பொது - 1051. அடைபடாது நாள்தோறும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அடை படாது (பொதுப்பாடல்கள்)


முருகா!

அடயோகத்தை விடுத்து, சிவயோகத்தை அடுத்து,

திருவடி சார அருள்புரிவீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு

     அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி


அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்

     அவனி மீதி லோயாது ...... தடுமாறும்


உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக

     உதறி வாச காதீத ...... அடியூடே


உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்

     உபய பாத ராசீக ...... மருள்வாயே


வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது

     மகர வாரி யோரேழு ...... மமுதாக


மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச

     வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக்


கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி

     புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே


கனக லோக பூபால சகல லோக ஆதார

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


அடை படாது, நாடள்தோறும் இடைவிடாது போம்வாயு,

     அடைய மீளில் வீடு ஆகும் ...... எனநாடி,


அருள் பெறா, அனாசார கரும யோகி ஆகாமல்,

     அவனி மீதில் ஓயாது ...... தடுமாறும்,


உடலம் வேறு, யான்வேறு, கரணம் வேறு வேறாக

     உதறி, வாசக அதீத ...... அடி ஊடே


உருகி, ஆரிய ஆசார பரம யோகி ஆமாறு, உன்

     உபய பாத ராசீகம் ...... அருள்வாயே.


வட பராரை மாமேரு கிரி எடா நடா மோது

     மகர வாரி ஓர் ஏழும் ...... அமுதாக


மகுட வாள் அரா நோவ, மதியம் நோவ, வாரீச

     வனிதை மேவு தோள் ஆயி ...... ரமும் நோவக்


கடையும் ஆதி கோபாலன் மருக! சூலி, காபாலி,

     புதல்வ! கான வேல்வேடர் ...... கொடிகோவே!


கனக லோக பூபால! சகல லோக ஆதார!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


வட பரு அரை மாமேரு கிரி எடா நடா --- வடதிசையில் உள்ளதும், பருத்த அடியுடன் கூடியதும் ஆகிய மேருமலையை எடுத்துக் கடலில் நட்டு,

மோது மகர வாரி ஏழும் அமுதாக --- அலைகள் மோதுகின்றதும் மகர மீன்கள் வாழுகின்றதும் ஆகிய ஏழு கடல்களையும் அமுதாகத் தோன்றும் பொருட்டு,

மகுட வாள் அரா நோவ --- பணாமகுடங்களுடன் கூடிய ஒளி பொருந்திய வாசுகி என்ற அரவம் நோவவும்

மதியம் நோவ --- மத்தின் தறியாக நிறுத்திய சந்திரன் நோவவும்,

வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ --- தாமரை மலரில் வாழும் திருமகள் வாழும் ஆயிரம் தோள்களும் நோவவும்,

கடையும் ஆதி கோபாலன் மருக --- கடைந்த முதல்வராகிய திருமாலின் திருமருகரே!

சூலி காபாலி புதல்வ --- முத்தலைச் சூலத்தையும், பிரம கபாலத்தையும் ஏந்திய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

கான வேல் வேடர் கொடி கோவே --- கானகத்தில் வாழ்பவரும், வேலை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்களின் புதல்வியாகிய வள்ளியம்மையாரின் கணவரே!

கனக லோக பூபால --- பொன்னுலகத்தையும் மண்ணுலகத்தையும் காத்தருள்பவரே!

சகல லோக ஆதார --- எல்லா உலகங்களுக்கும் ஆதாரமானவரே!

