அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குருதி தோலினால் (பொது)
முருகா!
தேவரீரது திருவடியைப் பாடி உய்ய அருள்வீர்.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல ...... மெனவோடி
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் ...... மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம்ஆவி
குலைய, ஏமனால் ஏவி ...... விடுகாலன்
கொடிய பாசம் ஓர் சூல படையி னோடு, கூசாத
கொடுமை நோய் கொடே, கோலி ...... எதிராமுன்,
பருதி, சோமன், வான்நாடர், படி உளோர்கள், பால்ஆழி
பயம் உறாமல் வேல் ஏவும் ...... இளையோனே!
பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள்வீர!
பரிவினோடு தாள் பாட ...... அருள்தாராய்.
மருது நீறு அதுஆய் வீழ, வலிசெய் மாயன், வேய் ஊதி
மடுவில் ஆனை தான் மூலம் ...... என, ஓடி
வரு முராரி, கோபாலர், மகளிர் கேள்வன், மாதாவின்
வசனமோ மறா கேசன் ...... மருகோனே!
கருத ஒணாத ஞான ஆதி, எருதில் ஏறு காபாலி,
கடிய பேயினோடு ஆடி, ...... கருதார் வெம்
கனலில் மூழ்கவே நாடி புதல்வ! காரண அதீத!
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே.
பதவுரை
பருதி சோமன் வான்நாடர் படிஉளோர்கள் --- சூரியன், சந்திரன், வானோர்கள், உலகில் உள்ளோர்கள்,
பால்ஆழி பயம் உறாமல் வேல்ஏவும் இளையோனே --- திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் (ஆகிய இவர்கள்) கொண்ட அச்சம் நீங்க வேண்டி வேலை விடுத்து அருளிய இளையவயரே!
பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள் வீர --- குற்றம் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த பாவாணர்களாலும் எழுத்தில் வடிக்க முடியாத அழகிய திருத்தோள்களை உடைய வீரரே!
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் --- மருதமரம் பொடிபட்டு விழுமாறு வல்லமையைக் காட்டிய திருமால்,
வேய் ஊதி --- புல்லாங்குழலை ஊதுபவர்,
மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி --- நீர்நிலையில் கஜேந்திரம் என்னும் யானையானது ஆதிமூலமே என்று ஓலமிட்ட போது ஓடி வந்து காத்த (முரன் என்னும் அசுரனைக் கொன்ற) முராரி.
கோபாலர் மகளிர் கேள்வன் --- ஆயர் குலத்து கோபிகை மகளிரின் உள்ளம் கவர்ந்தவர்,
மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே --- தாயின் சொல்லை மறுக்காத கேசவனின் திருமருமகரே!
கருத ஒணாத ஞான ஆதி --- எண்ணுதற்கு அரிய ஞான முதல்வரும்,
எருதில் ஏறு காபாலி --- காளை வாகனத்தை உடையவரும், பிரமகபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும்,
கடிய பேயினோடு ஆடி --- கடுமை வாய்ந்த பேய்களோடு ஆடல் புரிபவரும்,
கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி புதல்வ --- தன்னைக் கருதாதவர்கள் கொடிய அனலில் மூழ்குமாறு திருக்கண் சாத்தியவரும் ஆன சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!
காரண அதீத --- காரணங்களுக்கு அப்பாற்பட்டவரே!
கருணை மேருவே --- கருணையில் மேருமலையைப் போன்றவரே!
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
குருதி தோலினால் மேவு குடிலில் --- இரத்தம், தோல் ஆகியவற்றினால் ஆன உடம்பாகிய குடிசையில்,
ஏதம் ஆம் ஆவி குலைய --- கேடு அடையும்படியாக இந்த உயிர் நீங்கும்படி,
ஏமனால் ஏவி விடு காலன் --- இயமானல் ஏவி விடப்படுகின்ற காலன்,
கொடிய பாசம் --- கொடிய பாசத்தையும்,
ஓர் சூல படையினோடு --- ஒப்பற்ற சூலாயுதத்தோடும்,
கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் --- சற்றும் கூச்சம் இல்லாமல் பொல்லாத துன்பநோய்களைத் தந்து அடியேனை எதிர்ப்படுவதன் முன்பாக,
பரிவினோடு தாள் பாட அருள் தாராய் --- அன்போடு உமது திருவடியைப் பாடும்படியாகத் திருவருள் புரிவீராக.
