய மாயோனும்,  அந்தப் போர்க்களத்தில் அனுமனோடு எழுபது வெள்ளம் வானரச் சேனைகளும் வணங்கும் அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய இராகவருடைய திருமருகரே!

 

      வானுலகில் உள்ள தேவர்கள், பகீரதன் முதலாகிய அடியவர்கள், ஒளி பொருந்திய திருவருளைப் பெற்றவர்கள், சிவபூசையில் உள்ள ஈசானன் முதலியோர், சிவத்தை நினைந்து மோனத் தவத்தில் உள்ளவர்கள் ஆகியோர், தெளிவு பெற்றுள்ள, மந்திர சாத்திரங்களில் மனத்தைச் செலுத்தியவர்கள் சூழ விளங்கும் சுவாமியே!

 

      அழகிய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே!

 

     தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

 

      காதில் அணிந்துள்ள மகர முண்டலங்களின் மீது மோதுவது போல் விளங்கும் விலைமாதர்களின் கண்கள், செந்தாமரையோ? மலர்கள் நிறைந்துள்ள ஓடையில் பொருந்தி உள்ள செங்கழுநீர் மலரோ? தேவரீர் அசுரர்கள் மீது விடுத்து அருளிய வேலாயுதமோ? மன்மதன் எறியும் மலர் அம்புகளோ? ஒளி பொருந்திய வாளாயுதமோ? சில கயல் மீன்களோ? கெண்டை மீன்களோ? சேல் மீன்களோ? உயிர்க் கொலை புரியும் எமன் தானோ? மருண்ட விழியுடைய மானோ? மதுவை உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளின் கூட்டமோ?  வானில் எழுந்துள்ள நிலவில் இருந்து பொழியும் அமிர்தத்தை உண்டு வாழும் சகோரப் பறவேயோ? தேவதேவராகிய சிவபெருமான் உண்டருளிய பழைய கொடிய ஆலகால விடமோ? பிளக்கப்பட்ட மாம்பிஞ்சு தானோ? உகமுடிவு ஆகிய பேரூழிக் காலத்தில் உண்டாகும் கருங்கடலோ? வேறு என்னதுவோ என்னும்படியா, உலவுகின்ற கண்களைக் கொண்டு, உயிரை நேராகக் கொள்ளை கொள்ளும் வகையினை அறிந்துள்ள, பேயினை ஒத்த விலைமாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது).

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்களின் கண்களைப் பற்றிக் கூறி, அவைகளைக் கொண்டு விலைமாதர்கள் புரியும் சாகசத்தில் பயங்கி அறிவிழந்து, பேய்த்தன்மை கொண்டுள்ள அவர்களின் உறவில் சிக்குதல் கூடாது என்று அறிவுறுத்துகின்றார்.

 

     விலைமாதர்களின் கண்களைப் பற்றி, அடிகளார், பல இடங்களில் விளக்கி அருளி உள்ளார்...

  

வெம் சரோருகமோ, கடு நஞ்சமோ, கயலோ, நெடு

     இன்ப சாகரமோ, வடு ...... வகிரோ, முன்

வெந்து போன புராதன சம்பராரி புராரியை

     வென்ற சாயகமோ, கரு ...... விளையோ, கண்

 

தஞ்சமோ, யம தூதுவர் நெஞ்சமோ, எனும் மாமத

     சங்க மாதர் பயோதரம் ...... அதில்மூழ்கு

சங்கை ஓவ, ரு கூதள கந்த மாலிகை தோய்தரு

     தண்டை சேர்கழல் ஈவதும் ...... ஒருநாளே. ---  திருச்செந்தூர்த் திருப்புகழ்.

 

கருநிறம் சிறந்து அகல்வன, புகல்வன

     மதன தந்திரம், கடியன, கொடியன,

     கனக குண்டலம் பொருவன, வருவன, ...... பரிதாவும்

கடலுடன் படர்ந்து அடர்வன, தொடர்வன,

     விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன, பிளிர்வன,

     கணையை நின்று நின்று எதிர்வன, முதிர்வன, ......இளையோர்முன்

 

செருவை முண்டு அகம் சிறுவன, உறுவன,

     களவு வஞ்சகம் சுழல்வன, உழல்வன,

     தெனன தெந்தனந் தெனதென தெனதென ......எனநாதம்

தெரி சுரும்பை வென்றிடுவன, அடுவன,

     மருள்செய் கண்கள் கொண்டு அணைவர், தம் உயிரது

     திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை .....ஒழிவேனோ?

                                                        --- திருவருணைத் திருப்புகழ்.

