விஜயமங்கலம் --- 0944. கலக சம்ப்ரமத்தாலே

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கலக சம்ப்ரம (விஜயமங்கலம்)

 

முருகா! 

தேவரீரது திருவடிகளை எப்போதும் மறவேன்.

 

 

தனன தந்தனத் தானான தானன

     தனன தந்தனத் தானான தானன

     தனன தந்தனத் தானான தானன ...... தனதான

 

 

கலக சம்ப்ரமத் தாலேவி லோசன

     மலர்சி வந்திடப் பூணார மானவை

     கழல வண்டெனச் சாரீரம் வாய்விட ...... அபிராமக்

 

கனத னங்களிற் கோமாள மாகியெ

     பலந கம்படச் சீரோடு பேதக

     கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல்

 

செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர

     நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்

     செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந்

 

தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி

     லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்

     திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே

 

உலக கண்டமிட் டாகாச மேல்விரி

     சலதி கண்டிடச் சேராய மாமவ

     ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்

 

உணர்சி றந்தசக் ராதார நாரணன்

     மருக மந்திரக் காபாலி யாகிய

     உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா

 

விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென

     இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்

     விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய .....இளையோனே

 

விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய

     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய

     விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கலக சம்ப்ரமத்தாலேவிலோசன

     மலர் சிவந்திட,பூண் ஆரம் ஆனவை

     கழல,வண்டு எனச் சாரீரம் வாய்விட,...... அபிராமக்

 

கன தனங்களில் கோமாளம் ஆகியெ,

     பல நகம்படச் சீரோடு,பேதக

     கரணமும் செய்து உள் பால்ஊறு தேன்இதழ் ...... அமுது ஊறல்

 

செலுவி,மென்பணைத் தோளோடு தோள்பொர,

     நிலை குலைந்துளைத்துர் ஆகும் ஆருயிர்

     செருகு உந்தியில் போய் வீழும் மால்உடன் ......அநுராகம்

 

தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில்

     உருகி,மங்கையர்க்கு ஆளாகி,ஏவல்செய்-

     திடினும்,நின் கழல் சீர்பாதம் நான் இனி.....மறவேனே.

 

உலக கண்டம் இட்டு ஆகாச மேல்விரி,

     சலதி கண்டிடச் சேர்யம் ஆம்அவர்

     உடன் மடிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவுஆயும்,

 

உணர் சிறந்த சக்ராதார நாரணன்

     மருக! மந்திரக் காபாலி ஆகிய

     உரக கங்கணப் பூதஈசர் பாலக! ...... வயலூரா!

 

விலை தரும் கொலைப் போர்வேடர் கோ என,

     இனையும் அம் குறப் பாவாய்வியாகுலம்

     விடுவிடு என்றுகைக் கூர்வேலை ஏவிய.....இளையோனே!

 

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய

     விரைசெய் பங்கயப் பூ ஓடை மேவிய

     விஜயமங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            உலக கண்டம் இட்டு---  உலக்கையைத் துண்டு துண்டுகளாக்கிப் பொடி செய்து,

 

            ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்--- மேலே விரிந்துள்ள வானத்தினை கீழ் உள்ள நடுக் கடலில் (அப்பொடியானது) சேரும்படியாகச் செய்தும்,

 

ஆயம் ஆம் அவர் உடன் மடிந்திட--- ஆயர் கூட்டத்தினர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து பட,

 

கோபாலர் சேரியில் மகவு ஆயும்--- பசுக்களைக் காக்கின்ற இடையர்கள் வாழுகின்ற சேரியில் குழந்தையாகவும்,

 

உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக--- மெய்ஞ்ஞானம் சிறந்த சக்ராயுதத்தைத் திருக்கையில் ஏந்தியும் இருந்த நாராயணரின் திருமருகரே!

 

            மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூத ஈசர் பாலக--- (திருவைந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்பிரம கபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும்பாம்பைத் திருக்கையில் கங்கணமாகக் கொண்டவரும்பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் திருக்குழந்தையே!

 

வயலூரா--- வயலூரில் எழுந்தருளி இருப்பவரே!  

