அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுருதிஊடு கேளாது (பொது)
முருகா!
ஒன்றாலும் அழியாத பரமஞானத்தை உபதேசித்து அருள்வீர்.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது ...... எவராலுந்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி ...... யொழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது ...... சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
நிபிட தாரு காபூமி ...... குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி ...... யனுமாலும்
கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
ககன சாரி பூசாரி ...... வெகுசாரி
கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருதி ஊடு கேளாது, சரியை ஆளர் காணாது,
துரியம் மீது சாராது, ...... எவராலும்
தொடர ஒணாது, மாமாயை இடை புகாது, ஆனாத
சுக மகா உததீயாகி ...... ஒழியாது,
பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது,
பவனம் வீசில் வீழாது, ...... சலியாது,
பரவை சூழில் ஆழாது, படைகள் மோதில் மாயாது,
பரம ஞான வீடு ஏது ...... புகல்வாயே.
நிருதர் பூமி பாழ் ஆக, மகர பூமி தீ மூள,
நிபிட தாருகா பூமி ...... குடியேற,
நிகர பார நீகார சிகர மீது வேல் ஏவு
நிருப! வேத ஆசாரி ...... யனும், மாலும்
கருதும் ஆகம ஆசாரி, கனக கார்முக ஆசாரி,
ககன சாரி, பூசாரி, ...... வெகுசாரி
கயிலை நாடக ஆசாரி, சகல சாரி வாழ்வு ஆன
கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.
பதவுரை
நிருதர் பூமி பாழாக --- அரக்கர்களின் நாடு நகரங்கள் இடிந்து அழிந்து ஒழியுவும்,
மகர பூமி தீ மூள --- மகர மீன்கள் வாழுகின்ற கடல் வற்றி நெருப்பு மூளவும்,
நிபிட தாரு கா பூமி குடி ஏற --- நெருங்கியுள்ள கற்பகம் முதலிய தருக்களை உடைய விண்ணுலகத்தில் தேவர்கள் குடியேறவும்,
நிகர பார நீகார சிகரம் மீது வேல் ஏவு நிருப --- பூத சேனைகளை விழுங்கியதும், கனமானதும், அவமதிக்கத் தக்கதும் ஆகிய கிரவுஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிய தலைவரே!
வேத ஆசாரியனும் மாலும் கருதும் மாக மா சாரி --- வேதங்களில் வல்ல பிரமதேவனும், நாராயணரும் தியானிக்கின்ற ஞானவெளியாகிய அம்பலத்தில் ஆடுகின்றவரும்,
கனக கார்முக ஆசாரி --- பொன்மலையாகிய மேருமலையை வில்லாக உடைய குருநாதரும்,
ககன சாரி, பூசாரி, வெகு சாரி கயிலை நாடகாசாரி --- பெருவெளியில் விளங்குபவரும், பூசிக்கத்தக்கவரும், திருக்கயிலையில் அநேக விதமான திருநடனம் புரிகின்றவரும்,
சகல சாரி வாழ்வான --- எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பவரும் ஆகிய சிவபெருமானுடைய பெருவாழ்வு தரும் திருக்குமாரராகிய
கருணை மேருவே --- கருணையில் மேருமலை போல் உயர்ந்து விளங்கும்
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!
சுருதி ஊடு கேளாது --- வேதங்களிடை கேட்டு அறியமுடியாதது.
சரியையாளர் காணாது --- சரியை நெறியில் நின்றவர்களால் கண்டு அறிய முடியாதது.
துரியம் மீது சாராது --- துரிய நிலையில் வந்து பொருந்தாதது.
எவராலும் தொடர ஒணாது --- யாராலும் தொடர்ந்து எட்ட முடியாதது.
மா மாயை இடை புகாது --- பெரிய மாயைக்குள் அகப்படாதது.
ஆனாத சுக மகா உததீ ஆகி ஒழியாது --- ஒருபோதும் கெடாத பெரிய இன்பக் கடல் ஆகியும் ஒருபொழுதும் முடிவு இல்லாதது.
