அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விகட பரிமள (வயலூர்)
முருகா!
சிவானந்தப் பெருங்கடலில் அடியேன் திளைத்து இருக்க அருள்வாய்.
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ......தந்ததான
விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு
மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
கலவி விதவிய னரிவையர் மருள்வலை
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
புரண புளகித இளமுலை யுரமிசை
தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ......யன்புகூர
விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ......வுந்திமூழ்கிப்
புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென
ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பவமவை
முழுது மொழிவற மருவிய கலவியி
தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப்
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையு மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ......யென்றுசேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ....என்றுபேரி
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குருவென விருதுகள்
ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற....நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி .....யும்பர்வாழ
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள்.....தம்பிரானே.
பதம் பிரித்தல்
விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமும் அளவிய களபமு(ம்)
மட்டித்து இதழ்த்தொடை முடித்துத் தெருத்தலையில்
உலவி,இளைஞர்கள் பொருளுடன் உயிர்கவர்
கலவி வித வியன் அரிவையர் மருள்வலை
இட்டுத் துவக்கி இடர் பட்டுத் தியக்கி, அவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
புரண புளகித இளமுலை உர(ம்)மிசை
தைக்கக் கழுத்தொடு கை ஒக்கப் பிணித்து இறுகி ...... அன்புகூர
விபுதர் அமுது என,மது என,அறுசுவை
அபரி மிதம் என இலவிதழ் முறைமுறை
துய்த்துக் களித்து,நகம் வைத்துப் ப(ல்)லின் குறியின்
வரையும் முறைசெய்து,முனிவரு(ம்) மனவலி
கரையும் அரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக் குலைத்து, நுதல் பொட்டுப் படுத்தி, மதர்
விழிகள் குழைபொர,மதிமுகம் வெயர்வு எழ,
மொழிகள் பதறிட,ரதிபதி கலைவழி
கற்றிட்ட புள்குரல் மிடற்றில் பயிற்றி, மடு ...... உந்திமூழ்கிப்
புகடு வெகுவித கரணமும் மருவிய
வகையின் முகில்என,இருள்என,வனம்என
ஒப்பித்த நெய்த்த பல புட்பக் குழல் சரிய,
அமுத நிலைமலர் அடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்து அழுத்தி, அநு வர்க்கத்து உருக்கி, ஒரு
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை
முழுதும் ஒழிவற மருவிய கலவி,
இதத்து ப்ரியப்பட நடித்துத் துவட்சியினில் ...... நைந்துசோரப்
புணரும் இது, சிறு சுகம் என,இகபரம்
உணரும் அறிவிலி,ப்ரைமைதரு திரிமலம்
அற்று, கருத்து ஒருமை உற்று, புலத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ,சிறிதுமெய்
உணர்வும் உணர்வுற,வழுஅற,ஒருஜக
வித்தைக் குணத்ரயமும் நிர்த்தத்து வைத்து, மறை
புகலும் அநுபவ வடிவினை அளவுஅறு
அகில வெளியையும்,ஒளியையும் அறி, சிவ
தத்வ ப்ரசித்தி தனை,முத்திச் சிவக்கடலை ...... என்று சேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ....என்றுபேரி
திமிலை,கரடிகை,பதலை,ச(ல்)லரி, தவில்
தமரம்,முரசுகள்,குடமுழவொடு, துடி
சத்தக் கணப்பறைகள் மெத்தத் தொனித்து, அதிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்தத் திரள் பலவும் முற்றிக் கலிக்க, எழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடு என,
மகர சலநிதி மொகுமொகு மொகு என,
எட்டுத் திசைக்களிறும் மட்டு அற்று அப்பிளிற,.....நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறு என,
அகில புவனமும் அரகர அர என,
நட்சத்ரம் உக்கிவிழ,வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலை அற,வடிவு எனும் மலைசொரி
குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப் பழுத்த உடல் செக்கச் சிவத்துவிட,
வயிறு சரிகுடல் நரிதி(ன்)ன,நிணம் அவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பட்சித்து நிர்த்தம் இட,ரட்சித்தலைப் பரவி ...உம்பர்வாழ,
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடகம் உடைபட,வெடிபட எழுகிரி
அற்றுப் பறக்க வெகு திக்குப் படித்து, நவ
நதிகள் குழைதர,இபபதி மகிழ்வுற,
அமர்செய்து அயில்கையில் வெயில் எழ,மயில்மிசை
அக் குக்குடக்கொடி செருக்க, பெருக்கமுடன்
வயலி நகர் உறை சரவணபவ! குக!
இயலும் இசைகளு(ம்) நடனமும் வகைவகை
சத்யப் படிக்கு, இனிது அகத்தியர்க்கு உணர்த்தியருள் ...... தம்பிரானே.
