அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருவினைப் பிறவி (திருப்பாண்டிக்கொடுமுடி)
முருகா!
நிலையற்ற பிறவிக் கடலில் இருந்து கரையேற்றி,
நிலைத்த திருவடிப் பேற்றை அடியேனுக்கு அருள்.
தனதனத் தனனத் ...... தனதான
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி,
இடர்கள் பட்டு அலையப் ...... புகுதாதே,
திருவருள் கருணைப் ...... ப்ரபையாலே,
திரம் எனக் கதியைப் ...... பெறுவேனோ?
அரி அயற்கு அறிதற்கு ...... அரியானே!
அடியவர்க்கு எளி அற் ...... புத நேயா!
குரு எனச் சிவனுக்கு ...... அருள்போதா!
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
அரி அயற்கு அறிதற்கு அரியானே--- திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரியவரே!
அடியவர்க்கு எளிய அற்புத நேயா--- அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பரே!
குரு எனச் சிவனுக்கு அருள் போதா--- குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியரே!
கொடுமுடிக் குமர --- கொடுமுடித் தலத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமாளே--- பெருமையில் மிக்கவரே!
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி--- நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்னும் கடலில் மூழ்கி,
இடர்கள் பட்டு அலையப் புகுதாதே--- துயரங்களை அனுபவித்து, அலைந்து திரியும்படி மீளவும் பிறவியில் புகாதபடி,
திருவருட் கருணைப் ப்ரபையாலே--- தேவரீரது திருவருள் என்னும் பெருங்கருணை ஒளியாலே
திரம் எனக் கதியைப் பெறுவேனோ --- நிலையான நற்கதியைப் பெறுதல் கூடுமோ?
பொழிப்புரை
திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரியவரே!
அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பரே!
குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியரே!
கொடுமுடித் தலத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமையில் மிக்கவரே!
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்னும் கடலில் மூழ்கி, துயரங்களை அனுபவித்து, அலைந்து திரியும்படி மீளவும் பிறவியில் புகாதபடி, தேவரீரது திருவருள் என்னும் பெருங்கருணை ஒளியாலே நிலையான நற்கதியைப் பெறுதல் கூடுமோ?
விரிவுரை
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி இடர்கள் பட்டு அலையப் புகுதாதே---
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக உயிர்களுக்குப் பிறவி உண்டாகின்றது. வினைகள் பிறவிகள்தோறும் தொடர்வதால், பிறவியும் தொடர்கின்றது. பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவ நாயனார்.
காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார் என்று பரிமேலழகர் விரித்துக் கூறினார்.காரண காரியத் தொடர்ச்சி என்பது, வித்தினால் முளையும்,முளையினால் வித்தும் தொன்று தொட்டு வருவது போல என்று அறிக.
முன் பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால், இப் பிறவியும், இப் பிறவியில் இழைக்கப்போகும் வினைகளால், இனி வரும் பிறவியும் ஆக, தொன்று தொட்டு, காரண காரியத் தொடர்ச்சி உடையதாய், பிறவியானது முடிவில்லாமல் வருவதால், அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது.
பிவியைப் பெருங்கடல் என்றே எல்லா அருளாளர்களும் கூறினர். "இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி" என்றார் தாயுமானார். "பெரும் பிறவிப் பௌவம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில்
படர்பவர் திகைப்பு அற நோக்கித்
தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண
சைலனே கைலை நாயகனே.
தோற்றிடும் பிறவி எனும் கடல் வீழ்ந்து
துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப
கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது
குரைகழல் கரை புக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்
இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண
சைலனே கைலை நாயகனே.--- சோணசைலமாலை.
(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே யிருக்கின்றன; சமுசாரத்தில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
(2) கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. சமுசாரத்திலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.
(3) கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. சமுசாரத்திலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.
(4) கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. சமுசாரத்திலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.
(5) கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. சமுசாரத்திலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.
(6) கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. சமுசாரமும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.
