இருட்கண், அருட்கண்.
-----
அருட்கண் இ(ல்)லாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா,
அருட்கண் உ(ள்)ளோர்க்கு எதிர் தோன்றும் அரனே,
இருட்கண்ணி னோர்க்கு இங்கு இரவியும் தோன்றா,
தெருட்கண்ணி னோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.
என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரப் பாடல்.
இதன் பொருள் ---
திருவருளாகிய கண் வாய்க்கப் பெறாதார்க்கு சிவம் ஆகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டும் அல்லாது,அவனும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் என்றால்,ஒளி இல்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளி தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் உடையார்க்கு சூரியனது ஒளிப்பரப்பே அல்லாமல் சூரியனும் தோன்றுதல் போல்வனவாம்.
நல்லவர்க்கு , அவர்கள் உள்ளக் கருத்தின்படிஎல்லாம் நல்லனவாகவே தோன்றும். தீயவர்க்கு, அவர்களது உள்ளக் கருத்தின்படி,எல்லாம் தீயனவாகவே தோன்றும்.
நல்லவர்கள் என்றால், அவர்களது முகம் தாமரை போல மலர்ந்து இருக்கும் என்றும், தீயவர்கள் என்றால் அவர்களது முகம் வேறுவிதமாக இருக்கும் என்றும் எண்ணிவிடக் கூடாது. கெட்டவர்கள் பேயைப் போலவோ, பூதத்தைப் போலவோ இருக்க மாட்டார்கள்.
"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல்"
என்று திருவள்ளுவ நாயனார் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, நல்லவர்கள் தோற்றத்தில் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் கெட்டவர்களும் இருப்பார்கள். எனவே, நல்லவர்க்கும் கெட்டவர்க்கும் உருவத்தில் மாற்றம் இருக்காது.
நல்லவர்க்கு நல்ல கருத்தோடு கூடிய அருட்கண் இருக்கும். கெட்டவர்களுக்குக் கெட்ட கருத்தோடு கூடிய கொள்ளிக் கண் இருக்கும்.
முற்றிய தேக்கு மரம் ஒன்றை ஒரு பாட்டி பார்த்தாள். "இது பனிக்காலமாக உள்ளது. இந்த மரம் இவ்வளவு பெரியதாக இருக்கின்றதே. இது கிடைத்தால், வெட்டி அடுப்பு எரித்தால், நீண்ட நாளைக்கு உதவுமே" என்று எண்ணினாள். விறகையே நாடிக் கொண்டு இருந்த பாட்டியின் கண், அது தேக்கு மரம் ஆயிற்றே, இதைப் போய் அடுப்பெரிக்கப் பயன்படுத்தலாமா என்று எண்ணவில்லை.
அதே தேக்கு மரத்தை ஒரு தச்சன் பார்த்தான். "இவ்வளவு நல்ல மரத்தைக் கொண்டு, மேசை, நாற்காலிகள் செய்தால் நன்றாக இருக்குமே" என்று அவன் எண்ணினான்.
அந்தத் தேக்கு மரத்தையே ஒரு சிற்பி பார்த்தான். "எத்தனை அழகான தேக்கு மரம். இதைக் கொண்டு இறைவன் திருவுருவங்களைச் செய்தால் நன்றாக இருக்குமே" என அவன் எண்ணினான்.
பாட்டி, தச்சன், சிற்பி ஆகிய மூவரின் கண்களும் ஒரே மரத்தைத் தான் பார்த்தன. ஆனாலும், அவர்களது உள்ளக் கருத்துக்கு ஏற்ப, அதை வெவ்வேறு விதாமாகப் பயன்படுத்தத் தோன்றியது. பார்த்தவர்களின் கண்களில் எந்த வேற்றுமையும் இல்லை. மரம் என்றுதான் நன்றாகத் தெரிகின்றதே. எனவே, பார்வையில் கோளாறும் இல்லை. அவர்களுக்கு உள்ளத்தில் இருந்த கருத்தில்தான் வேற்றுமை.
முற்றிய மரத்தைக் கண்ட பாட்டிக்கு, அது நல்லமரம் ஆயிற்றே என்ற கவலை இல்லை. தேக்கு மரத்தின் திண்மை, அழகு ஆகியவற்றை அவள் பார்க்கவில்லை. அதை ஒரு விறகாகவே பார்த்தாள். அவள் தனக்கு உள்ள இயல்பான அறிவினால், தேக்கு மரத்தைப் பார்த்தாள்.
