கற்பன கற்றுத் தெளிதல் வேண்டும்
---
"கலகல எனச் சில கலைகள் பிதற்றுவது
ஒழிவது, உனைச் சிறிது ...... உரையாதே,
கருவழி தத்திய மடு அதனில் புகு
கடு நரகுக்கு இடை ...... இடைவீழா,
உலகு தனில் பல பிறவி தரித்து, அற
உழல்வது விட்டு, இனி ......அடிநாயேன்
உனது அடிமைத் திரள் அதனினும் உட்பட
உபய மலர்ப்பதம் ...... அருள்வாயே".
என்பது அருணகிரிநாதப் பெருமான் பாடியருளிய திருப்புகழ்.
ஆரவாரத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவதை ஒழித்து, தேவரீருடைய திருப்புகழைச் சிறிதாவது சொல்லித் துதிக்காமல், கரு உண்டாகின்ற வழியாகிய பள்ளத்தில் வேகமாகப் புகுந்து கடுமையான நரகத்தில் இடைஇடையே சென்று விழுந்து, இந்த உலகத்தில் பல பிறவிகளை எடுத்து, முற்றிலுமாக மண்ணுலகிற்கும் நரகத்திற்குமாக உழலுவதை விட்டு, இனிமேலாவது நாயில் கடைப்பட்ட அடியேன் தேவரீரது அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாகச் செய்து மலர்ப் பாதங்களை அருள்வாயாக.
உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் மெய்கண்ட சாத்திரமும், அதன் வழி நூல்களும் ஆகும். ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி, சிவப் பேற்றை அளிக்கும்.
நூல்களை ஓதுவதன் பயன் வீடுபேற்றை அடைவதே ஆகும். எனவே தான், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்றது நன்னூல்.
அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள்,"மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.
அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து ஈடேறவேண்டும்.
திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”. "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.
பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.
"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்".
இதன் பொருள் --- பாவத்தினை வளர்க்கும் நூல்களும், ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு ஏற்ற, வீட்டுலகினை உடையவராவர்.
அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று "அறநெறிச்சாரம்" கூறுமாறு..
"நிறுத்துஅறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு".
இதன் பொருள் --- பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை அடையலாம். கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மை எனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.
பொய் நூல்களின் இயல்பு இன்னது என "அறநெறிச்சாரம்" கூறுமாறு...
"தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று".
இதன் பொருள் --- தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.
மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து "அறநெறிச்சாரம்" கூறுமாறு....
"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்",
இதன் பொருள் --- மக்கட் பிறப்பில், கற்றற்கு உரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை.
கற்றதனால் ஆய பயன் கடவுளைக் கருதுவதே. கற்றதும் கேட்டதும் கொண்டு, கற்பனை கடந்த காரணனைக் கசிந்து உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது சிறிது படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்கு உற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடும் வம்பரை இடித்துரைக்கின்றனர் தாயுமான அடிகளார்.
"கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக?
கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்
குற்றம்அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம் குறி அற்று இன்பநிலைகூட அன்றோ". --- தாயுமானார்.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணையல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல். --- நாலடியார்.
ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக் கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.
No comments:
Post a Comment