அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முட்ட மருட்டி (கருவூர்)
முருகா!
அடியேனை நன்னெறியில் ஆண்டு கொள்.
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
தத்தன தத்த தனதனத் ...... தனதான
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர்
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம்
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங்
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முட்ட மருட்டி இருகுழை தொட்ட கடைக்கண் இயல்என
மொட்பை விளைத்து முறை அளித் ...... திடு மாதர்
முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபடம்
மொச்சிய பச்சை அகில் மணத் ...... தனபாரம்
கட்டி அணைத்து,நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய
கைத்தலம் எய்த்து,வசனம் அற்று,...... உயிர்சோரும்
கட்டம்,முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு,நியமித
கற்பனை பக்ஷமுடன் அளித்து ...... அருளாதோ?
வெட்டிய கட்க முனைகொடு வட்ட குணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா!
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிகமகிழ்
வித்தக! சித்த! வயலியில் ...... குமரேசா!
கிட்டிய பல்கொடு அசுரர்கள் மட்டு அற உட்க,அடலொடு
கித்தி நடக்கும் அலகை சுற் ...... றிய வேலா!
கெட்டவர் உற்ற துணை என நட்டு, அருள் சிட்ட பசுபதி
கெர்ப்ப புரத்தில் அறுமுகப் ...... பெருமாளே.
பதவுரை
வெட்டிய கட்கம் முனை கொடு --- வெட்டும் தன்மை கொண்ட வாளின் முனையைக் கொண்டு
அட்ட குணத்து ரணமுக விக்ரம--- போர்க்களத்தில் பகைவர்களை அழித்த வலிமைமிக்கவரே!
உக்ர வெகு விதப் படை வீரா --- கொடுமையான பலவிதமான படைகளைக் கொண்டுள்ள வீரரே!
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக--- வெற்றியைப் பெற்றுள்ள வேடர்கள் பெற்ற வள்ளிநாயகியின் மீது மிகவும் விருப்பம் கொண்ட பேரறிவாளரே!
சித்த --- அடியார்களின் சித்தத்தில் நிறைந்துள்ளவரே!
வயலியில் குமரேசா--- வயலூரில் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே!
கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க --- கோபத்தால் பற்கள் கிட்டும்படி வந்த அசுரர்கள் மிகவும் பயப்பட,
அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா--- வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலாயுதக் கடவுளே!
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள்--- அகங்கார மமகாரம் அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்துஅருள் புரிகின்ற
சிட்ட பசுபதி கெர்ப்ப புரத்தில் --- மேலான பசுபதீச்சுரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள கருவூர் என்னும் திருத்தலத்தில் (வீற்றிருக்கும்)
அறுமுகப் பெருமாளே --- ஆறுமுகப் பரம்பொருளே!
முட்ட மருட்டி--- முழுதும் மயக்குவதாகி,
இருகுழை தொட்ட கடைக்கண் இயல் என --- இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுமாறு நீண்டுள்ள கண்ணின் தன்மை இதுவே என்று கொள்ளும்படி
மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர்--- உள்ளத்தைக் கவர்ந்து,முறையில் இன்பம் அளிக்கின்ற பொதுமாதர்களின்,
முத்தம் இரத்ன மரகதம் வைத்த--- முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட
விசித்ர முகபட(ம்) மொச்சிய பச்சை அகில் மணத் தனபாரம் கட்டி அணைத்து--- விநோதமான மேலாடையை இறுக்கச் சுற்றியுள்ள, பசுமையான அகிலின் நறுமணம் கொண்ட தனபாரங்களைக் கட்டிப் அணைத்துத் தழுவி,
நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கைத்தலம் எய்த்து--- நகக் குறி பட்டுள்ள கழுத்தில் இறுக அணைத்த கைகள் சோர்ந்து,
வசனம் அற்று--- வார்த்தைகள் அற்று,
உயிர் சோரும் கட்டம்--- உயிரானது தளர்ச்சி அடைகின்ற துன்பத்தைத் தரும்,
முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு--- புணர்ச்சி அனுபவத்தை விட்டு ஒழித்த காமுகனாகிய அடியேனுக்கு,
நியமித கற்பனை பட்சமுடன் அளித்து அருளாதோ--- உறுதியைத் தரவல்ல நன்னெறியிலே நிற்கும் வகையினை அன்பு வைத்து அறிவித்து அருள்புரியவேண்டும்.
பொழிப்புரை
வெட்டும் தன்மை கொண்ட வாளின் கூர்மையைக் கொண்டு போர்க்களத்தில் பகைவர்களை அழித்த வலிமைமிக்கவரே! கொடுமையான பலவிதமான படைகளைக் கொண்டுள்ள வீரரே!
வெற்றியைப் பெற்றுள்ள வேடர்கள் பெற்ற வள்ளிநாயகியின் மீது மிகவும் விருப்பம் கொண்ட பேரறிவாளரே!
அடியார்களின் சித்தத்தில் நிறைந்துள்ளவரே!
வயலூரில் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே!
கோபத்தால் பற்கள் கிட்டும்படி வந்த அசுரர்கள் மிகவும் பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலாயுதக் கடவுளே!
