23. மன்று பறித்து உண்ணேல்.
(பதவுரை) மன்று --- நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து --- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் --- உண்டு வாழாதே.
(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
'மண் பறித்து உண்ணேல்' என்பது பாடமாகக் கொண்டால், பிறர் நிலத்தைக் (சொத்தைக்) கவர்ந்து வாழாதே என்று பொருளாகும்.
அறமன்றத்துக்கு உரிய ஒழுக்க நெறியிலும், வழக்கு நெறியிலும் வழுவாது, நீதியை நிலைநாட்டி வைத்தற்கும், நீதிநெறியில் வழுவியோர்க்குத் தக்க கழுவாய் என்று சொல்லும்படியாக தண்டனை விதிப்பதற்கும் உரியது அறமன்றம்.
பறித்தல் என்பது ஒருவருடைய உடன்பாடு இல்லாமலும், வலிமையாலும், வஞ்சத்தாலும் பொருளையும் உடைமையையும் கவர்ந்து கொள்ளுவது ஆகும்.
உண்டல் என்பது அனுபவித்தலைக் குறிக்கும்.
நன்றிப் பயன் தூக்கா நாண்இலியும், சான்றோர்முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், - நன்றி இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், இம்மூவர்
எச்சம் இழந்து வாழ்வார்.
என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "திரிகடுகம்" அறிவுறுத்தியபடி, மக்களை இழ்ந்து வருந்தி உயிர்வாழ்பவர் என்று பழிக்கப்பட்டவர்களுள், சான்றோர் முன்னிலையில் அறநிலையத்தில் பொய்ச் சொல்லைச் சொல்லுகின்றவனும் அடங்குவான் என்பதைக் கொண்டு இந்தப் பாவத்தின் கொடுமை அறியப்படும்.
இது கருதியும், "ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை" எனத் திருவள்ளுவ நாயனார் அருளினார் என்றும் கொள்ளலாம்.
பேய்கள் இன்னின்னார் என்று காட்டும் குமரேச சதகப் பாடலில், இலஞ்சப் பொருளில் ஆசை வைத்து ஒருவனுக்குத் துன்பம் விளைவிப்பவன், பிறரால் இழிவாகப் பேசப்படும் பேய் என்று சொல்லப்பட்டு உள்ளது.
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில், முகம்
கடுகடுக்கின்ற பேயும்;
கனம் மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
கண் விழிக்காத பேயும்;
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து
அகப்பட்டு உழன்ற பேயும்;
ஆசை மனையாளுக்கு நேசமாய், உண்மைமொழி
ஆனதை உரைத்த பேயும்;
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களைச் சற்றும்
எண்ணாது உரைத்த பேயும்;
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு, ஒருவற்கு
இடுக்கண் செய்திட்ட பேயும்,
மடமனை இருக்கப் பரத்தையைப் புணர்பேயும்,
வசைபெற்ற பேய்கள் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கடன் உதவு பேர்வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் --- இடுக்கு வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவியவர் வந்து தாம் முன்னே கொடுத்த கடனைக் கேட்கும்போது முகத்தைச் சுளிக்கின்ற பேய்க் குணம் பொருந்தியவர்களும், கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண்விழிக்காத பேயும் --- மேன்மையைத் தரும் பெரும் செல்வம் கிடைத்தவுடன் செருக்குக் கொண்டு, தன்னைக் காண வந்தவர்களைப் பார்த்தும் பாராதது இருக்கின்ற பேய்க் குணம் படைத்தவர்களும், அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் --- பகைவன் சொல்லை ஒழுங்காக நம்பி, பின்னர் சிக்கி வருந்துகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும், ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் --- காதல் மனைவியின் மேலுள்ள அன்பு காரணமாக, உண்மைச் செய்தியை அவளிடம் உரைத்த பேய்க் குணம் கொண்டவர்களும், இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் --- பிறருக்குத் துன்பம் புரியாத நல்லோர்களையும் பெரியோர்களையும் சிறிதும் மதியாமல் இகழ்ந்து பேசிய பேய்க் குணம் டைத்தவர்களும், இனிய பரிதானத்தில் ஆசை கொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் --- இனியதாகத் தோன்றும் இலஞ்சப் பொருளின் மேல் ஆசைப்பட்டு, ஒருவனுக்குத் தீமையைச் செய்யும் பேய்க் குணம் படைத்தவர்களும், மடமனை இருக்கப் பரத்தையைப் புணர் பேயும் --- இளமைப் பருவம் உடைய மனைவி இருக்கவும், விலைமாதைக் கூடுகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும், வசைபெற்ற பேய்கள் அன்றோ --- பிறரால் இழிவாகப் பேசப்படுகின்ற பேய்கள் அல்லவா?