பருதி காயில் வாடாது --- கதிரவன் வெயிலினால் வாடாதது.
வடவை மூளில் வேகாது --- வடவைத் தீயில் வெந்து அழியாதது.
பவனம் வீசில் வீழாது சலியாது --- பெருங்காற்று வீசினால் சாய்ந்து விழாதது, சலித்தல் இன்றி ஒரு தன்மையாகத் திகழ்வது.
பரவை சூழில் ஆழாது --- கடல் நீர் பொங்கி வந்தாலும் அழுந்தாதது.
படைகள் மோதில் மாயாது --- ஆயுதங்களினால் தாக்கினாலும் அழியாதது.
பரம ஞான வீடு ஏது புகல்வாயே --- இத்தனைப் பெருமைகளும் உடைய பெரிய ஞான வீடுபேறு எதுவோ, அதனை அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.
பொழிப்புரை
அரக்கர்களின் நாடு நகரங்கள் இடிந்து அழிந்து ஒழியுவும், மகர மீன்கள் வாழுகின்ற கடல் வற்றி நெருப்பு மூளவும், நெருங்கியுள்ள கற்பகம் முதலிய தருக்களை உடைய விண்ணுலகத்தில் தேவர்கள் குடியேறவும், பூத சேனைகளை விழுங்கியதும், கனமானதும், அவமதிக்கத் தக்கதும் ஆகிய கிரவுஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிய தலைவரே!
வேதங்களில் வல்ல பிரமதேவனும், நாராயணரும் தியானிக்கின்ற ஞானவெளியாகிய அம்பலத்தில் ஆடுகின்றவரும், பொன்மலையாகிய மேருமலையை வில்லாக உடைய குருநாதரும், பெருவெளியில் விளங்குபவரும், பூசிக்கத்தக்கவரும், திருக்கயிலையில் அநேக விதமான திருநடனம் புரிகின்றவரும், எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பவரும் ஆகிய சிவபெருமானுடைய பெருவாழ்வு தரும் திருக்குமாரராகிய, கருணையில் மேருமலை போல் உயர்ந்து விளங்கும், தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!
வேதங்களிடை கேட்டு அறியமுடியாதது.
சரியை நெறியில் நின்றவர்களால் கண்டு அறிய முடியாதது.
துரிய நிலையில் வந்து பொருந்தாதது.
யாராலும் தொடர்ந்து எட்ட முடியாதது.
பெரிய மாயைக்குள் அகப்படாதது.
ஒருபோதும் கெடாத பெரிய இன்பக் கடல் ஆகி, ஒருபொழுதும் முடிவு இல்லாதது.
கதிரவன் வெயிலினால் வாடாதது.
வடவைத் தீயில் வெந்து அழியாதது.
பெருங்காற்று வீசினால் சாய்ந்து விழாதது, சலித்தல் இன்றி ஒரு தன்மையாகத் திகழ்வது.
கடல் நீர் பொங்கி வந்தாலும் அழுந்தாதது.
ஆயுதங்களினால் தாக்கினாலும் அழியாதது.
இத்தனைப் பெருமைகளும் உடைய பெரிய ஞான வீடுபேறு எதுவோ, அதனை அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.
விரிவுரை
நிருதர் பூமி பாழாக ---
சூராதி அவுணர்கள் வாழ்ந்த விரமகேந்திரபுரம், ஆசுரம், மாயமாபுரம் முதலிய பெரும்பட்டினங்கள் வேலாயுதத்தாலும், முருகவேள் பணித்தபடி வருணனாலும் அழிந்துபட்டன.
வேல் - ஞானம். அசுரர் - அஞ்ஞானம். ஞானத்தினால் அஞ்ஞானத்தின் இருப்பிடங்கள் அழிவுற்றன.
