அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாசனை மங்கையர் (திருப்பராய்த்துறை)
முருகா!
அடியேனுடைய நெஞ்சத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருள்வாய்.
தானன தந்தன தாத்த தத்தன
தானன தந்தன தாத்த தத்தன
தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான
வாசனை மங்கையர் போற்று சிற்றடி
பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள்
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
யோகமி குந்திட நீக்கி யிப்படி
நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே
தேசம டங்கலு மேத்து மைப்புய
லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே
தீரனெ னும்படி சாற்று விக்ரம
சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக
மூதறி வுந்திய தீட்சை செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாசனை மங்கையர் போற்று சிற்றடி
பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
மாமலை இரண்டு என நாட்டு மத்தக ....முலையானை
வாடை மயங்கிட,நூற்ற சிற்றிழை
நூல் இடை,நன்கலை தேக்க இக்குவில்,
மாரன் விடும் கணை போல் சிவத்திடு .....விழியார்கள்,
நேசிகள்,வம்பிகள், ஆட்டம் இட்டவர்,
தீயர், விரும்புவர் போல் சுழற்றியெ
நீசன் எனும்படி ஆக்கி விட்டு, ஒரு ...... பிணியான
நீரின் மிகுந்து உழல் ஆக்கை இற்றிட,
யோக மிகுந்திட நீக்கி,இப்படி
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ...... ஒருநாளே?
தேசம் அடங்கலும் ஏத்தும் மைப்புயல்
ஆய நெடுந்தகை வாழ்த்த,வச்சிர
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர! ...... முதல்வோனே!
தீரன் எனும்படி சாற்று விக்ரம
சூரன் நடுங்கிட வாய்த்த வெற்பு உடல்
தேய,நடந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா!
மூசு அளி பம்பிய நூற்று இதழ்க்கமல
ஆசனன் வந்து, உலகு ஆக்கி வைத்திடு
வேதன் அகந்தையை மாற்றி,முக்கணர் ...... அறிவாக
மூதறிவு உந்திய தீட்சை செப்பிய,
ஞானம் விளங்கிய மூர்த்தி,அற்புத
மூவர் இலங்கு பராய்த்துறைப் பதி ...... பெருமாளே.
பதவுரை
தேசம் அடங்கலும் ஏத்து மைப் புயல் ஆய நெடும் தகை வாழ்த்த--- தேசம் முழுவதும் போற்றுகின்ற கரியமேக வண்ணத்தர் ஆன பெருந்தகையாகிய (திருமால்) வாழ்ததுகின்ற,
வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர--- வைரமணி போல ஒளி விளங்கும் பூரணர் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!
முதல்வோனே--- உலக முதல்வரே!
தீரன் எனும்படி சாற்று விக்ரம --- தீரன் என்று சொல்லிக் கொள்ளும்படி வலிமை வாய்ந்தவரே!
சூரன் நடுங்கிட--- சூரபதுமன் நடுங்கும்படியாகவும்,
வாய்த்த வெற்பு உடல் தேய நடந்திடு--- வரத்தினால் அவனுக்கு வாய்த்த மலைபோலும் உடல் தேய்ந்து அழியும்படி,
கீர்த்தி பெற்றிடு கதிர்வேலா--- கீர்த்த பெற்ற ஒளிவேலவரே!
மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன்--- மொய்த்துள்ள வண்டுகள் ஒலிக்கின்ற நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைத் தனது இருக்கையாகக் கொண்டவனும்,
வந்து உலகு ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி--- தோன்றிய உலகங்களைப் படைத்துள்ளவனும் ஆகிய பிரமதேவனின் அகந்தையைப் போக்கி,
முக்க(ண்)ணர் அறிவாக--- முக்கண்ணர் ஆகிய சிவபரம்பொருள் அறிந்துகொள்ளுபடிக்கு,
மூது அறிவு உந்திய தீக்ஷை செப்பிய--- பேரறிவு விளங்க உபதேசம் புரிந்து அருளிய,
ஞானம் விளங்கிய மூர்த்தி--- ஞான வடிவினராக விளங்குபவரே!
அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே --- பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அற்புதமாக விளங்குகின்ற திருப்பராய்த்துறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
வாசனை மங்கையர் போற்று--- நறுமணம் கொண்ட விலைமாதர்கள் போற்றிக் காக்கின்ற,
சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட---பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணிகள் ஆரவாரிக்க,
மாமலை (இ)ரண்டு என நாட்டு மத்தக முலை யானை வாடை மயங்கிட--- பெரிய மலைகள் இரண்டு என்னும்படி விளங்குகின்றதும், யானையின் மத்தகத்தைப் போன்றதும் ஆன் முலைகளின் (மீது பூசப்பட்டுள்ள) வாசனை கலந்து வீச,
நூற்ற சிற்று இழை நூல்இடை நன்கலை தேக்க---
நூற்கப்பட்ட மெல்லிய இழை போன்ற சிறிய இடையில் அழகிய ஆடை விளங்க,
இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள்--- கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் விடும் அன்புகளைப் போன்ற சிவந்த கண்களை உடையவர்கள்,
நேசிகள்--- நேசம் பாராட்டுபவர்கள்,
வம்பிகள்--- பயனற்றவர்கள்,
ஆட்டம் இட்டவர்--- வந்தவரைப் பலவிதமாக அட்டுவித்தவர்கள்,
தீயர்--- தீயவர்கள்,
விரும்புவர் போல் சுழற்றியே--- விரும்ப்பவர் போல் (மனதை) அலையவைத்து,
நீசன் எனும்படி ஆக்கி விட்டு--- அறிவில்லாதவனாக ஆக்கிவிட்டு,
ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில்---
ஒரு நோயாளன் என்னும் நிலைமையில்,மிகவும் மனம் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில்,
திட யோகம் மிகுந்திட நீக்கி--- கலங்காத சிவயோகம் மிகுந்து விளங்க,
இப்படி நீ அகலம் தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே--- இந்த நேரமே எனது நெஞ்சில் வீற்றிருப்பதாகிய ஒரு நாள் உண்டாகுமோ?
பொழிப்புரை
உலகில் உள்ளோர் போற்றுகின்ற கரியமேக வண்ணத்தர் ஆன பெருந்தகையாகிய (திருமால்) வாழ்த்த,வைரமணி போல ஒளி விளங்கும் பூரணர் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!
உலக முதல்வரே!
தீரன் என்று சொல்லிக் கொள்ளும்படி வலிமை வாய்ந்தவரே!
சூரபதுமன் நடுங்க, வரத்தினால் அவனுக்கு வாய்த்த மலைபோலும் உடல் தேய்ந்து அழியும்படிகீர்த்த பெற்ற ஒளிவேலவரே!
மொய்த்துள்ள வண்டுகள் ஒலிக்கின்ற நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைத் தனது இருக்கையாகக் கொண்டவனும், தோன்றிய உலகங்களைப் படைத்துள்ளவனும் ஆகிய பிரமதேவனின் அகந்தையைப் போக்கி, முக்கண்ணர் ஆகிய சிவபரம்பொருள் அறிந்துகொள்ளுபடிக்கு, பேரறிவு விளங்க உபதேசம் புரிந்து அருளிய, ஞான வடிவினராக விளங்குபவரே!
பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அற்புதமாக விளங்குகின்ற திருப்பராய்த்துறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
நறுமணம் கொண்ட விலைமாதர்கள் போற்றிக் காக்கின்ற, பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணிகள் ஆரவாரிக்க,பெரிய மலைகள் இரண்டு என்னும்படி விளங்குகின்றதும், யானையின் மத்தகத்தைப் போன்றதும் ஆன் முலைகளின் (மீது பூசப்பட்டுள்ள) வாசனை கலந்து வீச,நூற்கப்பட்ட மெல்லிய இழை போன்ற சிறிய இடையில் அழகிய ஆடை விளங்க, கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் விடும் அன்புகளைப் போன்ற சிவந்த கண்களை உடையவர்கள், வந்தவர் யாரோடும் நேசம் பாராட்டுபவர்கள், பயனற்றவர்கள், வந்தவரைப் பலவிதமாக அட்டுவிப்பவர்கள், தீயவர்கள், விரும்புபவர் போலக் காட்டி (மனதை) அலையவைத்து, அறிவில்லாதவனாக ஆக்கிவிட்டு, ஒரு நோயாளன் என்னும் நிலைமையில்,மிகவும் மனம் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், கலங்காத சிவயோகம் மிகுந்து விளங்க,இந்த நேரமே எனது நெஞ்சில் வீற்றிருப்பதாகிய ஒரு நாள் உண்டாகுமோ?
விரிவுரை
வாசனை மங்கையர் போற்று---
வியர்வை முதலிய கழிவுகளால் உடலில் துர்நாற்றம் வீசாதபடிக்கு, நறுமணப் பொருள்களைக் கொண்டு தமது உடலில் பூசிக் கொள்வர் மகளிர். அதனால் அவர்களது உடம்பில் நறுமணம் வீசிக் கொண்டு இருக்கும். கூந்தலில் நறுமணத் தைலம் கூசிக் கொள்வதாலும், மணமுள்ள மலர்களைச் சூடிக் கொள்வதாலும் மணம் உண்டாகும்.