பொழிப்புரை
சூரியன், சந்திரன், வானோர்கள், உலகில் உள்ளோர்கள், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் முதலானவர்கள் கொண்ட அச்சம் நீங்க வேண்டி வேலை விடுத்து அருளிய இளையவயரே!
குற்றம் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த பாவாணர்களாலும் எழுத்தில் வடிக்க முடியாத அழகிய திருத்தோள்களை உடைய வீரரே!
மருதமரம் பொடிபட்டு விழுமாறு வல்லமையைக் காட்டிய திருமால்னவ; புல்லாங்குழலை ஊதுபவர்; நீர்நிலையில் கஜேந்திரம் என்னும் யானையானது ஆதிமூலமே என்று ஓலமிட்ட போது ஓடி வந்து காத்த, முரன் என்னும் அசுரனைக் கொன்ற முராரி; ஆயர் குலத்து மகளிரின் உள்ளம் கவர்ந்தவர்; தாயின் சொல்லை மறுக்காத கேசவனின் திருமருமகரே!
எண்ணுதற்கு அரிய ஞான முதல்வரும், காளை வாகனத்தை உடையவரும், பிரமகபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும், கடுமை வாய்ந்த பேய்களோடு ஆடல் புரிபவரும், தன்னைக் கருதாதவர்கள் கொடிய அனலில் மூழ்குமாறு திருக்கண் சாத்தியவரும் ஆன சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!
காரணங்களுக்கு அப்பாற்பட்டவரே!
கருணையில் மேருமலையைப் போன்றவரே!
தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
இரத்தம், தோல் ஆகியவற்றினால் ஆன உடம்பாகிய குடிசையில், கேடு அடையும்படியாக இந்த உயிர் நீங்கும்படி, இயமானல் ஏவி விடப்படுகின்ற காலன், கொடிய பாசத்தையும், ஒப்பற்ற சூலாயுதத்தோடும், சற்றும் கூச்சம் இல்லாமல் பொல்லாத துன்பநோய்களைத் தந்து அடியேனை எதிர்ப்படுவதன் முன்பாக, அன்போடு உமது திருவடியைப் பாடும்படியாகத் திருவருள் புரிவீராக.
விரிவுரை
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ---
குடில் - குடிசை. குடிசை எளிதில் அழியக் கூடியது. அது போன்றது இந்த உடம்பு என்னும் குடிசை. இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும் சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகளுளார்கு அடிகள் அறிவுறுத்துகின்றார்.
இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல. இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. தோல் எலும்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது. இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன் கூடியது என்பார்.
தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும். அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.
"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"
என்பார் பழநித் திருப்புகழில்.
இவ்வாறு அழியும் உடம்பை நாம் பெற்றது உடம்புள் உறையும் உத்தமனைக் கண்டு, அழிவற்ற தன்மையை அடையும் பொருட்டே. அதனை மறந்து, உண்டும் உடுத்தும் உறங்கியும் உலாவியும் வீணாக இந்த உடம்பைச் சுமந்து அலைந்து திரிந்து உயிரானது மெலிதல் கூடாது.
இங்கே நன்றாக உண்டு உண்டு உடம்பு தடிக்கின்றது. ஆனால் உயிர் அங்கே சென்று மெலிகின்றது, நலிகின்றது. ஏதப்படுகின்றது.
உயிரானது இவ்வாறு நலியாத முன்னம் இறைவன் திருவருளைப் பாடி உய்யத் திருவருள் புரியுமாறு ஆடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள் வீர ---
உள்ளத்தில் குற்றம் அற்ற பாவாணர்களாலும் இறைவன் திருவுருவ அழகை எழுதிக் காட்ட முடியாது. அனுபவிக்கத் தான் முடியும். சொல்லால் எழுதிக் காட்ட முடியாது.
"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்
ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,
ஓர் ஊரன் அல்லன், ஓர் உவமன் இல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே"
என்று அப்பர் பெருமான் கூறுமாறு காண்க.
