படிக்காத மேதையாக முடியுமா?
-----------------
படிக்காத மேதை ஆக என்ன செய்ய வேண்டும்?
பவ்வியம் வேண்டும். விநயம் வேண்டும்.
பவ்வியம் --- தாழ்மை, அடக்கம், பணிவு.
விநயம் --- வணக்கம், மரியாதை, ஒழுக்கம்.
"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்பது போலத்தான். கம்பர் வீட்டிலே உள்ள கட்டுத்தறி என்ன செய்யும்? கம்பர் என்ன செய்கின்றாரோ அதைச் செய்யும்.
செய்வதைப் புரி்ந்து கொள்ளும் தன்மையும், சொன்னதைச் செய்யும் திறமும் இருந்தால் போதும்.
பெரியோர்களோடு சகவாசம் செய்தால், அவர்க்கு உள்ள குணம் வரும் என்பதை, பின்வரும் பாடலால் அறியலாம்....
சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல
தருவும் அவ் வாசனை தரும்;
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன் மயமே தரும்;
பந்தம்மிகு பாலுடன் வளாவிய த(ண்)ணீர் எலாம்,
பால்போல் நிறம் கொடுக்கும்;
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமும்அப்
படியே குணம் கொடுக்கும்;
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,
அடுத்ததும் பசுமையாகும்;
ஆன பெரியோர்களொடு சகவாசம் அதுசெயின்,
அவர்கள் குணம் வரும் என்பர்காண்;
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருக! மெய்ஞ் ஞானமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
முன் மந்தர நெடுங்கிரியின் கடல் கடைந்த அரி மருக --- முன்னொரு காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினை மத்தாக நாட்டிக் கடலைக் கடைந்த திருமாலின் திருமருகரே!மெய்ஞ்ஞான முருகா --- உண்மையறிவான முருகக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ்வாசனை தரும் --- சந்தன மரத்தைச் சார்ந்து நிற்கின்ற பலவகையான மரங்களும் சந்தன மணத்தையே பெறும்.
தங்க மகமேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன்மயமே தரும் --- பொன்மயமான மகாமேரு மலையைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறத்தைப் பெறும்.;
பந்தம் மிகு பாலுடன் வளாவிய த(ண்)ணீர் எலாம் பால்போல் நிறம் கொடுக்கும் --- பாலுடன் சேர்த்து வளாவிய தண்ணீரும் பால் போலவே வெண்ணிறம் கொடுக்கும்.
படிகமணிகட்கு உ(ள்)ளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் --- படிகமணிகளைக் கோத்த நூலும்
படிகம் போலவே நிறம் கொடுக்கும்.
அந்தம் மிகு மரகதக் கல்லைத் திரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் --- அழகு மிகுந்த மரகதக் கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமை நிறமாகவே இருக்கும்.
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின், அவர்கள் குணம் வரும் என்பர் --- அறிவு மிக்க பெரியோர்களுடன் நட்புக் கொண்டால், அவர்களுடைய குணமே வரும் என்பர் பெரியோர்.
பெரியோர்களாடு சேர்ந்து இருந்தால், நல்ல அறிவானது நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் என்று அறிவுறுத்துகின்ற "நாலடியார்" பாடல்....
"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு".
இதன் பொருள் ---
கல்வி அறிவு இல்லாதவராக இருந்தாலும், கற்று அறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், அவர்களுக்கும், அப் பெரியோரது சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவானது வாய்க்கப் பெறும். எப்படி என்றால், சிறந்த மணமும் அழகும் நிறைந்த பாதிரி பூவானது, புதிய மண் பாத்திரத்தில் இருந்தால், அந்த மண் பாத்திரத்திற்கும், அதில் இருந்த தண்ணீருக்கும், பாதிரிப் பூவின் மணம் கிடைப்பது போல.
பெரியோர் இணக்கம் செய்யும் நன்மையைக் குறித்து, "நீதி வெண்பா" என்னும் நூல் கூறுமாறு காண்க.
"கங்கைநதி பாவம், சசி தாபம், கற்பகம் தான்
மங்கல் உறும் வறுமை மாற்றுமே, --- துங்கமிகும்
இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போம் என்று அறி".
