பொது --- 1058. நிலவில் மாரன்


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நிலவில் மாரன்  (பொது)


முருகா! 

மாதர் மயலில் முழுகினும் திருவடி மறவேன்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம

     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம்


நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு

     நியதி யாக வாயார ...... வயிறார


இலவில் ஊறு தேன்ஊறல் பருகி யார வாமீறி

     யிளகி யேறு பாடீர ...... தனபாரம்


எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு

     கினுமு னீப சீர்பாத ...... மறவேனே


குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்

     குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்


கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்

     கடக வாரி தூளாக ...... அமராடுங்


கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம

     நிழலில் மாட மாமாளி ...... கையின் மேலாம்


நிலையில் வாசம் மாறாத அணையில் மாத ராரோடு

     நியதி ஆக வாயார ...... வயிறார


இலவில் ஊறு தேன்ஊறல் பருகி, ஆர அவாமீறி

     யிளகி யேறு பாடீர ...... தனபாரம்


எனது மார்பிலே மூழ்க இறுக மேவி, மால்கூரு-

     கினும் உன்நீப சீர்பாதம் ...... மறவேனே.


குலவி யோம பாகீரதி மிலை நாதர், மாதேவர்

     குழைய மாலிகா நாக ...... மொடுதாவிக்


குடில கோம ளாகார சடில மோலி மீதேறு

     குமர! வேட மாதோடு ...... பிரியாது


கலவி கூரும் ஈராறு கனக வாகுவே! சூரர்

     கடக வாரி தூளாக ...... அமராடும்


கட கபோல மால்யானை வனிதை பாக! வேல்வீர!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


குல வியோம பாகீரதி மிலை நாதர் --- சிறந்த வான நதியாகிய கங்கையைத் திருச்சடையில் தாங்கிய தலைவரும்,

மா தேவர் குழைய --- மகாதேவரும் ஆன சிவபெருமான் மனம் மகிழ,

மாலிகா நாகமொடு தாவி --- மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி,

குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர ---வளைந்துள்ள அழகிய திருச்சடையின் மீதுள்ள மணிமுடியின் மீது தவழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

வேட மாதோடு பிரியாது கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே --- வேடர் மகள் ஆகிய வள்ளிநாயகியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் அழகிய பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் --- சூரர்களுடைய  சேனைக் கடல் பொடியாகுமாறு போர் புரிந்த,

கட கபோல மால் யானை வனிதை பாக --- கன்ன மதம் ஒழுகும் பெரிய வெள்ளை யானை வளர்த்த தேவயானை அம்மையின் கணவரே! 

வேல் வீர --- வேல் வீரரே!

கருணை மேருவே --- கருணையில் மேரமலையைப் போன்று உயர்ந்தவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

        நிலவில் --- நிலவொளியில்,

மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் --- மன்மதன் ஏறி வரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலையின் குளிர்ந்த நிழலில்,

மாட மாமாளிகையின் மேலாம் நிலையில் --- மாடங்களோடு கூடிய சிறந்த மாளிகையின் மேல் மாடத்தில், 

வாச(ம்) மாறாத  அணையில் --- நறுமணம் சிறிதும் மாறாத படுக்கையில், 

மாதராரோடு நியதியாக --- பெண்களோடு எப்பொழுதும்,

வாயார வயிறார --- வாய் ஆர, வயிறு ஆர,

இலவில் ஊறு தேன் ஊறல் பருகி --- இலவம் பூப் போன்ற சிவந்த வாயில் ஊறுகின்ற தேன் போன்று இனிமைதரும் எச்சிலைக் குடித்து, 

ஆர் அவா மீறி -- நிறைந்த ஆசை அளவு கடந்து எழ,  

இளகி ஏறு பாடீர தன பாரம் --- இளகி, எழுந்து உள்ள சந்தனக் குழம்பு பூசியுள்ள தனபாரமானது,

எனது மார்பிலே மூழ்க இறுக மேவி --- எனது மார்பிலே முழுகி அழுந்தும்படியாக 

மால் கூருகினும் --- காம மயக்கம் மிகுந்து இருந்தபோதிலும்,

உன் நீப சீர் பாதம் மறவேனே --- தேவரீரது கடப்பமலர் பொருந்திய சிறந்த திருவடியை மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


சிறந்த வான நதியாகிய கங்கையைத் திருச்சடையில் தாங்கிய தலைவரும், மகாதேவரும் ஆன சிவபெருமான் மனம் மகிழ, மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி வளைந்துள்ள அழகிய திருச்சடையின் மீதுள்ள மணிமுடியின் மீது தவழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

வேடர் மகள் ஆகிய வள்ளிநாயகியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

சூரர்களுடைய  சேனைக் கடல் பொடியாகுமாறு போர் புரிந்த, கன்ன மதம் ஒழுகும் பெரிய வெள்ளை யானை வளர்த்த தேவயானை அம்மையின் கணவரே! 