 

            கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என--- கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்க, (அதைக் கண்டு)

 

இனையும் அம்குறப் பாவாய்--- வருந்துகின்ற குறமகளே!

 

வியாகுலம் விடுவிடு என்று--- உனது வருத்தத்தை விடு என்று அருளி,

 

கைக் கூர் வேலை ஏவிய இளையோனே--- திருக்கையில் ஏந்தியுள்ள வேலினை (வேடர்கள் மீது) விடுத்து அருளிய இளையவரே!

 

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய--- பெருமை மிக்க வண்டுகள் நல்முயற்சியுடன் தேசி என்னும் இராகத்தைப் பாடுகின்,

 

விரைசெய் பங்கயப் பூ ஓடை மேவிய--- நறுமணம் பொருந்திய தாமரை மலர்கள் உள்ள ஓடைகள் நிறைந்துள்ள,

 

விஜயமங்கலத் தேவாதி தேவர்கள் பெருமாளே ---விஜயமங்கலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்தேவாதி தேவர்களின் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!

 

            கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட--- சேர்க்கையால் உண்டான மகிழ்ச்சிக் களிப்பினால் கண்மலர் சிவக்கவும்,

 

பூண் ஆரம் ஆனவை கழல--- அணிந்துள்ள முத்துமாலைகள் கழலவும்,

 

வண்டு எனச் சாரீரம் வாய்விட--- வண்டு போன்ற குரலை வாயில் இருந்து வெளிப்படுத்தவும்

 

அபிராமக் கன தனங்களில் கோமாளம் ஆகியெ--- அழகிய பருத்து தனங்களில் மகிழ்ந்து இருந்து,

 

பலநகம் பட--- பலவிதமாக நகக் குறிகள் உண்டாக,

 

சீரோடு பேதக கரணமும் செய்து --- சிறந்த வெவ்வேறு விதமான புணர்ச்சிகளைச் செய்து,

 

உள் பால் ஊறு தேன் இதழ் அமுது ஊறல் செலுவி--- உள்ளே பால் போலவும்,தேன் போலவும் வாயிதழில் ஊறுகின்ற எச்சிலை உள்வாங்கி,

 

மென் பணைத்தோளோடு தோள் பொர--- மென்மையான பணைத்த தோள்களோடு தோள்கள் பொருந்தி இருக்க,

 

நிலை குலைந்து--- (அந்தக் களிப்பினால்) எனது நிலைமை தளர்ந்து,

 

ஏர் ஆகும் ஆருயிர் இளைத்து--- பொலிவு பெறவேண்டிய எனது அழகிய அரிய உயிர்இளைத்துப் போய்,

 

செருகும் உந்தியில் போய் வீழும் மால் உடன்--- பொருந்திய கொப்பூழ்ச் சுழியின் மீது போய் விழுகின்ற மயக்கத்துடன்,

 

அநுராகம் தெரி குமண்டை இட்டு--- காமப்பற்றால் உண்டான மகிழ்ச்சியால் கூத்தாடி,

 

ஆராத சேர்வையில் உருகி --- மனநிறைவு பெறாத சேர்க்கையால் உள்ளம் உருகி,

 

மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு(ம்)--- விலைமாதர்க்கு ஆளாகிஅவர்களுக்கு ஏவல் செய்து கொண்டு இருந்தாலும்,

 

நின் கழல் சீர் பாத(ம்) நான் இனி மறவேனே --- தேவரீருடைய வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளை அடியேன் இனி எப்போதும் மறக்கமாட்டேன். 

 

பொழிப்புரை

 

            உலக்கையைத் துண்டு துண்டுகளாக்கிப் பொடி செய்துமேலே விரிந்துள்ள வானத்தினை கீழ் உள்ள நடுக் கடலில் அப் பொடியானது சேரும்படியாகச் செய்தும்ஆயர் கூட்டத்தினர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து படபசுக்களைக் காக்கின்ற இடையர்கள் வாழுகின்ற சேரியில் குழந்தையாக இருந்மெய்ஞ்ஞானம் சிறந்த சக்ராயுதத்தைத் திருக்கையில் ஏந்திய நாராயணரின் திருமருகரே!

