அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அலங்கார முடிக்கிரண (குரங்காடுதுறை)
முருகா!
தேவரீரது திருத்தோள்களையும், வேலாயுதத்தையும்,
திருநடனம் புரியும் திருவடியையும்
புகழ்ந்து உய்ய அருள் புரிவீர்.
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் ...... கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அலங்கார முடிக்கிரணத் திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு
அசைந்துஆடு குழைக்கவசத் ...... திரள்தோளும்,
அலந்தாம மணித்திரளை புரண்டுஆட நிரைத்த கரத்து,
அணிந்த ஆழி வனைக் கடகச் ...... சுடர்வேலும்,
சிலம்போடு, மணிச்சுருதிச் சலங்கோசை, மிகுத்து அதிரச்
சிவந்து ஏறி மணத்த மலர்ப் ...... புனைபாதம்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறும் நடிப்பது மல் ...... புகல்வேனோ?
இலங்கேசர் வனத்துள், வனக் குரங்குஏவி, அழல்புகைஇட்டு,
இளம் தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்,
இளங்காள முகில், கடுமைச் சரங்கோடு கரத்தில் எடுத்து,
இரும் கானம் நடக்கும் அவற்கு ...... இனியோனே!
குலங்கோடு படைத்த அசுரப் பெருஞ்சேனை அழிக்க முனைக்
கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் ...... தொடும்வீரா!
கொழுங்காவின் மலர்ப்பொழிலில் கரும்புஆலை புணர்க்கும்இசைக்
குரங்காடுதுறைக் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
வனக் குரங்கு ஏவி --- காட்டில் வாழும் அநுமானை அனுப்பி,
இலங்கை ஈசர் வனத்துள் --- இலங்கையை ஆளும் தலைவர்களாகிய இராவண கும்பகர்ணாதிகளுக்கு உரிய அசோக வனத்தில்
அழல் புகையிட்டு --- புகையுடன் கூடிய நெருப்பை வைப்பித்து,
இளந்தாது மலர்த் திருவைச் சிறை மீளும் --- இளமையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது வாழும் இலக்குமி தேவியாகிய சீதாபிராட்டியைச் சிறையிலிருந்து மீட்கும் திறல் உடையவரும்,
இளம் காள முகில் கடுமை --- இளமை பொருந்திய, கருமுகிலைப் போல் கடுமையாகப் பொழிகின்ற
சரங்கோடு கரத்தில் எடுத்து --- பாணங்களுடன் கூடிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு
இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே --- பெரிய கானகத்தில் நடப்பவரும் ஆகிய ஸ்ரீராமருக்கு இனிமையானவரே!
குலம் கோடு படைத்த --- குலத்தின் தன்மையால் வஞ்சனையைக் கொண்ட,
அசுரப் பெருஞ்சேனை அழிக்க --- அரக்கர்களது பெரிய படைய அழிக்குமாறு,
முனைக் கொடுந்தாரை வெயிற்கு --- போர்ப் படையின் கொடுமை மிக்க முன்னணியாகிய வெயில் நீங்க
அயிலைத் தொடும் வீரா --- வேலாயுதத்தை விடுத்தருளிய வீரரே!
கொழுங்காவின் மலர்ப்பொழிலில் --- செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும்
கரும்பு ஆலை புணர்க்கும் இசை --- கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் நல்ல ஓசை கேட்கும்
குரங்காடுதுறைக் குமர --- திருக்குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
அலங்கார முடிக்கிரணத் திரண்டு --- அழகு மிக்க மணிமுடியினின்று வெளிப்படும் ஒளியானது திரண்டு வீசும்
ஆறு முகத்து அழகிற்கு அசைந்தாடு குழை --- ஆறு திருமுகத்தின் அழகிற்கு ஏற்றவாறு மிகமிக அழகாக அசைந்து ஆடுகின்ற குண்டலங்கள் தொங்க,
கவசத் திரள் தோளும் அலந்தாம --- வஜ்ரகவசம் அணிந்த பன்னிரு தோள்களையும், திரண்ட புஜங்களின் மீது அமைவுடன் சூடிய பூமாலைகளையும்,
மணித்திரளை புரண்டு ஆட நிரைத்த --- நவரத்தின மாலைகளையும், மார்பின்கண் புரண்டு அசையுமாறு ஒழுங்குபடுத்தும்
கரத்து அணிந்த --- திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும்,
ஆழி வனைக் கடகச் சுடர்வேலும் --- வட்டமாகச் செய்யப்பட்ட வீர கடகங்களின் மீது விளங்கும் ஒளி செய்யும் வேலாயுதத்தையும்,
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கு ஓசை மிகுத்து அதிர --- சிலம்புடன், இரத்தினங்களால் செய்யப்பட்டு இனிய ஒலியுடன் கூடிய சதங்கையானது நல்ல நாத மிகுதியாக ஒலிக்க
சிவந்து ஏறி மணத்த மலர்ப் புனை பாதம் --- செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன --- திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன
தினந்தோறும் நடிப்பது மல் புகல்வேனோ --- என்ற தாள ஒத்துடன் இடையறாது தேவரீர் ஆனந்த நடனம் செய்யும் அழகையும் இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதித்து உய்ய மாட்டேனோ?