பதவுரை
திகுட திகுகுட திகுகுட திகுகுடதகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுடடுமிட டுமிமிட டுமிமிட டுமிமிடடமட டமமட டமமட டமமடடுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்திதகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்திதிக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி--- என்னும் இந்தத்தாள ஒத்துக்குப் பொருந்த,
பேரி--- பேரிகை என்னும் பொதுவகையான பறைகள்,
திமிலை --- திமிலை என்னும் ஒருவகைப் பறைகள்,
கரடிகை--- கரடி கத்துவது போன்ற ஓசையை உண்டாக்கும் ஒருவிதப் பறைகள்,
பதலை --- மத்தளங்கள்,
ச(ல்)லரி--- சல் என்று ஓசை செய்யும் ஒருவிதப் பறைகள்,
தவில்--- தவில்கள்,
தமரம்--- தமரம் என்னும் பறைகள், (டமாரம் என்று இக் காலத்தில் வழங்கப்படுவதாக இருக்கலாம்)
முரசுகள்--- முரசுகள்,
குடமுழவொடு--- (ஆகிய இவைகளோடு) முழவு என்னும் வாத்தியமும்,
துடி --- உடுக்கைகள்,
சத்தக் கணப் பறைகள்--- மிகுதியாக ஒலி எழுப்புகின்ற பறைகளும்,
மெத்தத்தொனித்து அதிர--- வெகுவாகப் பேரோலியிட்டு முழங்க,
அசுரர் குல அரி--- அசுரர் குலப் பகைவன்,
அமரர்கள் ஜயபதி--- தேவர்களின் வெற்றிச் சேனைக்கு அதிபதி,
குசல பசுபதி குரு என--- (உயிர்களுக்கு) நலத்தைப் புரியும் பசுபதியாகிய சிவபரம்பொருளுக்கு குருநாதர் என்னும்படியாக,
விருதுகள் ஒத்தத் திரள் பலவும் முற்றிக் கலிக்க--- வெற்றிச் சின்னங்கள் யாவும் ஒருசேரத் திரண்டு ஒலிக்கவும்,
எழு சிகர கொடுமுடி கிடுகிடுகிடு என--- உயர்ந்துள்ள மலைகளின் முகடுகள் கிடுகிடு என நடுங்கவும்,
மகர சல நிதிமொகுமொகுமொகு என--- மகர மீன்கள் உள்ள கடலானது மொகுமொகு என்று கொப்புளிக்கவும்,
எட்டுத் திசைக் களிறு மட்டற்றுஅறப் பிளிற--- எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகள் அளவு கடந்து பிளிறவும்,
நின்ற சேடன் மகுட சிரதலம் நெறுநெறுநெறுஎன--- (இந்தப் பூவுலகைத் தாங்கி) நின்ற ஆதிசேடனது கிரீடங்களை அணிந்த தலைகள் நெறுநெறு என்று முறியவும்,
அகில புவனமும் அர அர அர என--- எல்லா உலகங்களின் உள்ள உயிர்கள் அரகர அர என்று துதித்துப் போற்றவும்,
நட்சத்ரம் உக்கி விழ--- வானில் உள்ள மீன்கள் உதிர்ந்து விழவும்,
வக்கிட்ட துட்ட குண நிருதர் தலை அற--- பொறாமையில் மனம் வெந்து போய் இருந்த கொடிய குணம் படைத்த அரக்கர்களின் தலைகள் அற்று விழவும்,
வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகியகழுகுகள் பக்கப் பழுத்த உடல் செக்கச் சிவத்து விட--- அவர்களுடைய மேலபோன்ற வடிவத்தை உடைய உடல்களில் இருந்து சொரிகின்ற இரத்த வெள்ளத்தில் முழுகிய கருநிறம் படைத்த கழுகுகளின் உடல்கள் செக்கச் சிவந்து தோன்றவும்,
வயிறு சரி குடல் நரி தி(ன்)ன--- (அரக்கர்களின்) வயிற்றில் இருந்து சரிந்துள்ள குடல்களை நரிகள் தின்னவும்,
நிணம் அவை எயிறுஅலகைகள் நெடுகிய குறளிகள் பட்சித்து நிர்த்தமிட--- உடல் கொழுத்த தசைகளை நீண்ட பற்களை உடைய பேய்களும், குறிய வடிவத்தை உடைய பல பிசாசுகளும் உண்டு, ஆனந்தக் களிப்பால் திருநடனம் செய்யவும்,
ரட்சித்தலைப் பரவி உம்பர் வாழ--- தாங்கள் காப்பாற்றப்பட்டதை எண்ணிப் போற்றி தேவர்கள் வாழ்வு பெறவும்,
மடிய அவுணர்கள்--- அரக்கர்கள் மடிந்து போக,
குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட--- அவர்களது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படைகள் யாவும் தோல்வியுற்று மடிந்து போக,
எழு கிரி அற்றுப் பறக்க--- ஏழுமலைகளும் தூளாகிப் பறக்க,
வெகு திக்குப் படி(ந்)து--- அந்தத் தூளானது எல்லாத் திக்குகளிலும் படிய,
நவநதிகள்குழை தர--- நவநதிகளும் குழைந்து போகவும்,
இப பதி மகிழ்வுற--- வெள்ளை யானைத் தலைவன் ஆகிய இந்திரன் மனம் மகிழவும்,
அமர் செய்து--- போர் புரிந்து,
அயில் கையில்வெயில் எழ--- கூரிய வேலாயுதம் திருக்கையில் ஒளி வீசவும்,
மயில் மிசை --- மயிலின் மீது ஆரோகணித்து,
அக் குக்குடக் கொடி செருக்க--- அந்தக் கோழிக் கொடியானது பெருமையோடு விளங்க,
பெருக்கமுடன்--- வளம் பொலிய,
வயலி நகர்உறை சரவணபவ--- வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சரவணபவரே!