அகங்கார மமகாரம் அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்துஅருள் புரிகின்ற, மேலான பசுபதீச்சுரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள கருவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
முழுதும் மயக்குவதாகி, இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுமாறு நீண்டுள்ள கண்ணின் தன்மை இதுவே என்று கொள்ளும்படி, உள்ளத்தைக் கவர்ந்து,முறையில் இன்பம் அளிக்கின்ற பொதுமாதர்களின், முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடையை இறுக்கச் சுற்றியுள்ள, பசுமையான அகிலின் நறுமணம் கொண்ட தனபாரங்களைக் கட்டிப் அணைத்துத் தழுவி, நகக் குறி பட்டுள்ள கழுத்தில் இறுக அணைத்த கைகள் சோர்ந்து, வார்த்தைகள் அற்று, உயிரானது தளர்ச்சி அடைகின்ற துன்பத்தைத் தரும்புணர்ச்சி அனுபவத்தை விட்டு ஒழித்த காமுகனாகிய அடியேனுக்கு,உறுதியைத் தரவல்ல நன்னெறியிலே நிற்கும் வகையினை அன்பு வைத்து அறிவித்து அருள்புரியவேண்டும்.
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார், விலைமாதர் வயப்பட்டு,அறிவு மயங்கி அழியும் நிலையில் இருந்து தெளிந்த அடியவன் மீது அன்பு வைத்த நன்னெறியில் செலுத்தி அருள் புரிய வேண்டும் என்று முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார்.
வெட்டிய கட்கம் முனை கொடு ---
கட்கம் --- வாள். முனை --- கூர்மை.
அட்ட குணத்து ரணமுக விக்ரம--- போர்க்களத்தில் பகைவர்களை அழித்த
ரணமுகம் --- போர்முகம். போர்க்களம்.
அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா---
அடல் --- வலிமை. கித்தி --- ஒரு காலால் தாவித் தாண்டுதல்.
அலகை --- பேய்கள்.
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள்---
கெட்டவர் --- நான் எனது என்னும் அகங்கார மமகாரம் ஆகிய அகப்பற்றும், புறப்பற்றும் விட்டவர்.
நட்டு --- நட்பு. விருப்பம்.
யான்தான் எனும்சொல் இரண்டும் கெட்டால்அன்றி யாவருக்கும்
தோன்றாது,சத்தியம்,தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க்
கீன்றான் மருகன்,முருகன்,க்ருபாகரன்,கேள்வியினால்
சான்று ஆரும்அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.--- கந்தர் அலங்காரம்.
வான்கெட்டு,மாருதம் மாய்ந்து, அழல்நீர் மண்கெடினும்
தான்கெட்டல் இன்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு,
கூன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு, என் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. --- திருவாசகம்.
சிட்ட பசுபதி கெர்ப்ப புரத்தில்---
சிட்டர் --- பெரியோர், சான்றோர், பெருமை.
பசுபதீச்சுரர் என்பது கருவூரில் எழுந்தருளி உள்ள பெருமான் திருநாமம்.
கெர்ப்பம், கர்ப்பம் --- கரு. கெர்ப்ப புரம் --- கருவூர்.
கருவூர் என்பது இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகின்றது. கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.
இறைவர்: பசுபதீசுவரர், ஆனிலையப்பர்.
இறைவியார் : கிருபாநாயகி, சௌந்தர்யநாயகி
தல மரம் : கொடி முல்லை
தீர்த்தம் : ஆம்பிராவதி ஆறு
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிருதிருக்கரங்களுடனும், தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.
எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.
கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர், எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார். ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள், அதாவது நவமி முன்னாளில், சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பி, அக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கி, பாகர்கள் மேலேயிருப்ப, குத்துக்கோல்காரர்கள் முன்னே ஓட, விரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்,யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கே? சிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கே? மூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பா, உன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவது? சிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டு, அவ் வழியே வந்த எறிபத்த நாயனார், சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும், எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்து, யானையைக் கிட்டி, அதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்,பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.
சோழர் பெருமான், வடவை போல் சீறி, ஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். நால்வகைச் சேனைகளும், பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான், யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்தி, குதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோது, வேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோ? அடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சி, நாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன். நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது. என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லி, தமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை. வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்? நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டு, வாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன், கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.
"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்ற, உங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும், யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்து, புகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர். திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கி, புகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்து, திருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.
பொழில் கருவூர்த் துஞ்சிய
புகழ்ச் சோழ நாயனார்
வரலாறு
புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர். திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.
கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார். அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்து, அரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும், குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறி, அரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான், அமைச்சர்களை நோக்கி, நமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.
அந்நாளில், சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார். அதனைப் பட்டத்து யானை, பற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார், எறிபத்த நாயனார் எதிரே சென்று, நேர்ந்த அபராதத்திற்கு, பட்டத்து யானையையும், பாகரையும், பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறு, தனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார். எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோது, இறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும், மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.
அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன். அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள். உடனே, புகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும், செல்வங்களையும், பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார், கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானா? நல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.
இவ்வாறு நாயனார் புலம்பி, அமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார். அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள். நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன், திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார். திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார். ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.
கருவூர்த் தேவர் வரலாறு
திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்று, ஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர். காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.
ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர், இவர் நெல்லைப் பதியை அடைந்து, நெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்க, அப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு, சிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்க, ஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்ட, நெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.
கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்து, திருக்குற்றாலம் சென்று, அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்று, பலநாள் அங்கே இருந்தார்.
அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது. அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்,பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்து, தம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டு, அட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.
கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்று, அரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள், கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்து, கருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்து, பசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.
கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும், தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில்
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.
கருவூர்த் தேவர் திருத்தில்லை, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும், தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.
கருத்துரை
முருகா! அடியேனை நன்னெறியில் ஆண்டு கொள்.
No comments:
Post a Comment