அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சஞ்சரி உகந்து (சிங்கை - காங்கேயம்)
முருகா!
வினைகள் அற மயில் மீது வந்து ஆட்கொள்ள வேண்டும்.
தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
தண்குவளை யுந்து ...... குழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற
தண்குவளை உந்து ...... குழலாலும்,
தண்தரள தங்கம் அங்கம் அணிகின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்,
நஞ்சவினை ஒன்றி,தஞ்சம்என வந்து
நம்பிவிட,நங்கை ...... யுடன், ஆசை
நண்புஉறு எனை இன்று நன்றுஇல் வினை கொன்று,
நன்று மயில் துன்றி ...... வரவேணும்.
கஞ்சமலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி
கந்தி கமழ்கின்ற ...... கழலோனே!
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள்
கண்டு பொருகின்ற ...... கதிர்வேலா!
செஞ்சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை
திண் குயம் அணைந்த ...... திருமார்பா!
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த
சிங்கையில் அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
கஞ்ச மலர்--- தாமரை மலர்,
கொன்றை --- கொன்றை மலர்,
தும்பை --- தும்பை மலர்,
மகிழ்--- மகிழ மலர்,
விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே--- இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவரே!
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள்--- வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் கூட்டமானது
கண்டு பொருகின்ற கதிர் வேலா --- காணும்படி போர் புரிகின்ற ஒளி பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!
செம்சொல் புனைகின்ற எங்கள் குறமங்கை திண் குயம் அணைந்த திருமார்பா --- திருந்திய சொல்லை உடைய எங்கள் குறமகளாகிய வள்ளிநாயகியின் பருத்த மார்பை அணைந்த அழகிய திருமார்பரே!
செண்பகம் இலங்கு மின்பொழில் சிறந்த--- செண்பக மலர்கள் கூடிய இனிய சோலைகள் சிறந்து விளங்கும்
சிங்கையில் அமர்ந்த பெருமாளே--- சிங்கை எனப்படும் காங்கேயம் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்--- வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தலாலும்,
தண்தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்டவித கும்ப கிரியாலும்--- குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை அணிந்துள்ள, வலிமை கொண்ட குவிந்த மலை போன்ற மார்பகங்களாலும்,
நஞ்ச வினை ஒன்றி--- தீவினையானது நெருங்கவும்,
தஞ்சம் என வந்து நம்பி விட--- (நீ தான் எனக்கு) அடைக்கலம் என்று சொல்லி,(அடியேன்) நம்பும்படி வந்து நடிக்கும்
நங்கையுடன் ஆசை நண்புஉறு எனை--- விலைமாதரிடம் ஆசை கொண்டு அவரோடு நட்புக் கொள்ளும் அடியேனை,
நன்று இல்வினை கொன்று--- அந்த நன்மை அற்ற செயலை ஒழித்து,
இன்று நன்று மயில் துன்றி வரவேணும்--- நல்ல மயிலின் மீது ஏறி இன்றே வந்து அருள வேண்டும்.
பொழிப்புரை
தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழ மலர்,இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவரே!
வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் கூட்டமானது காணும்படி போர் புரிகின்ற ஒளி பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!
திருந்திய சொல்லை உடைய எங்கள் குறமகளாகிய வள்ளிநாயகியின் பருத்த மார்பை அணைந்த அழகிய திருமார்பரே!
செண்பக மலர்கள் கூடிய இனிய சோலைகள் சிறந்து விளங்கும் சிங்கை எனப்படும் காங்கேயம் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
வண்டுகள் மகிழ்ந்து,நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தலாலும், குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை அணிந்துள்ள, வலிமை கொண்ட குவிந்த மலை போன்ற மார்பகங்களாலும், தீவினையானது நெருங்கவும்," நீ தான் எனக்கு அடைக்கலம்" என்று சொல்லி,அடியேன் நம்பும்படி வந்து நடிக்கும் விலைமாதரிடம் ஆசை கொண்டு அவரோடு நட்புக் கொள்ளும் அடியேனை, அந்த நன்மை அற்ற செயலை ஒழித்து,காத்து அருள, நல்ல மயிலின் மீது ஏறி இன்றே வந்து அருள வேண்டும்.
விரிவுரை
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்---
சஞ்சரிகம் என்பது ஒரு வண்டு வகை.
மலர்களைச் சூடியுள்ள கூந்தலில் தேனை நாடி வந்து வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன.
நஞ்ச வினை ஒன்றி---
நஞ்ச வினை - தீவினை. நஞ்ச - நைந்து போன. ஒருவன் செய்த தீவினையினை அநுபவிக்கத் தக்க கால் நெருங்கி வரும்போது, அறிவு நைந்து போகும். காம மயக்கத்தால், வஞ்சகமாக, பொருள் ஒன்றையே கருதி, அது உள்ளவர் நேர்படும் காலத்தில், விலைமாதர்,ஆசை வார்த்தைகள் நிறையப் பேசுவர். நேர்பட்ட அவரைத் தவிர வேறு கதியில்லை என்று மயக்கு மொழிகளைப் பேசுவர். அதை நம்பி,விழுந்தால், நஞ்ச வினை காரணமாக நைந்து போக நேரும்.
கந்தி கமழ்கின்ற கழலோனே---
கந்தி -- மணப்பொருள்கள்.
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள்---
கன்றிய பிணங்கள். வாடிப் பதன அழிந்த பிணங்கள்.
செம்சொல் புனைகின்ற எங்கள் குறமங்கை திண் குயம் அணைந்த திருமார்பா ---
திருந்திய இனிய சொல்லை உடையவர் வள்ளிநாயகி. "மதுரித இந்தளாம்ருத வசனமும்" என்பார் பிறிதொரு திருப்புகழில்.
சிங்கையில் அமர்ந்த பெருமாளே---
சிங்கை எனப்படும் காங்கேயம், ஈரோடு திருப்பூர் இரயில் பாதையில் ஊத்துக்குழி என்னும் ஊருக்கு அருகில் உள்ளது.
கருத்துரை
முருகா! வினைகள் அற மயில் மீது வந்து ஆட்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment