உடம்பு இறந்த நிலை

 


உடம்பு இறந்த நிலை

-----

 

     பொருள்கள் எல்லாவற்றையும் இலக்கண ஆசிரியர்கள்அகம்புறம் என்று இரண்டு வகையாகப் பகுத்திருக்கிறார்கள். மக்கள் வாழ்க்கையில் பெற வேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அறம்பொருள்இன்பம்வீடு என்ற இவற்றையே புருடார்த்தம் என்றும்  சொல்வார்கள். அறம் பொருள் என்னும் இரண்டையும் புறம் என்றும்இன்பம் வீடு என்னும் இரண்டையும் அகம் என்றும் கொள்ளலாம். முகத்தில் கண் கொண்டு காண்பது அறமும்பொருளும். அகத்தில் கண் கொண்டு காண்பது இன்பமும்வீடும். முகத்தில் கண்ஊனக் கண். அகத்தில் கண்ஞானக் கண்.

 

"முகத்தினில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தினில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்;

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தினைச் சொல்எனில் சொல்லுமாறு எங்ஙனே?"

 

என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.

 

     வீர வாழ்க்கையின் பல துறைகளை விரிவாகச் சொல்வது புறப்பொருள் இலக்கணம். பெண்என்றால் காதலும்ஆண் என்றால் வீரமும்  நினைவுக்கு வரும். பெண்ணின் இயல்பு காதலை உண்டாக்குதல்விருப்பத்தைக் கிளரச் செய்தல். அதனால், "மாதர் காதல் சொல்லப்படுகிறது. 'மாதர்என்ற சொல்லுக்கே 'அழகு','காதல்'என்று பொருள். பெண்ணின் தன்மை பெட்புஅதற்கு விருப்பம் என்று பொருள்.ஆணின் தன்மை ஆண்மையாகும். ஆண்மை என்ற சொல்லுக்குஆளும் தன்மைவெற்றிவலிமைஎன்று பொருள். பெண்ணால் காதலும்ஆணால் வீரமும் வளர்கின்றன. பெண்ணின் காதலை ஆணின் வீரம் பாதுகாக்கிறது. ஆணும் பெண்ணுமாக மக்கள் வாழும் உலகத்தில் வீரமும் காதலும் வாழ்க்கையை அரண் செய்து இன்பத்தை ஊட்டுகின்றன. 

 

     முருகன் வீரம் நிறைந்த தெய்வம். அவன் தேவர் படைத் தலைவன். அவன் திருக்கரத்தில் உள்ள வேல் அவன் வீரச் சிறப்புக்கு அடையாளமாக விளங்குகிறது. 'வெல்'என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டது 'வேல்'வீரத்தில் சிறந்து நிற்பது போலவே முருகன் காதலிலும் சிறந்து நிற்கிறான். காதலைப் பாதுகாக்கும் தெய்வம் அவன். வள்ளிநாயகியிடம் காதல் சிறந்து  நின்ற பேரழகன் அவன். வீரமும் காதலும் சிறந்த முருகனை,  "மங்கையர் கணவமைந்தர் ஏறே" என்று நக்கீரதேவர் பாடுகிறார். காதல் சிறப்பை அவன் அணிந்த மாலை காட்டுகிறது. முருகனது வீரப் பெருமையை அவன் திருக்கரத்திலுள்ள வேலும்காதல் பெருமையை அவன் திருமார்பில் அணிந்த கடப்ப மலர் மாலையும் புலப்படுத்துகின்றன. 

 

     அந்த இரண்டையும் ஒரு சேர எண்ணி,"சொன்ன கிரவுஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல் மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப!" என்கிறார் அருணகிரிநாதர். முதலில் வேலைப்பற்றிச் சொல்கிறார். அது கிரெளஞ்ச மலையைத் துளைத்து உருவியது. குருதியும் தசையும் உள்ள உடம்புகளில் பச்சை மரத்தில் ஆணி  இரங்குவது போல வேல் புகுந்துவிடும். ஆனால் கிரவுஞ்ச மலை பாறையாக இருப்பது. ஆயுதங்கள் வந்து மோதினால் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்யும் வன்மையை உடையது அந்த மலை. அது சொர்ண மயமானது என்று அருணகிரியார்சொல்கிறார்.

 

      'பொன்னம் சிலம்பு புலம்ப வரும் எங்கோன்'  என்று கந்தர் அலங்காரத்திலும்,  'கனகக் கிரியைப் பொரும் வேலா! என்று திருத்தணிகைத் திருப்புகழிலும்கிரவுஞ்ச மலையைப் பொன்மலை என்று பாடியிருக்கிறார். இங்கே "சொன்ன கிரவுஞ்ச கிரி" என்றார். சொர்ணம் என்னும் வடசொல், "சொன்னம்" என்று வந்தது. வடமொழியில் 'சொர்ணம்என்றால் 'தங்கம்என்று பொருள்.  இறுகிய பொன்னாக நின்ற கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் சென்று முருகனுடைய வேல் தொளைத்தது. 

 

     "வைவேல் மன்ன" என்று வேலாயுதத்தை உடைய மன்னனாக முருகனைப் பரவிய அருணகிரிநாதர்அடுத்தபடி அவனது மாலையைச் சொல்கிறார். அவன் வெட்சிகாந்தள்கடம்பு முதலிய மாலைகளை அணிபவன். கடம்பு அவன் திருமார்பில் அணியும் மாலை. குறிஞ்சி நிலத்திலே மலரும் மலர் கடம்பு. கடம்பு மாலையை அணிந்து வள்ளிநாயகியோடு இன்புற்றானாம் முருகன். வீரத்துக்கும் காதலுக்கும் நாயகனாக வைவேல் மன்னனாகவும் கடம்பணியும் மார்பனாகவும் இருக்கும் முருகனைப் பாடுகிறார் அருணகிரியார்.அவர்  

முருகனுடைய திருவருளில் திளைத்து இன்ப அநுபவம் பெற்றவர். 

 

     இறைவனை வழிபட்டு அன்பு முறுகமுறுகப் பலவகையான அனுபவங்கள் உண்டாகும். யோகம் செய்தாலும்உபாசனை செய்தாலும்துறவு உள்ளத்தோடு உள்முக நோக்கிலே ஈடுபட்டாலும் இறைவன் அருள் பதியப் பதியப் புதிய புதிய அனுபவம் உண்டாகி வரும். முத்தியின்பம் என்பது முடிந்த முடிபாகிய அனுபவம். அதற்குமுன் எத்தனையோ படிகள் உண்டு. சாதனங்களை மேற்கொண்டு ஒரு காலைக்கு ஒருகால் பயிற்சி முற்றி வரும்போது அனுபவமும்முதிர்ந்து வரும். பயிரானது நாளுக்கு நாள் வளர்ந்து பலநிலைகளை அடைவது போல அனுபவம் வளரும்.  

 

     புத்தகத்தைப் படித்தும்,இறைவனைப் பற்றிய செய்திகளைக் கேட்டும் பெறும் அறிவு  நமக்கு இறைவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கும். அனுபவத்தை உண்டாக்காது. ஒரு தொழிலை எப்படிச் செய்தவது என்பதை நூல்களின் வாயிலாகப் படித்துக் கொண்டாலும்அந்தத் தொழிலில் முழுமனதுடன் ஈடுபட்டால்தான் படித்ததன் பயன் விளையும். அனுபவம் உண்டாகும். வெளியில் உணவு வேண்டுமானால்எந்த விடுதியில் கிடைக்கிறது என்று கேட்டுத் தெரிந்து  கொள்ளவேண்டும். தெரிந்துகொண்டால் மாத்திரம் உணவு நமது வாயில் வந்து விழாது. அது கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்று பெற்று உண்டால்தான் உடலுக்கு இன்பம் அப்படி

 

     அதைப் போலவேஉயிருக்கு இன்பம் தரும் அனுபவத்தை நூலறிவினால் பெற இயலாது. பல ஆண்டுகள் முயன்றும் தமக்கு இறையருள்அனுபவம் கிடைக்க வில்லையே என்று ஏங்குபவர்கள் இருக்கிறார்கள்.அனுபவத்தில் பல நிலைகள் உண்டு. இறைவன் திருநாமத்தைச்சொன்னால் வாய் மணக்கும்,இனிக்கும் என்று அடியவர்கள் சொல்வார்கள். அந்த அனுபவம்நமக்குத் தெரியாது. இறைவனை நினைத்தால் மனம் இனிக்கும் என்கிறார்கள். அது மற்றோர் அனுபவம்.

