சேலம் --- 0942. பரிவுறு நாரற்று

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

பரிவுறு நாரற்று (சேலம்)

 

தனதன தானத் தனதன தானத்

     தனதன தானத் ...... தனதான

 

 

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்

     சிலைபொரு காலுற் ...... றதனாலே

 

பனிபடு சோலைக் குயிலது கூவக்

     குழல்தனி யோசைத் ...... தரலாலே

 

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்

     தனிமிக வாடித் ...... தளராதே

 

மனமுற வாழத் திருமணி மார்பத்

     தருள்முரு காவுற் ...... றணைவாயே

 

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்

     தொடுகும ராமுத் ...... தமிழோனே

 

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்

     திருவளர் சேலத் ...... தமர்வோனே

 

பொருகிரி சூரக் கிளையது மாளத்

     தனிமயி லேறித் ...... திரிவோனே

 

புகர்முக வேழக் கணபதி யாருக்

     கிளையவி நோதப் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

பரிவு உறு நார் அற்றுழல் மதி வீச,

     சிலைபொரு கால் உற்ற ...... அதனாலே,

 

பனிபடு சோலைக் குயில் அது கூவ,

     குழல் தனி ஓசைத் ...... தரலாலே,

 

மருவுஇயல் மாதுக்கு இருகயல் சோரத்

     தனிமிக வாடித் ...... தளராதே,

 

மனம் உற வாழ,திருமணி மார்பத்து

     அருள் முருகா! உற்று ...... அணைவாயே.

 

கிரிதனில் வேல்விட்டுருதொளை யாகத்

     தொடு குமரா! முத் ...... தமிழோனே!

 

கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகன் ஆகித்

     திருவளர் சேலத்து ...... அமர்வோனே!

 

பொருகிரி சூரக் கிளை அது மாளத்

     தனிமயில் ஏறித் ...... திரிவோனே!

 

புகர்முக வேழக் கணபதியாருக்கு

     இளைய விநோதப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            கிரிதனில் வேல்விட்டு இரு தொளை ஆகத் தொடு குமரா  --- கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிஅது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமாரக் கடவுளே!

 

            முத்தமிழோனே--- இயல்இசைநாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழ் வடிவானவரே!

 

            கிளர் ஒளி நாதர்க்கு ஒருமகன் ஆகி--- பேரோளி வடிவினர் ஆன சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி

 

            திருவளர் சேலத்து அமர்வோனே--- திருமகள் பொருந்தி வாழும் சேலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!

 

            பொருகிரி சூரக் கிளை அது மாள--- போருக்கு எழுந்த ஏழு கிரிகளும்சூரனும்அவன் சுற்றத்தாரும் மாளும்படி,

 

            தனிமயில் ஏறித் திரிவோனே--- ஒப்பற்ற மயில் வாகனத்தில் உலவுபவரே!

 

            புகர்முக வேழக் கணபதியாருக்கு இளைய--- புள்ளியை உடைய யானை முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவரே!

 

விநோத--- அற்புதரே! 

 

பெருமாளே--- பெருமையில் மிக்கவரே

 

            பரிவுறு நார் அற்று அழல்மதி வீச--- நிலவானதுஇரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை வீசுவதாலும்

 

            சிலைபொரு கால் உற்ற அதனாலே--- பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும்

 

            பனிபடு சோலைக் குயில் அது கூவ--- குளிர்ச்சி பொருந்திய சோலையில் குயில் கூவுவதாலும்

 

            குழல் தனி ஓசைத் தரலாலே--- புல்லாங்குழல் ஒப்பற்ற  ஓசையைத் தருவதாலும்

 

            மருவியல் மாதுக்கு இருகயல் சோர --- தனிமையில் பொருந்தி இருக்கும் இந்தப் பெண்ணின் இரண்டு கயல்மீன் போன்ற கண்கள் சோர்வடைய,

 

            தனி மிக வாடித் தளராதே--- தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல்

 

            மனம் உற வாழ--- மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ

 

            திருமணி மார்பத்து அருள்முருகா --- அழகிய இரத்தின மணிமாலை அணிந்த மார்பினை அருளுகின்ற முருகப் பெருமானே

 

உற்று அணைவாயே --- வந்து (அவளை) அணைவாயாக.