மகர பூமி தீ மூள ---
மகர மீன்கள் வாழ்வதனால் கடலுக்கு மகராலயம் என்று ஒரு பேர் உண்டு. நூறு ஆயிரம் கோடி அண்டங்களில் உள்ள அக்கினிகளும் ஒருங்கே திரண்டது போன்ற வேலாயுதத்தின் வெம்மையால் கடல் வற்றி வறண்டுவிட்டது.
"மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல்என
மேல் எழுச்சி தரும்பல் வெளேல் வெளேல்என
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேல்என ......எதிர்கொள்சூரன்
மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல்என
பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூஎன
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோஎன ......உதிரம்ஆறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல்என
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல்என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாஎன ...... விசைகள்கூற
வேல் எடுத்து நடந்த திவா கரா,சல
வேடு வப்பெண் மணந்த புயா சலா,தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபா கரா,சிவ ......குமரவேளே." --- (ஓலமிட்ட) திருப்புகழ்.
கடல் என்பது பிறவியைக் குறிக்கும். பிறவிப் பெருங்கடல் என்பார் திருவள்ளுவர். "பவசாகரத்தில் அழுந்தி" என்பது வேதமலைத் திருப்புகழ். ஆகவே, பிறவியாகிய கடல் ஞானமாகிய வேலினால் வற்றிவிட்டது என்பதை உணர்க.
"வேலைதுகள் பட்டுமலை சூரன்உடல் பட்டுஉருவ
வேலைஉற விட்டதனி வேலைக் காரனும்;" --- திருவேளைக்காரன் வகுப்பு.
நிபிட தாருகா பூமி குடியேற ---
நிபிடம் - நெருக்கம். தாருகாபூமி - தரு (மரம்) உள்ள இடம். விண்ணுலகத்தில் கற்பகம், அரிசந்தனம், மந்தாரம், சந்தானம், பாரிசாதம் என்ற ஐந்துவிதமான தருக்கள் உண்டு. இவைகள் அநேக நலன்களைச் செய்ய வல்லவை. பாற்கடல் கடைந்தபோது, அமிர்தத்துடன் பிறந்தவை. இப் பொன்னுலகிற்குத் தலைநகரம் அமராவதி. சூரபன்மனுடைய மகன் பானுகோபன், பொன்னுலகைக் கவர்ந்து கொண்டான். இந்திரன் முதலிய இமையவர் பல யுகங்கள் நாடு நகரங்களை இழந்து பெருங்கவலை உற்றார்கள். முருகப் பெருமான் சூர் முதலை வேர்முதலோடு களைந்து, விண்ணவரைப் பொன்னுலகில் குடியேற்றினார்.
நிகர பார நீகார சிகரம் ---
நிகரம் - விழுங்குகை. பாரம் - திண்மை. நீகாரம் - அவமதிப்பு. சிகரம் - மலை, கிரவுஞ்சகிரி.
கிரவுஞ்சமலை மாயையினால் பூத சேனைகளையும் இலக்கத்து ஒன்பான் வீரர்களையும் விழுங்கியது. அம்மலையை வேற்படையால் பிளந்து, குமரவேள் அமரரை வாழ வைத்தருளினார்.
வேத ஆசாரியன் ---
வேதங்களில் வல்லவர் பிரமதேவர். வேதன் என்ற பேரும் உடையவர்.
கருதும் மாக மா சாரி ---
கருதுதல் - தியானித்தல். மாகம் - ஆகாயம். மா - பெருமை. சாரி - நடிப்பவர்.
ஆகாயத் தலமாகிய சிதம்பரத்தில் ஒருபுறம் திருமாலும், மற்றொரு புறத்தில் பிரமதேவரும் இருந்து அம்பலவாணரைத் தியானித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அகில உலகங்களும் உய்யும்பொருட்டு, எம்பெருமான் ஆதியும் அந்தமும் இன்றி, அநவரத ஆனந்தத் தாண்டவமாடுகின்றான். எல்லாப் பொருள்களும் அதனால் வாழுகின்றன.