குக--- அடியார்களின் இதயமாகிய குளையில் எழுந்தருளி இருப்பவரே!
இயலும் இசைகளு(ம்) நடனமும் வகைவகை--- இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ப் பொருளையும் முறைப்படி,
சத்யப் படிக்கு--- உண்மைப் பொருள் விளங்கும்படி,
இனிது அகத்தியர்க்கு உணர்த்தி அருள்தம்பிரானே--- அன்புடன் அகத்திய முனிவர்க்கு உபதேசம் புரிந்து அருளிய தனிப்பெரும் தலைவரே!
விகட பரிமள ம்ருகமதம்--- நறுமணம் மிகுந்த கத்தூரி,
இமசல(ம்)--- பனிநீர்,
வகிர படிரமும் அளவியகளபமும் மட்டித்து--- சந்தனமும் சேர்ந்த கலவையைப் பூசிக்கொண்டு,
இதழ்த் தொடை முடித்து--- மலர்மாலையை முடித்துக் கொண்டு,
தெருத்தலையில் உலவி--- தெருக் கோடியில் உலவிக் கொண்டு இருந்து,
இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர்--- இளைஞர்களின் பொருளோடு அவர்களது உயிரையும் கவருகின்ற,
கலவி வித(ம்) வியன் அரிவையர்--- புணர்ச்சி விதங்களைக் காட்டும் வியக்கத்தக்க விலைமாதர்கள்,
மருள் வலை இட்டுத் துவக்கி--- (தங்களின்) மயக்க வலையில் இட்டுக் கட்டி வைத்து,
இடர் பட்டுத் தியக்கி --- (அதனால்) வேதனைப்பட்டு மயங்கச் செய்து,
அவர்விரவு நவமணி முக பட(ம்) எதிர்பொரு புரண(ம்) புளகித
இளமுலை --- நவமணிகளை அணிந்துள்ள அவர்கள் எனது எதிர்ப்பட்டு முட்டுவது போன்று தோன்றி, நிறைவான புளகாங்கிதம் உண்டாக்கும் இளமையான முலைகள்,
உர(ம்) மிசை தைக்க--- எனது மார்பில் தைக்கவும்,
கழுத்தொடு கை ஒக்கப்பிணித்து இறுகி--- கழுத்திலே கைகளைப் பிணித்து இறுகத் தழுவி,
அன்பு கூர --- அன்பு மிக்கு எழுவது போன்று நடித்து,
விபுதர் அமுது என--- தேவர்களின் அமுதம் எனவும்,
மது என--- மது எனவும்,
அறுசுவை அபரிமிதம் என--- ஆறுசுவைகளும் அளவற்று விளங்குவது எனவும், (அறிவு மயக்கம் கொண்டு)
இலவ இதழ் முறைமுறை துய்த்துக் களித்து--- இலவ மலரை ஒத்த செவ்வாய் இதழில் ஊறும் எச்சிலைப் பலமுறை அனுபவித்துக் களித்து,
நகம்வைத்து--- நகக் குறிகளைப் பதித்து,
ப(ல்)லில் குறியின் வரையும் முறை செய்து--- பற்குறிகளையும் முறையாகப் பதித்து,
முனிவரு(ம்) மனவலி கரையும்--- முனிவர்களின் மனத் திண்மையை குலைக்கின்ற,
அரிசன(ம்) பரிசன(ம்)--- மஞ்சள் பூசிய உடம்பின் இடங்களைப் பிரிசித்து,
ப்ரியஉடை தொட்டுக் குலைத்து--- பிரியமுடன் அணிந்துள்ள ஆடையைக் குலைத்து,
நுதல் பொட்டுப் படுத்தி--- நெற்றியிலே உள்ள திலகத்தை அழியச் செய்து,
மதர்விழிகள் குழை பொர--- அழகிய கண்கள் காதளவு ஓடவும்,
மதி முகம் வெயர்வு எழ--- சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வை எழவும்,
மொழிகள் பதறிட--- பேச்சுப் பதறிடவும்,