இதன் பொருள் ---
இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் ---
நளகூபரன் மணிக்ரீவன் என்பவர் குபேரனுடைய குமாரர்கள். இருவரும் மது அருந்தி ஆடையின்றி நீர் விளையாட்டு புரிந்து கொண்டிருந்தார்கள். நாரத முனிவர் அங்கே வந்தனர். அவரைக் கண்டு நாணம் இன்றி கட்டைபோல் நின்றார்கள். "நல்லோர் முன் ஆடையின்றி மரம்போல் நின்ற படியால் மரங்களாகப் பிறக்கக் கடவது” என்று நாரத முனிவர் சபித்தார். அவர்கள் அஞ்சி, அவரை அஞ்சலி செய்து மன்னிக்குமாறு வேண்டினார்கள். நாரதர் திருவுள்ளம் இரங்கி, "ஆயர்பாடியில் நந்தகோபாலன் திருமாளிகையில் மருத மரங்களாக நீங்கள் முளைப்பீர்கள். கண்ணபிரானுடைய வண்ண மலரடி தீண்டப் பெறுதலால் சாபம் நீங்கும்” என்று அருள் புரிந்தார். கண்ணபிரான் உரலிலே கட்டப்பட்டு அம்மரங்களின் இடையே தவழ்ந்து சென்று, உரல் அம்மரங்களின் இடையே தடைப்பட்டதனால் சேவடி தீண்டி மரங்களை உதைத்தருளினார். உடனே அம்மரங்கள் வேருடன் வீழ்ந்தன. அவர்களது சாபம் பாபம் இரண்டும் வேரற்று வீழ்ந்தன. இருவரும் பண்டை வடிவம் பெற்று கமலக்கண்ணனைக் கைதொழுது துதி செய்து தங்கள் உலகம் பெற்றார்கள்.
மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி ---
திருமால், கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.
திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது. உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன் வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே ---
சீதையைத் திருமணம் புணர்ந்த பின்னர், அயோத்திக்கு வந்த இராமபிரானுக்கு மகுடம் சூட்டி, அரசபாரத்தை அளித்து, தான் தவம் புரியப் போவதாக தயரதன் முடிவு எடுத்து, மகுடம் சூட்டுவதற்கு உரிய நாளும் குறிக்கப்பட்டது. மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் சூழ்ச்சியால், தசரதனிடம், தனது மகன் பரதன் ஆரசாள வேண்டும் என்றும், இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரியவேண்டும் என்றும் பெற்ற வரத்தின் காரணமாக, இராமன் மணிமுடி தரிப்பது தவிர்க்கப்பட்டு, கைகேயியின் வார்த்தை தவறால், இராமன் காட்டுக்குச் செல்கின்றான்.
இராமனைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தாய், தந்தை, சகோதரன் என்று பாகுபாடு உண்டு. இருமுதுகுரவர் எனப்படும் தாய்தந்தை இருவரும் என்ன ஏவினாலும், ஏன் என்று கேளாமல், உடனே கீழ்ப்படிய வேண்டும் என்ற கொள்கையுடையவன்.
அதனால், கைகேயி 'அரசன் உன்னை காட்டிற்குச் செல்ல ஆணை இட்டுள்ளான்' என்று கூறினவுடன், மறுவார்த்தை பேசாமல், "எந்தையே ஏவ, நீரே உரை செய இயைவது உண்டேல், உயந்தனன் அடியேன்”என்றும், "மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?" என்றும் கூறி "விடையுங் கொண்டேன், மின் அவரி கானம் இன்றே மேவினன்" என்று மணிமுடியைத் துறந்து, நாட்டை விட்டுக் காட்டுக்குச் சென்றான்.
கேசன் - அழகிய திருமுடியை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். கேசி என்னும் அசிரனைக் கொன்றதால், கேசவன் என்று திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு.
கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி புதல்வ ---
கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.
திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.
அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.
ஆனால், இறைவர் அவ்வில்லையும் கணையையும் பயன்படுத்தாமல் சிரித்தார். முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள்.
"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே". --- திருஞானசம்பந்தர்.
வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.--- திருஞானசம்பந்தர்.
குன்ற வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.--- திருஞானசம்பந்தர்.
கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. --- அப்பர்.
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. --- சுந்தரர்.
கருத்துரை
முருகா! தேவரீரது திருவடியைப் பாடி உய்ய அருள்வீர்.
No comments:
Post a Comment