வறுமை வந்து நேர்ந்தால்?
----
ஒருவனிடம் கல்வி அறிவு, ஒழுக்கம் முதலான எத்தனை நலங்கள் இருந்தாலும், செல்வ வளம் இல்லையானால், அவனைத் தாயும் இகழ்வாள். சுற்றத்தார் மதிக்க மாட்டார்கள். எல்லோரும் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். மனைவியும் இகழ்ந்து பேசுவாள்
என்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல்.
மேலான சாதியில் உதித்தாலும் அதில்என்ன?
வெகுவித்தை கற்றும் என்ன?
மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்துஎன்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பால்ஆன மொழி உடையன் ஆய்என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்தசுற் றமும்இ கழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
ஆலாலம் உண்ட கனி வாயனே --- ஆலகால விடத்தை உண்ட, கனிபோலச் சிவந்த திருவாயை உடையவனே! நேயனே --- அன்பு வடிவானவனே!அனகனே --- குற்றம் இல்லாதவனே! அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
பாக்கியம் இலாத போது --- ஒருவனுக்குச் செல்வப் பேறு இல்லாவிட்டால், அவன்,மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன --- உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் அதனால் பயன் இல்லை. வெகுவித்தை கற்றும் என்ன --- மிகுதியான கலைகளைப் படித்து உணர்ந்தாலும் பயன் இல்லை, மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன --- பேரழகுடன் நற்பண்புகள் பொருந்தி இருந்தாலும் பயன் இல்லை, மிகு மானி ஆகில் என்ன --- சிறந்த மானம் உடையவன் ஆனாலும் பயன் இல்லை. பால் ஆன மொழி உடையன் ஆய் என்ன --- இனிய மொழிகளையே பேசுபவன் ஆனாலும் பயன் இல்லை, பார் மீது வீரமொடு ஞானவான் ஆய் என்ன --- உலகிலே வீரமும் அறிவும் உடையவன் என்றாலும் பயன் இல்லை. பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் --- அவனைப் பெற்றெடுத்த தாயும் இயல்பாகவே வெறுப்பாள், வந்த சுற்றமும் இகழும் --- வருகின்ற உறவினரும் அவனை இகழ்வர், அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் --- எல்லோரும் மதிப்பு இல்லாமல் பேசுவார்கள்,
மனைவியும் தூறு சொல்வாள் --- இல்லாளும் குறை கூறுவாள்.
"கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப் பிராட்டி.
இன்மை என ஒரு பாவி, மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்.
என்று திருவள்ளுவ நாயனார் வறுமையின் கொடுமையை உணர்த்தினார்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார்.
"மிடி என்னும் ஒரு பாவி" என்றார் வள்ளல் பெருமான். "மிடி என்று ஒரு பாவி" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடி போகியவா,
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே!
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. --- கந்தர் அனுபூதி.
அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;
பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார்
பண்டம் இருவர் கொளல். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
போரிடுகின்ற வேல் போன்ற கண்ணை உடையவளே!, அருள் அருள் உள்ளம் கொண்ட பெரியோர்களும்,அல்லாத பொல்லாதவர்களும், யாராக இருந்தாலும்,பொருள் உடையவராக இருந்தால், அவரைப் புகழ்ந்து பேசாதவர் ஒருவரும் இல்லை. அது எப்படிப்பட்டது என்றால், புண்ணியம் உடையவர்களின் பொருளை, ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொள்ள முயல்வது போன்றது ஆகும்.
புண்ணியம் உள்ளவர் இடத்தில் பொருள் சேரும். அந்தப் பொருளைப் போட்டி போட்டுக் கொள்ளுதல் போல, பொருள் உடையவரைப் பலரும் போட்டியிட்டுப் புகழ்ந்து பேசுவர்.