ரதி பதி கலை வழி கற்றிட்ட புட்குரல்மிடற்றில் பயிற்றி--- இரதிதேவியின் மணாளனான மன்மதனின் காமசாத்திரத்தில் கற்றபடி விதவிதமான பறவைக் குரல்களை தமது கண்டத்தில் பயிற்றுவித்து,
மடு உந்தி மூழ்கி --- மடுவைப் போன்ற உந்திச் சுழியில் மூழ்கித் திளைத்து,
புகடு வெகு விதகரணமு(ம்) மருவிய வகையின்--- சொல்லப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களைப் பொருந்திய முறையில் புரிந்து,
முகில் என--- மேகம் எனவும்,
இருள் என--- இருள் எனவும்,
வனம் என ஒப்பித்த--- காடு எனவும் ஒப்புக் கூறப்படும்,
நெய்த்த பலபுட்பக் குழல் சரிய --- நெய் பூசப்பட்டதும், பல மலர்களைச் சூடியுள்ளதும் ஆகிய கூந்தல் சரிய,
அமுத நிலை --- அந்த இன்ப நிலையை,
மலர் அடி முதல் முடி கடை--- பாதம் முதல் தலை வரையும்,
குமுதபதி கலை குறைகலை நிறைகலை --- சந்திரனுடைய தேய்வும், வளரச்சியும் பொல ஒருக்கால் குறைந்தும், ஒருக்கால் மிகுந்தும் உள்ளதுபோல,
சித்தத்து அழுத்தி--- எனது மனதில் பதித்து,
அநுவர்க்கத்து உருக்கி--- அந்தச் சிற்றின்ப நிலையையே அனுபவித்து, மனம் உருகி,
ஒரு பொழுதும் விடல் அரிது எனும்--- இதை ஒருபோதும் விட முடியாது என்னும்படியான,
அநுபவம் அவை முழுதும்ஒழி அற --- அனுபவம் முழுவதும் நீங்குதல் இல்லாது,
மருவிய கலவி இதத்து ப்ரியப்பட நடித்து--- பொருந்திய புணர்ச்சி இன்பத்தினை ஆசையுடன் விரும்பி அனுபவித்து,
துவட்சியினில் நைந்து சோர--- அந்த சோர்வினில் மனமானது வாட்டத்தை அடைய,
புணரும் இது சிறு சுகம் என--- இந்தப் புணர்ச்சி இன்பமானது சிற்றின்பமே என்று தெளிந்து,
இகபரம் உணரும் அறிவிலி --- இம்மை மறுமை நலன்களில் ஆசையை விடவேண்டும் என்று எண்ணாத அறிவற்றவன் ஆகிய நான்,
ப்ரமை தரு திரி மலம் அற்று--- மயக்கத்தை உண்டுபண்ணும் மும்மலங்களும் நீங்கப் பெற்று,
கருத்து ஒருமை உற்று --- மன ஒருமைப்பாட்டினை அடைந்து,
புலத்தலையில் மறுகு பொறி--- ஐம்புலன்களின் வழிப்பட்டுக் கலங்குகின்ற அறிவை,
கழல் நிறுவியெ--- தேவரீரது திருவடியில் பொருந்த வைத்து,
சிறிது மெய் உணர்வும்உணர்வு உற--- சற்று மெய்யுணர்வானது உண்டாக,
வழு அற--- எனது குற்றமெல்லாம் அறும்படியாக,
ஒரு ஜக வித்தை --- இந்த உலக அறிவையும்,
குண த்ரயமும் --- முக்குணங்களையும்,
நிர்த்தத்து வைத்து--- நான் எண்ணியபடியே வைத்து,
மறை புகலும் அநுபவ வடிவினை --- வேதங்கள் கூறுகின்ற அனுபவ வடிவத்தை,
அளவு அறு அகிலவெளியையும் ஒளியையும் அறி--- அளவு கடந்து விளங்குகின்ற வெளி முழுதையும், ஒளி முழுதையும் அறிகின்ற,
சிவ தத்வ ப்ரசித்தி தனை--- சிவானுபவத்தின் பெருமையை உணர்ந்து,
முத்திச் சிவக் கடலை என்று சேர்வேன்--- பாசங்களில் இருந்து விடுபட்டு, சிவானந்தப் பெருங்கடலில் அடியேன் திளைத்து இருப்பது எந்த நாள்?