எனவே, பிறவியானது இடர்கள் மிகுந்தது என்றார் அடிகளார். கடலில் முழுகியவர்கள், ஒரு தெப்பத்தின் துணைக் கொண்டே கரை ஏற முடியும். தெப்பம் என்பது இறைவன் திருவடியே என்பதால்,
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேராதார்"
என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார்.
மனம் போன போக்கில் சென்றான் ஒருவன். கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.
எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது.
இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது; அதன் பயனாக, ஆழம் காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயமாகப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.
அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.
நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து, இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ளமுறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய இறைவனுடைய திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா.
இந்த வரலாற்றை,
மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
போற்றுறுதன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
சாற்றரிய தனிமுத்தித் தடங்கரையின் மிசைஉய்ப்பக்
காற்றுஎறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'
என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.
தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்துஎவ்வத்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
என்கிறது திருவாசகம்.
"நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே"
என்கிறது திருவருட்பா.
வேதன்,நெடுமால்,ஆதி விண்நாடர்,
மண்நாடர்,விரத யோகர்,
மாதவர் யாவரும் காண மணிமுறுவல்
சிறிது அரும்பி,மாடக் கூடல்
நாதன் இரு திருக்கரம் தொட்டு அம்மியின் மேல்
வைத்த கயல் நாட்டச் செல்வி
பாதமலர்,எழுபிறவிக் கடல் நீந்தும்
புணை என்பர் பற்று இலாதோர்.
என்கிறது திருவிளையாடல் புராணம்.
ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கு இதன் அயலகத் திரத்தின் தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
"பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய்" ஆங்கு உளது ஆதலின்
தொழுதுவலங் கொண்டு வந்தேன்,ஈங்குட்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெய ரிதுகேள்... --- மணிமேகலை.
இதன் பதவுரை ---
ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த --- மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும் ---- தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து --- இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை --- மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய --- அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் --- பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் --- அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு --- அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை --- குற்றமற்ற தோற்றத் தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின்காவல் பூண்டேன் --- இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் --- எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ;
அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்,இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க.
இறப்பு எனும் மெய்ம்மையை, இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,
"துறப்பு எனும் தெப்பமே"துணை செயாவிடில்,
"பிறப்பு எனும் பெருங்கடல்"பிழைக்கல் ஆகுமோ. ---- கம்பராமாயணம்.இதன் பதவுரை ---
இம்மை யாவர்க்கும் --- இப்பிறப்பிலே எவர்க்கும் ; இறப்பு எனும் மெய்ம்மையை --- சாவு உண்டு என்னும் உண்மையை ; மறப்பு எனும் அதனின்மேல் --- மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ; கேடு மற்று உண்டோ --- கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ; துறப்பு எனும் தெப்பமே --- துறத்தல் என்னும் மிதவையே ; துணை செய்யாவிடின் --- உதவி செய்யாவிட்டால் ; பிறப்பு எனும் பெருங்கடல் --- பிறப்பு என்னும் பெரிய கடலினின்று ; பிழைக்கல் ஆகுமோ --- தப்புதல் இயலுமோ? இயலாது.
திருவருட் கருணைப் ப்ரபையாலே திரம் எனக் கதியைப் பெறுவேனோ---
இறைவன் திருவருட்கருணை இருந்தால் பிறவிக் கடலில் இருந்து, முத்திக் கரையில் ஏறலாம்.
திரம் --- நிலையான, உறுதியான.
திரம் என்னும் தமிழ்ச் சொல், வடமொழியில், "ஸ்திரம்" என வழங்கப்படும்.
கதி என்பது ஆன்மாக்கள் இறுதியாக அடைய வேண்டிய வீடுபேற்றைக் குறிக்கும். என்றாலும், அதை அடைவதற்கு உரிய நெறியையும் குறிக்கும் என்பதை அறிதல் வேண்டும்.