  

மானை, விடத்தை, தடத்தினில் கயல்

     மீனை நிரப்பி, குனித்து விட்டு அணை

     வாளியை, வட்டச் சமுத்திரத்தினை, ...... வடிவேலை,

வாளை, வனத்து உற்பலத்தினை, செல

     மீனை, விழிக்கு ஒப்பு எனப் பிடித்து, வர்

     மாய வலைப்பட்டு, இலை, துடக்கு உழல் ......மணநாறும்

 

ஊன இடத்தை, சடக்கு என கொழு

     ஊறும் உபத்தக் கருத் தடத்தினை,

     ஊது பிணத்தை, குண த்ரயத்தொடு ...... தடுமாறும்

ஊசலை, நித்தத் த்வம் அற்ற செத்தை,

     உபாதியை ஒப்பித்து உனி, பவத்து அற

     ஓகை செலுத்தி, ப்ரமிக்கும் இப்ரமை ......தெளியாதோ? 

                                                         ---  திருவருணைத் திருப்புகழ்.

  

புணரியும், அனங்கன் அம்பும், சுரும்பும், கரும்

     கயலினொடு, கெண்டையும், சண்டனும் கஞ்சமும்

     புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும், பொருப்பு ......எறிவேலும்,

பொரு என இகன்று அகன்று, ங்கும் இங்கும் சுழன்று,

     இடை கடை சிவந்து, வஞ்சம் பொதிந்து, ங்கிதம்

     புவி இளைஞர் முன்பயின்று, ம்பொனின் கம்பிதக் ....குழைமோதிக்

 

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்-

     படி அமர் புரிந்து அரும் சங்கடம் சந்ததம்

     கொடுமைசெய்து, சங்கொடும் சிங்கி தங்கும் கடைக்.....கணினார்பால்      

 குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும்,                                   

     த்ரி வித கரணங்களும், கந்த! நின் செம்பதம்

     குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று ...... அமைவேனோ?

                                                    --- தென்கடம்பந்துறைத் திருகப்புகழ்.

  

இருகுழை இடறி, காது மோதுவ,

     பரிமள நளினத்தோடு சீறுவ,

     இணைஅறு வினையைத் தாவி மீளுவ, ...... அதிசூர 

எமபடர் படை கெட்டு ஓட நாடுவ,

     அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ,

     ரதிபதி கலை தப்பாது சூழுவ, ...... முநிவோரும்

 

உருகிட விரகில் பார்வை மேவுவ,

     பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ,

     யுகமுடிவு இது எனப் பூசல் ஆடுவ, ......வடிவேல்போல் 

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்,

     மயல்தரு கமரில் போய் விழா வகை,

     உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ...... ஒருநாளே?---  பட்டாலியூர்த் திருப்புகழ்.

 

அயிலின் வாளி, வேல்வாளி, அளவு கூரிது ஆய், சர்

     அமுது அளாவும் ஆவேசம ...... மதுபோல,

அறவும் நீளிதாய், மீள அகலிது ஆய், வார்காதின்

     அளவும் ஓடி, நீடு ஓதி ...... நிழல் ஆறி,

 

துயில் கொளாத வானோரும், மயல் கொளாத ஆ வேத

     துறவர் ஆன பேர் யாரும் ...... மடல் ஏறத்

துணியுமாறு உலா, நீல நயன மாதராரோடு

     துவளுவேனை ஈடேறும் ...... நெறி பாராய். --- பொதுத் திருப்புகழ்.

 

ஆனால் அன்பும் அருளும் நிறைந்த மங்கையரின் கண்கள் எப்படி இருக்கும் என்பதை மணிவாசகப் பெருமான், திருக்கோவையாரில்......

 

ஈசற்கு யான் வைத்த அன்பின்

    அகன்று, வன் வாங்கிய என்

பாசத்தில் கார்என்று, வன்தில்லை

    யின்ஒளி போன்று, வன்தோள்

பூசு அத் திருநீறு எனவெளுத்து

    ஆங்கு அவன் பூங்கழல்யாம்

பேசுஅத் திருவார்த்தையில் பெரு

    நீளம் பெருங்கண்களே.

 

என்று தலைவியின் கண்களைத் தலைவன் வியந்து உரைத்ததாகப் பாடி உள்ளார்.

 

தலைவியின் கண்கள் தான் சிவபெருமான் மீது வைத்துள்ள அன்பினைப் போல அகன்றது. இறைவனால் என்னிடத்தில் இருந்து (அடியவர்களிடம் இருந்து) வாங்கப் பெற்ற ஆணவ இருளைப் போல கருநிறம் உடையது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தியது.  அவனுடைய திருத்தோள்களில் பூசப் பெற்ற திருநீற்றைப் போல வெளுத்தது.  அவனுடைய திருவடித் தாமரைகளின் சிறப்பைப் புகழ்ந்து நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டது.

 

எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

 

 

நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள், தசமுகன், படை கோடா கோடிய நிருதரும் பட, ஓர் ஏ ஏவியே அடு போர் செய் நெடியன், அங்கு அனுமானோடு எழுபது வெ(ள்)ளம் கவி சேனா சேவித நிருபன்  ---

 

நிருதர் --- அரக்கர்.