 

"தினைத்தனை உள்ளது ஓர்,  பூவினில்தேன் உண்ணாதே

நினைத்தொறும் காண்தொறும்பேசுந்தொறும் எப்போதும்

அனைத்து எலும்பு உள்நெகஆனந்தத் தேன்சொரியும்

குனிப்பு உடையானுக்கேசென்று ஊதாய் கோத்தும்பீ"

 

என்று மணிவாசகப் பெருமான் பாடினார்.

 

இதன் பொருள் ---

 

     அரசவண்டே! நீ மலர்களில் உண்ணுகின்ற மிகவும் தினை அளவுதான் உள்ளது. சிந்தித்துப் பார்ப்பாயாக. நுகர்ந்தால் மட்டுமே கிடைக்கும்மிகவும் சிறிதாகிய மலர்த்தேனை உண்ணாமல்நினைத்தாலும்கண்டாலும்பேசினாலும் எல்லாக் காலங்களிலும் வலிய எலும்புகளும் உருகும்படி இன்பத்தேனைப் பொழிகின்ற அம்பலவாணப் பெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

 


"பார்த்தாலும்,நினைத்தாலும்,படித்தாலும்,படிக்கப்

     பக்கம்நின்று கேட்டாலும்,பரிந்து உள் உணர்ந்தாலும்,

ஈர்த்தாலும்,பிடித்தாலும்,கட்டி அணைத்தாலும்,

     இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே!

வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறுங்கனியே!

     மெய்ம்மைஅறிவு ஆனந்தம் விளக்கும்அருள் அமுதே!

தீர்த்தா! என்று அன்பர்எலாம் தொழப் பொதுவில் நடிக்கும்

     தெய்வ நடத்து அரசே! என் சிறுமொழி ஏற்றருளே."

 

என்று வள்ளல்பெருமானும் தமது அனுபவத்தைப் பாடி உள்ளார்.

 

இதன் பொருள் ---

 

     கண்ணாரப் பார்த்தாலும்மனதார நினைத்தாலும்வாயாரப் படித்தாலும்பிறர் படிக்கப் பக்கத்தே நின்று செவியால் கேட்டாலும்கேட்ட பொருளை ஆர்வத்தோடு உள்ளத்தில் உணர்ந்தாலும்கைகளால் இழுத்தாலும்பிடித்தாலும்கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கின்ற இனிய சுவை பொருந்திய கரும்பு போல்பவனே! வெம்மையுற்றுக் கயங்காமல் கனிந்து முதிர்ந்த மணமிக்க மாங்கனி போல்பவனே! சத்துசித்துஆனந்தமாகிய மூன்றையும் விளங்கச் செய்யும் திருவருள் ஞான அமுதமே! தீர்த்தனே என்று மெய்யன்பர்கள் எல்லாம் தொழுது வணங்க அம்பலத்தில் தெய்வத் திருநடம் புரிகின்ற சிவபெருமானே! சிறியவனாகிய எனது சொல் மாலையை ஏற்று அருளுவாயாக.

 

      உண்மையாக முயற்சி செய்பவனுக்குக் கைமேல் பலன் உண்டு. விவசாயம் செய்கிறவனுக்கு நிலமும் கருவியும் உரமும் உழைப்பும் தக்கபடி அமைந்தால்அவன் நாளுக்கு நாள் தன் உழைப்புக்குப் பலன் உண்டாகி வருவதைக் கண்கூடாகக் காண்பான். இறைவனுடைய அருளுக்காக ஏங்கி  நின்று அன்பு செய்யும் அன்பர்களுக்கும் நாளுக்கு நாள் அனுபவத்தில் வளர்ச்சி  தெரியும். சோறு வயிற்றில் போகப் போகப் பசி அடங்கி வருவதை உண்டவன்தான் அறியமுடியும்.  அவன் வேறு ஒருவனிடம் போய்னக்குப் பசி தீர்ந்துவிட்டதா என்று கேட்பதில்லை. இறைவன் அருளுக்காக முயலும் அன்பு நெறியில் கிடைக்கும் அனுபவம் அவரவர்களுக்குத் தெரியும். அந்த அனுபவம் முதிர்ந்து வருவதும் அவர்களுக்குத்தெரியும். 