இனிய சொல்லைச் சொல்பவன் ஆகவும், பணிவு உடையவனாகவும் இருந்தாலும், அவனிடத்தில் பொருள் இல்லை என்றால் யாரும் வாயைக் கூடத் திறக்கமாட்டார்கள். அப்படியே வாயைத் திறந்தாலும்,கடும் சொல்லைத் தான் பேசுவார்கள். என்ன சொன்னாலும், இந்த உலகமானது பொருள் உடையவன் காலின் கீழ்தான் அடங்கி இருக்கும். ஆதலினால், இந்த உலக நிலையானது பையத்தியக்காரத் தனத்தை உடையது அல்லாமல், அறிவு உடையது அல்ல என்கின்றார், குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்....
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்து உடைய அல்ல பிற. --- நீதிநெறி விளக்கம்.
ஔவையாரைக் கேட்டால், "ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாகவே இருந்தாலும், அவன் கையில் செல்வம் மட்டும் இருக்குமானால், அவனை எல்லாரும் சென்று எதிர்கொண்டு உபசரிப்பார்கள். கல்வி அறிவில் மிக்கவனாக இருந்தாலும், அவனிடத்தில் செல்வம் இல்லையானால், அவனை அவன் மனைவியும் விரும்ப மாட்டாள். அன்பு செலுத்த வேண்டிய, பெற்றெடுத்த தாயும் அவனை விரும்பமாட்டாள். அவனது வாயில் இருந்து பிறக்கும் சொல் எதுவும் எடுபடாது. எல்லாரும் அவனை ஒதுக்கியே வைப்பர்" என்கின்றார்.
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்,
செல்லாது அவன்வாயில் சொல். --- நல்வழி.
சிவபெருமான் திருக்கயிலாயத்தில் திருவுலாப் போகின்றார். அது கண்கொள்ளாக் காட்சி. அவரைக் காண, பெண்கள் எல்லாரும்,அவரவர் வயதுக்கு ஏற்ப,தம்மை அலங்கரித்துக் கொண்டு செல்கின்றார்கள். என்னதான் இயற்கை அழகு இருந்தாலும், ஆடை அணிகலன்களால் ஒப்பனை செய்துகொள்ளவேண்டும் அல்லவா? இந்தக் காட்சியைச் சொல்லி,"கல்லாதவனே ஆயினும் பொருள் உடையவனை எல்லாரும் மதிப்பர்.கற்றவனே ஆயினும் பொருள் இல்லாதவனை ஒருவரும் மதியார்" என்னும் திருக்குறள் கருத்தை வைத்து, பதினோராம் திருமுறையில் வரும்,திருக்கயிலாய ஞான உலாவில் சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளுகின்றர்.
"இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு என்னும் --- சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள்,அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள்..." --- திருக்கயிலாய ஞானஉலா.
இதன் பொருள் ---
இயற்கை அழகு இருந்தாலும்,ஆடை அணிகலன்களாகிய செயற்கை அழகு இல்லாவிடில்,மற்ற மகளிர் இகழ்ச்சி செய்வார்கள்என்று கருதி ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள்.
வள்ளல்பெருமான் நெஞ்சு அறிவுறுத்தலாக, பின்வருமாறு பாடியுள்ளதையும் காணலாம்....
நேரா அழுக்குத் துணி ஆகில், உன்தனை நேரில்கண்டும்
பாராதவர் என நிற்பார், உடுத்தது பட்டு எனிலோ,
வாராது இருப்பது என்? வாரும்என்பார், இந்த வஞ்சகர்பால்
சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனைச் சேர் விரைந்தே. --- திருவருட்பா.
எனது நல்ல நெஞ்சமே, நீ உடுத்தது அழுக்குத் துணியாக இருக்குமானால்,உன்னைக் கண்ணார நேரில் கண்டாலும் உன்னைப் பார்க்காதவர் போல் ஒதுங்கி நிற்பர்.நீ உடுத்திருப்பது உயர்ந்த பட்டாடையாக இருக்குமானால், நீஒதுங்கிச் சென்றாலும்,உன்னிடம் தாமே வலிய வந்து "நீங்கள் வாராது இருப்பது ஏன்? வருக" என்று அழைப்பர். இத்தகைய வஞ்ச நெஞ்சையுடைய உலகினரிடத்தில் செல்வதையும்,சேர்வதையும் விட்டுவிட்டு,தனியே திருவொற்றியூர்ப் பெருமானை விரைந்து சென்று சேர்வது நன்மையைத் தரும் என்று நீ அறிவாயாக.
பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார்; நற் பொருட்பயனாம்
மெய் விரிப்பார்க்கு இரு கைவிரிப்பார்; பெட்டி மேவு பணப்
பை விரிப்பார், அல்குல் பை விரிப்பார்க்கு, அவர் பால் பரவி
மை விரிப்பாய், மனமே! என்கொலோ நின் மதியின்மையே". --- திருவருட்பா.
இதன் பொருள் ---
எனது மனமே! இந்த உலகத்தில் பொய்யை விரித்துப் பேசுவகின்றவர்க்கு, பொருளை நிறையத் தருவார். நல்ல பொருள் பொதிந்த உண்மைப் பொருளை விரித்துச் சொல்பவர்க்கு, இருகைகளை விரித்து இல்லை என்பார். அல்குல் பையை விரிக்கின்ற பரத்தையர்க்கு, பெட்டியில் உள்ள பணப்பையை எடுத்து விரித்து, அதில் உள்ள பொருளைத் தருவார். இப்படிப்பட்டவர்களைப் புகழ்ந்து துன்பப்படுவது உனது அறிவின்மை ஆகும்.
காயார் சரிகைக் கலிங்கம் உண்டேல், இக் கலிங்கம்கண்டால்
நீயார்? நின் பேர்எது? நின்ஊர் எது? நின் நிலை எது? நின்
தாய் யார்? நின் தந்தை எவன்? குலம் ஏது? என்பர், சாற்றும் அவ் வல்
வாயார் இடஞ்செலல் நெஞ்சே! விடைதர வல்லை அன்றே". --- திருவருட்பா.
இதன் பொருள் ---
சரிகையோடு கூடிய அழகான துணியை நீ உடுத்து இருந்தால், அந்தத் துணியைக் கண்டு மயங்கி, "நீ யார், உனது பெயர் என்ன? உனது ஊர் எது? உனது நிலை என்ன? உனது தாய் யார்? உனது தந்தை எவன்?" என்றெல்லாம் உசாவுவார்கள். பேச்சுத் திறமை மட்டுமே உடைய (உள்ளத்தில் அன்பு இல்லாத) இவர்களிடம் செல்லாதே. அவர்களை விட்டு விலகுவாயாக.
திருவொற்றியூர்ப் பெருமானிடம் சென்றால்,
சீர் தருவார், புகழ்ப் பேர் தருவார், அருள் தேன்தருவார்,
ஊர் தருவார், மதியும் தருவார், கதியும் தருவார்,
ஏர் தருவார்,தருவார் ஒற்றியூர் எம் இறைவர்,அன்றி
யார் தருவார் நெஞ்சமே! இங்கும் அங்கும் இயம்புகவே.
எனது நெஞ்சமே, திருவொற்றியூர் இறைவர் நமக்குச் சீரும் பேரும் புகழும் தருவார். ஊர்களையும் தருவார். திருவருளாகிய தேனும், சீர்த்த மதியும், உயர்ந்த கதியும் அருள்வார். மேன்மேலும் வளர்ச்சியும் உண்டு பண்ணுவார்.இவைகளை எல்லாம் இந்தப் பிறவியிலும், மறுபிறவியிலும் இவரைப்போல் தருபவர் யார்? இவற்றை எல்லாம் எண்ணி என்னோடு இசைந்து ஒழுகுவாயாக.
"பொருள்கை உண்டாய்ச் செல்லக் காணில்,
போற்றி என்று ஏற்று எழுவர்;
இருள்கொள் துன்பத்து இன்மை காணில்,
என்னே என்பாரும் இல்லை;
மருள்கொள் செய்கை அசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே. --- நம்மாழ்வார்.