பொழிப்புரை
திகுட திகுகுட திகுகுட திகுகுடதகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுடடுமிட டுமிமிட டுமிமிட டுமிமிடடமட டமமட டமமட டமமடடுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்திதகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்திதிக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்னும் இந்தத்தாள ஒத்துக்குப் பொருந்த,பேரிகை என்னும் பொதுவகையான பறைகள்,திமிலை என்னும் ஒருவகைப் பறைகள், கரடி கத்துவது போன்ற ஓசையை உண்டாக்கும் ஒருவிதப் பறைகள், மத்தளங்கள், சல் என்று ஓசை செய்யும் ஒருவிதப் பறைகள், தவில்கள், தமரம் என்னும் பறைகள், (டமாரம் என்று இக் காலத்தில் வழங்கப்படுவதாக இருக்கலாம்)முரசுகள்,ஆகிய இவைகளோடு முழவு என்னும் வாத்தியமும், உடுக்கைகளும்,மிகுதியாக ஒலி எழுப்புகின்ற பறைகளும்வெகுவாகப் பேரோலியிட்டு முழங்க;
அசுரர் குலப் பகைவன், தேவர்களின் வெற்றிச் சேனைக்கு அதிபதி, உயிர்களுக்கு நலத்தைப் புரியும் பசுபதியாகிய சிவபரம்பொருளுக்கு குருநாதர் என்னும்படியாக வெற்றிச் சின்னங்கள் யாவும் ஒருசேரத் திரண்டு ஒலிக்கவும்,உயர்ந்துள்ள மலைகளின் முகடுகள் கிடுகிடு என நடுங்கவும்,மகர மீன்கள் உள்ள கடலானது மொகுமொகு என்று கொப்புளிக்கவும்,எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகள் அளவு கடந்து பிளிறவும்,இந்தப் பூவுலகைத் தாங்கி நின்ற ஆதிசேடனது கிரீடங்களை அணிந்த தலைகள் நெறுநெறு என்று முறியவும், எல்லா உலகங்களின் உள்ள உயிர்கள் அரகர அர என்று துதித்துப் போற்றவும், வானில் உள்ள மீன்கள் உதிர்ந்து விழவும், பொறாமையில் மனம் வெந்து போய் இருந்த கொடிய குணம் படைத்த அரக்கர்களின் தலைகள் அற்று விழவும், அவர்களுடைய மேலபோன்ற வடிவத்தை உடைய உடல்களில் இருந்து சொரிகின்ற இரத்த வெள்ளத்தில் முழுகிய கருநிறம் படைத்த கழுகுகளின் உடல்கள் செக்கச் சிவந்து தோன்றவும்,அரக்கர்களின் வயிற்றில் இருந்து சரிந்துள்ள குடல்களை நரிகள் தின்னவும்,உடல் கொழுத்த தசைகளை நீண்ட பற்களை உடைய பேய்களும், குறிய வடிவத்தை உடைய பல பிசாசுகளும் உண்டு, ஆனந்தக் களிப்பால் திருநடனம் செய்யவும்,தாங்கள் காப்பாற்றப்பட்டதை எண்ணிப் போற்றி தேவர்கள் வாழ்வு பெறவும்,அரக்கர்கள் மடிந்து போக,அவர்களது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படைகள் யாவும் தோல்வியுற்று மடிந்து போக,ஏழுமலைகளும் தூளாகிப் பறக்க,அந்தத் தூளானது எல்லாத் திக்குகளிலும் படிய, நவநதிகளும் குழைந்து போகவும், வெள்ளை யானைத் தலைவன் ஆகிய இந்திரன் மனம் மகிழவும், போர் புரிந்து, கூரிய வேலாயுதம் திருக்கையில் ஒளி வீச, மயிலின் மீது ஆரோகணித்து,அந்தக் கோழிக் கொடியானது பெருமையோடு விளங்க,வளம் பொலிய,வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சரவணபவரே!
அடியார்களின் இதயமாகிய குளையில் எழுந்தருளி இருப்பவரே!
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ப் பொருளையும் முறைப்படி, உண்மைப் பொருள் விளங்கும்படி,அன்புடன் அகத்திய முனிவர்க்கு உபதேசம் புரிந்து அருளிய தனிப்பெரும் தலைவரே!