தச்சன், பாட்டியே விட மேம்பட்டவன். அவன் தேக்கு மரத்தின் வண்ணத்தையும், திண்மையையும் பார்த்தான். அவன் தான் பெற்றுள்ள அறிவின் துணைக் கொண்டு தேக்கு மரத்தைப் பார்த்தான். தனது தொழிலுக்கு ஏற்ப நாற்காலி, மேசை போன்ற கருவிகளைச் செய்ய அவன் எண்ணினான். நாற்காலியோ, மேசையோ தனியாக இருந்தால் பயனில்லை. அதைப் பயன்படுத்த ஒரு ஆள் தேவை. அது பயன்படுத்துபவருக்கு மட்டுமே இன்பத்தைத் தரும்.
அந்த இருவரையும் விட மேலான சிற்பி, அருள் உள்ளத்தோடு தேக்கு மரத்தைப் பார்த்தான். இறைவனது திருவுருவத்தைச் செய்து வைத்தால், அது கலைப் பொருள் ஆகின்றது. வழிபாட்டுப் பொருளாகவும் ஆகும். கலைப் பொருளாக இருந்தாலும், வழிபாட்டுப் பொருளாக இருந்தாலும், தனித்து இருந்தே பலருக்கும் இன்பத்தைத் தரக் கூடியது. காலத்தால் அழியாது நிற்பது. காணும்தோறும், தனக்கு மட்டுமல்லாது, காண்கின்ற எல்லோர்க்கும் இன்பம் தரும் ஒரு பொருளை உருவாக்க எண்ணினான்.
பாட்டியைப் போலவோ, தச்சனைப் போலவோ, சிற்பி எண்ணி இருந்தால் அது வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், கலைஞானம் உள்ள சிற்பியானவன், அந்த மரத்தின் வண்ணத்தையும், திண்மையையும் கண்டு வியந்து, காலத்தால் அழிந்தாலும், எண்ணத்தை விட்டு அகலாத ஒரு சிற்பத்தை வடிவமைக்க எண்ணினான். அருட்கண் இருந்ததால் தானே அவன் இவ்வாறு பார்த்தான். இல்லாவிட்டால், விறகாக்கி எரித்து இருப்பானே. நாற்காலியாக்கி, யாரோ ஒருவருக்குப் பயன்படுமாறு விற்று இருப்பானே.
உள்ளத்தில் என்ன கருத்து இருக்கின்றதோ, அது போலத்தான், அவர்களது செயலும் இருக்கும். அருட்கண் இருந்தால், காணும் பொருள்கள் எல்லாவற்றிலும் அரும்பொருள்கள் தோன்றும் என்பதைக் காட்டத்தான்,
அருட்கண் இ(ல்)லாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா,
அருட்கண் உ(ள்)ளோர்க்கு எதிர் தோன்றும் அரனே,
என்றார் திருமூல நாயனார்.
ஒருவன் குருடனாய் இருந்தால், அவனுக்கு இருளுக்கும் ஒளிக்கும் உள்ள வேற்றுமை தெரியாது. கண் இருந்தால் மட்டும் போதாது. காணும் தன்மை இருக்கவேண்டும். ஒருவனுக்குக் கண்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், அவனால் எதையும் படிக்க இயலாது. கண் மருத்துவரிடம் சென்றான். "என்னால் படிக்க முடியவில்லை. கண்ணாடி போட்டு விடுங்கள்" என்றான். ஐந்தாறு கண்ணாடிகளை மருத்துவர் மாற்றி மாற்றிப் போட்டும் அவனால் படிக்க இயலவில்லை. சந்தேகப்பட்ட மருத்துவர், "உனக்குப் படிக்கத் தெரியுமா?"என்று கேட்டார். அவன், "எனக்குப் படிக்கத் தெரியாது. கண்ணாடி போட்டால் படிக்கலாம் என்று எண்ணினேன்" என்றான். கண்ணாடி போட்டுக் கொண்டால் எதையும் படித்துவிட முடியும் என்று எண்ணிய, எழுத்தறிவு இல்லாத ஒருவனைப் போல, திருமுறைப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்து விட்டால், அல்லது பெட்டகத்தில் வைத்துப் பூசை செய்து வந்தால், அருள் ஞானம் வந்துவிடாது. நூல்களின் அருமையை ஓதி, உணர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். நால்களின் உண்மைக் கருத்து மனதில் விளங்கவேண்டும். நூல் அறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். அது வரும் வகையில் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். அருள்ஞானம் வாய்த்துவிட்டாலோ, அவர்களுக்குக் காண்பது எல்லாம் ஒளிமயமாகவே இருக்கும் என்பதைக் காட்ட,
இருட்கண்ணி னோர்க்கு இங்கு இரவியும் தோன்றா,
தெருட்கண்ணி னோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.
