அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மானை நேர்விழி (காவளூர்)
முருகா!
விலைமாதரால் உண்டாகும் மோகவிபத்து நீங்கி,
தேவரீரை அடைந்து உய்ய அருள்.
தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன ...... தனதான
மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும்
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கட கம்பொர
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும்
ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி
ஆர வாரந யத்தகு ணங்களில்
வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போதுதொ குத்தசி னங்களில்
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத்
தாரை மானொரு சுக்கிரி பன்பெற
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட
சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித ணத்திலு றைந்திடு
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா
காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மானை நேர்விழி ஒத்த மடந்தையர்,
பாலை நேர்மொழி ஒத்து விளம்பியர்,
வாச மாமலர் கட்டும் அரம்பையர், ...... இருதோளும்
மார்பு மீதினும் முத்து வடம் புரள்
காம பூரண பொன் கடகம் பொர,
வாரி நீல வளைக்கை புலம்பிட, ...... அநுராகம்
ஆன நேரில் விதத் திரயங்களும்
நாணம் ஆற மயக்கி இயம்பவும்,
ஆடை சோர நெகிழ்த்தி இரங்கவும் ...... உறவாடி,
ஆரவார நயத்த குணங்களில்
வேளின் நூல்களை கற்ற விளம்பவும்,
ஆகு மோக விபத்தும் ஒழிந்து உனை ......அடைவேனோ?
சானகீ துயரத்தில் அருஞ்சிறை
போன போது, தொகுத்த சினங்களில்
தாப சோபம் ஒழிப்ப, இலங்கையும் ...... அழிவாகத்
தாரை மான் ஒரு சுக்கிரிபன் பெற,
வாலி வாகு தலத்தில் விழுந்திட,
சாத வாளி தொடுத்த முகுந்தன்நல் ...... மருகோனே!
கான வேடர் சிறுக் குடில் அம் புனம்
மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு
காவல் கூரு, குறத்தி புணர்ந்திடு ...... மணிமார்பா!
கா உலாவிய பொன் கமுகின் திரள்
பாளை வீச மலர்த்தடமும் செறி
காவளூர் தனில் முத்தமிழும் தெரி ...... பெருமாளே.
பதவுரை
சானகீ துயரத்தில் அரும் சிறை போன போது --- சீதாதேவி மிக்க துயரத்துடன் அரிய சிறைக்குப் போனபோது,
தொகுத்த சினங்களில் தாப சோபம் ஒழிப்ப --- தனக்கு உண்டான சினத்தையும், துயரத்தையும் நீக்குதல் பொருட்டு,
இலங்கையும் அழிவாக --- இலங்கை அழிந்து போகவும்,
தாரை மான் ஒரு சுக்கிரிபன் பெற --- தாரை என்னும் பெண்ணை, தனது ஒப்பற்ற (நண்பனான) சுக்கிரீவன் (திரும்பப்) பெறவும்
வாலி வாகு தலத்தில் விழுந்திட --- வாலியின் வீரமானது மச்சில் விழுந்து அழிய,
சாத வாளி தொடுத்த முகுந்தன் நன் மருகோனே --- எடுத்த அம்பினைத் தொடுத்த இராம்பிரானின் திருமருகரே!
சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே,
கானவேடர் சிறுகுடில் --- காட்டிலே வாழ்ந்திருந்த வேடர்களின் சிறு குடிசையிலும்,
அம்புன மீதில் வாழ் --- தினைப்புனத்தில் இருந்த
இதணத்தில் உறைந்திடு --- பரண் மீது வீற்றிருந்து,
காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும் மணிமார்பா --- காவல் புரிந்த குறமகளாகிய வள்ளிநாயகி தழுவிய திருமார்பரே!