 

     முயற்சி செய்யாதவர்களுக்கும்சாதனத்திலே ஊக்கம் இல்லாதவர்களுக்கும்அனுபவம் பெற்றவர்கள் ஏதேனும் சொன்னால் அது கதையாகத் தோன்றும்கற்பனையாகத் தோன்றும்நம்பிக்கை பிறக்காது. ஆனால்ஓரளவு முயற்சி செய்து அதனால் விளைந்த அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு, , "இந்த அனுபவத்தை நாம் முன்னரே பெறவில்லையே! முழுமையாகப் பெறவில்லையே!என ஏக்கம் உண்டாகும். தாம் மேற்கொண்ட முயற்சியின் அளவுக்கு ஒருவகை அனுபவம் பெற்றவர்களாதலின்பெரியவர்கள் கூறும் அனுபவங்கள் உண்மையானவையே என்று தோன்றும். முயற்சியின் பயனாக விளைந்தபோது எப்படி அவர்களுக்கு மெய்யாகத் தோன்றுகிறதோஅப்படியே இன்னும் முறுகிய முயற்சியினால் பெரியவர்கள் பெற்ற மேலான அனுபவமும் மெய்யாகத் தோன்றும் என்ற அறிவுஅவர்களுக்கு உண்டாகும்.

 

     அருணகிரிநாதர் பெற்ற அருள் அனுபவங்களில் ஒன்றை இப்போது சொல்கிறார். அதை அருளிய முருகனிடமே சொல்கிறார். அது என்ன அனுபவம்?  இந்த உடம்பு இறந்து போய்விட்டது என்ற அனுபவம். உடம்பு  இறந்துபோனால் எப்படிப் பாட முடியும். உயிர் உடம்பில் இருந்து போய்விட்டால் இறப்பு என்று சொல்கிறோம். 'இறத்தல் 'என்ற சொல்லுக்கு,  'கழிதல்', 'நீங்குதல்',  'சொல்லுதல்என்று பொருள். உடம்பை விட்டு உயிர் நீங்குவதால்உயிர் இறந்து விட்டது என்று சொல்வதுதான் பொருத்தம். ஒருவர் பெயரைக் குறித்து அவர் இறந்துவிட்டார்  என்று சொல்கிறோம். அவருக்கு வழங்கப்பட்ட பெயராலே குறிக்கப்பட்ட உடம்பு எங்கும் போகவில்லை. உயிர்தான் உடம்பை விட்டுப் போனது. உடம்பு உயிரோடு இருந்தபோது அடையாளமாக ஒரு பெயர் வைக்கப்பட்டது. அவன்அவள்அதுஎன்று சுட்டப்படும் பொருள் உயிர்தான். 'அவர் போய் விட்டார்என்னும் போது போனது உயிர்தான்.  ஆகவே உயிர்தான் இறந்தது.  உடல் இறக்கவில்லை. உயிர் இறந்ததனால்உடம்பு பிணமாயிற்று என்று சொல்லலாம்உடம்பு இருக்க உயிர் போகிற நிலை அது.

 

     உயிர் இறந்த பிறகு உடம்பு இருந்தாலும் அதில் உணர்ச்சி இருப்பதில்லை. அதை வெட்டினாலும் குத்தினாலும் துடிப்பதில்லை. கொசுக் கடித்தால் உடனே துள்ளுகிறோம். புண் வந்தால் துடிக்கிறோம். இதே உடம்புஉயிர் இறந்த பிறகு என்ன பண்ணினாலும் உணர்ச்சி இன்றிக் கட்டையாகி விடுகிறது. அருணகிரிநாதர் உயிர் இருக்கிறது,உடம்பு  இறந்துவிட்டது என்கிறார். உயிர் போனபிறகு வர வேண்டிய நிலை,உயிர் இருக்கும்போது உடம்புக்கு வந்துவிட்டது. எனவே,"இறந்தே விட்டது இவ்வுடம்பேஎன்று சொல்கிறார்.

 

     அப்படி உணர்ச்சி இல்லாமல் உயிருள்ள உடம்பு இருக்குமா?. ஒருவன் அயர்ந்து தூங்குகிறன். 'உடம்பு  மறந்து தூங்குகிறான்என்று சொல்கிறோம். மூட்டைப் பூச்சி கடிக்கிறது. அது அவனுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் உடம்பிலே உணர்ச்சி இருப்பதில்லை. அந்தப் பூச்சி அழுத்தமாகக் கடித்தால் சற்றே புரண்டு  படுக்கிறான். மயக்கம் போட்டு விழுந்தவன் மண்டையில் காயம் பட்டு  ரத்தம் ஒழுகுகிறது. ஆனாலும்அவனுக்கு உணர்ச்சி இருப்பதில்லை. அவன் உடம்பிலே  உயிர் இருந்தாலும் உணர்ச்சி அற்றுப் போகிறது.