கருணை மேருவே --- கருணையில் மேருமலை போல் உயர்ந்தவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

அடை படாது நாள் தோறும்  ---  தங்குதலின்றி நாள்தோறும்

இடை விடாது போம் வாயு --- இடைவிடாது வெளிப்பட்டுப் போய் திரும்பும் பிராணவாயுவானது

அடைய மீளில் வீடு ஆகும் என நாடி --- நிறைந்து மீண்டு உடலுக்குள் கும்பித்து நிற்குமாயின் முக்தி வீடு கிட்டும் என்று எண்ணி,

அருள் பெறா அனாசார கரும யோகி ஆகாமல் --- திருவருளைப் பெறாத, சைவ ஒழுக்கம் இல்லாத கருமயோகியாக அடியேன் ஆகாமல் படிக்கு

அவனி மீதில் ஓயாது தடுமாறும் --- இந்தப் பூமியில் ஒழியாமல் உழல்கின்ற

உடலம் வேறு --- இந்த உடம்பு வேறு,  

யான் வேறு --- உயிராகிய நான் வேறு,

கரணம் வேறு --- உடம்புக்குள் நின்று, இந்த உடம்பைத் தொழிற்படுத்துகின்ற அந்தக் கரணங்கள் வேறு,

வேறாக உதறி –-- இவைகள் வேறாக நிற்க உதறித் தள்ளி,

வாசக அதீத அடி ஊடே உருகி --- சொற்களுக்கு எட்டாததாகிய திருவடியை உன்னி உள்ளம் உருகி,

ஆரிய ஆசார பரம யோகி ஆம் ஆறும் --- குருபரம்பரையாக வந்த ஒழுக்கம் உடைய பெரிய சிவயோகி ஆகுமாறு,

உன் உபய பாத ராசீகம் அருள்வாயே --- தேவரீருடைய இரண்டு திருவடிகளில் பொருந்துவதை அருள் புரிவீர்.


பொழிப்புரை

வடதிசையில் உள்ளதும், பருத்த அடியுடன் கூடியதும் ஆகிய மேருமலையை எடுத்துக் கடலில் மத்தாக நட்டு, அலைகள் மோதுகின்றதும் மகர மீன்கள் வாழுகின்றதும் ஆகிய ஏழு கடல்களையும் அமுதாகத் தோன்றும் பொருட்டு, பணாமகுடங்களுடன் கூடிய ஒளி பொருந்திய வாசுகி என்ற அரவம் நோவவும் மத்தின் தறியாக நிறுத்திய சந்திரன் நோவவும், தாமரை மலரில் வாழும் திருமகள் வாழும் ஆயிரம் தோள்களும் நோவவும் கடைந்த முதல்வராகிய திருமாலின் திருமருகரே!

முத்தலைச் சூலத்தையும், பிரம கபாலத்தையும் ஏந்திய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

கானகத்தில் வாழ்பவரும், வேலை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்களின் புதல்வியாகிய வள்ளியம்மையாரின் கணவரே!

பொன்னுலகத்தையும் மண்ணுலகத்தையும் காத்தருள்பவரே!

எல்லா உலகங்களுக்கும் ஆதாரமானவரே!

கருணையில் மேருமலை போல் உயர்ந்தவரே!

தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

தங்குதலின்றி நாள்தோறும் இடைவிடாது வெளிப்பட்டுப் போய் திரும்பும் பிராணவாயுவானது, நிறைந்து மீண்டு உடலுக்குள் கும்பித்து நிற்குமாயின் முக்தி வீடு கிட்டும் என்று எண்ணி, திருவருளைப் பெறாத, சைவாசாரம் இல்லாத கருமயோகியாக அடியேன் ஆகாமல் படிக்கு, இந்தப் பூமியில் ஒழியாமல் உழல்கின்ற இந்த உடம்பு வேறு,  உயிராகிய நான் வேறு, உடம்புக்குள் நின்று, இந்த உடம்பைத் தொழிற்படுத்துகின்ற அந்தக் கரணங்கள் வேறு, இவைகள் வேறாக நிற்க உதறித்தள்ளி, சொற்களுக்கு எட்டாததாகிய திருவடியை உன்னி உள்ளம் உருகி, குருபரம்பரையாக வந்த ஒழுக்கம் உடைய பெரிய சிவயோகி ஆகுமாறு, தேவரீருடைய இரண்டு திருவடிகளில் பொருந்துவதை அருள் புரிவீர்.