நறுமணம் மிகுந்த கத்தூரி, பனிநீர், சந்தனமும் சேர்ந்த கலவையைப் பூசிக்கொண்டு, மலர்மாலையை முடித்துக் கொண்டு, தெருக் கோடியில் உலவிக் கொண்டு இருந்து, இளைஞர்களின் பொருளோடு அவர்களது உயிரையும் கவருகின்ற,புணர்ச்சி விதங்களைக் காட்டும் வியக்கத்தக்க விலைமாதர்கள், தங்களின் மயக்க வலையில் இட்டுக் கட்டி வைத்து, அதனால் வேதனைப்பட்டு மயங்கச் செய்து, நவமணிகளை அணிந்துள்ள அவர்கள் எனது எதிர்ப்பட்டு முட்டுவது போன்று தோன்றி, நிறைவான புளகாங்கிதம் உண்டாக்கும் இளமையான முலைகள் எனது மார்பில் தைக்கவும், கழுத்திலே கைகளைப் பிணித்து இறுகத் தழுவி, அன்பு மிக்கு எழுவது போன்று நடித்து, தேவர்களின் அமுதம் எனவும், மது எனவும், ஆறுசுவைகளும் அளவற்று விளங்குவது எனவும், அறிவு மயக்கம் கொண்டு, இலவ மலரை ஒத்த செவ்வாய் இதழில் ஊறும் எச்சிலைப் பலமுறை அனுபவித்துக் களித்து, நகக் குறிகளைப் பதித்து, பற்குறிகளையும் முறையாகப் பதித்து, முனிவர்களின் மனத் திண்மையை குலைக்கின்ற, மஞ்சள் பூசிய உடம்பின் இடங்களைப் பிரிசித்து, பிரியமுடன் அணிந்துள்ள ஆடையைக் குலைத்து,
நெற்றியிலே உள்ள திலகத்தை அழியச் செய்து, அழகிய கண்கள் காதளவு ஓடவும், சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வை எழவும், பேச்சுப் பதறிடவும், இரதிதேவியின் மணாளனான மன்மதனின் காமசாத்திரத்தில் கற்றபடி விதவிதமான பறவைக் குரல்களை தமது கண்டத்தில் பயிற்றுவித்து, மடுவைப் போன்ற உந்திச் சுழியில் மூழ்கித் திளைத்து,சொல்லப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களைப் பொருந்திய முறையில் புரிந்து, மேகம் எனவும், இருள் எனவும், காடு எனவும் ஒப்புக் கூறப்படும், நெய் பூசப்பட்டதும், பல மலர்களைச் சூடியுள்ளதும் ஆகிய கூந்தல் சரிய,அந்த இன்ப நிலையைப் பாதம் முதல் தலை வரையும்,சந்திரனுடைய தேய்வும், வளரச்சியும் பொல ஒருக்கால் குறைந்தும், ஒருக்கால் மிகுந்தும் உள்ளதுபோல,எனது மனதில் பதித்து,அந்தச் சிற்றின்ப நிலையையே அனுபவித்து, மனம் உருகி,இதை ஒருபோதும் விட முடியாது என்னும்படியான அனுபவம் முழுவதும் நீங்குதல் இல்லாது,பொருந்திய புணர்ச்சி இன்பத்தினை ஆசையுடன் விரும்பி அனுபவித்து, அந்த சோர்வினில் மனமானது வாட்டத்தை அடைய, இந்தப் புணர்ச்சி இன்பமானது சிற்றின்பமே என்று தெளிந்து, இம்மை மறுமை நலன்களில் ஆசையை விடவேண்டும் என்று எண்ணாத அறிவற்றவன் ஆகிய நான், அறிவு மயக்கத்தை உண்டுபண்ணும் மும்மலங்களும் நீங்கப் பெற்று, மன ஒருமைப்பாட்டினை அடைந்து, ஐம்புலன்களின் வழிப்பட்டுக் கலங்குகின்ற அறிவை, தேவரீரது திருவடியில் பொருந்த வைத்து, சற்று மெய்யுணர்வானது உண்டாக, எனது குற்றமெல்லாம் அறும்படியாக,இந்த உலக அறிவையும், முக்குணங்களையும், நான் எண்ணியபடியே வைத்து, வேதங்கள் கூறுகின்ற அனுபவ வடிவத்தை,அளவு கடந்து விளங்குகின்ற வெளி முழுதையும், ஒளி முழுதையும் அறிகின்ற சிவானுபவத்தின் பெருமையை உணர்ந்து,பாசங்களில் இருந்து விடுபட்டு, சிவானந்தப் பெருங்கடலில் அடியேன் திளைத்து இருப்பது எந்த நாள்?
விரிவுரை
இத் திருப்புகழில் அடிகளார் விலைமாதர் மயக்கத்தால் உண்டாகின்ற கேட்டினை எடுத்துப் புகன்று, அந்தச் சிற்றின்பத்தினால் உண்டாகும் உவட்சியில் இருந்து விடுபட்டு, எல்லையில்லாத பேரின்பத்தை அருளும் சிவானந்தப் பெருங்கடலில் திளைத்து இருக்க ஏக்கம் கொண்டு முருகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார்.
விகட பரிமள ம்ருகமதம்---
விகட -- மிகுதியாக,
பரிமளம் --- நறுமணம்,
ம்ருமதம் --- மானின் உடலில் இருந்து பெறப்படும் கத்தூரி என்னும் நறுமணப் பொருள். மான்மதம் என்றும் கூறப்படும்.
இமசல(ம்)---
இமசலம் --- பனிநீர்,
படிரமும் அளவியகளபமும் மட்டித்து---
படீரம் --- சந்தனம். பாடலின் அமைதி கருதி படிரம் என வந்தது.
களபம் --- கலவைச் சாந்து,
நவமணி முகபட---
முகபட --- முகப்படுதல், எதிர்ப்படுதல்.
உர(ம்) மிசை தைக்க---
உரம் --- மார்பு.