 

     உடம்பு உணர்ச்சி மரத்துப் போக ஊசி குத்திமருத்துவம் செய்கிறார்கள். கத்தியினால் அறுத்துமருந்து போட்டுப்  பின்பு தைக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பில் உணர்ச்சி இருப்பதில்லை. எனவேஉயிர் உடம்பில் இருக்கும்போதே உணர்ச்சி அற்றுப் போகும் நிலை வருவது உண்மைதான் என்று தெரிகிறது. அப்படியே ஒருவகை நிலையில் யோகியர்களுக்கு உடம்பு உணர்ச்சி அற்றுப் போகிறது. உடம்பு இருந்தும் இறந்துவிட்டது போல ஆகிவிடுகிறது. அந்த நிலையில் பெற்ற அனுபவத்தையே,"இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்று அருணகிரிநதர் சொல்கிறார்.

 

      படிப்படியாகஅந்த நிலை எவ்வாறு வந்தது என்பதை அவர் சொல்கிறார். உடம்பு உணர்ச்சியற்றுப்  போவதற்கு முன்பு படிப்படியாகச் சில முயற்சிகள் செய்தார். முருகனை எப்போதும் பாடினார் மெளன நிலையில் தியானித்தார்.மனத்தால் நினைத்தார். அப்படி நினைக்கும்போது வேறு நினைப்புகளும் இடையிடையே தலைப்பட்டன. அவற்றை மெல்ல மெல்ல ஒட்டினார். முருகனது நினைப்பில் அழுத்தமும் ஒருமைப்பாடும் ஏறியவுடனே மற்ற நினைப்புகள் தாமே ஒழிந்தன. அந்த நினைவில் ஒன்றியபோது  முருகனுடைய உணர்வே  எழுந்தது.

 

      நினைவு என்பது மனத்தோடும் அறிவோடும் ஒட்டியது. உணர்வு என்பது அனுபவத்தோடு  இணைந்தது. முருகனுடைய திருநாமம்அவன் திருவிளையாடல்அவன் திருக்கோலம் ஆகியவற்றை நினைக்கலாம். அவனை உணர்வது என்பது,அந்த நினைப்பையும் மறந்து அனுபவத்திலே கரைவது.  திரும்பத்  திரும்ப ஒன்றை நினைத்து நினைத்துப் பழகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகும். நினைந்து நினைந்து,உணர்ந்துஉணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து,அன்பே நிறைந்து நிறைந்து" என்று தமது அனுபவத்தை வள்ளல்பெருமான் காட்டுகிறார். நினைக்கவேண்டும். இடையறாது நினைக்கவேண்டும். நினைப்பு முறுகின பக்குவத்தில் உணர்ச்சி தலைப்படும். உணர வேண்டும் இடையறாது உணர வேண்டும். உணர உணர,  சலனம் ஒழியும். அமைதி  பிறக்கும்.பொறிகளால் உண்டான அனுபவம் மனத்தில் வாசனையாக நிற்கும். நினைப்பு உள்ளவரையில் மனம் இயங்கியது. உணர்வு உள்ள வரையில் உள்ளம் இயங்கியது. மனம் நின்ற போது அனுபவத்தை உணரும் உள்ளம் இயங்கத் தொடங்கியது.மனம் இயங்கும்போது உருவம் நாமம் எல்லாம் நினைவு இருந்தன. அவன் நாமமும்உருவமும் தியானத்துக்குத் தட்டுப்பட்டன.

 

     மனமும் அடங்கிஉள்ளம் இயங்கியபோது இன்னது என்று சொல்ல இயலாத ஒன்று உணர்ச்சியிலே  தட்டுப்பட்டது. அது இன்னது என்று தெரியாது. ஆனால் ஒன்று இருப்பது தெரிந்தது. அப்படி இருக்கும் நிலையே குணம் உள்ள நிலை. அதற்கு வடிவில்லை. ஆனால் அனுபவத்தைத் தரும் இயல்பு உண்டு. அதுதான் குணம். நிர்க்குணம் உணர்வு ஒன்றியது.  எல்லாம் ஒருங்கியபோது அந்தக் குணமும் மறைந்தது. அடையாளம் ஒழிந்தது. நான் அனுபவிக்கிறேன் என்ற உணர்வும் மறைந்தது. மயக்க மருந்தை மூக்கிலே காட்டும்போது மருத்துவர் ஒன்று இரண்டு என்று எண்ணச் சொல்கிறார். எண்ணிக்கொண்டே வருகிறவன் கடைசியில் எண்ணுவதை மறந்து தன்னையும் மறந்துவிடுகிறான். அது போன்ற நிலை இப்போது வருகிறது. 