விரிவுரை

அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு ---

பிராணவாயு எப்போதும் நமது முயற்சி இன்றியே இடைவிடாது சரித்துக் கொண்டு இருக்கின்றது. நின்றாலும் சென்றாலும் கிடந்தாலும் இருந்தாலும் எழுந்தாலும் துயின்றாலும் அயின்றாலும் அது தடைபடாது சஞ்சரிக்கும். உயிர் வாழ்வின் ஆணிவேர் பிராணவாயு. அது இன்றி உயிர் உடம்போடு கூடியிராது. அது சிறிது சிறிதாகக் கழிந்து விடுகின்றது.

அடைய மீளில் வீடு ஆகும் என நாடி ---

பிராணவாயு கீழ்நோக்காகக் கழியாமல் மீண்டு நிற்குமாறு செய்வதுவே முத்தி வீடு என்று அடயோகிகள் எண்ணுவர். இவ்வாறு எண்ணுதல் பிழை. இது அடயோகக் கொள்கை. இது முத்திக்குச் சாதனம் அன்று. வாயுவைக் கும்பித்து நிறுத்துதல் நெடுநாட்களுக்கு இந்த உடம்பை நிறுத்துமே அல்லாமல் முத்தியைத் தராது.

"யோகம்" என்ற பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள்; பல வகையாகச் சிதறுண்டு போகாமல் மனம் அடங்கி ஒடுங்கி வரவேண்டும். அதுவே யோகம். மனம் ஒருமைப்பட்டு நிற்க, இறைவனோடு ஒன்றுபட வேண்டும். இதற்காகத் தியானம் முதலியன செய்ய வேண்டும். சரியை, கிரியை, யோகம் என்று மூன்று படிகளைச் சொல்வார்கள். அந்த யோகம் என்பது, ஞானம் என்ற இலட்சியத்தை உடையது. யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி உள்ளது. யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது. யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறைவனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன்படாது. அதானல் ஞானமும் உண்டாவதில்லை. யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்குகிறார்கள். யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண்டாகும். அதனால் ஒருவகையான இன்பமும் உண்டாகும். அதை அனுபவிக்கும்போது, அதுவே யோகத்தின். பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள். என்றைக்கும் மாறாத திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு அப்போது போய்விடும். 

யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய இலட்சியத்தை அடைய வேண்டும். அந்த அனுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பலவகை அனுபவங்கள் ஏற்படும். சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அனுபவங்கள் அவை. யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்திநெறியிலும் இப்படி இடையிடையே சில உயர்ந்த அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்கள், உலகப் பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை. ஆனால், அந்த அனுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி, நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்து, அப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீட்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்துவிடுவார்கள். பல துறவிகளும், யோகிகளும் மிகவும் தீவிரமாகச் சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். முடிந்த நிலை கிடைத்துவிட்டதாக எண்ணி நின்றுவிடுவார்கள். 

யோகம் என்று நாம் சொல்வது அட்டாங்க யோகமே. அதில் ஒரு பயற்சி மூச்சை அடக்குவது. நம்முடைய உடம்பில், இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்று மூன்று நாடிகள் உள்ளன. இடப்பக்கத்தில் ஒடும் நாடி, இடைகலை;  வலப்பக்கத்தில் உள்ள நாடி பிங்கலை; இரண்டுக்கும் நடுவில் முதுகுத் தண்டின் நடுவிலே செல்வது சுழுமுனை என்ற நாடி. மூக்கில் இடப் பக்கமாக மூச்சு வந்தால் இடைகலையில் மூச்சு ஒடுகிறது. அப்படியே வலப்பக்க மூக்கில் வந்தால் அது பிங்கலை நாடியில் ஒடும். சுழுமுனை என்னும் நடுநாடியில் மூச்சு ஓடினால் இரண்டு மூக்குத் துளைகளில் இருந்தும் ஒரே மாதிரி மூச்சு வரும். இந்த நடுநாடியின் வழியாக மூச்சு வெளிப்பட்டால் மனம் மிகத் தெளிவாக இருக்கும். 