தெய்வத் தன்மை பொருந்திய பெண்களின் உடம்பிலும், கூந்தலிலும் இயல்பாகவே நறுமணமு கமழும்.
இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள்---
இக்கு --- கரும்பு. மன்மதனுக்கு அமைந்தது கரும்பு வில்.
காம உணர்வால் கண்கள் சிவக்கும். மலர்க்கண் சிவக்கும். துவர் வாய் வெளுக்கும்.
மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூ, மாம்பூ, முல்லைப்பூ, அசோகம்பூ, நீலோற்பலப்பூ என்ற மலர்கள்.
தாமரைப்பூ --- நினைப்பூட்டும்;
மாம்பூ --- பசலை நிறம் தரும்;
அசோகம்பூ --- உணர்வை நீக்கும்;
முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்;
நீலோற்பலப்பூ --- கொல்லும்.
நினைக்கும் அரவிந்தம்,நீள்பசலை மாம்பூ,
அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு
முல்லை இடைகாட்டும்,மாதே முழுநீலம்
கொல்லுமதன் அம்பின் குணம் --- இரத்தினச் சுருக்கம்.
மன்மதனுடைய கணைகளைப் பற்றி வரும் பாடலைக் காண்க.
வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும் அவத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,
இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,
இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.
நேசிகள்---
உள்ளத்தில் நேசம் உள்ளது போலக் காட்டிக் கொள்வார்கள். இது உண்மை அல்ல. அவர்களது நேசம் எல்லாம் பொருளின்மேல் தான் இருக்கும்.
வம்பிகள்---
வம்பு --- பயனின்மை, வஞ்சனை. வீண்பேச்சுழ படிறு, சிற்றொழுக்கம்.
ஆட்டம் இட்டவர்---
தம்மிடத்தில் வந்தவரைத் தமது விருப்பம் போல் ஆட்டுவிப்பவர்கள்.
விரும்புவர் போல் சுழற்றியே நீசன் எனும்படி ஆக்கி விட்டு---
அருளை விரும்பாது பொருளையே விரும்புகின்ற விலைமாதர்கள், பொருள் உள்ளர் இடத்தில் அன்பு உள்ளது போலக் காட்டி,வந்தவர் மனதை அலைய விடுவர். அவர்களது வலையில் பட்டவர்கள் என்றும் உயர்நிலையை அடைவதில்லை. நீசத் தன்மையை அடைந்து இழித்தும் பழித்தும் உலகவரால் பேசப்படுவார்கள்.
ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில்---
ஒரு --- ஒப்பற்ற.
நீர் --- நீர்மை, தன்மை. பிணியாளன் என்னும் தன்மையில் அலைந்து உழலுதல்.
பாடுபட்டவர்க்கு எல்லாம் பொருள் கிடைப்பது இல்லை. அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக,அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய அணிகலன்களைப் பூட்டியனுப்புவர்.
"அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ”
வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
மாதர்தரு பூஷணங்கள்...... என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின்,மூடன் என ஓதும் முன்பு, உன்
ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.
இப்படி நீ அகலம் தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே---
இப்படி --- இக் கணமே.
அகலம் --- மார்பு, இடம், பூமி, பரப்பு. இங்கே நெஞ்சைக் குறிக்கும்.
இப்படி அப்படி என்பது இக் கணம், அக் கணம் என்னும் பொருளிலும் வரும்.
கருதுவார் உள்ளம் கமல ஆசனம் ஆகும் இறைவனுக்கு. "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான் திருமுதுகுன்று உடையான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரிகத்து இருந்த புராணர்" என்பார் திருஞானசம்பந்தர். "எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்" என்றும், "சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" என்றும் மணிவாசகப் பெருமான் போற்றுவார். "நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம்" என்பார் தாயுமான அடிகளார்.
தேசம் அடங்கலும் ஏத்து மைப் புயல் ஆய நெடும் தகை வாழ்த்த--
மைப் புயல் --- கருமேகம்.
நெடுந்தகை --- திருமால்.
வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர---
வச்சிரம் --- வயிரம்.
தீர்க்கம் --- முழுமை. அறிவுத் தெளிவும், கவர்ச்சியும் உள்ள தோற்றம்.
மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி---
மூசுதல் --- மொய்த்தல்.
"மூசு வண்டு அறை பொய்கை" என்பது அப்பரடிகள் அருள் வாக்கு.
அளி --- வண்டு.
பம்புதல் --- ஒலித்தல்.
நூற்று இதழ்க் கமல ஆசனன் --- நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமதேவன்.அவனது அகந்தையைப் போக்கி அருள் புரிந்தவர் முருகப் பெருமான்.