பொழிப்புரை
காட்டில் வாழும் அனுமானை அனுப்பி, இலங்கையை ஆளும் தலைவர்களாகிய இராவணகும்பகர்ணாதிகளுக்கு உரிய அசோக வனத்தில் புகையுடன் கூடிய நெருப்பை வைப்பித்து, இளமையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது வாழும் இலக்குமிதேவியாகிய சீதாபிராட்டியைச் சிறையிலிருந்து மீட்கும் திறல் உடையவரும், இளமை பொருந்திய, கருமுகிலைப் போல் கடுமையாகப் பொழிகின்ற பாணங்களுடன் கூடிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு பெரிய கானகத்தில் நடப்பவரும் ஆகிய ஸ்ரீராமருக்கு இனிமையானவரே!
குலத்தின் தன்மையால் வஞ்சனையைக் கொண்ட, அரக்கர்களது பெரிய படைய அழிக்குமாறு, போர்ப் படையின் கொடுமை மிக்க முன்னணியாகிய வெயில் நீங்க வேலாயுதத்தை விடுத்தருளிய வீரரே!
செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும் கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் நல்ல ஓசை கேட்கும் திருக்குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமையின் மிக்கவரே!
அழகு மிக்க மணிமுடியினின்று வெளிப்படும் ஒளியானது திரண்டு வீசும் ஆறு திருமுகத்தின் அழகிற்கு ஏற்றவாறு மிகமிக அழகாக அசைந்து ஆடுகின்ற குண்டலங்கள் தொங்க, வஜ்ரகவசம் அணிந்த பன்னிரு தோள்களையும், திரண்ட புஜங்களின் மீது அமைவுடன் சூடிய பூமாலைகளையும், நவரத்தின மாலைகளையும், மார்பின்கண் புரண்டு அசையுமாறு ஒழுங்குபடுத்தும் திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும், வட்டமாகச் செய்யப்பட்ட வீர கடகங்களின் மீது விளங்கும் ஒளி செய்யும் வேலாயுதத்தையும், சிலம்புடன், இரத்தினங்களால் செய்யப்பட்டு இனிய ஒலியுடன் கூடிய சதங்கையானது நல்ல நாத மிகுதியாக ஒலிக்க செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள், திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன என்ற தாள ஒத்துடன் இடையறாது நீ ஆனந்த நடனம் செய்யும் அழகையும் இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதித்து உய்ய மாட்டேனோ?
விரிவுரை
அலங்கார முடிக்கிரணத் திரண்டு, ஆறு முகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவசத் திரள் தோளும் ---
முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களிலும் அணிந்துள்ள முடிகள் நவமணிகளால் மிகவும் அழகாகச் செய்யப்பெற்று, சூரியப் பிராகாசத்துடன் விளங்குகின்றன. ஆறு இளம்சூரிய உதயம் போன்ற அம் மணிமகுடம் கவித்த ஆறு திருமுகங்கள் குளிர்ந்த ஆறு முழுமதிகள் போல் திகழ்கின்றன.
அறுகதிர் அவர்என அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்தது ஒருபால்;
அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்தது ஒருபால்; --- கொலுவகுப்பு.
ஆறுதிருமுகத்தின் அழகிற்கு ஏற்றவாறு செவியில் குண்டலங்கள் அசைந்து ஆடும். அக் குண்டலங்கள் திருத்தோள்களின் மேல் தொங்கி இனிது அழகு செய்யும். வஜ்ரகவசம் தோள்களில் விளங்கும். அடிகளார் இவற்றை எல்லாம் நமது மனக்கண் முன் தோன்ற வைக்கின்றனர்.
எம்பிரானுடைய இத்தகைய பன்னிரு தோள்களையும் புகழ வேண்டும் என்கின்றனர். இப் பாடலில் புகழ வேண்டியவைகளைக் கூற வந்த அடிகள், முதலில் தோள்களைக் கூறுகின்றனர். இது அறிஞர் சிந்தனைக்கு உரியது.
