பொது - 1046. சாவா மூவா

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சாவா மூவா வேளே  (பொது)


தானா தானா தானா தானா

     தானா தானத் ...... தனதான


சாவா மூவா வேளே போல்வாய்

     தாளா வேனுக் ...... கருள்கூருந்


தாதா வேஞா தாவே கோவே

     சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்


ஏவால் மாலே போல்வாய் காரே

     போல்வா யீதற் ...... கெனையாள்கொண்


டேயா பாடா வாழ்வோர் பாலே

     யான்வீ ணேகத் ...... திடலாமோ


பாவா நாவாய் வாணீ சார்வார்

     பாரா வாரத் ...... துரகேசப்


பாய்மீ தேசாய் வார்கா ணாதே

     பாதா ளாழத் ...... துறுபாதச்


சேவா மாவூர் கோமான் வாழ்வே

     சீமா னேசெச் ...... சையமார்பா


சேயே வேளே பூவே கோவே

     தேவே தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சாவா மூவா வேளே போல்வாய்!

     தாள் ஆவேனுக்கு ...... அருள்கூரும்


தாதா வே!ஞா தாவே! கோவே!

     சார்பு ஆனார்கட்கு ...... உயிர்போல்வாய்!


ஏவால் மாலே போல்வாய், காரே

     போல்வாய் ஈதற்கு, ...... எனை ஆள்கொண்டு,


ஏயா பாடா வாழ்வோர் பாலே

     யான் வீணே கத் ...... திடல் ஆமோ?


பாவா நாவாய் வாணீ சார்வார்,

     பாரா வாரத்து ...... உரகேசப்


பாய் மீதே சாய்வார் காணாதே,

     பாதாள ஆழத்து ...... உறுபாதச்


சேவா மாவூர் கோமான் வாழ்வே!

     சீமானே! செச் ...... சைய மார்பா!


சேயே! வேளே! பூவே! கோவே!

     தேவே! தேவப் ...... பெருமாளே.


பதவுரை


சாவா மூவா வேளே போல்வாய் -- இறப்பு அற்றவரும், மூப்பு அற்றவரும்,  என்றும் இளையவராகவும் விளங்குபவரே!

தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே --- திருவடிக்கு ஆட்பட்ட அடியேனுக்கு அருள் புரியும் கொடையாளியே!

ஞாதாவே --- ஞான வடிவானவரே!

கோவே --- தலைவரே!

சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் --- தேவரீரையே பற்றுக் கோடாகச் சார்ந்து இருப்போர்க்கு உயிர் போன்று விளங்குபவரே!

ஏவால் மாலே போல்வாய் --- கணை தொடுப்பதில் திருமாலைப் போன்றவரே!

காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள் கொண்டு --- அடியேனை ஆளாக ஆண்டு கொண்டு அருள் புரிவதில் மழைமேகத்தை ஒத்தவரே!

ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடல் ஆமோ --- செல்வத்தைப் பொருந்தி இருந்து, தன்னைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களைக் கேட்டு வாழ்கின்றவர்களிடம் சென்று பாடல்களை இயற்றி நானும் வீணே கத்திப் பாடுவது தகுமோ?

பாவா நாவாய் வாணீ சார்வார் -- பாடல்களைத் தனது நாவின் இடத்தே பொருத்தி உள்ள கலைவாணியைச் சார்ந்துள்ள பிரமதேவனும்,

பாராவாரத்து உரகேசப் பாய் மீதே சாய்வார் காணாதே --- திருப்)பாற்கடலில் பாம்புத் தலைவன் ஆகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்ளும் திருமாலும் காண முடியாதபடி,

பாதாள ஆழத்து உறு பாத --- பாதாளத்தினும் கீழ் பொருந்தி உள்ள திருவடிகளை உடையவரும்,

சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே --- பசுவை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசரும் ஆகிய சிவபரம்பொருளின் அருட்செல்வமே!

சீமானே --- அருட்செல்வத்தில் மிக்கவரே!

செச்சைய மார்பா --- வெட்சி மாலை அணிந்த திருமார்பரே!

சேயே --- சிவபெருமான் புதல்வரே!

வேளே --- செவ்வேள் பரமரே!

பூவே --- அழகரே!

கோவே --- தலைவரே!

தேவே --- தேவரே!

தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!


பொழிப்புரை

இறப்பு அற்றவரும்,, மூத்தல் இல்லாதவரும், என்றும் இளையவராகவும் விளங்குபவரே! திருவடிக்கு ஆட்பட்ட அடியேனுக்கு அருள் புரியும் கொடையாளியே! ஞான வடிவானவரே! தலைவரே! தேவரீரையே பற்றுக் கோடாகச் சார்ந்து இருப்போர்க்கு உயிர் போன்று விளங்குபவரே! கணை தொடுப்பதில் திருமாலைப் போன்றவரே! அடியேனை ஆளாக ஆண்டு கொண்டு அருள் புரிவதில் மழைமேகத்தை ஒத்தவரே!