கங்கை ஆறு பாவத்தையும்,திங்கள் வெப்பத்தையும், கற்பகமரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும் உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.
அவ்வாறே, தீயோர் கூட்டுறவால் விளையும் தீமை குறித்தும் "நீதி வெண்பா" கூறுமாறு காண்க.
"நன்று அறியாத் தீயோர்க்கு இடம் அளித்த நல்லோர்க்கும்,
துன்று கிளைக்கும் துயர் சேரும்; --- குன்றிடத்தில்
பின்இரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம் கொடுத்த
அன்னம் முதல் பட்டது போல்ஆம்".
முன்னொரு காலத்து மலையில் இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை, பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.
இதில் அமைந்த கதை ---
ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று, அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது. அன்னமும் தங்க இடம் கொடுத்தது. காக்கையானது தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஓர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரம் ஆகி, விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.
நல்லோரது கூட்டுறவால் நன்மை எப்படி விளையும் என்பதைக் கம்பர், தான் இயற்றிய இராமாயணத்தில் கூறுகின்றார்.
இராமன், மிதிலையில் வில்லை ஓடித்து, சீதாதேவியை மணந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அயோத்தியில் இருந்து தசரதன் முதலானவர்கள் எல்லோருமாக, அவரவர் தேரில் ஏறிக் கொண்டு மிதிலை நோக்கிச் செல்லுகின்றார்கள். தேரில் இருந்தவை பொன்னால் ஆன சக்கரங்கள். அந்தப் பொன்னால் ஆன சக்கரங்கள் வேகமாக உருண்டு தமது பொன்னை உரைத்துக் கொண்டே சென்றதால், வழியில் இருந்த பாறைகள் எல்லாம் பொன்னிறம் ஆயின. இந்தக் காட்சியானது, தெளிந்த அறிவினை உடைய பெரியோர் சிறியவர்களிடத்தில் இருந்தால், அவர்களுடைய சொல்லை நாளும் கேட்டு, சிறியவர்களும் தமது புன்மைக் குணம் நீங்கி, தெளிந்த அறிவினைப் பெறுவர் என்னும் உண்மையைப் புலப்படுத்தி நின்றது.
பொன்னால் ஆன தேர்ச்சக்கரம் --- தெளிந்த அறிவினை உடைய பெரியோர்.
கருமையான பாறாங் கற்கள் --- அறிவில்லாத சிறியோர்.
"தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும் பொன்உருள்உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தன் நிறம்ஆக்கிய இரதம்".
இதன் பொருள் ---
தெருண்ட மேலவர் --- தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்ச் சேரினும் --- சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட அவர் தம் --- அறிவுத் தெளிவில்லாமல் மயங்கிய அவர்களுடைய; புன்மையை --- இழி குணத்தை; மாற்றுவர் எனும் இது --- போக்குவர் என்று சொல்லுகின்ற இந்த வார்த்தை; வழக்கே --- முறைமையானதே (உலக இயல்புதான்); இரதம் --- (ஏனெனில்) இரதங்கள்; பொன் உருள் உருண்ட --- பொன்னால் இயன்ற சக்கரங்கள் உருண்டு சென்ற; வாய்தொறும் --- இடங்கள்தோறும்; உரைத்து உரைத்து ஓடி --- (தம்) பொன்னை உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட கல்லையும் --- கருமையான பாறாங் கற்களையும்; தம் நிறம் ஆக்கிய --- (தம்) பொன்னிறமாகவே செய்யலாயின.
தேரின் பொன்னிற உருளை சென்றதால் அங்குள்ள பாறைக் கற்கள் பொன்னிறத்தை அடைந்தன. இதை நல்லாரேடு கூடியவர் பெறும் சிறப்பைக் குறித்து நின்றது.
எனவே, நூல்களைக் கற்று அறியும் நல்வாய்ப்பு இல்லையானாலும், கற்றறிந்தவர்கள் கூட்டத்தில் பணிவோடு கூடி இருந்தால், அதுவே குலவித்தையாகிப் பலன் தரும். குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்பது முதுமொழி.
No comments:
Post a Comment