 

     இது வரையில் ஏதோ பிழம்பாகத் தோன்றிய ஒன்றில் மூழ்கிச் செயலற்ற அனுபவ உணர்ச்சி தோற்றியது. இப்போது அதுவும் நழுவியது. இது அனுபவம்,  இதை அனுபவிப்பவன் நான் என்ற வேறுபாடே இல்லை. நிர்க்குணமான நிலையில் தன்னையும் மறக்கும் அனுபவம் ஏற்படுகிறது. கருவி கரணம் கழன்ற நிலை இது. இத்தகைய அனுபவத்தைப் படிப்படியாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "நான் உன்னை உணர்ந்தேன். இடையே வாசனை கலைத்தது. மீட்டும் உணர்ந்தேன். இந்தஉணர்ச்சியை அடுத்தடுத்து இயங்கச் செய்தேன்.  நின்னை உணர்ந்து உணர்ந்துநினைப்புக் கடந்து உணர்வு உலகத்திலே பலமுறை  ஊற்றம் பெற்று முறுகியபோதுபல திசையில் சிதறிய எண்ணமும் உணர்வும் ஒன்றி ஒருமுகப்பட்டன. அப்போது வடிவில்லாதஉருவில்லாத அடையாளம் இல்லாதகுணம் இல்லாதநிர்க்குணமே பூண்டு இருந்தேன். அப்போது  நான் பெற்ற அனுபவம் வேறுநான் வேறு என்ற உணர்வு இல்லை. நீ வேறுநான் வேறு என்ற உணர்வும் இல்லை. தன்னையே மறந்த  நிர்க்குண நிலையில்உணர்வின் இயக்கமும் ஒழிந்து ஒருங்கிய நிலையில்உடம்பு இறந்துவிட்டது. எப்படி இறந்தது?உள்ளே போட்ட சட்டையோடு,வெளிச்சட்டையும் கழலுவது போலதன்னையே மறந்த நிர்க்குண நிலையில் உடம்பும்  மறந்துபோவது இயல்புதான்.

 

     முருகப் பெருமானுடைய தியானத்தினால் இந்த அனுபவம் விளைந்தது என்று அருணகிரிநாதப் பெருமான் சொல்கிறார். முருகனுடைய வீர வேலையும் கடம்ப மலர் மாலையையும் நினைத்துத்  தியானம் பண்ணத் தொடங்கினால் நாளடைவில் நினைப்பிலே ஒருமை உண்டாகும்பிறகு உணர்வு தலைப்படும்பிறகு உணர்வில் ஒருமைப்பாடு வரும்.  எல்லாம் ஒருங்கியஒருமைப்பாட்டிலே குணம் குறி கடந்த நிர்க்குண அனுபவம் நிகழும்அப்போது கருவிகரணம் கழன்றுதன்னை மறந்துதன் உடம்பை மறந்து நிற்கும் இன்பம் ஏற்படும்.அந்த அருள் அனுபவத்தை,

 

"சொன்ன க்ரவுஞ்ச கிரிஊடுருவத் தொளைத்த வைவேல் 

மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மெளனத்தை உற்று 

நின்னைஉணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய  நிர்க்குணம் பூண்டு 

என்னை மறந்து இருந்தேன்இறந்தேவிட்டது. இவ்வுடம்பே"

 

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள் ---

 

     பொன் நிறமான கிரவுஞ்ச மலையை நடுவே நுழைந்து செல்லும்படி தொளைத்த கூர்மை பொருந்திய வேற்படையைத் தாங்கி உள்ள தலைவரே! கடப்ப மலர் மாலையை அணிந்துள்ள திருமார்பை உடையவரே! மோன நிலையை அடைந்துதேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்துஏனைய பசுகரணங்களும்பாசகரணங்களும் அடங்கிய முக்குணம் அற்ற நிலையை அடைந்துஎன்னையும் மறந்து சிவோகம்பாவனையில் இருந்தேன். இந்தச் சரீர வாசனை முற்றிலும் அழிந்தே விட்டது.

 

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...