கருத்து --- எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லாமல் தான் நினைத்தபடியே இருப்பனைப் பேய் என்று உலகத்தார் சொல்லுவர். பேய்களில் எல்லாம் இழிந்த பேய்கள் என்று சிலரை இந்தப் பாட்டில் காட்டினார் ஆசிரியர். கடன் கொடுத்தவனிடம், நன்றி உணர்வோடு திருப்பிக் கொடுக்கவேண்டும். முடியாத போது இனிமையாகப் பேசவேண்டும். செல்வம் வந்தாலும் மற்றவருடன் பணிவுடன் நடந்து கொள்ளல் வேண்டும். "செல்வம் வந்து உற்ற காலை, தெய்வமும் சிறிது பேணார்" என்பது விவேக சிந்தாமணி. அப்படிப்பட்டவருக்கு எதிரில் வருபவர் யார் என்று தெரியாது. செருக்கு அவ்வளவுக்கு மிஞ்சி நிற்கும். பகைவர் பேச்சிலே மறந்தும் நம்பிக்கை வைத்துப் பின்னர் ஏமாறல் ஆகாது. நல்லோரையும் பெரியோரையும் இகழ்தல் கூடாது. இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிறருக்குத் தீமை செய்தல் ஆகாது. விலைமாதர் நட்புக்கூடாது. ஆசை மனைவியிடம் உண்மையை உரைக்கக் கூடாது என்றார். மனைவியாய் இருந்தும், அதற்கேற்ப நடவாதவர்களும் உண்டு என்பதால், இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் பொருந்தும்.
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை. --- நாலடியார்.
தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.
"பொய் ஒன்று நிதி கோடி வரினும் வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும்" என்று அறப்பளீசுர சதகம் கூறும். பொய்யைச் சொல்வதால் கோடிக் கணக்கில் பொருள் வரும் என்றாலும், நீதியை நாடித் தொடுக்கப்பட்டு உள்ள வழக்கு அழிந்துபோகுமாறு சொல்லக் கூடாது.
அறமன்றத்தில் நடுவுநிலையோடு இருந்து பணிபுரிதல் வேண்டும் என்பதைப் பின்வரும் பாடல் அறிவுறுத்தும்.
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள்
வரும் என்றும், நேசர் என்றும்
வன்பகைஞர் என்றும், அயலோர் என்றும், மிக்கதன
வான் என்றும், ஏழை என்றும்
இந்த வகையைக் குறித்து, ஒருபட்ச பாதம்ஓர்
எள்ளளவு உரைத்திடாமல்;
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச் சபா ச(ம்)மதமாம்,
முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மம் அதுகாண்;
முனைவீமன் உடல்பாதி மிருகம் தனக்கு என்று
முன்தருமர் சொன்னது அ(ல்)லவோ?
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்து அருள் குழந்தைவடிவே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
அன்று உமை மைந்தன் என்று முலைப்பால் கொடுத்திட வளர்ந்தருள் குழந்தை வடிவே! --- முற்காலத்தில் உமையம்மை தன் மகன் என்று முலைப்பால் அளிக்க வளர்ந்தருளிய குழந்தைவேலரே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் --- தன்னிடத்தில் வந்த வழக்கிலே நல்ல இலஞ்சப் பொருள்கள் கிடைக்கும் எனவும், நேசர் என்றும் --- நண்பர்கள் எனவும், வன் பகைஞர் என்றும் --- கொடிய பகைவர்கள் எனவும், அயலோர் என்றும் --- பழக்கமில்லாதவர்கள் எனவும், மிக்க தனவான் என்றும் --- பெரிய செல்வன் எனவும், ஏழை என்றும் --- வறியவன் எனவும், இந்த வகையைக் குறித்து ஒரு பட்சபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் --- இத்தகைய நிலையைக் குறித்து விருப்பு வெறுப்புக்கள் எள் அளவும் கூறாமல், எண்ணம் உடனே இலிகித புத்தியொடு --- (நடுநிலை) எண்ணத்தை மனதில் கொண்டு, எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட சான்றுகளோடு, சாட்சிக்கும் ஏற்க --- சாட்சி கூறியதற்கும் தக்கபடி, சபா ச(ம்)மதம் ஆம் --- அவையோர் ஒப்பும் முறையில், முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல் --- முதலிலே தன்னை சமன் செய்துகொண்டு, இருசார்பிலும் சமப்படுத்திய துலாக்கோல் போல இருந்து நடுவுநிலையோடு, மொழிந்திடில் தர்மம் அது --- முறை கூறுவது அறமாகும், முன் முனை வீமன் உடல்பாதி மிருகந்தனக்கு என்று தருமர் சொன்னது அலவோ? - முற்காலத்தில் வலிய வீமனுடைய பாதி உடம்பு புருடா மிருகத்துக்குத் தான் எனத் தருமபுத்திரர் கூறியது அறம் அன்றோ?