பிரமதேவர் சிவவழிபாட்டின் பொருட்டு, திருக்கயிலாய மலைக்குச் சென்றார். ஆங்கு ஒருபுறம் இலக்கத்தொன்பான் வீரர்கட்கு இடையில் விளங்கும் இளம்பூரணராகிய முருகப்பெருமானைக் கண்டும் காணாதவர் போல், பொய்யொழுக்கமாகச் சென்றார். எம்பிரான், அவரை வீரவாகு தேவரை விட்டு அழைப்பித்து, "யார் நீ?" என வினவினார். பிரமதேவர் "வேதன்" என்றார். முருகர், "வேதன் நீ ஆகின் உனக்கு வேதம் வருமோ?" என்றார். பிரமதேவர், "வரும்" என்றார். முருகர், "வருமானால் படி" என்றார். பிரமதேவர், வேதம் ஓதத் தொடங்கி, தொடக்கத்தில் கூறும் மரபுப்படி, "அரிஓம்" என்றார். முருகவேள், "நிறுத்தும். முதலில் கூறிய பிரணவத்தின் பொருள் யாது" என்று வினவினார். அயன் அப்பொருள் அறியமாட்டானாய் விழித்தனன். வெள்கினன். திகைத்தனன். ஓம் என்னும் மந்திரத்தை ஒரு முகமாக உடைய எம்பெருமான் நகைத்தனன். "முதல் எழுத்திற்குப் பொருள் அறியாத மூடனாகிய நீ, சிருட்டித் தொழில் செய்வது எவ்வாறு பொருந்தும்? உன் அகந்தை இருந்தவாறு என்னே" என்று கூறி, நான்கு தலைகளிலும் பன்னிரு கரங்களால் நன்கு குட்டி அருளினர். பிரமதேவனின் அகந்தை அழிந்தது.
… … … … படைப்போன்
அகந்தை உரைப்ப,” மறை ஆதி எழுத்து ஒன்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்,
சிட்டித்தொழில் அதனைச் செய்வதுஎங்ஙன்" என்று,முன்னம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே! --- கந்தர் கலிவெண்பா.
முக்க(ண்)ணர் அறிவாக மூது அறிவு உந்திய தீட்சை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி ---
முக்கண்ணர் --- சிவபெருமான்.
மூது அறிவு --- பேரறிவு, ஞானம்.
தீட்சை --- குருவின் அருளுரை, ஞானபோதனை, பக்குவ ஆன்மாவைக் கரையேற்றுதல்,
திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவினார். குடிலையின் உண்மைப் பொருளை உரைக்காது விழித்த பிரமதேவனை, அவனது நான்கு தலைகளும் குலுங்குமாறு குட்டி,சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினார் அறுமுகவள்ளல்.
பின்னர் ஒருகால் கந்தமாதனகிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் "புதல்வ! இங்கு வருக" என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து "குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?"என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி,எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் குன்று எறிந்த குமாரக் கடவுளை நோக்கி,"அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்து ஆதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் பிரமதேவனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்" என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு "தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?" என்றனர்.
சிவபெருமான் "மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்"என்றார். குன்று எறிந்த குமாரக் கடவுள் "அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்" என்றனர். கேட்டு "செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைவெற்பை அடைகின்றோம்" என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து திருத்தணிகை மாமலையைச் சார்ந்தனர்.
குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.
எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
"நாத போற்றி என, முது தாதை கேட்க,அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே" --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
"நாதா! குமரா! நம என்று,அரனார்
"ஓதாய்" என ஓதியது எப் பொருள்தான்?" --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே”
"மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா!".... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா!"... --- திருப்புகழ்.
"அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே!"
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை (சுசி மாணவ பாவம் என்று பாம்பன் அடிகளார் கூறுவார்) உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.
உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.
என வருவதும் அறிக.
`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.
அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே ---
திருப்பராய்த்துறை, சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கோயிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இறைவர்: தாருகவனேசுவரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார் : ஏமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்
தல மரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்வதால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் பராய் மரமே ஆகும்.
மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள இத்தல விருட்சம் புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்தும் மக்கள் இத்தல விருட்சத்திற்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் குணமாகும் அல்லது கட்டுப்படும் எனத் தலவரலாறு தெரிவிக்கிறது. வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பராய் மரத்து விதைகள் மருந்தாகின்றன.
இத்திருத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில் பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிரகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.
இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித நீராடுவதை, முதல்முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் இடப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் முழுகுவதைக் "கடைமுழுக்கு" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல்லலொடு வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும், மன்னவரும் சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே" என்று போற்றி உள்ளார்.
கருத்துரை
முருகா! அடியேனுடைய நெஞ்சத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருள்வாய்.
No comments:
Post a Comment