பாடல்களைத் தனது நாவின் இடத்தே பொருத்தி உள்ள கலைவாணியைச் சார்ந்துள்ள பிரமதேவனும், திருப்)பாற்கடலில் பாம்புத் தலைவன் ஆகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்ளும் திருமாலும் காண முடியாதபடி, பாதாளத்தினும் கீழ் பொருந்தி உள்ள திருவடிகளை உடையவரும், பசுவை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசரும் ஆகிய சிவபரம்பொருளின் அருட்செல்வமே! அருட்செல்வத்தில் மிக்கவரே! வெட்சி மாலை அணிந்த திருமார்பரே! சிவபெருமான் புதல்வரே! செவ்வேள் பரமரே! அழகரே! தலைவரே! தேவரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

செல்வத்தைப் பொருந்தி இருந்து, தன்னைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களைக் கேட்டு வாழ்கின்றவர்களிடம் சென்று பாடல்களை இயற்றி நானும் வீணே கத்திப் பாடுவது தகுமோ?


விரிவுரை

சாவா மூவா வேளே போல்வாய் -- 

"பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கந்தர் அனுபூதியில் அடிகளார் அருளி இருப்பது காண்க.  முருகன் என்னும் சொல் இளமையும் அழகும் உடையவன் என்பதைக் குறிக்கும். அவனுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. "சாவா மூவாச் சிங்கமே" என்று சிவபரம்பொருளைக் குறித்து அப்பர் பெருமான் பாடி உள்ளார் என்பதையும் அறிக.

தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே --- 

தாதா - கொடையில் மிக்கவர்.

ஞாதாவே ---

ஞாதா - அறிவு வடிவானவர். அறிவு என்பது இங்கே ஞானத்தைக் குறிக்கும்.

ஏவால் மாலே போல்வாய் --- 

ஏ - அம்பு, கணை. மால் - திருமால்.

காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள் கொண்டு --- 

என்னை ஆட்கொண்டு அருள் புரிதற்குக் காரே போல்வாய் என்று கூட்டிக் கொள்க.  "மேக நிகரான கொடை" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் கூறி உள்ளது காண்க.

பாவா நாவாய் வாணீ சார்வார் -- 

வாணி - கலைவாணி. சார்வார் - கலைவாணியைத் தனது நாவிலே கொண்டுள்ள பிரமதேவன்.

பாராவாரத்து உரகேசப் பாய் மீதே சாய்வார்  ---

பாராவாரம் - கடல். இங்கே திருப்பாற்கடலைக் குறிக்கும்.

உரகம் - பாம்பு. உரக ஈசன் - பாம்புத் தலைவன், ஆதிசேடன்.

திருப்பாற்கடலில் ஆதிசேடன் ஆகிய பாம்பையே படுக்கையாக் கொண்டு சாய்ந்து, அறிதுயில் கொள்ளுகின்ற திருமால்.

பாதாள ஆழத்து உறு பாத --- 

"பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாதமலர்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.

சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே --- 

சே - எருது, பசு, காளை. சே ஏறும் பரமன் சிவபரம்பொருள்.

சீமானே --- 

சீ என்பது திருமகள் சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி.

திருமகள் என்றால் பொதுவாகச் செல்வம் என்று பொருள் கொள்வது உண்டு. பொருட்செல்வத்தை நாடுவோருக்குப் பொருள். அருட்செல்வத்தை நாடுவோருக்கு அருள். "சீமான்" என்பது அருட்செல்வதைத்தேயே சிறப்பாகக் குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

செச்சைய மார்பா --- 

செச்சை - வெட்சி மலர். வெட்சி மாலைநை அணிந்த திருமார்பினை உடையவர் முருகப் பெருமான்.

வேளே --- 

வேள் - மன்மதன், முருகன் இருவரையும் குறிக்கும். திருமாலின் மகனாகிய மன்மதன் கருவேள் எனப்படுவான். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் செவ்வேள் எனப்படுவார்.

பூவே ---

பூ - அழகு. 

ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடல் ஆமோ --- 

செல்வத்தில் மிக்கவர்கள் தன்னை நாடி வந்து பிறர் புகழ்ந்து பாடுவதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் பொருள் தரமாட்டார்கள். பொருளில் இச்சை கொண்டு வீணே செல்வத்தில் மட்டுமே மிக்கு உள்ள புல்லர்களைப் பாடி வீணில் அழியாமல், இறைவன் திருப்புகழைப் பாடி அருள் பெற்று உய்தல் வேண்டும் என்பது கருத்து.

"தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்,

சார்கினும், தொண்டர் தருகிலாப்

பொய்ம்மை யாளரைப் பாடாதே, எந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள்!

இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே." --- சுந்தரர் தேவாரம்.


கருத்துரை


முருகா! செல்வர்களைப் பாடி வீணில் அழியாமல்

தேவரீரையே பாடி உய்ய அருள் புரிவீர்.





No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...