தருமர் நீதிவழங்கிய கதை
தருமபுத்திரன் செய்த வேள்வி ஒன்றுக்குப் ‘புருடா மிருகத்தை அழைத்து வர பீமன் சென்றான். அது ஓர் ஒப்பந்தம் பேசியது. பீமன் விரைந்து முன்னே செல்ல வேண்டும். புருடா மிருகம் பின்னே வரும். அது வீமனைப் பற்றுவதற்கு முன்னாலே அவன் தன் நாட்டின் எல்லையைத் தொட்டுவிட வேண்டும். இதற்கிடையிலே அது வீமனைப் பிடித்துவிட்டால், அவன் அதற்கு உணவாகவேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு பீமன் இசைந்தான், ஆனால், அவன் தன் நாட்டின் எல்லையிலே ஒரு காலை வைத்தவுடன் அது அவனைப் பற்றிக்கொண்டது. வீமன் தன்காலைத் தன் எல்லையில் வைத்து விட்டதால் தன்னை அது உணவாக்கிக் கொள்ளலாகாது என்றான். ஆனால், அவ் விலங்கு மற்றொரு காலை அவன் எல்லையிலே வைக்கவில்லை என்று வற்புறுத்தியது. இருவரும் தருமபுத்திரரிடம் சென்று வழக்கு உரைத்தனர். அவர் நடுநிலை தவறாமல், தனது தம்பி என்றும் பாராமல், பீமனுடைய பாதி உடம்பு விலங்கிற்கு உரியதுதான் என்று தீர்ப்புக் கூறினார். இவ்வாறு பாரதக்கதை கூறும்.
அறமன்றத்தில் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வோருக்கு என்ன கதி விளையும் என்பது பற்றி "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து
உரைப்போர் மலைக் குரங்காம்;
உயர்வெள் எருக்குடன் முளைத்துவிடும் அவர்இல்லம்;
உறையும் ஊர் பாழ்நத்தம் ஆம்;
தாரணியில் இவர்கள்கிளை நெல்லிஇலை போல்உகும்;
சமானமா எழுபிறப்பும்
சந்ததி இ(ல்)லாது உழல்வர்; அவர் முகத்தினின் மூத்த
தையலே குடியிருப்பாள்;
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள்;
பழித்த துர் மரணம் ஆவார்;
பகர் முடிவிலே ரவுரவ ஆதி நரகத்து, அனு-
பவிப்பர் எப்போதும் என்பார்
வாரமுடன் அருணகிரி நாதருக்கு அனுபூதி
வைத்து எழுதி அருள் குருபரா!
மயில்ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா --- அன்புடன் அருணகிரியாருக்கு அநுபூதி நூலை எழுதும் நிலையை அருளிய மேலான குருநாதரே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
ஓர விவகாரம் ஆ(க) வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலைக்குரங்கு ஆம் --- ஒருதலை வழக்காக வந்தவர்களுடைய முகத்தைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுவோர் மலைக்குரங்கு ஆவர்; அவர் இல்லம் உடன் உயர் வெள் எருக்கு முளைத்து விடும் --- அவர் வீட்டிலே உடனே உயரமான வெள் எருக்கஞ் செடிகள் தோன்றிவிடும்; உறையும் ஊர்பாழ் நத்தம்ஆம் --- அவர்கள் குடியிருக்கும் ஊரும் பாழான நத்தமாகிவிடும். தாரணியில் இவர்கள் கிளை நெல்லி இலை போல் உகும் --- உலகிலே இவர்களுடைய உறவினர் நெல்லியின் இலைபோலப் பிரிந்து விடுவார்கள்; சமானமாம் எழுபிறப்பும் சந்ததி இ(ல்)லாது உழல்வர் --- அவர்கள் எடுக்கும் ஏழுபிறப்பிலும் ஒன்றுபோல் கால்வழி இல்லாமல் வருந்துவர்; அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் --- அவர்களுடைய முகத்திலே மூதேவியே வாழ்ந்திருப்பாள்; புவிமங்கையும் இவர் பாரம் என்று நடுங்குவாள் --- நிலமகளும் இவர்களைத் தாங்கமுடியாமல் அஞ்சுவாள்; பழித்த துர்மரணம் ஆவார் --- பிறர் பழிக்கும்படி கெடுதியான மரணத்தைப் பெறுவர்; பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து எப்போதும் அனுபவிப்பர் என்பர் --- இவ்வாறு இழித்துக் கூறும் நிலைக்கு ஆளாகி, முடிவில், பின் எக்காலத்தும் இரவுரவம் முதலான நரகங்களிலேயை கிடந்து துன்பங்களை அனுபவிப்பர் என்று பெரியோர் கூறுவர்.