சுமைகளைத் தாங்குவது தோள்கள். ஆதலினால் ஒருவனுக்குத் தோல் மிகுந்த வலிமை உடையதாக இருக்க வேண்டும். ஒரு வீரனுடைய உயர்வு தோள்களைப் பொறுத்து இருக்கின்றது.
அவுணர்கள் எண்ணில்லாதவர்கள். ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்.
வரத்தினில் பெரியர், மாய
வன்மையில் பெரியர், மொய்ம்பின்
உரத்தினில் பெரியர், வெம்போர்
ஊக்கத்தில் பெரியர், எண்ணில்
சிரத்தினில் பெரியர், சீற்றச்
செங்கையில் பெரியர், தாங்கும்
கரத்தினில் பெரியர், யாரும்
காலனில் பெரியர், அம்மா.
என்பார் கச்சியப்ப சிவாசாரியார் சுவாமிகள்.
இத்தகைய அவுண வெள்ளங்கள் பல்லாயிரங்களை அழித்தது ஆறுமுகப் பெருமானுடைய பன்னிரு திருத்தோள்கள்.
"அலகில் அவுணரைக் கொன்ற தோள் என்பார்" வேறு ஒரு திருப்புகழில். "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று கம்பர் தோளை முதலாகக் கூறுவதும் காண்க. அன்றியும் இராமாயணத்திற்குப் பயன் கூறவந்த இடத்திலும் தோள் வலியையே விதந்து கூறுவதையும் உய்த்து உணர்க.
நாடிய பொருள்கை கூடும்,
ஞானமும் புகழும் உண்டாம்,
விடுஇயல் வழிஅது ஆக்கும்,
வேரிஅம் கமலை நோக்கும்,
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலைஇ ராமன்
தோள்வலி கூறு வார்க்கே.
உலகில் உள்ள ஆன்ம கோடிகள் எல்லாம் தத்தம் சுமைகளை இறைவன் தோள்மீது சுமத்துவர்.
தன்கடன் அடியேனையும் தாங்குதல்,
என்கடன் பணிசெய்து கிடப்பதே...
என்று தற்போதம் அற்று இருப்பர். அத்துணைச் சுமைகளையும் பெருமானுடைய திருத்தோள்கள் தாங்குகின்றன.
வாழ்த்துக் கூறவந்த இடத்திலும் கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள், முதன்முதலாக,
ஆறிரு தடந்தோள் வாழ்க
என்று திருத்தோள்களையே வாழ்த்துகின்றார்.
….. ….. முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்ணகு அருள்கை ...... மறவேனே...
என்று அடிகளார் "பக்கரை விசித்ரமணி" என்று தொடங்கும் திருப்பகழ்ப் பாடலிலும் கூறுகின்றார்.
அலம் தாம மணித்திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடகச் சுடர்வேலும் ---
அலம் --- அமைவு. தாமம் --- மாலை. நிரைத்தல் --- ஒழுங்கு செய்தல். ஆழி --- வட்டம்.
அமைவு பெற்ற மலர்மாலைகளையும், மணிமாலைகளையும் திருமார்பில் அசைந்து அழகு செய்யும் திருக்கரத்தில் அணிந்துள்ள வட்ட வடிவமான வீரக் கடகத்தின் மீது வேலாயுதம் சாய்ந்து விளங்கும்.
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள்
வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை ...... அருள்வோனே..
--- (ஆலம்வைத்த) திருப்புகழ்.
பெருமான் வீரமூர்த்தி ஆதலின், புயங்களில் வீரக் கடகம் அணிந்துள்ளனர்.
வாச
களப வரதுங்க மங்கல
வீர
கடக புயசிங்க சுந்தர
வாகை
பெருகு புயதுங்க புங்கவ ...... வயலூரா...
--- (ஓலமறைகள்) திருப்புகழ்.
வேலாயுதத்தைப் புகழ்ந்து துதி செய்தல் வேண்டும் என்கின்றார். வேல்வகுப்பு, வேல் விருத்தம் முதலிய இனிய பாடல்களினால் அடிகள் வேற்படையைத் துதிக்கின்றனர்.
தினம் தோறும் நடிப்பது மல் புகல்வேனோ ---
எம்பெருமான் திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பும் சதங்கையும் ஒலிக்க அனவரத ஆனந்தத் திருத் தாண்டவம் புரிந்து அருளுவர். இறைவனது திருநடனமே உலகங்கள் முழுவதும் இயங்குவதற்குக் காரணமாகும். "ஆதியும் நடுவும் இல்லாத அற்புதத் தனிக்கூத்து" என்பார் சேக்கிழார் அடிகள்.
எந்தை கந்தவேளது திருநடனத்தை அருணகிரியார் பல திருத்தலங்களில் தரிசித்தனர்.
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே..