 

            திருவைந்தெழுத்து மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்பிரம கபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும்பாம்பைத் திருக்கையில் கங்கணமாகக் கொண்டவரும்பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் திருக்குழந்தையே!

 

வயலூரில் எழுந்தருளி இருப்பவரே!  

 

            "கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்கஅதைக் கண்டு வருந்துகின்ற குறமகளே!உனது வருத்தத்தை விடு" என்று அருளிதிருக்கையில் ஏந்தியுள்ள வேலினை வேடர்கள் மீது விடுத்து அருளிய இளையவரே!

 

நல்முயற்சியுடன் தேசி என்னும் இராகத்தைப் பாடுகின்பெருமை மிக்க வண்டுகள் சூழ்ந்துள்ள  நறுமணம் பொருந்திய தாமரை மலர்கள் உள்ள ஓடைகள் நிறைந்துள்ள விஜயமங்கலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்தேவாதி தேவர்களின் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!

 

            சேர்க்கையால் உண்டான மகிழ்ச்சிக் களிப்பினால் கண்மலர் சிவக்கவும்அணிந்துள்ள முத்துமாலைகள் கழலவும்காமக் களிப்பினால் வண்டு போன்ற குரலை வாயில் இருந்து வெளிப்படுத்தவும்அழகிய பருத்து தனங்களில் மகிழ்ந்து,பலவிதமாக நகக் குறிகள் உண்டாக,சிறந்த வெவ்வேறு விதமான புணர்ச்சிகளைச் செய்து,உள்ளே பால் போலவும்,தேன் போலவும் வாயிதழில் ஊறுகின்ற எச்சிலை உள்வாங்கி,மென்மையான பணைத்த தோள்களோடு தோள்கள் பொருந்தி இருக்க,அந்தக் களிப்பினால் எனது நிலைமை தளர்ந்து,பொலிவு பெறவேண்டிய எனது அழகிய அரிய உயிரானதுஇளைத்துப் போய்,பொருந்திய கொப்பூழ்ச் சுழியின் மீது போய் விழுகின்ற மயக்கத்துடன்காமப்பற்றால் உண்டான மகிழ்ச்சியால் கூத்தாடிமனநிறைவு பெறாத சேர்க்கையால் உள்ளம் உருகி,விலைமாதர்க்கு ஆளாகிஅவர்களுக்கு ஏவல் செய்து கொண்டு இருந்தாலும்,தேவரீருடைய வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளை அடியேன் இனி எப்போதும் மறக்கமாட்டேன். 

 

விரிவுரை

 

கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட--- 

 

கலகம் --- சேர்க்கை.

 

சம்ப்ரமம் --- சம்பிரமம் --- மகிழ்ச்சிபரபரப்புமனக் களிப்பு.

 

விலோசன மலர் --- தாமரை மலர். 

 

தாமரை மலர் போன்ற கண்களைக் குறித்தது.

 

பூண் ஆரம் ஆனவை கழல--- 

 

ஆரம் --- முத்து. 


வண்டு எனச் சாரீரம் வாய்விட--- 

 

சாரீரம் --- இனிய குரல். வண்டு ஒலிப்பது போன்ற குரல்.

 

சரீரத்தில் இருந்து பிறப்பதால் சாரீரம் எனப்பட்டது.

 

அபிராமக் கன தனங்களில் கோமாளம் ஆகியெ--- 

 

அபிராமம் --- அழகு. 

 

கன தனம் --- பருத்த முலைகள்.

 

கோமாளம் --- குதித்து விளையாடுதல்.

 

உள் பால் ஊறு தேன் இதழ் அமுது ஊறல் செலுவி--- 

 

பாலொடு தேன் கலந்து அற்றேபணிமொழி

வால் எயிறு ஊறிய நீர்.               --- திருக்குறள்.

 

காதலர் தம்முள் முத்தம் பரிமாறிக் கொள்வது அவர்களது அன்பை வெளிப்படுத்தும் முறையாகும். முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை ஏற்படுத்தும் தன்மையதுஅது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துப் புத்துணர்ச்சி ஊட்டவல்லதும் ஆகும். தலைவன் பணிவாகப் பேசுகின்ற தன் காதலியை முத்தமிடுகிறான். 