வீடுபேற்றை அடைவதற்கு உரிய நெறி இது என்ற அறியாமல், அஞ்ஞானத்தால் உழலுகின்ற ஆன்மாக்களுக்கு, நெறியை அறிவிப்பது இறைவன் திருவருளே ஆகும். இறைவன்தான் மானுடச் சட்டை தாங்கி, குருநாதனாக வந்து, உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நெறியை உணர்த்தி அருள்வான்.
கதி இன்னது என்று அறியாமல், வினை வசத்தால் விளைந்த துன்பங்களை விதியே என்று நொந்துகொண்டு இருப்பதுதான் உயிர்களின் இயல்பு.
கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல்முருகா!
நதிதனை அன்ன பொய்வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே.
என்று புலம்புகின்றார் அருணகிரிநாதப் பெருமான். அவரே புலம்பும்போது, நாம் என்ன செய்ய முடியும். அவர் காட்டிய வழியில் நின்று ஒழுகவேண்டும்.
கதியை அருள்பவனும், விதியை விதிப்பவனும்,விதியை மாற்றுபவனும்,குருவாய் எழுந்தருள் புரிகின்ற முருகப் பெருமானே. "கருவாய், உயிராய், கதியாய், விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அடிகளார்.
அரி அயற்கு அறிதற்கு அரியானே---
திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவராக உள்ளவர், சிவபரம்பொருள். ஐம்முகச் சிவமும், அறுமுகச் சிவமும் வேறு அல்ல என்பதால், முருகப் பெருமானையும் திருமால் பிரமனால் அறிய முடியாதவர் என்றார்.
திருமாலும், பிரமனும் அறிய முடியாத பொருளாக இறைவன் உள்ளான் என்பதன் உட்பொருள் வருமாறு.....
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும்,"எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.
(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.
"அரவினில் துயில்தரும் அரியும்,நல் பிரமனும் அன்றுஅயர்ந்து
குரைகழல் திருமுடி அளவுஇட அரியவர்" கொங்குசெம்பொன்
விரிபொழில் இடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநல் மிடறுஉடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
அடியவர்க்கு எளிய அற்புத நேயா---
அடியவர்க்கு எளிவந்தவன் இறைவன் என்பது,
பெண்ணொர் கூறினர்,பெருமையர்,சிறுமறிக்
கையினர்,மெய்ஆர்ந்த
அண்ணல் அன்புசெய் வார்அவர்க்கு எளியவர்,
அரியவர் அல்லார்க்கு,
விண்ணில் ஆர்பொழிம் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்நி லாவிய சிந்தையி னார்தமக்கு
இடர்கள்வந்து அடையாவே.
என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியப்படும்.
இதன் பொருள் ---
மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.
தொலைவு இலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்து,அவன்
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது,
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியும் இந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.
இதன் பொருள் ---
அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவனது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவபிரானுக்குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையோர் விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும்.
தொழுவார்க்கு எளியாய் துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றும்சடையாய்
உழுவார்க்கு அரியவ் விடை ஏறிஒன்னார்
புரம் தீஎழ ஓடுவித் தாய்அழகார்
முழவார்ஒலி பாடலொடு ஆடல்அறா
முதுகாடு அரங்கா நடம் ஆடவல்லாய்
விழவார் மறுகில் வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. --- சுந்தரர் தேவாரம்.
இதன் பொருள் ---
உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே!அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் நின்றவனே!வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே!உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே! பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே! பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும்,பாட்டும், குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே! விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே!அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பி அருள்வாயாக.
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு,
அடியவர்க்கு எளியான், நம்
களவு அறுத்துநின்று ஆண்டமை கருத்தினுள்
கசிந்து உணர்ந்து இருந்தேயும்,
உள கறுத்து, உனை நினைந்து, உ(ள்)ளம் பெருங்களன்
செய்ததும் இலைநெஞ்சே!
பளகு அறுத்து, உடையான்கழல் பணிந்திலை,
பரகதி புகுவானே. --- திருவாசகம்.
