அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தொட அடாது (பொது)
முருகா!
உணர்வு அருள்வாய்
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி ...... யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு ...... மதிரேகா
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தொட அடாது, நேராக வடிவு காண வாராது,
சுருதி கூறுவாராலும் ...... எதிர் கூறத்
துறை இலாதது, ஓர்ஆசை இறைவன் ஆகி, ஓர் ஏக
துரியம் ஆகி, வேறு ஆகி, ...... அறிவு ஆகி,
நெடிய கால் கையோடு ஆடும் உடலின் மேவி, நீ நானும்
எனவும் நேர்மை நூல்கூறி, ...... நிறைமாயம்
நிகரில் காலனார் ஏவ, முகரி ஆன தூதாளி
நினைவொடு ஏகும் ஓர் நீதி ...... மொழியாதோ?
அடல் கெடாத சூர் கோடி மடிய, வாகை வேல் ஏவி,
அமர்செய் வீர! ஈர்ஆறு ...... புயவேளே!
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா! வேதன்
அரியும் வாழ வான் ஆளும் ...... அதி ரேகா!
கடு விடா களா ரூப, நட விநோத தாடாளர்,
கருதிடார்கள் தீ மூள, ...... முதல்நாடும்
கடவுள், ஏறு மீது ஏறி புதல்வ! காரணா! வேத!
கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.
பதவுரை
அடல் கெடாத சூர் கோடி மடிய --- வலிமை கெடாத எண்ணற்ற அரக்கர்கள் மடியுமாறு,
வாகை வேல் ஏவி அமர் செய் வீர --- வெற்றிவேலை விடுத்து அருளிப் போர் புரிந்த வீரரே!
ஈர் ஆறு புய வேளே --- பன்னிரண்டு திருத்தோள்களை உடைய செவ்வேள் பரமரே!
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா --- மான் பெற்ற அழகிய பெண்ணாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!
அரியும் வாழ வான் ஆளும் அதிரேகா --- (பிரமனும்) திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேன்மை உடையவரே!
கடு விடா களா ரூப --- விடம் நீங்காத கழுடத்துடன் கூடிய திருமேனியை உடையவரும்,
நட வினோத தாடாளர் --- அற்புதத் திருக்கூத்து இயற்றும் மேன்மையாளரும்,
கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள் --- தன்னை நினைக்காத அரக்கர்களின் திரிபுரங்கள் தீ மூண்டு அழியும்படியாக நாட்டம் வைத்த கடவுளும்,
ஏறு மீது ஏறி புதல்வ --- இடப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!
காரணா --- மூலகாரணரே!
வேத --- வேதப் பொருளானவரே!
கருணை மேருவே --- கருணையில் மேருமலை போன்று உயர்ந்தவரே!
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
தொட அடாது --- தொடுவதற்கு முடியாததாய்,
நேராக வடிவு காண வாராது --- நேராக இன்ன வடிவம் உடையது என்று காணுதற்குக் கிட்டாததாய்,
சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது --- வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாக இன்னது என்று சொல்வதற்கு வழி இல்லாததாய்,
ஓர் ஆசை இறைவனாகி --- விரும்பும் கடவுள் ஆகி,
ஓர் ஏக துரியமாகி --- ஒப்பற்ற யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள் ஆகி,
வேறு ஆகி --- இவை அல்லாத பொருள்களும் ஆகி,
அறிவாகி --- அறிவு வடிவாகி,
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி --- நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு,
நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம் (யாதோ?) --- நீ என்றும், நான் என்றும் இருவகையாய் கூறும் நிலைமையானது நூல்களால் சொல்லபட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (இன்னது என்று விளங்கவில்லை, விளக்கி அருள வேண்டும்),
நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி --- ஒப்பில்லாத காலனார் ஏவ ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள்
நினைவோடு ஏகும் ஓர் நீதிமொழி யாதோ? --- மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி இன்னது என்று விளங்கவில்லை (விளக்கி அருள வேண்டும்.)
பொழிப்புரை
வலிமை கெடாத எண்ணற்ற அரக்கர்கள் மடியுமாறு, வெற்றிவேலை விடுத்து அருளிப் போர் புரிந்த வீரரே! பன்னிரண்டு திருத்தோள்களை உடைய செவ்வேள் பரமரே! மான் பெற்ற அழகிய பெண்ணாகிய வள்ளிநாயகியின் மணவாளரே! பிரமனும் திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் வாழும்படியாக வானுலகை ஆளும் மேன்மை உடையவரே!