 

பால் சுவை மிகுந்தது. தேன் இனிமை நிறைந்தது. பருகக் கூடிய பாலின் சுவையானதுபருகக் கூடாத தேனின் இனிமையால் மிகும். மேலும் இனிமை பெற்று அருந்த அருந்தத் தெவிட்டாத இனிப்பைத் தரும். முத்தத்தில் உண்டான வாய் அமுதம் தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தரும்.

 

செருகும் உந்தியில் போய் வீழும் மால் உடன்--- 

 

செருகும் உந்தி --- விழுந்தோர்கள் எழ முடியாத குழி போன்று உந்தி.

  

முலைகள் மலை என்றால்உந்திச் சுழியானது மடு ஆகும்."உந்தி என்கின்ற மடு விழுவேனை" என்று அடிகளார் பிறிதோரிடத்தில் கூறி இருப்பது அறிக.

 

ஆழமாகிய பெரிய மடுவின்கண் வீழ்ந்தோர்கள் புணையின் துணை இல்லாமல் எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ,அங்ஙனமேமாதர் உந்தி என்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் வடிவேல் பரமனது தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி,அம் மடுவினின்றும் உய்ந்து முத்தி என்கிற கரை சேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது.

 

கடத்தில் குறத்தி பிரான் அருளாற் கலங்காத சித்தத்

திடத்தில் புணை என யான் கடந்தேன்,சித்ர மாதர் அல்குல்

படத்தில் கழுத்தில் பழுத்த செவ்வாயில் பணையில் உந்தித்

தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.      

 

என அடிகளார் கந்தர் அலங்காரப் பாடலில் அருளி இருப்பது அறிக.

 

அநுராகம் தெரி குமண்டை இட்டு--- 

 

அனுராகம் --- காமப்பற்று.

 

குமண்டை --- மகிழ்ச்சியால் கூத்தாடுதல்.

 

ஆராத சேர்வையில் உருகி --- 

 

ஆராத --- உள்ளம் நிறைவு பெறாத.

 

மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு(ம்) நின் கழல் சீர் பாத(ம்) நான் இனி மறவேனே--- 

 

இன்பக் கடலில் முழுகி அந்த மகிழ்ச்சியிலேயே அழுந்தி விட்டாலும்இறைவனை மறத்தல் கூடாது. அப்போதும் ஆண்டவனுடைய சிந்தனை இருத்தல் வேண்டும்.

 

கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை

மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன்முதுகூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண்டு எனக்கொட்டி ஆட,வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.

                                                                        

என்பார் கந்தர் அலங்காரத்திலே.

 

காடே திரிந்துஎன்னகாற்றே புசித்துஎன்னகந்தைசுற்றி

ஓடே எடுத்துஎன்னஉள்ளன்பு இலாதவர் ஓங்குவிண்ணோர்

நாடே இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர்நாரியர்பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டுஇன்பம் மேவுவரே.

 

என்று மிகவும் அழகாகக் கூறுகின்றனர் பட்டினத்தடிகள்.

 

துயின்றாலும்அயின்றாலும்நடந்தாலும்கிடந்தாலும்எழுந்தாலும்விழுந்தாலும்மகிழ்ந்தாலும்கவன்றாலும் எப்போதும் இறைவனை மறவாது சிந்தித்து உய்தல் வேண்டும்.

 

எழும்போதும் வேலுமயிலும் என்பேன்

            எழுந்தே மகிழ்ந்து,

தொழும்போதும் வேலுமயிலும் என்பேன்,

            தொழுதே உருகி,

அழும்போதும் வேலுமயிலும் என்பேன்,

            அடியேன் உடலம்

விழும்போதும் வேலுமயிலும் என்பேன்

            செந்தில் வேலவனே.

 

இறைவனைப் பற்றிப் பேசுதற்கும் நினைப்பதற்கும் இறைவன் திருவருளே வேண்டி இருப்பதனால்இறைவனையே வேண்டுகின்றனர்.