--- (தண்டையணி) திருப்புகழ்.
அமணர் உடற்கெட வசியில் அழுத்தி,விண்
அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
--- (குருவியென) திருப்புகழ்.
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனும்
அணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனும்
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய ...... பெருமாளே.
--- (மகரமொடு) திருப்புகழ்.
இலங்கேசர் ---
இராவண கும்பகர்ணன் முதலியோர். அறநெறி விடுத்து, மறநெறி அடுத்து, மூவுகங்கட்கும் அச்சத்தை விளைவித்தார்கள். அதனால் திருவருள் அவர்களை அழிக்கலாயிற்று.
வனக் குரங்கு ஏவி அழல் புகை இட்டு ---
இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி மறைந்து வந்து சீதாதேவியைச் சிறையெடுத்துக் கொண்டு போய் அசோக வனத்துள் வைத்தான். ஸ்ரீராமச்சந்திரர் அனுமானை அனுப்பி தேவியைத் தேடச் செய்தனர். அனுமந்தர் இலங்கை சென்று வைதேகியைக் கண்டு, கணையாழி தந்து, அசோகவனத்தை அழித்து, இலங்கையை எரியூட்டி அழித்தனர்.
முப்புரத்தைச் சிவபிரான் எரித்தது போல் இலங்கையாகிய இப்புரத்தை அனுமான் எரித்தனர்.
"முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே" --- பட்டினத்தடிகள்.
வனக் குரங்கு என்பதற்கு அழகிய வாநரம் எனினும் பொருந்தும். வனம் --- அழகு.
இருங்கா னகம்போய் இளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை ...... எனஏகி
எழுந்தே குரங்கால் இலங்கா புரந்தீ
இடுங்கா வலன்றன் ...... மருகோனே. --- (பெருங்கா) திருப்புகழ்.
குலம் கோடு படைத்த அசுர ---
கோடு --- வஞ்சனை. நியாயத்தினின்றும் கோடுதல் (வளைதல்). "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றபடி அசுரர்கள் தமது குலத்தின் தன்மையால் தீமையே புரிந்து மகிழ்வர்.
கொடும் தாரை வெயிற்கு ---
தாரை --- படையின் முன்னணி. கொடுமையான சேனைகளாகிய வெய்யில். பாவத்தை வெம்மையாகக் கூறுவதும், புண்ணியத்தைத் தண்மையாகக் கூறுவதும் ஆன்றோர் வழக்கு.
அயில் விடு தீரா ---
அயில் --- கூர்மை. பண்பாகுபெயராக வேலை உணர்த்தியது. வேல் ஞானம். வேலுக்கு கூர்மை இயல்பாயிற்று. அறிவு கூர்மையாக இருத்தல் வேண்டும்.
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே, நுணக்கரிய நுண்ணுணர்வே.... --- மணிவாசகம்.
திரம் --- தைரியம். திரம் உள்ளவன் தீரன். அஞ்சுதல் இல்லாதவன் தீரன்.
அன்பால்நின் தாள்கும் பிடுபவர்
தம்பாவம் தீர்த்து,அம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கம் தரவல ...... பெருமாளே. --- (பொன்றா) திருப்புகழ்.
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. --- (பேரவா) திருப்புகழ்.
குரங்காடுதுறைக் குமர ---
குரங்காடுதுறை என இரு திருத்தலங்கள் உள. வடகுரங்காடுதுறை, தென்குரங்காடுதுறை என்பன.
வடகுரங்காடுதுறை கும்பகோணத்துக்கு அடுத்த ஐயம்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து நாலு கல் தொலையில் உள்ளது. வழியில் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருத்தலம் உள்ளது. ஆடுதுறைபெருமாள் கோயில் என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.
இறைவர் : தயாநிதீசுவரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.
இறைவியார் : ஜடாமகுடேசுவரி, அழகுசடைமுடியம்மை.
தல மரம் : தென்னை.
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.
தென்குரங்காடுதுறை என்பது ஆடுதுறை புகைவண்டி நிலையம் இப்பெயராலேயே உள்ளது. திருவிடைமருதூருக்குக் கிழக்கே இரண்டு கல் தொலையில் உள்ளது. ஆடுதுறை என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.
இறைவர் : ஆபத்சகாயேசுவரர்
இறைவியார் : பவளக்கொடியம்மை,
தல மரம் : வெள்வாழை
தீர்த்தம் : சகாய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.
திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.
கருத்துரை
முருகா! தேவரீரது திருத்தோள்களையும், வேலாயுதத்தையும், திருநடனம் புரியும் திருவடியையும் புகழ்ந்து உய்ய அருள் புரிவீர்.
No comments:
Post a Comment