நம்முடைய நிழலை நாம் அசையச்செய்ய வேண்டுமானால் நாம் அசைய வேண்டும். நாம் அசைந்தால், நமது நிழல் அசையும். அதுபோல், நடராஜமூர்த்தி ஆடுவதனால் தான், கதிர் மதி மண் விண் அணு முதிலய அனைத்தும் அசைகின்றன.
"ஆகம ஆசாரி" என்று பொருள் கொண்டாலும் பொருந்தும் என்பது அறிக. வேதங்களையும் ஆகமங்களையும் திருவாய் மலர்ந்து அருளியவர் சிவபரம்பொருள்.
"தொகுத்தவன் அருமறை அங்கம், ஆகமம்
வகுத்தவன், வளர்பொழில் கூகம் மேவினான்,
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்துஅறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே."
"எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்க,
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்,
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே."
எனவரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பாடல்களைக் காண்க.
"எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து."
என்னும் பெரியபுராணப் பாடலையும் கருத்தில் கொள்க.
கனக கார்முக ஆசாரி ---
கனகம் - பொன். கார்முகம் - வில்.
திரிபுர சங்கார காலத்தில் சிவபெருமான் போன்மலையாகிய மேருமலையை வில்லாகப் பிடித்தருளினார். அதனால், மலைவில்லார் என்று அவருக்கு ஒரு பேர் உண்டு.
"கல்லால் நிழல் மலை வில்லார் அருளிய
பொல்லார் இணையடி நல்லார் புனைவரே"..--- சிவஞானபோதம்.
ககன சாரி ---
ககனம் - வெளி. வெளிகளுக்கும் அப்பால் உள்ள பரவெளி. நாம் உலாவுகின்ற வெளி பூதாகாசம். அது ஞானாகாசம். அங்கே இறைவனுடைய அருளால் நிகழ்கின்றது.
பூசாரி ---
பூசை செய்பவன் பூசாரி.
சிவபெருமான் சேர்ந்து அறியாக் கையான். தலையாய தேவாதி தேவர்க்கெல்லாம் சேயான். ஆதலினால், அவர் ஒருவரையும் வழிபடுவதில்லை. வழிபாட்டு முறையைக் காட்ட தன்னைத் தானே பூசிப்பார்.
"பூசையும், பூசைக்கு ஏற்ற பொருள்களும், பூசைசெய்யும்,
நேசனும், பூசைகொண்டு நியதியில் பேறுநல்கும்,
ஈசனும்ஆகி, பூசையான் செய்தேன் எனும் என்போத,
வாசனை அதுவும்ஆன மறைமுதல் அடிகள் போற்றி." --- திருவிளையாடல் புராணம்.
எல்லாராலும் பூசிக்கப்படுபவர். சகல தேவர்களும் அவரைப் பூசித்து, எல்லா நலன்களையும் பெற்றார்கள். திருவீழிமிழலை, திருப்பிரமபுரம், திருக்கண்ணார் கோயில் முதலிய திருத்தலங்களைக் காண்க.
வெகுசாரி கயிலை நாடகாசாரி ---
சாரி - வட்டமாக ஓடுதல்.
"சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடை இடத்துக்
கங்கை வைத்த நம்பர் …." --- திருப்புகழ்.
இறைவன் திருநடனம் புரியும் போது வட்டமாகவும் வேறு பல விதமாகவும் சுழன்றனர். கலைகளுக்குள் உயர்ந்த கை நடனக் கலை. அக் கலைக்குப் பரதநூல் என்ற ஒரு பேரும் உண்டு.
ப – பாவம். ர – ராகம். த – தாளம். பாவ ராக தாளம் மூன்றுடன் கூடியது பரதம். இக் கலைக்கு குருநாதர் நடராஜமூர்த்தி.