மூச்சுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு. மூச்சுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம் மயங்குகிறது. மூச்சு வழியாக மயக்க மருந்தைக் கொடுத்தாலும் மனம் மயங்குகிறது. துக்கம் வந்தாலும், கோபம் வந்தாலும் மூச்சு வேகமாக வருகிறது. மூச்சுக் காற்றின் பயிற்சியினால் மனத்தையே மாற்றலாம் என்று யோகிகள் இயல்பாக வரும் மூச்சை மாற்றினார்கள். மூச்சை உள்ளே இழுப்பதற்குப் 'பூரகம்' என்றும், உள்ளே நிறுத்துவதற்குக் 'கும்பகம்' என்றும், வெளியில் விடுவதற்கு 'இரேசகம்' என்றும் பெயர். நாம் மூச்சை விடுவதும், இழுப்பதுமாக இருக்கிறோம். நிறுத்துவது இல்லை. 

மனத்தில் இறைவன் திருவுருவத்தைத் தியானம் பண்ணினால், நம்மை அறியாமல் சுழுமுனை நாடியில் மூச்சு ஒடும். மனம் தெளிவாக இருக்கும். மனம் தெளிவாக இருப்பதுதான் இலட்சியம். குளத்தில் நீர் தெளிவாக இருந்தால், நம் முகத்தின் பிம்பம் நன்றாகத் தெரியும். சிறிய கல் விழுந்து நீர் அசங்கினாலும் முகத்தைப் பார்க்க முடியாது. நீருக்கு அடியில் ஏதேனும் இருந்தால் தெளிவான தண்ணீரில் நன்றாகத் தெரியும். எவ்வளவு ஆழமாக இருந்தாலும் கீழே உள்ள பொருள் தெளிவாகத் தெரியும். குழம்பிய நீரில் கணுக்கால் அளவு கீழே இருக்கிற பொருள்கூடத் தெரியாது. நம் மனம் கவலையினாலும், உலக இயல் வாழ்க்கையில் அடைகின்ற ஆசாபாசங்களினாலும் கலங்கி இருக்கும்போது உள்ளத்தில் இருக்கும் இறைவனை உணர முடியாது. எல்லோருடைய உள்ளத்திலும் இறைவன் அந்தர்யாமியாக இருக்கிறான். நம் மனம் பன்முகப்பட்டுக் குழம்பி இருப்பதால், அந்தரங்கத்தில் உள்ள இறைவனுடைய திருவுருவம் நமக்குத் தெரிவது இல்லை. அந்தக் கலக்கம் தெளியத் தெளிய இறைவன் திருவுருவமும் தெளிவாகத் தோன்றும். 

மனம் ஒருமுகபட்டுத் தெளிவு பெறவே யோகம். மூச்சை இழுத்து விடுகின்ற பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் ஒரு கூறு. பிராணாயாமம் செய்து மனத்தைத் தெளிவுறச் செய்துகொண்டு தியானம் செய்தால், இறைவனுடைய திருவுருவம் மிகத் தெளிவாக மனத்தில் அமையும். 

யோகம் செய்வது தியானம் கைகூடுவதற்குத்தான். இப்போது யோகத்தை ஆசனத்தோடு நிறுத்திவிடுகிறார்கள். ஆசனம் என்பது மேலே இருக்கிற யோக வழிகளுக்குத் துணையாக நிற்பது. அந்த வழிக்குப் போகும் வழியைக் காட்டாமல், இக் காலத்தில் பலரும் உடல் பயிற்சி போலச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நீரில் மிதந்து காட்டுவதும், குழியில் சில நாட்கள் இருந்து காட்டுவதும் ஆகிய செயல்கள் எல்லாம் செப்பிடுவித்தையைப் போன்ற சாமானியச் செய்கைகள் "அடயோகம்" என்ற வகையைச் சார்ந்தவை. 