இதன் பொருள் ---
நெஞ்சே! தேவர்களும் அளவு செய்தற்கு அரியவன்;அடியார்க்கு எளியவன்; அத்தன்மையனாகிய இறைவன், நம்மையோர் பொருளாக்கி நமது குற்றம் களைந்து ஆண்டருளி னமையை அறிந்திருந்தும் பரகதியடைதற் பொருட்டு அவனது திருவடியை வணங்கினாயல்லை. உன் தன்மை இருந்தவாறு என்னை?
குரு எனச் சிவனுக்கு அருள் போதா---
"குருவாய் அரற்கும் உபதேசம் வைத்தகுகனே!" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.
ஆதிகுருவாக விளங்குபவர் முருகப் பெருமான்.தனக்குத் தானே மகனாகிய தற்பரன் சீடபாவனையை விளக்கும்பொருட்டு, திருவடிகளில் பணிந்து "நாதா குமரா நம: ஓம் என்னும் குடிலையின் உட்பொருளை ஓதி அருளும்" என்று வேண்டிக் கேட்டனர்.
நிருப குருபர குமர என்றுஎன்று பத்திகொடு
பரவஅருளிய மவுன மந்த்ரந்தனைப் பழைய
நினது வழிஅடிமையும் விளங்கும்படிக்கு இனிதுஉணர்த்தி...
--- (அகரமுதலென) திருப்புகழ்.
தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.
என வருவதும் அறிக.
`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒருதெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
ஓம் என்ற மறைமுதல் எழுத்து, பிரணவம் ஆகும். இது சமஷ்டிப் பிரணவம் எனவும், வியஷ்டிப் பிரணவம் எனவும் இருவகைப்படும்.
சமஷ்டி தொகுத்துக் கூறுவது. "ஓம்" என்பதாகும்.
வியஷ்டி வகுத்துக் கூறுவது. அ உ ம என்பதாகும்.
இந்த வியஷ்டிப் பிரணவமாகிய அகர உகர மகரம் மூன்றும் முறையே சத்துவம், ராஜசம், தாமதம் என்று மூன்று குணங்களையும், அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும், காருகபத்தியம், தாக்ஷிணாக்கியம், ஆகவனீயம் என்ற மூன்று அக்கினிகளையும், ருக், யஜுர் சாமம் என்னும் மூன்று வேதங்களையும், உண்டாக்கி, அவைகட்குக் காரணமாக விளங்கும் என்று அறிக.
அகரம் வாய் திறத்தலினால் படைப்பையும்
உகரம் இதழ் குவிவதினால் காத்தலையும்
மகரம் வாய் மூடுதலினால் அழித்தலையும்
குறிப்பிக்கின்றமையால், சொல் பிரபஞ்சம், பொருள் பிரபஞ்சம் என்ற இருவகைப் பிரபஞ்சங்களும் இப் பிரணவத்திலே தோன்றி நின்று ஒடுங்கும்.
"ஓம்" என்னும் சமஷ்டிப் பிரணவம் எதைக் குறிக்குமெனில், மேற்சொன்ன அகர உகர மகரம் என்னும் பாதங்கள் மூன்று மாத்திரையைக் குறிக்க, நான்காவதாக உள்ள இந்த ஓங்காரம் என்னும் பாதம் அர்த்த மாத்திரையாகும். அது மிகவும் சூக்குமமான நாதரூபம்.
எனவே, ஓங்கராமானது, அ, உ, ம, நாதம், விந்து, கலை என்ற ஆறெழுத்தும் தன்னகத்தே விளங்கும் மகாமனுவாகவும், எல்லாத் தேவர்கட்கும் பிறப்பிடமாகவும், எல்லா மந்திரங்களுக்கும் அரசாகவும், தன்னை உச்சரிப்பார்க்கு பிறப்பு இறப்பைப் போக்க வல்லதாகவும் திகழ்கின்றது.