என்று அருளினார் திருமூல நாயனார்.
கண்ணொளி இல்லாதவர்க்குச் சூரியனது ஒளியையும் காண முடியாது. தெளிந்த உள்ளக் கண் உள்ளவர்க்கு, காணும் பொருள்கள் எல்லாவற்றையும் அல்லாது, அவற்றைக் காட்டுகின்ற இறைவனையும் காண முடியும்.
ககனமும்,அநிலமும்,அனல், புனல்,நிலம்,அமை
கள்ளப் புலால் ...... கிருமிவீடு,
கனல் எழ மொழி தரு சினம் என,மதமிகு
கள்வைத்த தோல்பை ...... சுமவாதே,
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒருபொருள்
உள்ளக் கண் நோக்கும் ...... அறிவுஊறி,
ஒளி திகழ் அருஉரு எனும் மறை இறுதியில்
உள்ள அத்தை நோக்க ...... அருள்வாயே.
வானம், காற்று, தீ, நீர், மண் என்ற ஐம்பூதங்களின் பரிணாமத்தால் ஆகியதும், துர்நாற்றம் மறைந்து இருப்பதும், புழுக்களுக்கு உறைவிடமாக உள்ளதும், நெருப்புப் பொறி பறக்கப் பேசும் கோபமும் மதமும் நிறைந்து உள்ளதும், அதனால் வரும் அறிவுமயக்கம் என்னும் கள் வைத்து உள்ள தோலால் ஆன பை ஆகிய இந்த அசேதன உடம்பை,இனியும் நான் சுமந்து அயராவண்ணம், யுக முடிவிலும் முடியாத ஒப்பற்ற பரம்பொருளும்,ஞானவொளி வீசுவதும், அருவாகவும் உருவாகவும் விளங்குவது என்று கூறும் வேதங்களின் முடிவில் திகழ்வதுமாகிய செம்பொருளாகிய தேவரீரை,அடியேனதுஉள்ளக் கண்ணால் காணும் ஞான ஊற்று சுரக்கத் தரிசித்து உய்வுபெற அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
புறக் கண்ணால் காண்பது சிறப்பு அல்ல. அகக் கண்ணால் கண்டு மகிழ்வதே சிறப்பு.
இயல் இசையில் உசித வஞ்சிக்கு ...... அயர்வு ஆகி,
இரவுபகல் மனது சிந்தித்து ...... உழலாதே,
உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி,
உனைஎனது உள்அறியும் அன்பைத் ......தருவாயே.
உடம்பின் சாயலினால் அழகிய,இயல் தமிழுடன் கூடிய இசைப் பாடல்களில் வல்ல,கொடிப் போன்ற இளம் பெண்ணை விரும்பி தளர்ச்சி உற்று,இரவு பகலாக அப் பெண்மணியையே நினைந்து அலையாமல், தேவரீருடைய உயர்ந்த திருக்கருணையினால் விளையும் பேரின்பமாகிய கடலில் முழுகி இருந்து,தேவரீரை எனது உள்ளமாகிய கோயிலிலே உணர்ந்து உய்யும் அன்பை அருள் புரிவீர் என்று அருணகிரிநாதப் பெருமான் வேண்டுகின்றார்.
புறத்திலே இருள் இருந்தால், பொருள் விளங்காது. கண் இருந்து பயனில்லை. அதுபோல,உள்ளத்திலே அஞ்ஞானம் என்னும் இருள் இருந்தால், மெய்ஞ்ஞானம் என்னும் பொருள் விளங்காது.
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல்,மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்பது எந்நாளோ?. --- தாயுமானார்.
கையிலே ஒரு விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு,அந்த விளக்கு வெளிச்சத்தின் பின்னே சென்று, தனக்கு வேண்டும் உலகியல் பொருள்களைத் தேடிக் காண்பவர் போன்று, மெய்யுணர்வு என்று சொல்லப்படுகிற திருவருள் விளக்கை முன்வைத்து,அந்த அருள் வெளிச்சத்தின் பின் சென்று,மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் திருவடியினைக் கண்டு உய்வது எந்நாளோ?