"திமிதம்என முழஒலிமு ழங்கச் செங்கைத்
தமருகம் அதுஅதிர்சதியொடு அன்பர்க்கு இன்பத்
திறம்உதவு பரதகுரு வந்திக் கும்சற் ...... குருநாதா!" --- (அமுதுததி) திருப்புகழ்.
சகல சாரி ---
சாரி - சஞ்சரித்தல். எல்லாப் பொருள்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கின்றான். அதனால், எல்லாவற்றையும் அறிகின்றான். அறிந்து எல்லாவற்றையும் அசைக்கின்றான்.
"அண்ட பகிரண்டமும் அடங்க ஒருநிறைவாகி
ஆனந்தம் ஆன பரமே.".. --- தாயுமானார்.
சுருதி ஊடு கேளாது ---
இறைவனால் அருளப்படுவது சிவஞானம் என்னும் பரஞானம். வேதாகமங்கள் அபரஞானம் என்னும் கலைஞானம். அபர ஞானத்தால் பரஞானத்தை அறிய முடியாது. பரஞானம் உதிப்பதற்கு அபரஞானம் துணை புரியும்.
சுருதி - வேதம். காதால் கேட்கப்படுவது என்பது இதன் பொருள். வேதம் என்பது எழுதாக்கிளவி. "வேதத்தில் கேள்வி இலாதது" என்றார் சுவாமிகள் பிறிதொரு திருப்புகழிலும்.
சரியையாளர் காணாது ---
சரியை - இறைவனை அடைதற்குரிய படிகளில் ஒன்று. அதிலேயே நின்றவர் இறைவனை அடைய முடியாது. சரியை அரும்பு போன்றது. அதனால்தான், ஞானமாகிய கனி உண்டாகும். சரியை - அரும்பு. கிரியை - மலர். யோகம் - காய். ஞானம் - கனி.
"விரும்பும் சரியைமுதல் மெய்ஞ் ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே". --- தாயுமானார்.
அரும்பு மலராக வேண்டும். மலர் காயாக வேண்டும். காய் கனியாக வேண்டும். அங்ஙனம் இன்றி அரும்பு மலராது கருகி விடுமாயின் அரும்பினால் பயனில்லை. அதுபோல், சரியையால் கிரியையும், கிரியையால் யோகமும்,யோகத்தால் ஞானமும் பெறவேண்டும். பரகதிக்கு நேர்வழி ஞானம் ஒன்றே ஆகும். "ஞானம் அலது கதி கூடுமோ" என்றார் தாயுமானார்.
"ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் ஓத அரிய துரியம் கடந்தது" என்று திருவானைக்கா திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.
"புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்,
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவை அடைந்தும், அருந்தவங்கள் புரிந்தும்,
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணங்கள் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப் பொருளை மிகத் தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்து அடைவர்; இதில்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்."--- சிவஞானசித்தியார்.
"ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல்
நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை,
ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்,
ஆனவையால், மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்." --- சிவஞானசித்தியார்.
"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்,
வீட்டை அடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்,
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டிய புண்ணிய நாதர் ஆகி, இன்பம்
இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநல் குலத்தினில் வந்து அவதரித்து, குருவால்
ஞானநிட்டை அடைந்து, அடைவர் நாதன் தாளே."--- சிவஞானசித்தியார்.
"ஞானத்தால் வீடு என்றே நான்மறைகள் புராணம்
நல்ல ஆகமம் சொல்ல, அல்லவாம் என்னும்
ஊனத்தார் என் கடவர், அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம், உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால் அது போவது, அலர் கதிர் முன் இருள்போல்
அஞ்ஞானம் விட, பந்தம் அறும் முத்தி ஆகும்,
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்,
இறைவன் அடி ஞானமே ஞானம் என்பர்."--- சிவஞானசித்தியார்.
"சரியையா ளர்க்கும்,அக் கிரியையா ளர்க்கும்,நல்
சகலயோ கர்க்கும்எட்ட ...... அரிதாய
சமயபே தத்தினுக்து அணுகஒணா மெய்ப்பொருள்
தருபரா சத்தியிம் ...... பரமான
துரியமேல் அற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் ...... பதி...." --- திருப்புகழ்.