அத்தகைய "பிரணவப் பொருள் யாமே" என்றும், "அறிவை அறிவது பொருள்" என்றும், தமக்குத் தாமே குருவாகிய தற்பரன் உபதேசித்து அருளினார்.
அரவு புனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள்என அருளிய பெருமாளே.
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முனிநாண
ஓர்எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே.
வேதத்திற்கு முதலும் முடிவுமாக விளங்கும் அத் தனிமந்திரத்தின் பொருளை,வேதங்களை நன்கு ஓதிய பிரமதேவரே கூறமாட்டாது குட்டுண்டனர் என்றால்,நாம் அறிந்தது போல் கூறுவது மிகை என்பதோடு,நகைப்புக்கு இடமும் ஆகும்..
தூமறைக்கு எலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓம் எனப்படும் ஓர்எழுத்து உண்மையை உணரான்,
மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினன் என்றால்,
நாம் இனிச் சில அறிந்தனம் என்பது நகையே. --- கந்தபுராணம்.
சனகாதிகளாகிய நால்வர்க்குக் கல்லாலின் புடை அமர்ந்து, எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை இருந்தபடி இருந்து, சின்முத்திரையால் காட்டி, சொல்லாமல் சொன்ன தட்சிணாமூர்த்தியே குருமூர்த்தம் ஆவார். அவருக்கும் குருமூர்த்தமாகி உபதேசித்தபடியால் முருகப் பெருமான் ஆதிகுருநாதன் ஆகின்றார்.
ஆதிகுருப் புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம். --- சிறப்புப் பாயிரம்.
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த
குகனே குறத்தி மணவாளா... --- (மருவேசெறித்த) திருப்புகழ்.
எவர்தமக்கும் ஞானகுரு ஏகாம்ப ரேசர்,
அவர்தமக்கு ஞானகுரு யாரோ --- உவரியணை
கட்டினோன் பார்த்திருக்கக் காதலவன் தன்தலையில்
குட்டினோன் தானே குரு. --- காளமேகப் புலவர்.
இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும்
அருட்குருவாய்இருந்தாய் அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை,
ஆதலால் நின்அடி உளமேகொண்ட
கனத்த அடியவருடைய கழல்கமலம்
உன்னுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மரிப்பதுவும் ஒழிந்திடுமே
குறக்கொடியைச் சேர்ந்திட்டோனே. --- பாம்பன் சுவாமிகள்.
கொடுமுடிக் குமர ---
திருப் பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலம், ஈரோட்டில் இருந்து சுமார் 40கி.மீ. தொலைவு. கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26கி.மி. தொலைவு. கொடுமுடி இரயில் நிலயம்,திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. இரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆலயம் உள்ளது.
இறைவன் --- கொடுமுடிநாதர், மகுடேசுவரசுவாமி, மலைக்கொழுந்தீசர்.
இறைவி --- வடிவுடைநாயகி, சௌடாம்பிகை, பண்மொழிநாயகி,
தல மரம் --- வன்னி
தீர்த்தம் --- காவிரி, பிரமதீர்த்தம், தேவதீர்த்தம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவரால் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.
ஒருமுறை ஆதிசேடனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் பூசல் ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி,ஆதிசேடன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேருமலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் இரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகதமணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீலமணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமணி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடித் தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேசுவரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி திருத்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது.
குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைப்புள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.
இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரம் பூப்பதில்லை, காய்ப்பதில்லை என்பது சிறப்பு. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் அன்பர்கள் பாதயாத்திரையாகக் கொண்டு செல்கிறார்கள்.
பிரம்மாவின் சந்நிதிக்கு வடமேற்கில் பெருமாள் சந்நிதி உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் சந்நிதிக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும்,ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்கும்.
மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.
கருத்துரை
முருகா! நிலையற்ற பிறவிக் கடலில் இருந்து கரையேற்றி, நிலைத்த திருவடிப் பேற்றை அடியேனுக்கு அருள்.
No comments:
Post a Comment