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச --- சோலைகளில் உள்ள பாக்கு மரங்களின் பாளைகளை வீசுவதும்,
மலர்த் தடமும் செறி காவளூர் தனில் --- மலர்கள் உள்ள நீர்நிலைகளும் நிறைந்துள்ள காவளூர் என்னும் திருத்தலத்தில்,
முத்தமிழும் தெரி பெருமாளே --- முத்தமிழும் விளங்க வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் --- மானுக்கு ஒப்பான விழிகளை உடைய பெண்கள்,
பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் --- பாலை ஒத்த இனிய பேச்சினை உடையவர்,
வாச மாமலர் கட்டும் அரம்பையர் --- நறுமணம் மிக்க மலர்களைச் சூடியுள்ள வானுலக மங்கையரை ஒத்த விலைமாதர்களின்,
இருதோளும் மார்பு மீதினு(ம்) முத்து வடம் புரள் --- இரு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள,
காம பூரண பொன்கடகம் பொர --- காம இச்சைக்கு ஒட்டுமொத்த இருப்பிடம் தருவதாக கொன்னால ஆன கடகம் கைகளில் விளங்க,
வாரி நீல வளைக்கை புலம்பிட --- கடலின் நீல நிறமுள்ள வளையல்கள் கைகளில் ஒலி செய்ய,
அநுராகம் ஆன நேரில் --- காமப் பற்று மிக்க காலத்தில்,
விதத் திரயங்களும் --- மூன்று விதமான மருந்துப் பொருள்களைக் கொண்டு, (அதைத் தன்னை நாடி வந்தவர்களுக்குக் கொடுத்து, தமது வசப்படும்படி மயக்கி)
நாண(ம்) மாற மயக்கி இயம்பவும் --- நாணம் அற்று, மயக்கி பேச்சுக்களைப் பேசவும்,
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் --- ஆடையை நெகிழ்த்து அன்புள்ளவர் போலக் காட்டியும்,
உறவாடி --- உறவு கொண்டு,
ஆரவார நயத்த குணங்களில் --- ஆடம்பர குணத்தோடும், நயமான குணத்தோடும்,
வேளின் நூல்களை கற்ற விளம்பவும் ஆகும் --- தாம் கற்ற காம சாத்திரங்களை எடுத்து விளம்பவும், அதனால் உண்டாகின்ற,
மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ --- காம மோகத்தால் விளையும் ஆபத்தும் நீங்கி உமது திருவடிகளை அடியேன் அடைவேனோ?
பொழிப்புரை
சீதாதேவி மிக்க துயரத்துடன் அரிய சிறைக்குப் போனபோது, தனக்கு உண்டான சினத்தையும், துயரத்தையும் நீக்குதல் பொருட்டு, இலங்கை அழிந்து போகவும், தாரை என்னும் பெண்ணை, தனது ஒப்பற்ற (நண்பனான) சுக்கிரீவன் (திரும்பப்) பெறவும், வாலியின் வீரமானது மச்சில் விழுந்து அழியவும், எடுத்த அம்பினைத் தொடுத்த இராம்பிரானின் திருமருகரே! சாதித்த அம்பைச் செலுத்திய (இராமன்) திருமாலின் திருமருகரே!
காட்டிலே வாழ்ந்திருந்த வேடர்களின் சிறு குடிசையிலும், தினைப்புனத்தில் இருந்த பரண் மீதும் வீற்றிருந்து, காவல் புரிந்த குறமகளாகிய வள்ளிநாயகி தழுவிய திருமார்பரே!
சோலைகளில் உள்ள பாக்கு மரங்களின் பாளைகளை வீசுவதும், மலர்கள் உள்ள நீர்நிலைகளும் நிறைந்துள்ள காவளூர் என்னும் திருத்தலத்தில், முத்தமிழும் விளங்க வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!
மானுக்கு ஒப்பான விழிகளை உடைய பெண்கள்; பாலை ஒத்த இனிய பேச்சினை உடையவர்; நறுமணம் மிக்க மலர்களைச் சூடியுள்ள வானுலக மங்கையரை ஒத்த விலைமாதர்கள், இரு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம இச்சைக்கு ஒட்டுமொத்த இருப்பிடம் தருவதாக பொன்னால் ஆன கடகம் கைகளில் விளங்க, கடலின் நீல நிறமுள்ள வளையல்கள் கைகளில் ஒலி செய்ய, காமப் பற்று மிக்க காலத்தில், மூன்று விதமான மருந்துப் பொருள்களைக் கொண்டு, (அதைத் தன்னை நாடி வந்தவர்களுக்குக் கொடுத்து, தமது வசப்படும்படி மயக்கி) நாணம் அற்று, மயக்கி பேச்சுக்களைப் பேசவும், ஆடையை நெகிழ்த்து அன்புள்ளவர் போலக் காட்டியும், உறவு கொண்டு, ஆடம்பர குணத்தோடும், நயமான குணத்தோடும், தாம் கற்ற காம சாத்திரங்களை எடுத்து விளம்பவும், அதனால் உண்டாகின்ற, காம மோகத்தால் விளையும் ஆபத்தும் நீங்கி உமது திருவடிகளை அடியேன் அடைவேனோ?