 

தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி,

     ஆடல் கொண்ட மட மங்கையருடன்கலவி

     தாகம் உண்டுழல்கினும்கழல் உறும் கழல் ......மறந்திடேனே.

 

என்று திருநாகைத் திருப்புகழிலும்,

 

வரிபரந்துரண்டு நயனமும் சிவந்து,

     வதன மண்டலங்கள் ...... குறு வேர்வாய்,

மணி சிலம்பு அலம்ப,அளகமும் குலைந்து,

     வசம் அழிந்துழிந்து ...... மயல்கூர,

 

இருதனம் குலுங்க,இடைதுவண்டு அனுங்க,

     இனியதொண்டை உண்டு,...... மடவார்தோள்

இதம் உடன் புணர்ந்து,மதி மயங்கினும்பொன்

     இலகு நின் பதங்கள் ...... மறவேனே.

 

என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார், இக் கருத்தில் பாடி இருப்பது காண்க.

 

முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து,

     முக வனச மலர் குவிய,மோகம் உற்று அழிந்து,

     மொழி பதற,வசம் அழிய,ஆசையில் கவிழ்ந்து ......விடுபோதும்,

 

முழுது உணர உடைய முது மாதவத்து உயர்ந்த

     பழுதில் மறை பயிலுவ என ஆதரித்து நின்று

     முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் ......மறவேனே.  --- திருப்புகழ்.

                                                                                                            

உலக கண்டம் இட்டுஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர் ஆயம் ஆம் அவர் உடன் மடிந்திட கோபாலர் சேரியில் மகவு ஆயும்உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக--- 

 

இரும்பு உலக்கையும்யாதவ குலமும்

 

கண்ணபிரான் பாண்டவர்க்குத் துணையாக நின்று துரியோதனாதி குருகுலத்தை அழித்தார். காந்தாரி கண்ணனைப் பார்த்து “கண்ணா! நீ என் குலத்தை அழித்தாய். அதுபோல் உனது யதுகுலமும் 36வது ஆண்டில் ஒருங்கே அழியக் கடவது” என்றார். இந்தச் சாபத்தைக் கேட்ட கண்ணபிரான் புன்னகை புரிந்து, “அதுதான் என் கருத்தும்அவ்வண்ணமே அழிவதாக” என்றார். பூபாரம் தீர்க்க வந்தவர் கண்ணன். கொடுமையும் கோபமும் செருக்கும் படைத்தவர்களைப் பூமி தாங்க அஞ்சும். பாரத யுத்தம் முடிந்து சில ஆண்டுகட்குப் பின்துவாரகையில் வாழ்ந்த யாதவர்கள்விருஷ்ணிகள்அந்தகர்கள் முதலியவர்கள் நிரம்ப மதம் பிடித்து வாழ்ந்தார்கள். அப்போது எங்கும் துர்நிமித்தங்கள் உண்டாயின. புழுதிக் காற்று வீசியது. எரி கொள்ளிகள் விண்ணிலிருந்து வீழ்ந்தன.

 

துவாரகாபுரிக்கு விசுவாமித்திரர்கண்ணுவர்நாரதர் என்ற முனிவர்கள் வந்தார்கள். மதம் பிடித்த யாதவர்கள்,கண்ணன் மகனாகிய சாம்பனை பெண்வடிவு புனைந்து வயிற்றில் துணி வைத்துக் கட்டி அம் மகா முனிபுங்கவர்களின் முன் சென்று “முனிவர்களே! இவள் பப்ருவின் மனைவிகர்ப்பமாக இருக்கின்றாள்இவள் வயிற்றில் ஆண் குழந்தை பிறக்குமாபெண் குழந்தை பிறக்குமா?” என்று கேட்டார்கள். முனிவர்கள் முகம் சிவந்ததுஅவர்களது அகங்காரத்தை நினைத்து அவர்கள் சீற்றங் கொண்டார்கள். “இந்த சாம்பன் வயிற்றில் இரும்பு உலக்கை பிறக்கும்.அந்த உலக்கையால் பலராமன் கிருஷ்ணன் தவிர மற்ற அத்தனை பேரும் அழிவீர்கள்.பலராமர் கடலில் புகுவார்ஜரன் என்ற செம்படவன் பூமியில் சயனித்துக் கொண்டிருக்கின்ற கிருஷ்ணரைப் பிளக்கப் போகின்றான்” என்று கூறிவிட்டு சென்றார்கள்.