அடயோகங்களைச் சாதித்து, இடையிலே வருகின்ற விசேட ஆற்றல்களில் மயங்கி நின்று, உலகத்தாரையும் ஏமாற்றுகின்ற யோகியர்கள் கூட்டத்தை அருணகிரிநாதப் பெருமான் பார்த்து, 'இறைவனுடைய திருவருளைப் பெற முயல்வதை மறந்துவிட்டு, மூச்சை அடக்கி அதனால் வருகின்ற சிறிய இன்பங்களில் மயங்கி, அதோடு நின்று விடுகிறார்களே' என்ற இரக்கம்  உண்டாயிற்று. இறைவனிடத்தில் பக்தி இல்லாவிட்டால் எந்த யோகமும் கைகூடுவது இல்லை. யோகத்தின் பயனே புலனடக்கம் ஆகும். இதனை "நிரோதனம்" வடமொழியில் சொல்வார்கள். புலனடக்கத்தை விட்டு, சிலர் பொன்னுக்கும் பொருளுக்கும், பிற சுகங்களுக்கும் பேராசை கொண்டு எல்லோரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். 

முதலில் யோகம் செய்யும்போது மனத்தை அடக்க வேண்டும் என்றுதான் தொடங்குகிறார்கள். ஆனால், இடையே வருகின்ற சிலவகையான சித்திகளில் அவர்களே மயங்கி விடுவதோடு, பிறரையும் மயக்கம் கொள்ளச் செய்கிறார்கள். சிலர் கோயிலுக்கு அறங்காவலர்களாக, மனத்தில் பத்தி உணர்வோடு, நல்ல தொண்டு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் போவார்கள். போன பிறகு, அங்கே கிடைக்கும் சிறுசிறு பயன்களைக் கண்டு ஏமாந்து போய் இறைவனையே மறந்து விடுவார்கள். அதுபோல "அடயோகம்" பண்ணுகிறவர்கள் மூச்சு அடக்கல், ஆசனம் முதலியவற்றைப் பண்ணும்போது, ஏதோ ஒருவகையான இன்பத்தைப் பெற்று, அந்த அளவில் நின்று, இறைவனையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் இந்த உடம்பு மறைந்து போனால், மறைந்து விடுபவை. உடம்பு உரம் உடையதாகவும், மேலும் மேலும் சாதனைகளைத் தருவதற்குரிய வன்மை உடையதாகவும் இருந்தால் போதாது. மனத்தை ஒருமுகப்படுத்தி, அதையும் மாய்க்கும் வகையில் யோகம் கைகொடுக்க வேண்டும். இல்லையானால் யோகம் செய்து பயன் இல்லை.

அடிகளார் அடயோகத்தைக் கண்டித்து, சிவயோகத்தைப் பாராட்டி உள்ள பாடல்களைக் காண்க.

"துருத்தி எனும்படி கும்பித்து, வாயுவைச் சுற்றி, முறித்து

அருத்தி உடம்பை ஒறுக்கில் என்ஆம், சிவயோகம் என்னும்

குருத்தை அறிந்து, முகம் ஆறுஉடைக் குருநாதன் சொன்ன

கருத்தை, மனத்தில் இருந்தும் கண்டீர் முத்தி கைகண்டதே."  


"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப்புகட்டின்

வீட்டில் புகுதல் மிகஎளிதே, விழி நாசி வைத்து

மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சை உள்ளே

ஓட்டிப் பிடித்து, எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே."  ---  கந்தர் அலங்காரம்.


"அனித்த மான ஊன்நாளும் இருப்ப தாக வே,நாசி

     அடைத்து, வாயு ஒடாத ...... வகைசாதித்து,

அவத்தி லேகு வால்மூலி புசித்து வாடும், ஆயாச

     அசட்டு யோகி ஆகாமல், ...... மலமாயை,


செனித்த காரிய உபாதி ஒழித்து, ஞான ஆசார

     சிரத்தை ஆகி, யான்வேறு, ...... என்உடல்வேறு,

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத

     சிவச்சொ ரூபமாயோகி ...... எனஆள்வாய்." ---  திருப்புகழ்.

