பொது - 1049. வாராய் பேதாய்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வாராய் பேதாய் (பொது)


முருகா! 

அடியேனை நன்னெறியில் நிறுத்தி ஆட்கொண்டு அருள்வாய்.


தானா தானா தானா தானா

     தானா தானத் ...... தனதான



வாராய் பேதாய் கேளாய் நீதாய்

     மானார் மோகத் ...... துடனாசை


மாசூ டாடா தூடே பாராய்

     மாறா ஞானச் ...... சுடர்தானின்


றாரா யாதே யாராய் பேறாம்

     ஆனா வேதப் ...... பொருள்காணென்


றாள்வாய் நீதா னாதா பார்மீ

     தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்


தோரா வானோர் சேனா தாரா

     சூரா சாரற் ...... புனமாது


தோள்தோய் தோளீ ராறா மாசூர்

     தூளாய் வீழச் ...... சிறுதாரைச்


சீரா வாலே வாளா லேவே

     லாலே சேதித் ...... திடும்வீரா


சேயே வேளே பூவே கோவே

     தேவே தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வாராய் பேதாய், கேளாய், நீ தாய்

     மானார் மோகத்து ...... உடன், ஆசை


மாசு ஊடு ஆடாது, ஊடே பாராய்,

     மாறா ஞானச் ...... சுடர் தான் நின்று


ஆராயாதே ஆராய், பேறு ஆம்

     ஆனா வேதப் ...... பொருள் காண் என்று


ஆள்வாய், நீ தான் நாதா! பார் மீது

     ஆர் வேறு ஆள்கைக்கு ...... உரியார்தாம்?


தோரா வானோர் சேன ஆதாரா!

     சூரா! சாரல் ...... புனமாது


தோள் தோய் தோள் ஈர் ஆறா! மாசூர்

     தூளாய் வீழச் ...... சிறு தாரைச்


சீரா வாலே, வாளாலே, வே-

     லாலே சேதித் ...... திடும்வீரா!


சேயே! வேளே! பூவே! கோவே!

     தேவே! தேவப் ...... பெருமாளே.


பதவுரை


தோரா வானோர் சேனை ஆதாரா --- தோல்வியே அறியாதவரும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவருமான சேனாதிபதியே!

சூரா --- சூரரே!

சாரல் புனம் மாது தோள் தோய் தோள் ஈராறா --- வள்ளிமலைச் சாரலில் தினைப் புனத்தில் இருந்த வள்ளிநாயகியின் தோளை அணைந்த, பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா --- பெரிய சூரபதுமன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரரே! 

    சேயே --- சிவபரம்பொருளின் திருப்பதல்வரே! 

    வேளே --- செவ்வேள் பரமரே!

    பூவே --- அழகரே!

    கோவே --- தலைவரே!

    தேவே --- தேவரே!

    தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

    வாராய் பேதாய் கேளாய் --- ஏ பேதையே, வருவாயாக, நான் சொல்வதைக் கேட்பாயாக.

    நீ தாய் மானார் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது ஊடே பாராய் --- நீ அகங்காரம் கொண்டு மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்கு உள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக.

    மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய் --- மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வது போல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக

    பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய் --- பெறத் தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று உணர்த்தி அடியேனை ஆட்கொள்ள வேண்டும்.

    நீ தான் நாதா --- (முருகா!) தேவரீரே எனக்குத் தலைவர்,

    பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் --- இந்தப் பூமியில் தேவரீரை அல்லாமல் வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உரியவர்?

பொழிப்புரை

தோல்வியே அறியாதவரும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவருமான சேனாதிபதியே! சூரரே! வள்ளிமலைச் சாரலில் தினைப் புனத்தில் இருந்த வள்ளிநாயகியின் தோளை அணைந்த, பன்னிரு திருத்தோள்களை உடையவரே! பெரிய சூரபதுமன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரரே! சிவபரம்பொருளின் திருப்பதல்வரே! செவ்வேள் பரமரே! அழகரே! தலைவரே! தேவரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

ஏ பேதையே, வருவாயாக, நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ அகங்காரம் கொண்டு மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்கு உள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக; மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வது போல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக; பெறத் தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று உணர்த்தி அடியேனை ஆட்கொள்ள வேண்டும். முருகா! தேவரீரே எனக்குத் தலைவர். இந்தப் பூமியில் தேவரீரை அல்லாமல் வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உரியவர்?