சிறந்த அறிவும்,முடிவை அறிந்த உணர்வும் படைத்த வாசுதேவர் இதனைக் கேள்விப்பட்டு, “அது அப்படியே ஆகட்டும்” என்றார்.

 

மறுநாள் சாம்பன்,அந்தக் குலத்தை அழிக்கவந்த அந்தகனுடைய தூதனைப் போன்ற ஒரு கரிய பெரிய இரும்பு உலக்கையைப் பெற்றான். யாதவர்கள் அதை அரம் கொண்டு அராவிப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கொட்டினார்கள். பலராமர்கிருஷ்ணர்பப்ரு என்ற புண்ணிய சீலர்கள் “இன்று முதல் யாரும் மதுபானம் செய்யக் கூடாது. அப்படிக் குடித்தால் அவர்களைக் கழுவில் ஏற்றப்படும்” என்று பறைசாற்றச் செய்தார்கள்.

 

பின்னும் சில ஆண்டுகள் கழிந்தன. தலைமயிரில்லாத ஒரு முண்டன் கருநிறமும் பொன்னிறமும் கொண்ட உருவுடன் யாதவர்களின் வீடுகளில் சென்று சென்று மறைந்தான். அவனைப் பலர் வில்லம்பால் அடித்தார்கள். எல்லா உயிர்களையும் கொல்லுபவனாகிய அவனை அடிக்க முடியவில்லை. பயங்கரமான பெருங்காற்று அடித்தது. எலிகளும் உடைந்த மண் பாண்டங்களும் எங்கும் காணப்பட்டன. பறவைகள் ஓயாது அச்சம் தரும்படி ஒலித்தன. ஆடுகள் நரிகள் போல் ஊளையிட்டன. நாய் வயிற்றில் பூனையும்கீரியிடத்தில் எலியும் பிறந்தன.

 

இப்படிப் பலப்பல தீய சகுனங்கள் நேர்ந்தன. இவற்றைக் கண்ட கண்ணபிரான் "முப்பத்தாறாவது ஆண்டு வந்து விட்டதுகாந்தாரியின் சாபம் விளையும் காலம் இது" என உணர்ந்தார். தீர்த்த யாத்திரை செய்யும்படி யாதவர்கட்குக் கட்டளையிட்டார். யாதவர்கள யாவரும் பிரபாசபட்டினத்தை அடைந்தார்கள். உத்தவரை மட்டும் அவ்விடம் விட்டுச் சென்றார்கள்.

 

நிரம்ப மதுவைக் குடித்த அந்த யாதவர்கள் ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசினார்கள். அதனால் பெருங் கோபமுற்று ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினார்கள். கடற்கரையில் முளைத்துள்ள இரும்புக் கோரைகளைப் பிடுங்கினார்கள். அவைகள் இரும்புக் கோடாரிகளாக ஆயின. அவற்றால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். கிருஷ்ணருடைய பிள்ளைகள்பேரன்கள்மற்ற யாதவர்கள் கண்ணனுடைய முன்னிலையிலேயே மாண்டார்கள். மிச்சமின்றி அத்தனை பேர்களும் அழிந்தார்கள்.

 

கண்ணபிரான் துவாரகை சென்று பெரிய பிதாவை வணங்கி “அர்ச்சுனன் வந்து உங்களைக் காப்பாற்றுவான்” என்று கூறிக் கானகம் போனார். தாரகன் என்ற தேர்ப்பாகன் தேரின் மீது ஏறி அத்தினாபுரம் போனான்.

 

காட்டில் ஏகாந்தமான இடத்தில் இருந்த பலராமரைப் பார்த்தார். யோக சமாதியில் அமர்ந்திருந்த பலராமருடைய முகத்திலிருந்து ஒரு வெள்ளைப் பாம்பு வெளிப்பட்டது. அந்தப் பாம்பு ஆயிரம் தலைகளுடன் வளர்ந்து கடலுக்குள் சென்றது.