அருள்பெறா அநாசார கருமயோகி ---

திருவருள் தாகத்துடன் இறைவனை நாடி அகம் குழைந்து, உருகிப் பாடி, அன்பு செய்யாதவர்கட்குத் திருவருட் செல்வம் கிட்டாது.  திருவருள் பெறாதார் முத்தி இன்பத்தை எய்தப் பெறார். அவர்கட்கு ஆன்றோர் ஆசாரமும் அமையாது. சிவஞானத்தைப் பெறாத அவர்கள் கருமயோகி எனப்படுவார்கள்.

உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி ---

ஞானநூல் தெளிவில்லாதவர்கள் உடலமே ஆன்மா என்றும், கரணங்களே ஆன்மா என்றும் கூறி, மலைவு எய்துவர். உடம்புடன் கூடி இருக்கின்றபோது, சிவயோக நிலையில் உடம்பு வேறு, கருவி கரணங்கள் வேறு எனக் கண்டு, அவைகளினின்றும் பிரிந்து தன்னந்தனியாக நின்று இன்புறுவர். அவ்வாறு தன்னந்தனியாக நின்ற நிலையில் உண்டாகும் இன்பம் அளவற்றதாகத் திகழும்.

"தன்னந் தனி நின்றது தான், அறிய

இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ.?" --- கந்தர் அநுபூதி.


"நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி

நாம் அல்ல; நாமும் அரன் உடைமை-ஆம் என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;

முற்செய்வினை யும்தருவான் முன்." --- சிவஞானபோதம்.

இதன் பொருள் ---

செவி முதலிய பொறிகள் நமது அறிவு விளங்குதற்குத் துணை செய்கின்ற கருவிகளே ஆகும். அவை மாயையின் காரியங்களே. நாம் ஆவன அல்ல. மேலும் அவை செயற்படுதலும் இறைவனது விருப்பத்தின் படியன்றி நம் விருப்பத்தின்படி அல்ல. வினைகள் வருவதற்கு வாயிலாய் உள்ள நுகர்ச்சிப் பொருள்களும் அங்ஙனமே மாயையின் காரியங்களே. நாம் ஆவன அல்ல; நம் இச்சைப்படி செயற்படுவனவும் அல்ல.

மேற் கூறியவற்றைக் கொண்டு வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நாமும் முதல்வனது வழியில் நிற்றற்குரிய பொருளாவோம். தனித்து நிற்கும் உரிமை சிறிதும் நமக்கில்லை.

அடியூடே உருகி ---

திருவடி ஞானமே என உணர்க. அத் திருவடியை உன்னி உன்னி உள்ளம் உருகுதல் வேண்டும். உருகும் அடியார் உள்ளத்தில் இறைவனுடைய அருட்காட்சி தோன்றும்.

"முருகன் குமரன் குகன்என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வுஎன்று அருள்வாய்." ---  கந்தர் அநுபூதி.


"குமர, குருபர, முருக, குகனே, குறச்சிறுமி

  கணவ,சர வண,நிருதர் கலகா, பிறைச்சடையர்

    குருஎனநல் உரையஉதவும் மயிலா எனத்தினமும் ...... உருகாதே.". ---  திருப்புகழ்.


ஆரிய ஆசார ---

ஆரியன் - ஆசாரியன். குருநாதன் வழியாக வந்த ஒழுக்கம்.  வழிவழியாக வந்த ஒழுக்கம் உயர்ந்தது. பரம்பரை மருத்துவம், பரம்பரை ஜோதிடம் உயர்ந்தவை என உணர்க.

"தங்கள் ஆணவ மாயை கருமம

     லங்கள் போய், உப தேச குருபர

          சம்ப்ர தாயமொடு ஏயும் நெறியது ...... பெறுவேனோ." --- (ஐந்துபூதமும்) திருப்புகழ்.

பரம யோகி ---

பரம – பெரிய. பரமயோகி - சிவராஜயோகி. சிவயோகத்தின் நுணுக்கத்தை நன்கு தெளிந்து அதனை நமக்கு உபதேசிக்கின்றார் அருணகிரிநாதர். பல பாடல்களில் அதன் சிறப்பை ஓதுகின்றார்.  திருமூலருக்குப் பின் சிவயோகத்தைத் தெளிவாகக் கூறியவர் அருணகிரிநாதர் ஒருவரே என உணர்க.