துரியம் மீது சாராது ---
துரியம் நான்காவது அவத்தை. அது நாபியில் பிராணனுடன் புருடன் கூடி நிற்கும் நிலை.
"வழுத்திய நாபியில் துரியப் பிராணனோடு
மன்னுபுருடனும் கூடி வயங்கா நிற்கும்.".. --- தாயுமானார்.
அதற்கு மேல் துரியாதீதம். அது மூலாதாரத்தில் புருடன் மட்டும் தனித்து நிற்பது. அவத்தை ஐந்தும் கடந்த இடத்திலே விளங்குவது ஞானம்.
"அட்டாங்க யோகமும், ஆதாரம்ஆறும், அவத்தைஐந்தும்
விட்டு,ஏறிப் போன வெளிதனிலே வியப்பு ஒன்று கண்டேன்,
வட்டு ஆகி, செம் மதிப் பால் ஊறல் உண்டு மகிழ்ந்து இருக்க,
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே." --- பட்டினத்தார்.
எவராலும் தொடர ஒணாதது ---
"யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிய ஒண்ணா மலர்ச் சோதியான்" என்பது மணிவாசகம். எவராலும் என்பது ஏனைய சமயவாதிகளைக்
குறிக்கின்றது. சிவசமய நெறிநின்று சித்தாந்த ஞானம் உள்ள, சரியை கிரியை யோகங்களைப் பயின்று, பின் திருவருளால் உண்டாகும் சிவஞானம் ஒன்றாலேயே அது அறியத்தக்கது. அந்த ஞானம் கைவரப் பெற்ற நம்பியாரூரர் தொடர்ந்து பற்றினார்.
"ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்து இடையே ஒட, கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார், அவர்அலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந்து எட்டவல்லார்?" --- பெரியபுராணம்.
ஓல மறைகள் அறைகின்ற ஒன்றுஅது,
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்,
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்
ஓத அரிய துரியம் கடந்தது,.... --- திருப்புகழ்.
மாமாயை இடை புகாது ---
மாயா --- மா - தோற்றம். யா - ஒடுக்கம். உலகத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பது மாயை. அம் மாயைக்கு அப்பால்பட்டது மெய்ப்பொருள்.
"வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது... " --- திருப்புகழ்.
ஆனாத சுக மகா உததி ஆகி ---
ஆனாத – கெடாத. மெய்ஞ்ஞானத்தால் வரும் சுகம் ஒருபோதும் கெடாததும் நீங்காததும் ஆகும்.
"ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்", "ஆனா அமுதே அயில் வேல் அரசே" எனவரும் திருவாக்குகளைச் சிந்திக்கவும்.
சுகம் - இன்பம். மகா உததி - பெருங்கடல். பேரின்பப் பெருங்கடல். "வீடு பரம சுக சிந்து" என்கின்றார் திருவானைக்கா திருப்புகழில்.
பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது ---
நித்தியமாய் உள்ள அப்பொருளை சூரியனால் உலர்த்தமுடியாது. நெருப்பால் வேகவைக்க முடியாது. காற்றினால் அசைக்கமுடியாது. தண்ணீரால் கரைக்க முடியாது. ஆயுதங்களால் சேதிக்க முடியாது. பகவத் கீதை காண்க. "ஆதித்தற் காய ஒண்ணாதது, வேகத்துத் தீயில் வேகாதது" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் பாடி உள்ளது அறிக.
பரமஞான வீடு ---
வீடு - விடுபடுவது. பந்தத்தினின்றும் விடுபடுவது வீடு. அது, சிறந்த சிவஞானத்தினால் நிகழ்வது.
கருத்துரை
முருகா! ஒன்றாலும் அழியாத பரமஞானத்தை உபதேசித்து அருள்வீர்.
No comments:
Post a Comment