அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மாதா வோடே (பொது)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரூ டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் ...... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார் தீயு டேமூள்
சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மாதா வோடே, மாமான் ஆனோர்,
மாதோடே, மைத் ...... துன மாரும்,
மாறு ஆனார், போல் நீள் தீ ஊடே,
மாயா மோகக் ...... குடில் போடாப்
போதா, நீர் ஊடே போய் மூழ்கா,
வீழ்கா வேதைக்கு ...... உயிர்போமுன்,
போத ஆகாரா பாராய்! சீர் ஆர்
போது ஆர் பாதத்து ...... அருள்தாராய்.
வேதா வோடே, மால் ஆனார்,மேல்
வானோர், மேனிப் ...... பயம் மீள-
வே, தானோர் மேல் ஆகாதே ஓர்
வேலால் வேதித் ...... திடும் வீரா!
தீதார் தீயார் தீ ஊடே மூள்
சேரா சேதித் ...... திடுவோர் தம்
சேயே! வேளே! பூவே! கோவே!
தேவே! தேவப் ...... பெருமாளே.
பதவுரை
வேதாவோடே மால் ஆனார், மேல் வானோர் மேனிப் பயம் மீளவே --- பிரமனுடன் திருமால் மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு,
தானோர் மேல் ஆகாதே --- தானவர்களின் ஆதிக்கம் மேம்படாதவாறு
ஓர் வேலால் வேதித்திடும் வீரா --- ஒப்பற்ற வேலாயுதத்தால் தானவர்களை வதைத்திட்ட வீரரே,
தீது ஆர் தீயார் தீ ஊடே மூள் சேரா சேதித்திடுவோர் தம் சேயே --- தீமைகள் புரிந்து கொண்டு இருந்த தீயவர்கள் ஆகிய திரிபுராதிகள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!,
வேளே --- செவ்வேள் பரமரே!
பூவே --- அழகரே!
கோவே --- தலைவரே!
தேவே --- தேவரே!
தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும் --- தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும்,
மாறு ஆனார் போல் --- என்னோடு மாறுபாடு கொண்டவர்கள் போல,
நீள் தீ ஊடே மாயா --- பெரு நெருப்பிலே அழியும்படியாக,
மோகக் குடில் போடா போதா --- ஆசைக்கும் இடம் தந்து இருந்து இந்த உடலைப் போட்டுச் சென்று,
நீர் ஊடே போய் மூழ்கா --- நீரிலே போய் முழுகி,
வீழ்கா வேதைக்கு உயிர்போமுன் --- நீங்குதல் ஆகிய துன்பத்துக்கு இடமாக உயிர் போவதற்கு முன்,
போத ஆகாரா பாராய் --- ஞான வடிவானவரே! திருக்கடைக்கண் வைப்பீராக.
சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் --- சிறப்பு நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடியினை அடியேனுக்கு அருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
பிரமனுடன் திருமால் மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு, தானவர்களின் ஆதிக்கம் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் தானவர்களை வதைத்திட்ட வீரரே,
தீமைகள் புரிந்து கொண்டு இருந்த தீயவர்கள் ஆகிய திரிபுராதிகள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!, செவ்வேள் பரமரே! அழகரே! தலைவரே! தேவரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும், என்னோடு மாறுபாடு கொண்டவர்கள் போல, பெரு நெருப்பிலே அழியும்படியாக, ஆசைக்கு இடம் தந்து இருந்து இந்த உடலைப் போட்டுச் சென்று, நீரிலே போய் முழுகி நீங்குதல் ஆகிய துன்பத்துக்கு இடமாக இந்த உயிர் போவதற்கு முன், ஞான வடிவானவரே! திருக்கடைக்கண் வைப்பீராக. சிறப்பு மிகுந்த தாமரை மலர்போன்ற திருவடியினை அடியேனுக்கு அருள் புரியவேண்டும்.
விரிவுரை
மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும் மாறு ஆனார் போல் ---
நோயால் வருந்தி நொடிந்து கொண்டு இருக்கும்போதே உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியர் போல் ஆகிவிடுவார்கள். உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன.
வாழ்நாள் முழுவதும் இரவு பகலாக உழைத்தும், அறநெறி நீங்கியும் தேடிச் செல்வத்தைச் சேமித்து வைக்கின்றார்கள்.
அதி அற்புதமாக மாளிகையைப் புதுக்குகின்றார்கள். மனைவி மக்கள் பொருட்டே உழைக்கின்றார்கள்.
அப்படிப் பாடுபட்ட ஒருவன் ஒரு கணத்தில் மாள்கின்றான். மாண்டவன் எதிர் வீட்டில் ஒரு வண்டி இழுக்கின்றவனுக்கு மகனாகப் பிறக்கின்றான். பிறந்த அவனுக்குத் தான் தேடிய பொன்னும் புதுக்கிய மாளிகையும், அருமையாகத் தொகுத்து வைத்த பொருள்களும் சொந்தம் என்று சொல்ல முடியாது. இது என் வீடு, இவள் என் மனைவி, இவன் என் மகன் என்று கூறினால் அவனுக்கு உதை தான் கிடைக்கும். ஒரு விநாடியில் அத்தனையும் அயலாகி விடுகின்றன. இதனை அறியாது, மாந்தர் மதியிழந்து கதியிழந்து உழல்கின்றார்கள்.
"தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே” --- திருப்புகழ்.
"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக
மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்
வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை
அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்
அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று
அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,
அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.: --- திருப்புகழ்.
"இல்லும் இளையோரும் மெல்ல அயலாக,
வல் எருமை மாயச் ...... சமனாரும்
எள்ளி, எனது ஆவி கொள்ளை கொளும் நாளில்,
உய்ய ஒரு நீ பொன் ...... கழல்தாராய்." --- திருப்புகழ்.
"மனைவிதாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத் தானை
நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சி னீரே." --- அப்பர்.
"இல்லும் பொருளும் இருந்த மனை அளவே,
சொல்லும் அயலார் துடிப்பு அளவே - நல்ல
கிளை குளத்து நீர் அளவே, கிற்றியே, நெஞ்சே!
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து." --- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
நீள்தீ ஊடே மாயா மோகக் குடில் போடா போதா நீர் ஊடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர்போமுன், போத ஆகாரா பாராய், சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் ---
ஆவி ஈடேறும் வழியைத் தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, பரத்தையர் நட்புகொண்டு தாம் கற்ற கல்வியை இறைவன் திருவருள் நெறியில் உபபோகிக்காது, இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும் வலியிலானை, “விஜயனே விறல் வீமனே” என்றும் பலவகையாக கலம்பகம் மடல் பரணி கோவை தூது முதலிய பிரபந்தங்களைப் பாடி, அவர்கள் தரும் பொருள்களைக் கொணர்ந்து நல்வழியில் செலவழிக்காமல் பரத்தையர்க்கு ஈந்து, மகளிர் போகமே சுவர்க்க வாழ்வு என்று மயங்கிக் கிடந்து பிணிவாய்ப்பட்டு மடிகின்றனர் சில மாந்தர்கள்.
எத்துணை எத்துணைச் சிறந்த அன்பைச் செலுத்தினோரும் முடிவில் உயிர் நீத்தவுடன் உடம்பைக் கொண்டு போய் சுடலையில் தீ வைத்து நீரில் மூழ்கி அவ்வன்பைத் துறந்து மறந்து நீங்குவர். அத்தகு நிலை வாய்க்கும் முன்பாக முருகப் பெருமான் திருக்கண் வைத்து அருளி, திருவடியில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறார் அடிகளார். நமது வேண்டுதலும் இதுவாகவே அமைய வேண்டும்.
"சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்
ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,
ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என, ...... எடும் என ஒடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா, வரிச்சுடலை
ஏகி, சடம்பெரிது வேக, புடம் சமைய
இட்டே, அனற்குள் எரி பட்டார் எனத்தழுவி,
நீரில் படிந்துவிடு பாசத்து அகன்று, உனது
சற்போதகப் பதுமம் உற்றே, தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்று தர, ......இனிவரவேணும்." --- திருப்புகழ்.
வேதாவோடே மால் ஆனார், மேல் வானோர் மேனிப் பயம் மீளவே ---
வேதா - வேத்ததை ஓதுபவன் என்பதால் பிரமதேவனுக்கு வேதா என்னும் பெயர் உண்டாயிற்று.
மால் - திருமால்.
மேனிப் பயம் - உள்ளத்திலே கொண்ட பயம் உடல் நடுக்கத்தில் தெரிகிறது.
தானோர் மேல் ஆகாதே ---
தானோர் - தானவர்கள். அரக்கர்கள்.
ஓர் வேலால் வேதித்திடும் வீரா ---
ஓர் வேல் - ஒப்பற்ற வேல்.
வேதித்தல் - வேறுபடுத்துதல், நலிதல், தீற்றுதல்.
தீதார் தீயார் தீ ஊடே மூள் சேரா சேதித்திடுவோர் தம் சேயே ---
தீமைகள் புரிந்து கொண்டு இருந்த தீயவர்கள் ஆகிய திரிபுராதிகள் தீயின் இடையே சேரும்படி சிவபெருமான் அழித்து அருள் புரிந்தார்.
திரிபுர தகன வரலாறு
கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.
திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.
அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.
ஆனால், இறைவர் அவ்வில்லையும் கணையையும் பயன்படுத்தாமல் சிரித்தார். முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள்.
"மால் ஆய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புர த்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. --- திருஞானசம்பந்தர்.
"வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
--- திருஞானசம்பந்தர்.
குன்ற வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே." --- திருஞானசம்பந்தர்.
கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. --- அப்பர்.
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. --- சுந்தரர்.
வேளே ---
வேள் - மன்மதன், முருகன் இருவரையும் குறிக்கும். திருமாலின் மகனாகிய மன்மதன் கருவேள் எனப்படுவான். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் செவ்வேள் எனப்படுவார்.
பூவே ---
பூ - அழகு.
கருத்துரை
முருகா! திருவடியில் வைத்து அருள் புரிவாய்
No comments:
Post a Comment