வேல் வீரரே!

கருணையில் மேருமலையைப் போன்று உயர்ந்தவரே!

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

நிலவொளியில், மன்மதன் ஏறி வரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலையின் குளிர்ந்த நிழலில், மாடங்களோடு கூடிய சிறந்த மாளிகையின் மேல் மாடத்தில்,  நறுமணம் சிறிதும் மாறாத படுக்கையில், பெண்களோடு எப்பொழுதும் கூடி இருந்து வாய் ஆர, வயிறு ஆர, அவர்களின் இலவம் பூப் போன்ற சிவந்த வாயில் ஊறுகின்ற தேன் போன்று இனிமைதரும் எச்சிலைக் குடித்து, நிறைந்த ஆசை அளவு கடந்து எழ,  இளகி, எழுந்து உள்ள சந்தனக் குழம்பு பூசியுள்ள தனபாரமானது, எனது மார்பிலே முழுகி அழுந்தும்படியாக  காம மயக்கம் மிகுந்து இருந்தபோதிலும், தேவரீரது கடப்பமலர் பொருந்திய சிறந்த திருவடியை மறக்கமாட்டேன்.


விரிவுரை


மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் --- 

ஊதை - தென்றல் காற்று. மாரன் ஏறு ஊதை - மன்மதன் ஏறுகின்ற தென்றல் காற்றாகிய தேர்.

ஆராமம் - உபவனம், மலர்ச்சோலை, நந்தவனம், பூங்கா, ஊர்சூழ் சோலை.


மாதராரோடு நியதியாக --- 

நியதி - எப்பொழுதும், பெண்களோடு எப்பொழுதும்,

மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே --- 

மால் - மயக்கம், காம மயக்கம்.

நல்லவற்றை மறக்கச் செய்வது மாதர் மயல். பொன், பொருள், பெண், பதவி இவைகள் மயக்கத்தைத் தரும் அபினி போன்றவை. இறைவனை மறக்கச் செய்யும் வன்மை உடையவை. அடியேன் மாதர் மயலால் வாடினாலும், படுக்கையில் அம்மாதர்கள் தரும் காம இன்பக் கடலில் முழுகினாலும் திருவடிகளை மறவேன் என்கின்றார். இதனால், அருணகிரிநாதர் இவ்வாறு மாதர் கலவி நலத்தில் முழுகினார் என்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது.  உலகமயல் எந்நிலையிலும் தன்னை மயக்காது என்கின்றார். தனது உள்ள உறுதிப்பாடையே தெரிவிக்கின்றார். இதேபோல் வேறு இடங்களிலும் கூறியிருக்கின்றார்.

வ.எண். திருப்புகழ்ப் பாடல் தொடக்கம் திருத்தலம்

1 மலரணை ததும்ப                                 பழமுதிர்சோலை

2 வாய்ந்தப்பிடை                                 காஞ்சிபுரம்

3 மகரம் எறிகடல்                                 திருவண்ணாமலை

4 சிலைநுதல் வைத்து                         திருவண்ணாமலை

5 தமிழோதிய                                 திருவண்ணாமலை

6 சந்திர ஓலை                                         சிதம்பரம்

7 மார்புரம்பினளி                                 நாகப்பட்டினம்

8 தேனிருந்த                                 திருப்பந்தணைநல்லூர்

9 முகிலைக் காரை                                 திருநெய்த்தானம்

10 கலக சம்ப்ரம                                 விஜயமங்கலம்

11 பந்தப் பொற்பார                         திருப்பூவணம்

12 முருகுசெறி குழல்                                 பொது

13 விடமளவி                                         பொது

14 வட்டமுலை                                         பொது

15 வரிபரந்து                                         பொது

16 வரிவிழி                                                 பொது


கந்தர் அலங்காரம் 37-வது பாடலையும் காண்க.


குல வியோம பாகீரதி மிலை நாதர் --- 

குலம் - சிறந்த, வியோமம் - வானம். பாகீரதி - கங்கை.


மாலிகா நாகமொடு தாவி --- 

மாலிகா நாகம் - பாம்பு மாலை.

குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர ---

குடிலம் - வளைந்துள்ள,

கோமளாகாரம் - அழகு மிக்க.

சடிலம் - திருச்சடை.

மோலி - மணிமுடி.

சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் --- 

கடக வாரி - சேனைக் கடல்.

கட கபோல மால் யானை வனிதை பாக --- 

கபோல மால் யானை - கபோல மதம் ஒழுகும் பெரிய யானை - வெள்ளையானை ஆகிய அயிராவதம்.


கருத்துரை

முருகா! மாதர் மயலில் முழுகினும் திருவடி மறவேன்.







 

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...