விரிவுரை
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் ---
பெண்களின் கண்கள் மருண்ட பார்வையினை உடையவை. ஆதலால், மருண்ட பார்வையினை உடைய மானின் கண்களுக்கு ஒப்பாகச் சொல்லுவர். "மானின் நேர் விழி மாதராய்" என்று மங்கையர்க்கரசியாரைப் பார்த்து, திருஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.
பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் ---
பாலைப் போல இனிமையான மொழி பேசுபவர் பெண்கள்.
"பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம்" என்னும் அருணையடிகளாரின் அருள் வாக்கைக் காண்க.
அனுராகம் ஆன நேரில் விதத் திரயங்களும் ---
அனுராகம் --- அன்பு. காமப்பற்று.
இங்கே காமப்பற்று என்னும் பொருளில் வந்தது.
காமப் பற்று மிகுந்து, தன்னை நாடி வருகின்ற ஆடவரின் உள்ளத்தைத் தமது இனிய சொற்களாலும், செயல்களாலும், மயக்கி, மேலும் அவர் தமது வசமே ஆகி இருக்கும்படி, விலைமாதர்கள் முச்சலிலம் என்ற சொல்லப்படும், மூன்று வகையான நீர். வாய் நீர், சிறு நீர், நாத நீர் என்னும் சுரோணிதம் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கரும்புச் சாற்றில் கலந்து மருந்து செய்வார்கள். அந்த மருந்தை உருண்டைகளாகச் செய்வார்கள். அவற்றை நிழலிலே உலர்த்துவார்கள். அந்த மருந்தை உணவில் கலந்தோ அல்லது படுக்கைக்குச் செல்லும்போது தாம்பூலத்தில் வைத்தோ கொடுத்து, தம்பால் வந்த ஆடவரை காம மயக்கம் கொள்ளச் செய்வார்கள்.
மருந்து உருண்டைகளை வெய்யிலில் உலர்த்தினால் அதன் சத்துப் போய்விடும். அதனால் உயர்ந்த மருந்து உருண்டைகளையும், மூலிகைகளையும் நிழலிலே உலர்த்தவேண்டும் என்பது மருத்துவ முறை.
இதனைப் பின்வரும் பாடல்களால் அடிகளார் காட்டுவது காண்க.
நிறுக்கும் சூது அன மெய்த்தன முண்டைகள்,
கருப்பம் சாறொடு அரைத்து உள உண்டைகள்
நிழல்கண் காண உணக்கி, மணம் பல ...... தடவா,மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம்
ஒளித்து, அன்பாக அளித்த பின், இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம்சொலி .....என ஓதி
உறக் கண்டு, ஆசை வலைக்குள் அழுந்திட
விடுக்கும் பாவிகள், பொட்டிகள், சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் .....உழலாமே
உலப்பு இன்று ஆறு எனும் அக்கரமும், கமழ்
கடப்பம் தாரும், முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட .....அருள்வாயே! --- திருப்புகழ்.
மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலை திறந்த மழுங்கிகள்,
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள், ......பழையோர்மேல்
வால நேசம் நினைந்து அழு வம்பிகள்,
ஆசை நோய் கொள் மருந்துஇடு சண்டிகள்,
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள்,.... --- திருப்புகழ்.
பழமை செப்பி அழைத்து, இதமித்து, உடன்
முறை மசக்கி, அணைத்து, நகக்குறி
பட அழுத்தி, முகத்தை முகத்து உற, ...... உறவாடி,
பதறி எச்சிலை இட்டு, மருத்து இடு
விரவு குத்திர வித்தை விளைப்பவர்,
பல விதத்திலும் அற்பர் எனச்சொலும் ...... மடமாதர்.. --- திருப்புகழ்.