விரிவுரை

தாய் மானார் மோகத்துடன் ஆசை மாசு ஊடு ஆடாது ஊடே பாராய் --- 

தாய் - தாவுதல், பரத்தல், பரபரப்புக் கொள்ளுதல்.

மானார் - பெண்கள். இங்கே விலைமாதரைக் குறிக்கும்.

ஆசை மாசு - ஆசை என்னும் குற்றம்.

ஊடு ஆடுதல் - நடுவே திரிதல், பலகால் பயிலுதல், கலந்து பழகுதல், பெருமுயற்சி செய்தல்.

ஊடே பார்த்தல் - புறத்தே காணாமல், அகத்தே காணுதல்.

மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய் --- 

மாறா ஞானச் சுடர் - நெய் உள்ள அளவுக்கும், திரியின் அளவுக்கும் ஏற்ப மற்ற சுடர்கள் மாறுபடும். ஆனால் ஞான ஓளியானது மாறுதல் இல்லாது என்றும் ஒருபடித்தாக ஒளிரும்.

ஆராயாதே ஆராய் - நினையாமல் நினைந்து, நினைப்பு அற நினைந்து என்பது போல, உள்ளக்கண் கொண்டு அறிதல்.

"உள்ளக்கண் நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று முருகப் பெருமானை வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான். "உள்ளத்தை" என்றால்,  "உள்ளத்தின் உள்ளே நின்ற கரு" என்று அப்பர் பெருமான் கூறிய பரம்பொருளை என்று பொருள் கொள்ளவேண்டும். (உள்ள + அத்தை = உள்ளத்தை). எனவே, எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும்.

முகத்தில் உள்ள ஊனக்கண்ணைக் கொண்டு மட்டுமே ஒரு பொருளைத் தெளிபவர்களை "மூடர்கள்" என்று திருமூல நாயனார் காட்டி, அவர்களுக்குப் பின் வரும் பாடலைத் தனது அருளுரையாக வழங்கினார்.

"முகத்தினில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தினில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்,

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தினைச் சொல்எனில் சொல்லுமாறு எங்ஙனே."


என்பதே இந்த அருளுரைப் பாடல்.

மகளுக்குத் திருமணம். புகுந்த வீட்டில் உள்ள சூழலுக்குத் தக்கவாறு தன்னை அமைத்துக் கொள்ளாவிட்டால் சங்கடப்பட்டுப் போவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து, மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தைத் திரும்பத் திரும்ப எடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் கணவனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அனுபவம் தாய்க்குக் கிடையாது என்பது அல்ல. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே உண்மை. 'தன் கணவனோடு உறாவடிப் பெற்ற இன்பத்தை, தன் மகளுக்குச் சொல்’ என்றால் தாய் எப்படிச் சொல்ல முடியும். அவளது அனுபவத்தாலேயே விளங்கும்.

எனவே, உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள். அதில் தோயுங்கள். கண்டுகொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார் திருமூலர்.

"கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்"

என்றும் பிறிதொரு பாடலில் காட்டினார்.

பின்வரும் அப்பர் பெருமான் தேவாரப் பாடல் இதன் மேலும் தெளிவாக்கும்...

"கழித்திலேன் காம வெந்நோய்,

     காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன், ஊன்கண் நோக்கி

     உணர்வு எனும் இமை திறந்து

விழித்திலேன், வெளிறு தோன்ற

     வினையெனும் சரக்குக் கொண்டேன்,

அழித்திலேன் அயர்த்துப் போனேன்,

     அதிகை வீரட்டனீரே."