 

பொழிப்புரை

 

            கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிஅது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமாரக் கடவுளே!

 

            இயல்இசைநாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழ் வடிவானவரே!

 

            பேரோளி வடிவினர் ஆன சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி

திருமகள் பொருந்தி வாழும் சேலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!

 

            போருக்கு எழுந்த ஏழு கிரிகளும்சூரனும்அவன் சுற்றத்தாரும் மாளும்படிஒப்பற்ற மயில் வாகனத்தில் உலவுபவரே!

 

            புள்ளியை உடைய யானை முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவரே!

 

அற்புதரே! பெருமையில் மிக்கவரே

 

            நிலவானதுஇரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை வீசுவதாலும்,  பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும்குளிர்ச்சி பொருந்திய சோலையில் குயில் கூவுவதாலும்புல்லாங்குழல் ஒப்பற்ற  ஓசையைத் தருவதாலும்தனிமையில் பொருந்தி இருக்கும் இந்தப் பெண்ணின் இரண்டு கயல்மீன் போன்ற கண்கள் சோர்வடையதனியே கிடந்து மிகவும் வாட்டமுற்றுத் தளர்வு அடையாமல்,  மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழஅழகிய இரத்தின மணிமாலை அணிந்த மார்பினை அருளுகின்ற முருகப் பெருமானே!  வந்து அவளை அணைவாயாக.

 

விரிவுரை

 

இத் திருப்புகழ்ப் பாடல் அகத்துறையில் அமைந்தது. இறைவனை அடைந்து இன்புற எண்ணி வாடும் பக்குவான்மாவின் நிலையை இதுஉலகியலை வைத்து உணர்த்துகின்றது.

 

கிரிதனில் வேல்விட்டு இரு தொளை ஆகத் தொடு குமரா ---


கிரி என்பது,கிரெளஞ்ச மலையைக் குறிக்கும்.

 

கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் இனைத் தொகுதியைக் குறித்து நின்றது.

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கிகிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்துஅண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி,அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

 

வினைத் தொகுதி உயிர்களுக்குத் துன்பத்தை விளைக்கும். அந்தத் துன்பம் உயிர்களுக்கு இயல்பாகவே உள்ள அஞ்ஞானத்தால் விளைவது. துன்பம் நீங்கித் தெளிவு பெறவேண்டுமானால்இறைவனது ஞானசத்தி துணைபுரிய வேண்டும். இக் கருத்தில் வள்ளல்பெருமான் அருமையாகப் பாடி உள்ளது காண்க.

 

"ஆறுமுகம் கொண்ட ஐயா! என் துன்பம் அனைத்தும் இன்னும்

ஏறுமுகம் கொண்டது அல்லால்இறங்குமுகம் இலையால்,

வீறுமுகம் கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்

சீறுமுகம் கொண்ட அத் துன்பம் ஓடச் செலுத்துகவே".

 

தனிமயில் ஏறித் திரிவோனே--- 

 

தனிமயில் --- ஒப்பற்ற மயில்.

 

படிக்கும் திருப்புகழ் போற்றுவன்கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும்பொழுது வந்து 'அஞ்சல்என்பாய்பெரும்பாம்பில் நின்று

நடிக்கும் பிரான் மருகாகொடும் சூரன் நடுங்க வெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே.   --- கந்தர் அலங்காரம்.

                                   

 

புகர்முக வேழக் கணபதியாருக்கு இளைய--- 

 

புகர் முகம் --- யானை.  வேழம் --- யானை. 

 

கிளர் ஒளி நாதர்க்கு ஒருமகன் ஆகி திருவளர் சேலத்து அமர்வோனே--- 

 

அருட்பெருஞ்சோதி வடிவானவர் சிவபெருமான்.

 

கிளர் --- கிளர்ந்து எழுதல். 

 

"ஒளிவளர் விளக்கே"  --- ஒன்பதாம் திருமுறை.

 

ஒளிகொள் மேனி உடையாய்! உம்ப ராளீஎன்று

அளியர் ஆகி அழுதுஉற்று ஊறும் அடியார்கட்கு

எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்

வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.   --- திருஞானசம்பந்தர்.

                                   

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...