முனிவரு(ம்) மனவலி கரையும்---
விலைமாதர்கள் தமது கண்வலையை வீசியும், சொல்வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.
பெண்களின் எழில் ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.
இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.
உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சாரப் பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து, கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணார்க்கு
இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்துஇரட்சிப்பையே? --- கந்தர் அலங்காரம்.
வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே. --- திருவாசகம்.
அரிசன வாடைச் சேர்வை குளித்து,
பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,
அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்
சுரத விநோதப் பார்வை மை இட்டு,
தருண கலாரத் தோடை தரித்து,
தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே. --- திருப்புகழ்.
மாயா சொரூப முழுச் சமத்திகள்,
ஓயா உபாய மனப் பசப்பிகள்,
வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்
ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ? --- திருப்புகழ்.
அரிசன(ம்) பரிசன(ம்)---
அரிசனம் --- மஞ்சள்,
பரிசனம் --- தொடுதல், தீண்டுதல்.
மடு உந்தி மூழ்கி---
மடு --- பள்ளம்.
ஆழமுள்ள மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணை அரிதோ,அத்துணை அரிது விலைமாதரின் உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக் கரை சேர்வது.
“அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும்" ---(பழிப்பர்) திருப்புகழ்.
“பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி இடைவிழு பஞ்ச பாதகன் என்று சேர்வேன். --- உரைதரு (திருப்புகழ்)
ஆழமாகிய பெரிய மடுவின்கண் வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ அங்ஙனமே உந்தி என்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள், வடிவேல்பரமனது தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி அம் மடுவினின்றும் உய்ந்து முத்தி என்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது.
கடத்தில் குறத்தி பிரான்அரு ளாற்கலங் காதசித்தத்
திடத்தில் புணைஎன யான்கடந் தேன்,சித்ர மாதர்அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. --- கந்தரலங்காரம்.
புணரும் இது சிறு சுகம் என---
புணர்ச்சி இன்பம் சிற்றின்பம்.
இகபரம் உணரும் அறிவிலி ---
இம்மையிலும் மறுமையிலும் உண்டாகும் இனைகள் எல்லாம் அற்றுப் போகும்படியான அறிவைப் பெறாதவன். அதாவது, இம்மை மறுமை நலன்களில் ஆசை ஒழியவேண்டும் என்கின்றார்.
ப்ரமை தரு திரி மலம் அற்று---
பிரமை --- அறிவு மயக்கம். மும்மலங்கள் உயிரின் அறிவை மயக்குகின்றவை. அறிவு மயக்கம் நீங்கவேண்டும்.
கருத்து ஒருமை உற்று ---
மனதில் ஒருமைப்பாடு உண்டாகவேண்டும். "ஒருமையுடன் நினது திருமலர் அடி நினைக்கின்ற உத்தமர்" என்றார் வள்ளல்பெருமான்.
புலத்தலையில் மறுகு பொறி---
புலத் தலை --- அறிவுப் புலப்படுத்துகின்ற ஐம்புலன்கள்.
மறுகுதல் --- கலங்குதல், சுழுலுதல்.
ஐம்புலன்களின் வழியே மனதைச் செல்லவிடாது தடுக்கவேண்டும். மனமானது சுழலக் கூடாது.
மறை புகலும் அநுபவ வடிவினை ---
இறைவன் அனுபவப் பொருளாக உள்ளவன். "தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான்.
முத்திச் சிவக் கடலை என்று சேர்வேன்---
முத்தி --- பாசங்களில் இருந்து விடுபடுதல். சிவக் கடல் என்பது ஆனந்தக் கடல். ஆசைக் கடலில், இன்ப துன்பமாகியஅலைகள் ஓயாது வீசும். இன்பம் போன்று துன்பம் இருக்கும். சிவானந்தக் கடலில், அலைகள் வீசாது. "அலையிலாச் சிவஞான வாரியே" என்றார் வள்ளல்பெருமான்.
மாயைதனை உதறி,வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள்தான் எடுத்து,-- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான். --- உண்மை விளக்கம்.
இத் திருப்புகழின் பிற்பகுதியில், முருகப் பெருமான் சூரபதுமனாதியரோடு போர் புரிந்து, அமரர்களுக்கு வாழ்வளித்த குரணைத் திறத்தைப் பாடுகின்றார்.
இயலும் இசைகளு(ம்) நடனமும் வகைவகை சத்யப் படிக்கு இனிது அகத்தியர்க்கு உணர்த்தி அருள்தம்பிரானே---
அகத்தியருக்கு முருகப்பெருமான் இனிய தமிழ் மொழியையும், அதன் இலக்கணத்தையும் உபதேசித்தருளினார். இதனால் தமிழ்மொழி ஏனைய மொழிகளினும் உயர்ந்த மொழியென்பதும், அதன் ஆசிரியர் முருகப்பெருமானே என்பதும், அதனை உலகிற்கு உபகரித்த சந்தனாசாரியார் அகத்தியர் என்பதும் நன்கு புலனாகின்றன.