பரிதானம் என்றாலும், இலஞ்சம் என்றாலும், கைக்கூலி என்றாலும் ஒன்றுதான். கைக்கூலி பெறுதல் எத்தகைய கொடியது என்பதைக் காண்போம்...
கைக்கூலி வாங்குவோர் நடுநிலை தவறியவர்.
அவரிடத்தில் சென்றால் கேடு விளைவது உறுதி.
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்பால் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல், வாடிய
எலிகள் மார்ச்சாலத்தின் இடத்தும், மாக்கள்வெம்
புலியிடத்தினும் சரண் புகுதல் ஒக்குமே. --- நீதிநூல்.
அரசியல் முதன்மை வலியினால் கைக்கூலி வாங்கும் கொடிய மக்களிடம் சென்று எளியவர் வழக்கைச் சொல்லுவது, பசியால் வாடிய எலிகள் பூனையிடமும், விலங்குகள் புலியினிடத்தும் போய் அடைக்கலம் புகுவதை ஒக்கும்.
கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது
அல்லினில் களவு செய்பவரை வெஞ்சிறை-
யில் இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே!
எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால்
கொல்லினும் போதுமோ? கொடியர் தம்மையே. --- நீதிநூல்.
இரவுக் காலங்களில் களவு செய்யும் கள்வரைச் சிறையிடும் முறைமன்ற நடுவர்களே! பகற்காலத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குகின்றனர். இக் கொடியவரைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் பொருந்திய தண்டனை ஆகுமா?
கைக்கூலியாக வந்த பொருள்
கனலில் இட்ட வெண்ணெய் போல் அழியும்.
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோல்,
செயிர் உற நீதியைச் சிதைத்தோர் தீயன், சாண்
வயிறினை வளர்த்திட வாங்கும் மாநிதி
வெயில்உறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே. --- நீதிநூல்.
வேலியே பயிரை அழிப்பதுபோல் முறையைச் செய்யும் தலைவன் அதைக் கெடுத்து, சாண்வயிறு வளர்ப்பதற்குக் கைக்கூலி வாங்கித் தீயவன் ஆகின்றான். அத் தீயோன் வாங்கும் பெரும்பொருளும் வெயிலில் பொருந்திய வெண்ணெய்போல் கெடும்.
கைக்கூலி பெறுபவன் வேசையை விடவும் கீழானவன்.
காசு அதிகம் தனைக் கருதி, வாதம் தீர்ந்து
ஏசுற ஏழைகட்கு இடர் செய்வோன் தனம்
மீசரங் குறைவு பாராது மேவிடும்
தாசியரினும் இழி தகவு உளான் அன்றோ. --- நீதிநூல்.
மிகுந்த கைக்கூலி தருபவர்க்கு வாசியாக வழக்கைத் தீர்த்து, அதனால் ஏழைகள் வயிறெரிந்து ஏசும்படி அவர்களுக்குத் துன்பம் செய்வோன், உயர்வு தாழ்வு கருதாது பணம் ஒன்றே கருதிக் கூடுகின்ற வேசையரை விடவும் இழிந்தவன் ஆவன்.
எனவே, "மன்று பறித்து உண்ணேல்" என்று சுருங்கச் சொல்லிப் பல உண்மைகளை அறிவுறுத்திய ஔவைப் பாட்டியின் திருவடிகளை வணங்கி, அவர் காட்டிய நெறியில் நின்று உயர்கதி அடைவோம்.
No comments:
Post a Comment