இதன் பொருள் ---

திருஅதிகை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமானே! என்னிடத்து உள்ள ஆசாபாசம், காமம் என்ற கொடிய நோய் நீங்கப்பெற்றிலேன், ஆசை என்னும் பற்றினை விடுத்திலேன்.  உடல் உயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால், அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக, விழிக்கும் மெய்யுணர்வாகிய கண்ணை விழித்துப் பார்க்கும் நிலையைப் பெற்றிலேன். அதற்குத் தடையாகிய வினை என்னும் சரக்கையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளை, இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவு உடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு.

நாம் அறிவென்னும் செம்மையின்றி அறியாமை என்னும் வெளிறு தோன்ற நிற்கின்றோம். இதில் தக்கது இன்னது, தகாதது இன்னது என்று பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் போகின்றோம். அதானல் மேலும் மேலும் பாவம் என்னும் சரக்கையே தேக்கி வைத்துக் கொள்கின்றோம்.

நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனால், அவற்றின் தரத்தை ஆராய்ந்து நல்லவற்றையே தேர்ந்தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள் வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்ட கண்ட சரக்குகளை எல்லால் வாங்குவார்கள். இழப்பைத் தேடிக் கொள்வார்கள்.

பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய் ---

வேதப் பொருளாக உள்ள இறைவன் திருவருள் ஒன்றே மனிதனாகப் பிறந்தவர் அடையக் கூடிய பெரும்பேறு. அந்தப் பேற்றைப் பெற்றுக் கொள்ளும்படியாக்க் குருமுகமாக நின்று அருள் புரிபவன் இறைவன்.

"நீடு ஆர் சடாதரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனைச்சொல் அருள்வாயே" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளி உள்ளது காண்க.

நீ தான் நாதா, பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் --- 

உயிர்களுக்கு எல்லாம் இறைவன் ஒருவனே தலைவன். உயிர்கள் எல்லாம் இறைவனின் அடிமைகள், உடைமைகள். எனவே, உயிர்களை ஆட்கொள்வதற்கு உரியவன் இறைவன் ஒருவனே.

தோரா ---

தோல்வியே கண்டு அறியாதவன் இறைவன். "தோரா வென்றிப் போரா" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் சொல்லி உள்ளார்.

மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா --- 

சீரா - இடையில் கட்டிக் கொள்ளும் சிறுவாள். உடைவாள் என்றும் சொல்லப்படும். முருகப் பெருமானிடத்து உள்ள ஆயதங்களுள் சீராவும் ஒன்று. 

"சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ, மாறா நிசாசரக் குலத்தை இப்படி சீராவினால் அறுத்து ஒதுக்கிய பெருமாளே" என்று, "ஆனாத ஞான புத்தியை" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க. 

"பதித்த நூபுர சீர்பாத மாமலர் படைக்குள் மேவிய சீர் ஆவொடே, கலை பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள்" என்று "மதிக்குநேர்" எனத் தொடங்கும் திருப்புகிலும் அடிகளார் பாடி உள்ளார்.

முருகப் பெருமானின் படைக்கலங்களில் ஒன்றாகப் பொருந்தியது உடைவாள் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

"ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து, எனக்குக்

காலையும் மாலையும் முன் நிற்குமே, கந்தவேள் மருங்கில்

சேலையும், கட்டிய சீராவும், கையில் சிவந்த செச்சை

மாலையும், சேவல் பதாகையும், தோகையும், வாகையுமே."


"தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்

ஆராது, உமைமுலைப் பால்உண்ட பாலன் அரையில்கட்டும்

சீராவும் கையில் சிறுவாளும், வேலும் என் சிந்தையவே,

வாராது அகல் அந்தகா! வந்தபோது உயிர் வாங்குவனே."     --- கந்தர் அலங்காரம்.

வேளே --- 

வேள் - மன்மதன், முருகன் இருவரையும் குறிக்கும். திருமாலின் மகனாகிய மன்மதன் கருவேள் எனப்படுவான். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் செவ்வேள் எனப்படுவார்.

பூவே ---

பூ - அழகு. 

கருத்துரை

முருகா! அடியேனை நன்னெறியில் நிறுத்தி ஆட்கொண்டு அருள்வாய்.


No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...