சிவனை நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ,இரு
செவிகுளிர,இனியதமிழ் ...... பகர்வோனே!
என்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில்.
தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத்
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு ...... அறிஓதும்
சமர்த்தரில் சமர்த்த! பச்சிமத் திசைக்குள் உத்தமத்
தனிச்சயத்தினில் பி(ள்)ளைப் ...... பெருமாளே.
என்றார் தனிச்சயத் திருப்புகழில்.
குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த
குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே.
என்றார் பொதுத் திருப்புகழில்.
இறையருளில் நாட்டம் மிகுந்து இருந்தால், இறைவனே அது ஈடேற, குருநாதனாகத் திருமேனி தாங்கி வந்து உபதேசம் புரிந்து அருள்வார்.
மலையரசனாகிய இமவானுக்கு,அவன் செய்த தவம் காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச் சிவபெருமான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, இமயமலையில் எழுந்தருளிய போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, எப்புவனத்திலும் உள்ள யாவரும் வந்து கூடினமையால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள் முதல் அனைவரும் ஏங்கி, சிவனை நோக்கி ஓலமிட்டார்கள். சிவபெருமான் அது கண்டு,திருமுறுவல் செய்து, அவர்களது குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை நோக்கி “முனிவனே! இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது. இதனால், உயிர்கள் மிகவும் வருந்துகின்றன. ஆதலால்,நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டில் சென்று பொதியை மலையின்மேல் இருக்கக் கடவாய்; உன்னைத் தவிர இதனைச் செய்ய வல்லவர் வேறு யார் உளர்! நீ ஒருவன் பொதியை மலையைச் சென்று சேர்ந்தால் பூமி சமனாகும்!” என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, “பரம கருணாநிதியாகிய பரமபதியே! அடியேன் யாது குற்றம் செய்தேன்? தேவரீரது திருமணக் கோலத்தைக் காணவொட்டாமல் கொடியேனை விலக்குகின்றீர்; எந்தையே! திருமால் இருக்க, திசைமுகன் முதலிய தேவர்கள் இருக்க, எளியேனை விலக்குவது யாது காரணம்? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள் உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் திருமாலும் உனக்கு நிகராகார்; ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லவன். இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும் முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்திய முனிவர், "பரமபிதாவே! தங்களுடைய திருமணக் கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, திருக் கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலை கொள்ளாமல்,பொதியமலைக்குச் செல்வாய். நாம் அங்கு வந்து நமது திருமணக் கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து தரிசிக்கலாம். நீ நம்மைத் தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில் வருவாயாக” என்று அருளிச் செய்தார்.
அத்தகைய அகத்திய முனிவர்,ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகை மலைக்குச் சென்று முருகளை நோக்கித் தவம் செய்வாயாக. அவ்வாறு செய்யின் உன்னுடைய எண்ணம் நிறைவேறும். அத்தணிகைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும்.அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களையெல்லாம் போக்குவதன்றிப் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும்; மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் எய்தற்கு எண்ணினாலும் மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளை எல்லாம் அத்திருத்த நீராடலால் அடையலாம். அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகாற் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும் துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத் தணிகைமலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ,தொழின்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்தை அடைந்து இன்புறுவார்கள். தணிகைப்பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், கிரியை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி,ஞான சத்திதரன் என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் அம்முருகப் பெருமானேயாவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.
இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக்கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார். வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பல நாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம் உரைத்தருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார்.
என்று, சூர் உயிரைக் குடிக்கும் வேல்இறைவன்
இயம்பிய ஞானமுற்றும் உணர்ந்து,
நன்றுவீறு அன்பில் பன்முறை தாழ்ந்து,
நளினம் ஒத்து அலர்ந்ததாள் நீழல்
ஒன்றியாங்கு அடித்தொண்டு உஞற்றினன்,பன்னாள்
உறைந்து, பின் ஆரியன் அருளால்
மன்றல்சூழ் பொதியம் அடுத்து முத்தமிழை
வளர்த்து வாழ்ந்து இருந்தனன் முனிவன். --- தணிகைப் புராணம்.
அகத்திய முனிவருக்கு, முருகப்பெருமான் அருள் புரிந்த வரலாற்றை, தணிகைப் புராணத்தில் காணலாம்.
அயில் கையில்வெயில் எழ, மயில் மிசை, அக் குக்குடக் கொடி செருக்க, பெருக்கமுடன் வயலி நகர்உறை சரவணபவ ---
வயலூர் என்னும் திருத்தலம் திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி,திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன்,வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால்,அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
கருத்துரை
முருகா! சிவானந்தப் பெருங்கடலில் அடியேன் திளைத்து இருக்க அருள்வாய்
No comments:
Post a Comment