விடம் நீங்காத கழுடத்துடன் கூடிய திருமேனியை உடையவரும், அற்புதத் திருக்கூத்து இயற்றும் மேன்மையாளரும், தன்னை நினைக்காத அரக்கர்களின் திரிபுரங்கள் தீ மூண்டு அழியும்படியாக நாட்டம் வைத்த கடவுளும், இடப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே!
மூலகாரணரே! வேதப் பொருளானவரே! கருணையில் மேருமலை போன்று உயர்ந்தவரே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
தொடுவதற்கு முடியாததாய், நேராக இன்ன வடிவம் உடையது என்று காணுதற்குக் கிட்டாததாய், வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாக இன்னது என்று சொல்வதற்கு வழி இல்லாததாய், விரும்பும் கடவுள் ஆகி, ஒப்பற்ற யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள் ஆகி, இவை அல்லாத பொருள்களும் ஆகி, அறிவு வடிவாகி, நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் இருவகையாய் கூறும் நிலைமையானது நூல்களால் சொல்லபட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (இன்னது என்று விளங்கவில்லை, விளக்கி அருள வேண்டும்). ஒப்பில்லாத காலனார் ஏவ ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நியதி இன்னது என்று விளங்கவில்லை (அதனையும் விளக்கி அருள வேண்டும்.)
விரிவுரை
இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெருநிறைவை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும், விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.
உயிரை வடமொழியில் ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கியிருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்; உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்; பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பொருள்; கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப் பொருள் ஆயிற்று.
மேற்பொருளாகிய கடவுளும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.
கடவுளும் உயிரும் சித்து என்ற வகையில் ஓரினம் என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டனவாகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது, உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒரு நிகரன அல்ல என்பது விளங்கும்.
கடவுட்பொருள் மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள்.
தொட அடாது ---
கடவுள் என்பது உண்மையில் வடிவு உடைய பொருள் அல்ல. எனவே, அதைக் கையால் தொட்டு உணரமுடியாது.
நேராக வடிவு காண வாராது ---
இன்ன வடிவம் உடையது கடவுள் என்றும் நிச்சயமாக றிந்து கொள்ள முடியாது.
சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது ---
வேதங்களாலும் அறிய முடியாத பொருள் கடவுள். வேதங்களே இன்னமும் இறைவனைதே தேடிக் கொண்டு இருக்கின்றன. வேதங்களாலும் அறிய முடியாதபடி ஆழ்ந்து, அகன்ற நுண்ணியன் ஆக உள்ளவன் இறைவன். "வேதங்கள் ஐயா ஏ, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்பது மணிவாசகம்.
ஓர் ஆசை இறைவனாகி ---
இறைவன் அவரவர் கருதும் வடிவில் எழுந்தருள் புரிவான்.
ஓர் ஏக துரியமாகி ---
துரியம் - யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள்.
வேறு ஆகி ---
"வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" என்றார் அப்பர் பெருமான்.
அறிவாகி ---
இறைவன் மேலான அறிவு வடிவாக உள்ளவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி" என்பார் அருணகிரிநாதர்.
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி ---
உயிருக்கு உயிராக இருந்து அவைகளை இயக்குபவன் இறைவன்.
நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம் (யாதோ?) ---
எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் அறிவுப் பொருளாகிய இறைவனைத் தனிப்பொருள் எனவும் உயிரைத் தனிப்பொருள் எனவும் இரண்டு விதமாக நூல்கள் கூறுவது அறியாமை. ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது என்பதை, குருநாதனாக எழுந்தருளி விளக்கி அருள முருகப் பெருமானை வேண்டுகிறார் அடிகளார்.
நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதிமொழி யாதோ? ---
முகரி - ஆரவாரம்.
உயிர்களை காலக் கிரமத்தில் உடலில் இருந்து பிரித்துக் கொண்டு காலதூதர்கள் போவது ஒரு நியமமாக உள்ளது. இதுவும் எதற்காக என்று விளக்கி அருள வேண்டுகிறார் அடிகளார்.
அரியும் வாழ வான் ஆளும் அதிரேகா ---
அதிரேகம் - வியப்பு, மேன்மை, மேம்பாடு.
கடு விடா களா ரூப ---
களம் - கழுத்து.
நட வினோத தாடாளர் ---
தாடாளர் - மேன்மை உடையவர்.
கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள் ---
திரிபுர தகனத்தைக் கூறுகின்றார் அடிகளார்.
கருத்துரை
முருகா! உணர்வு அருள்வாய்
No comments:
Post a Comment