மேகம் ஒத்த குழலார், சிலைப் புருவ,
வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட
மேரு ஒத்த முலையார், பளப்பள என
மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ....உடை மாதர்,
தோகை பட்சி நடையார், பதத்தில் இடு
நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
சோர, நல் தெருவுடே நடித்து, முலை ......விலைகூறி,
சூதகச் சரசமோடெ எத்தி, வரு-
வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவாமோ? --- திருப்புகழ்.
திருடிகள், இணக்கிச் சம்பளம் பறி
நடுவிகள், மயக்கிச் சங்கம் உண்கிகள்,
சிதடிகள், முலைக் கச்சு உம்பல், கண்டிகள், ......சதிகாரர்,
செவிடிகள், மதப்பட்டு உங்கு குண்டிகள்,
அசடிகள், பிணக்கிட்டும் புறம்பிகள்,
செழுமிகள், அழைத்து இச்சம் கொளும்செயல்,...வெகுமோகக்
குருடிகள், நகைத்து இட்டம் புலம்பு கள்
உதடிகள், கணக்கு இட்டும் பிணங்கிகள்,
குசலிகள், மருத்து இட்டும் கொடும் குணர், ......விழியாலே
கொளுவிகள், மினுக்குச் சங்கு இரங்கிகள்,
நடனமும் நடித்திட்டுஒங்கு சண்டிகள்,
குணமதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் ......உறவுஆமோ? --- திருப்புகழ்.
ஆரவார நயத்த குணங்களில் ---
ஆரவார குணம். நயத்த குணம்.
வேளின் நூல்களை கற்ற ---
வேளின் நூல்கள் --- காம சாத்திரங்கள்.
மோக விபத்தும் ஒழிந்து ---
விபத்து --- நற்பேறு இன்மை, வேதனை, சாவு, ஆபத்து, வறுமை, அழிவு.
எதிர்பாராமல் நிகழ்வது விபத்து. விலைமாதர் கூட்டுறவால் விபத்து நேரும் என்பதை அறியாமலே அவரை நாடுவர், கூடுவர். பின்பு எல்லாவற்றையும் இழந்து ஓடுவர் காமுகர்.
தாரை மான் ஒரு சுக்கிரிபன் பெற ---
தாரை மான் --- மான் என்றது பெண்ணை. தாரையாகிய மான்.
தாரை வாலியின் மனைவி. இவள் மாசில்லாத கற்புள்ளவள்.
கணவனை இழந்து துணை அற்று இருந்த இவளை, சுக்கிரீவனிடம் அடைக்கலப் பொருளாக இராமபிரான் தந்தருளினார் என்பது இதன் பொருள்.
கானவேடர் சிறுகுடில் அம்புன மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும் மணிமார்பா ---
இதணம் --- பரண்.
அம் புனம் --- அழகிய தினைப்புனம்.
குறத்தி --- எம்பிராட்டி வள்ளநாயகி.
வள்ளியம்மையார் --- சீவ ஆன்மா. தினைப்புனம் --- உள்ளம். தினைப்புனம் --- நல்ல எண்ணங்கள் விளைகின்ற மனம்.
தீய நினைவுகளாகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாதவாறு தினைப்புனத்தை அம்மையார் காவல் கொண்டு இருந்தார்கள்.
தூய ஆன்மாக்களைத் தேடி இறைவன் எந்த நேரத்திலும் வருவான். வந்து ஆட்கொள்வான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில் விரனே" என்றார் அருணை அடிகள். "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற தூய ஆன்மாவானது, இறைவனைத் தழுவி இன்புறும் பேறு பெற்றது.
காவளூர் தனில் முத்தமிழும் தெரி பெருமாளே ---
காவளூர் என்னும் திருத்தலம், தஞ்சை மாவட்டத்தில் திட்டை இரயில் நிலையத்திலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது.
திட்டை என இப்போது வழங்கப்படுகின்ற "தென்குடித்திட்டை" என்பது திருஞானசம்பந்தர், அப்பர் ஆகிய இருபெருமக்களால் வழிபட்டுத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம். குருத்தலம் என்றும் கொள்ளப்படுகின்றது.
கருத்துரை
முருகா! விலைமாதரால் உண்டாகும் மோகவிபத்து நீங்கி, தேவரீரை அடைந்து உய்ய அருள்.
No comments:
Post a Comment