இதன் பொருள் ---
உலகத்தவர் ஒருவனுடைய கையிலே பொருள் இருப்பதைக் கண்டால், "வாழ்க, வாழ்க" என்று புகழ்ந்து, அப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் வரை கூட இருப்பர். அறிவின்மையை உண்டாக்கி, வருத்தத்தைத் தரக்கூடிய வறுமை வந்துவிட்டாலோ, "ஐயோ" என்று இரக்கப்படுவதற்கு யாரும் அங்கே இருக்கமாட்டார்கள். ஆகவே, இந்தப் போலி உறவினரை நம்பக் கூடாது. அஞ்சத்தக்க கொடுமை செய்கின்ற அரக்கர்களை அழிப்பதற்கு என்றே வடமதுரையில் வந்து தோன்றிய கண்ணனுக்கு அடியவர்கள் ஆகி, அவன் அருள் பெற்று உய்வு பெறுவதை அன்றி வேறு பாதுகாவல் இல்லை.
திருமண நிகழ்வு என்றால், ஆணும் பெண்ணும், அவரவர் நிலைக்கு ஏற்பத் தம்மை அலங்கரித்துக் கொண்டுதான் செல்வார்கள். பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணத்துக்கு ஆடை அணிகலன்கள் ஏதும் இன்றி ஔவையார் சென்றார். திருமண நெரிசலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டுத் திரும்பினார். பாண்டியன் வீட்டுத் திருமணத்தில் கலந்துக் கொள்ளவேண்டும், நல்ல உணவு உண்ணவேண்டும், பரிசுப் பொருள்களைப் பெறவேண்டும் என்னும் ஆவலோடு சில புலவர்கள் வருகின்றார்கள். எதிரிலே வருகின்ற ஔவைப் பிராட்டியாரைக் கண்டு, "மூதாட்டியே! பாண்டியன் வீட்டுத் திருமணம் சிறப்பாக நடந்ததா? உயர்ந்த உணவுகளைப் படைப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் இனிது உண்டீர்களா?" என்று கேட்கிறார்கள்.
ஔவையார், அவர்களைப் பார்த்து, "ஆமாம், உண்டேன், உண்டேன், உண்டேன்" என்று மும்முறை கூறினார். மூன்று முறை கூறவும், "உணவு பலமா?" என்றார்கள். ஔவையார், "தெளிந்த தமிழிலே வல்ல பாண்டியனுடைய திருமணத்திலே நான் உண்டதன் பெருமையைச் சொல்லவும் வேண்டுமா?"என்று சொல்லி, பின்வரும் பாடலைப் பாடினார்.
வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள், --- அண்டி,
நெருக்கு உண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே
சுருக்கு உண்டேன், சோறு கண்டிலேன்.
வளமை மிக்க தமிழை ஆராய்ந்த பாண்டியனின் திருமணத்தில் நான் விருந்து உண்ட சிறப்பைச் சொல்லுகின்றேன், கேட்பீர்களாக. விருந்து உண்ண எண்ணி, கூட்டத்தில் அருகில் சென்றபோது நெருக்கப்பட்டேன். இடித்துத் தள்ளப்பட்டேன். நீண்ட நேரம் பசியோடு இருந்த காரணத்தால் வயிறு சுருங்கப் பெற்றேன். உணவை உண்ணவில்லை.
ஆடை, அணிகலன்களுக்கும், செல்வச் சிறப்புக்கும் மிக்க மரியாதையைத் தருகின்ற உலகத்தில், ஔவையார் போன்ற அருந்தமிழ்ப் புலவருக்கு நேர்ந்த கதி, இன்றும் தான் தொடர்கின்றது. எளிமையாக இருந்தால் யாரும் மதிப்பதில்லை. பகட்டு தேவைப்படுகின்றது. அருமைத் தமிழில் பேசினால் போதாது, நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள். எங்கு சென்றாலும், எதற்குச் சென்றாலும், பையில் பணம் இல்லாமல் செல்வதால் பயனில்லை.
இதனால்தான், "இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு" என்றார் திருவள்ளுவ நாயனார். செல்வம் இல்லையானால், மதிப்பு இல்லை என்பதற்காக, மதிப்பும் மரியாதையும் வேண்டி, அறம் அல்லாத வழிகளில் பொருளை ஈட்டுதல் கூடாது.
No comments:
Post a Comment