 

ஏ --- அம்பு, கணை. ஓர் --- ஒப்பற்ற.

 

மாரீசன் - நிகரில் வஞ்சகன். இவன் மாயையில் வல்ல ஒர் அரக்கன். தாடகைக்கும் சுந்தன் என்ற இயக்கர் தலைவனுக்கும் குமாரன். சுபாகுவின் உடன் பிறந்தவன். அகத்தியருக்கு இடையூறு செய்ய அவரது சாபத்தால் அரக்கனானவன். இராவணனுக்கு மாமன் முறை பெற்றவன். இராவணன் சீதையைக் கவருதற்கு வஞ்சனைச் சூழ்ச்சி சொல்ல மாரீசன் அவனுக்குத் துணையாகப் பொன்மான் உருவம் கொண்டு சிதைமுன் உலவச் சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினள். இராமரும் மானைப் பின் தொடர்ந்து சென்று. அது மாயமான் என்றறிந்து அதனைத் தன் அம்பினால் வீழ்த்த அது "ஹா சீதா லக்ஷ்மணா" என்று இராமர் குரலால் சத்தமிட்டு விழுந்து இறக்க, அந்தக் குரல் தனது கணவன் குரல் என எண்ணிச் சீதை தனக்குக் காவலாயிருந்த இலக்குமணனை "நீ சென்று நாதனைப் பார்த்து வா" என வெருட்டி அனுப்பித் தனித்திருந்த பொழுது இராவணன் துறவி வடத்துடன் வந்து சீதையை வஞ்சித்து அவளிருந்த நிலத்தைப் பேர்த்து அப்படியே தேரில் வைத்து இலங்கைக்குச் சென்று சீதையை அசோகவனத்தில் சிறையில் வைத்தான். சீதையை இழந்த இராமபிரான், சுக்ரிவன் என்னும் குரங்கின் தலைமையில் அநுமன் முதலான எழுபது வெள்ளம் சேனையுடன் சென்று, ராவணனைக் கொன்று, சீதையை மீட்டனர்.

 

சங்க தச க்ரீவனோடு சொல வளம்

     மிண்டு செயப் போன வாயு சுதனொடு,

     சம்பவ சுக்ரீவன் ஆதி எழுபது ...... வெளமாக,

சண்ட கவிச் சேனையால், முன் அலைகடல்

     குன்றில் அடைத்து ஏறி, மோச நிசிசரர்

     தம்கிளை கெட்டு ஓட ஏவு சரபதி ...... மருகோனே!--- இஞ்சிக்குடித் திருப்புகழ்.

 

கருதி இருபது கரம், முடி ஒரு பது,

     கனக மவுலிகொள் புரிசை செய் பழையது

     கடிய வியன் நகர் புக அரு கன பதி ...... கனல்மூழ்க,

கவச அநுமனொடு, எழுபது கவி விழ

     அணையில் அலை எறி, எதிர் அமர் பொருதிடு,

     களரி தனில் ஒரு கணைவிடும் அடல்அரி ......மருகோனே! --- திருவருணைத் திருப்புகழ்.

 

அம்பரர் கோமான்....... அயல் விளங்கு சுவாமீ  ---

 

முருகப் பெருமானக்கு பரிவாரங்களாக சூழ இருந்து அவரைத் துதிப்பவர்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகின்றார் அடிகளார்.

 

தினகரன், சொர்க்கத்துக்கு இறை, சுக்ரன்,

     சசிதரன், திக்குக் கத்தர், அகத்யன்,

     திசைமுகன், செப்பப் பட்ட வசிட்டன், ...... திரள்வேதம்,

 

செகதலம், சுத்தப் பத்தியர், சித்தம்

     செயல்ஒழிந்து அற்றுப் பெற்றவர், மற்றும்

     சிவனும் வந்திக்க, கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.  --- கச்சித் திருப்புகழ்.

 

காமரு திருவலஞ்சுழி வாழ்வே ---

 

 

திருவலஞ்சுழி, சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

             

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்திருத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

 

இறைவர் : கபர்த்தீசுவரர்,  கற்பகநாதேசுவரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

தல மரம் : வில்வம்

தீர்த்தம்      : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.

 

     திருஞானசம்பந்தர், அப்பர் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப்பெற்ற திருத்தலம்.

 

     காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது.

 

     அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேடனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரை அடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஏரண்ட முனிவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

 

         வெள்ளை விநாயகர்: திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூசை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி. விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

 

         திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி, விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேசுவரர் கோயில் ஒரு பெரிய கோயில். கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

 

         கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுட்பமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் திருத்தலம் என்பதைவிட, வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே சிறப்புப் பெற்றுள்ளது.

 

         இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

 

         இங்குள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி, தேவியர் புடைசூழ எழுந்தருளியுள்ளார்.

கருத்துரை

 

                              முருகா! விலைமாதர் கூட்டுறவு அற அருள்வாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...