 

துருவாசர் “உள்ளங்கால் வழி ஆன்மா பிரியும்” என்று கூறிய சொல்லை நினைத்தார். குராமரத்தின் கீழ் இரண்யநதிக் கரையில் படுத்து யோகம் புரிந்தார். அந்த உலக்கையை அராவிக் கடலில் கொட்டியபோது மிகுந்த ஒரு ஈச்சங்கொட்டை அளவு உள்ள கூரிய துண்டைக் கடலில் எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கிற்று.  அம்மீனைப் பிடித்தவர்கள் அவ்விரும்புத் துண்டைக் காட்டில் எறிந்தார்கள். அக்கூரிய இரும்பை ஜரன் என்ற வேடன் எடுத்துத் தன் அம்பின் முனையில் அமைத்துக் கொண்டான். அவன் தொலைவில் தெரிந்த கண்ணனுடைய சிவந்த திருவடியை செங்கழுகு என்று எண்ணி அந்தப் பாணத்தை விடுத்தான். பிறகு அவன் அருகில் வந்துகண்ணபிரானை வணங்கித் துதித்தான். அவனுக்கு அருள் செய்துவிட்டுமண்ணும் விண்ணும் ஒளியினால் விளங்க தேவர்கள் துதி செய்ய கண்ணபிரான் வைகுந்தம் சேர்ந்தார்.

 

கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும் அம்குறப் பாவாய் வியாகுலம் விடுவிடு என்று கைக் கூர் வேலை ஏவிய இளையோனே--- 

 

இனைதல் --- வருந்துதல்.

 

கந்தவேள் எம்பிராட்டி வள்ளிநாயகியைக் களவு கொண்டு சென்றார். விடியல் காலம்நம்பியின் மனைவி எழுந்து,தனது மகளைக் காணாது வருந்திஎங்கும் தேடிக் காணாளாய்பாங்கியை வினவஅவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டுபோர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகிஎம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

 

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார்.நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்யசேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்கஅம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

 

கந்தபுராணம் சேவலின் ஒலியால் வேடர்கள் மாய்ந்தார்கள் என்று கூறுகின்றது. அருணகிரியார்வேலை விட்டு மாய்த்தார் என்று கூறுகின்றார். இவ்வாறே பிற பாடல்களிலும் கூறுகின்றார்.

 

வேற்கொடு கடுகிய முடுகிய

செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட     மயிலேறும்”  --- (வெருட்டி) திருப்புகழ்.

 

சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி

     தோகை குறமாதினுடன் ...... உறவாடி,

சோரன் என நாடி வருவார்கள் வனவேடர் விழ

     சோதிகதிர் வேல் உருவு ...... மயில்வீரா!         --- (நீலமுகில் ஆன) திருப்புகழ்.

                           

கொடிய வேட்டுவர் கோகோ கோ என

     மடிய,நீட்டிய கூர் வேலாயுத!                          --- (பொருளின்மேல்) திருப்புகழ்.

 

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரைசெய் பங்கயப் பூ ஓடை மேவிய--- 

 

சுரும்பு --- வண்டு.

 

ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் உள்ள தேனை அருந்த வருகின்ற வண்டுகளின் ரீங்காரமானது "தேசி" இராகம் போன்று இருந்தது.

 

"நாக மலர்மிசைசாதாரி தேசி நாம க்ரியைமுதல்கோலால நாத கீத மதுகரம்அடர்சோலை" என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடியுள்ளபடிவண்டுகள் பாடிய பல இராகங்களில் "தேசி" என்னும் இராகமும் ஒன்று.

 

விஜயமங்கலத் தேவாதி தேவர்கள் பெருமாளே ---

 

ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் மத்தியில் உள்ள இரயில் நிலையத்திற்கு வடக்கில் சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் விஜயமங்கலம் ஊர் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! தேவரீரது திருவடிகளை எப்போதும் மறவேன்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...