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகப் பெருமான். இறைவனது திருவருளையே கண்ணாகக் கொண்டால், உண்மைப் பொருளைக் காணலாம், உண்மை அறிவு விளங்கும். இல்லாவிட்டால், கண்ணால் கண்டதையே பேசிக் கொண்டு இருக்கலாம்.
இறைவன் தனக்கு ஒப்பு இல்லாதவன். அவன் ஒரு தன்மையை உடையவன் அல்ல. உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து நின்றவன். அவன் ஓர் உருக்கு மட்டும் உரியவன் அல்ல(ஒரு வரையறைக்கு உட்பட்டவன் அல்ல). தனக்கு உவமை இல்லாதவன். அவனுடைய அந்த அளப்பரும் தன்மைகளையும், அவன் இருக்கும் அழகையும், அவனது உண்மை வடிவத்தையும் கண்டு மகிழவேண்டுமானால்,அவனது திருவருளைப் பெற்று, அதையே கண்ணாகக் கொண்டு காணவேண்டும். அல்லாமல், மற்றப் பொருள்கள் பற்றிப் பேசுவது போலவும், எழுதுவது போலவும், இறைவன் இன்னவகைப்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று அவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் ஒருவராலும் இயலாது. வழக்கமாகச் சொல்லுவது போல, இறைவன் மைபூசிய கண்ணை உடைய உமையம்மையோடு (கச்சி மயானத்து) வாழ்பவன் என்றும்,நீண்ட சடையினை உடையவன் என்றும்எப்போதும் போல வாலாயமாகப் பேசிக் கொண்டு இருக்கலாம்.
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான்,வார்சடையான்,என்னின் அல்லால்,
ஒப்பு உடையன் அல்லன்,ஒருவன் அல்லன்,
ஓர் ஊரன் அல்லன்,ஓர் உவமன் இல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. --- அப்பர்.
எண்ணாயிரத்து ஆண்டுயோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டுஅறி வார்இல்லை;
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக்கலந்து நின்றானே. --- திருமந்திரம்.
எத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தோம் என்பதில் ஒன்றும் பெருமை இல்லை. தவத்தைப் புரிந்ததன் மூலம் என்ன பயனைப் பெற்றோம் என்பது தான் பெருமைக்கு உரியது.
எவ்வளவு காலம், கல்விச் சாலையில் பயின்றோம் என்பது பெருமைக்கு உரியது அல்ல. ஒரே வகுப்பில் கூட ஒன்பது ஆண்டுகள் இருக்கலாம். படித்த நூலையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டு இருக்கலாம். வயதுதான் கூடுமே ஒழிய, அறிவு விளங்காது. நூலறிவு நுண்ணறிவாக விளக்கம் பெறவேண்டும். பத்தாவது வயதில் படித்த நூலையே அறுபது வயதிலும் படித்துக் கொண்டு,நூலறிவு கூட விளங்காமல் இருந்தால், அவன் ஐம்பது ஆண்டுகளை வீணாக்கிவிட்டான் என்றுதானே பொருள். ஆனால், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்பதை மட்டும் காலம் காலமாக எல்லோரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர். பொருளை உணர்ந்தார் இல்லை.
"உணர்தல்" என்பது குறித்து, தெய்வச் சேக்கிழார் பெருமான் அற்புதமாக ஒரு காட்சியின் மூலம் விளக்கி அருள்கின்றார்.
"மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். இப்படிச் சொன்ன உடனே, புத்தகத்தைப் படித்தல் என்று பொருள் கொள்ளுதல் கூடாது. புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். அறிதல், தெரிதல், கற்றல், சிந்தித்தல் என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,
"சிவனடியே சிந்திக்கும்
திருப்பெருகு சிவஞானம்,
பவம் அதனை அறமாற்றும்
பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை இலாக் கலைஞானம்,
உணர்வரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்"
என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.
"தவமுதல்வர் சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான்.
பொருளை உணரும் உணர்வைப் பெருக்கிக் கொண்டால், பொருளை உணரலாம். திருவருள் துணையால், "இருட்கண்" "அருட்கண்" ஆகும்.
No comments:
Post a Comment