"ஐந்து பூதமும், ஆறு சமயமும்,

  மந்த்ர வேதபு ராண கலைகளும்,

    ஐம்ப தோர்வித மான லிபிகளும், ...... வெகுரூப

அண்ட ராதிச ராச ரமும்,உயர்

   புண்ட ரீகனும், மேக நிறவனும்,

    அந்தி போல்உரு வானும், நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமும், அசபையும்,

  விந்து நாதமும், ஏக வடிவம்,அ

    தன்சொ ரூபம் அதாக உறைவது ...... சிவயோகம்."    ---  திருப்புகழ்.

உபய பாத ராசீகம் அருள்வாயே ---

சிவயோக நிலையைப் பெற்று திருவடியில் பொருந்தும் பெற்றியை அடிகளார் வேண்டுகின்றனர். "ராசீவம்" என்பது பாடமானால், திருவடித் தாமரை என்று பொருள் கொள்ளலாம்.

வட பராரை ---

பருஅரை என்பது பராரை என வந்து. இவ்வாறு திருமுருகாற்றுப்படையிலும் "இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து" என வந்திருக்குமாறு காண்க.

அமுதத்தை வேண்டி கடல் பானையாகவும், மந்தரமலை மத்தாகவும், சந்திரன் தறியாகவும், வாசுகி தாம்பாகவும் கொண்டு திருமால் கூர்மவடிவு கொண்டு அம்மலையைத் தாங்கி, அவருடைய ஆயிரம்கரங்களையும் கொண்டு அசுரர் சுரர் என்பார்களுடன் கடைந்தனர்.

"மாகமுக டோடுஅகில பாதாள மேருவுட

  னேசுழல, வாரியது வேதாழி யா,அமரர்

   வாலிமுத லானவர்கள் ஏனோர்க ளால்அமுது..... கடைநாளில்

வாரும்என வேஒருவர் நோகாமல் ஆலவிடம்

  ஈசர்பெறு மாறுஉதவி யேதேவர் யாவர்களும்

    வாழஅமு தேபகிரும் மாமாய னார்இனிய ...... மருகோனே." ---  (தோகைமயிலே) திருப்புகழ்.

அவ்வாறு கடையும்போது அரவமும் திங்களும் நொந்தன.

"மகுட வாள் அரா நோவ, மதியம் நோவ"....

திருமகள் உறைகின்ற இடத்தில் சோம்பலும் மயக்கமும் அயர்ச்சியும் இரா. ஊக்கமும் ஆக்கமும் சுறுசுறுப்பும் மிகுதியாக இருக்கும்.  திருமகள் உறைகின்ற ஆயிரம் தோள்களும் திருமாலுக்கு நொந்தன என்பதனால், கடல் கடைவதன் அருமையை உணர்த்துகின்றார்.  "வாரீச வனிதை மேவு தோள் ஆயிரமும் நோவ" என்பார்.

கனக லோக பூபால ---

கனகலோகம் - பொன்னுலகம். பூ - பூவுலகம். பாலன் - இரட்சிக்கின்றவன், காப்பவன்.  முருகவேள் பொன்னுலகம் மண்ணுலகம் என்ற இரண்டையும் காப்பாற்றுபவர்.

"சுவர்க்க லோக மீகாம! சமஸ்த லோக பூபால!

     தொடுத்த நீப வேல்வீர! ...... வயலுரா!"    ---  (அனித்தமான) திருப்புகழ்.

சகல லோக ஆதார ---

எல்லா உலகங்கட்கும் அப் பரமபதியே ஆதாரமானவர்.

கருணை மேரு ---

மலைகளுக்குள் உயர்ந்தது மேருமலை. முருகன், கருணையில் மேருமலையிலும் உயர்ந்தவர்.


கருத்துரை

முருகா!

அடயோகத்தை விடுத்து, சிவயோகத்தை அடுத்து,

திருவடி சார அருள்புரிவீர்.



No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...