அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஊனே தானாய் (பொது)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற் ...... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ...... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ...... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஊனே தானாய் ஓயா நோயால்
ஊசாடு ஊசல் ...... குடில்பேணா,
ஓதா மோதா வாது ஆகாதே.
லோக ஆசாரத்து ...... உளம்வேறாய்,
நானே நீயாய், நீயே நானாய்,
நானா வேதப் ...... பொருளாலும்,
நாடா வீடாய், ஈடேறாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ?
வானே! காலே! தீயே! நீரே!
பாரே! பாருக்கு ...... உரியோனே!
மாயா மானே! கோனே! மானார்
வாழ்வே! கோழிக் ...... கொடியோனே!
தேனே! தேன் நீள் கான் ஆறாய்வீழ்
தேசு ஆர் சாரல் ...... கிரியோனே!
சேயே! வேளே! பூவே! கோவே!
தேவே! தேவப் ...... பெருமாளே.
பதவுரை
வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே --- ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, உலக உயிர்கள் உயிர் வாழ்தற்கு உரியவராகத் திகழ்பவரே!
மாயா மானே --- என்றும் அழிவில்லாத பெரியோனே!
கோனே --- உயிர்களுக்கு அரசரே!
மானார் வாழ்வே --- அழகிய வள்ளி தேவயானை அம்மையர்க்கு மணவாளரே!
கோழிக் கொடியோனே --- கோழிக் கொடியை உடையவரே!
தேனே --- தேனாய் இனிமை தருபவரே!
தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரற் கிரியோனே ---. தேன் நீண்ட காட்டாறு போலப் பாய்கின்ற ஒளி பொருந்திய மலைப்பகுதியில் (குன்றக்குடி என்ற திருத்தலத்தில்) அமர்ந்தவரே!
சேயே --- சிவபெருமான் புதல்வரே!
வேளே --- செவ்வேள் பரமரே!
பூவே --- அழகரே!
கோவே --- தலைவரே!
தேவே --- தேவரே!
தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
ஊனே தானாய் --- ஊன் பொருந்திய இந்த உடலையே நான் என்று எண்ணி,
ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில்பேணா --- ஓயாத நோயினால் வாடி அழிவதும், ஊஞ்சலைப் போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,
ஓதா --- நூல்களை ஓதி (அதனால் பெற்ற அறிவைக் கொண்டு)
மோதா வாது ஆகாதே --- பிறரோடு வாதப் போர் புரிவது ஆகாமால்,
லோக ஆசாரத்து உளம் வேறாய் --- உலக ஆசாரங்களில் மனம் கட்டுப்படாமல்,
நானே நீயாய் நீயே நானாய் --- நானே தேவரீர் ஆகவும், தேவரீரே நான் ஆகவும் என்னும்படி வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டுப் பொருந்தி,
நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய் --- நான்கு என்று சொல்லபடும் வேதங்களில் பொருளாலும் நாடி அறியாமுடியாத வீடுபேற்றை அடியேன் அடைந்தவனாய்,
ஈடேறாதே --- பிறவி ஈடேறும் வகையில் வாழாமல்,
நாயேன் மாயக் கடவேனோ --- நாயனையேன் இறந்து போக வேண்டுமா?
பொழிப்புரை
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, உலக உயிர்கள் உயிர் வாழ்தற்கு உரியவராகத் திகழ்பவரே! என்றும் அழிவில்லாத பெரியோனே! உயிர்களுக்கு அரசரே! அழகிய வள்ளி தேவயானை அம்மையர்க்கு மணவாளரே! கோழிக் கொடியை உடையவரே! தேனாய் இனிமை தருபவரே!
தேன் நீண்ட காட்டாறு போலப் பாய்கின்ற ஒளி பொருந்திய மலைப்பகுதியில் (குன்றக்குடி என்ற திருத்தலத்தில்) அமர்ந்தவரே! சிவபெருமான் புதல்வரே! செவ்வேள் பரமரே! அழகரே! தலைவரே! தேவரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
ஊன் பொருந்திய இந்த உடலையே நான் என்று எண்ணி, ஓயாத நோயினால் வாடி அழிவதும், ஊஞ்சலைப் போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி வாழ்ந்து, நூல்களை ஓதி அதனால் பெற்ற அறிவைக் கொண்டு பிறரோடு வாதப் போர் புரிவது ஆகாமால், உலக ஆசாரங்களில் மனம் கட்டுப்படாமல், நானே தேவரீர் ஆகவும், தேவரீரே நான் ஆகவும் என்னும்படி வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டுப் பொருந்தி, நான்கு என்று சொல்லபடும் வேதங்களில் பொருளாலும் நாடி அறியாமுடியாத வீடுபேற்றை அடியேன் அடைந்தவனாய், பிறவி ஈடேறும் வகையில் வாழாமல், நாயனையேன் இறந்து போக வேண்டுமா?
விரிவுரை
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில்பேணா ---
நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும், எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம்.
"நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை" என்பார் அருணகிரிநாதர்.
"ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர்மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன,நான்
அறியாத காலமெல்லாம்
புந்திமகிழ் உறஉண்டு உடுத்து, இன்பம் ஆவதே
போந்தநெறி என்று இருந்தேன்,
பூராய மாகநினது அருள் வந்து உணர்த்த இவை
போனவழி தெரியவில்லை.." --- தாயுமானார்.
"காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!
மேயபுய பலவலிமை இளமைஅழகு இவையெலாம்
வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,
வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,
வீண்பொழுது போக்காமலே
நேயமுட னேதெளிந்து அன்பொடுஉன் பாதத்தில்
நினைவுவைத்து இருபோ தினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க
நிமலனே! அருள்புரி குவாய்
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!" --- அறப்பளீசுர சதகம்.
இதன் பொருள் ---
தூயவனே!, ஆராய்ந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே! அறிவு வடிவானவனே!
தலைவனே! எமது அரிய மதவேள் என்பான் நாள்தோறும் உள்ளத்தில் வைத்து வழிபடுகின்ற, சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும். அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்! பொருந்திய தோள் வலிமை, இளமை, அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும் மஞ்சள் நிறமுள்ள இளவெயில். இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு என்றே நினைத்து, வாழ்நாளை வீணே கழிக்காமல், அறிவுத் தெளிவை அடைந்து, உன் திருவடிகளில் நட்பு பூண்டு, உள்ளன்புடன் நினைந்து, காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.
இந்த வாழ்க்கையைக் காட்டாற்றுக்கு உவமைப் படுத்தினார். வாழ்க்கை நிலையானது அல்ல. காட்டாற்றிலே எப்போது வெள்ளம் வரும், எப்போது வடியும் என்று சொல்லமுடியாது. வெள்ளம் வந்ததும் விரைவில் வற்றி விடும்.
மனைவி, மக்கள், உறவு, செல்வம் இவை எல்லாம் உள்ளது போலத் தோன்றி அழியக் கூடியவையே. வேனில் காலத்தில், நண்பகல் வேளையில், திறந்த வெளியிலே நீர்ப்பெருக்கு உள்ளது போலத் தோன்றும். ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் இருக்காது. இதனைக் கானல் நீர் என்பர். இது பொய்த்தோற்றமாதலால் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.
காலையிலும் மாலையிலும் உண்டாகும் இளவெயிலை மஞ்சள் வெயில் என்பது வழக்கம். நிலையாமை கருதி இவ்வாறு சொல்லப்பட்டது.
திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கானது எப்போது அணையும் என்று சொல்லமுடியாது போல, உடம்பிலே உள்ள உயிரானது எப்போது நீங்கும் என்று நிச்சயித்துக் கூற முடியாது.
இப்படிப்பட்ட உடம்பை உயிருக்கு வாய்த்த ஒரு சட்டை என எண்ணாமல், உடம்பையே உயிராக எண்ணி மயங்குதல் கூடாது.
எனவே, வாழ்நாளை வீணாக்காமல், இளமையிலேயே, இறைவனுக்கு ஆட்பட்டு, உள்ளன்போடு, பூவும் நீரும் கொண்டு வழிபட்டு உய்ய வேண்டும்.
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு, நீர் உண்டு,
அண்ணல் அதுகண்டு அருள் புரியா நிற்கும்,
எண்இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ண அறியாமல் நழுவுகின்றாரே. --- திருமந்திரம்.
பூக்கைக் கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்.
நிலையற்ற உடம்பு, நிலையற்ற வாழ்வு இவற்றைக் கொண்டு, நிலையான பேரின்பத்தைத் தேடிக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.
ஓதா மோதா வாது ஆகாதே ---
அறிவு நூல்களை ஓதி உணர்ந்து, அடங்கி, அறநெறியில் நின்று, இறையன்பு செய்து, நிறைவுறல் வேண்டும். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதல்.
கடவுளை என் வழிபடவேண்டும்? கடவுள் இருந்தால் அவர் ஒருபுறம் இருக்கட்டுமே? அவரை வழிபடுவானேன்? கடவுள் உணர்ச்சி எதற்காக? என்று வினாவுவோர் பலர்.
இறை என்ற சொல், இறு என்ற பகுதியடியாக வந்தது. இறைவன் என்பதற்கு எங்கு தங்கி இருப்பவன் என்பது பொருள். எங்கும் - எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து நிற்பவன் இறைவன். எவ்வுயிரும் பராபரன் சந்நிதி ஆகும். எல்லா உயிர்களும் இறைவனுடைய திருக்கோயில்கள் என்ற எண்ணம் உண்மையாக உள்ளத்தில் ஊன்றி நிற்குமாயின், எல்லா உயிர்களையும் இறைவனாகவே எண்ணி, அவ் உயிர்கட்கு இன்பம் செய்யும் இனிய பண்பு ஒருவனுக்கு உண்டாகும். ஒரு உயிரைக் கொல்லவோ இடர்படுத்தவோ மனம் வராது. எல்லா உயிர்களையும் இறைவன் சந்நிதியாக எண்ணுவோர், அவ் உயிர்களிடம் தூய அன்பு செய்து உய்வு பெறுவர். பிற உயிர்கட்கு நன்மை செய்வதைக் காட்டிலும் சிறந்த தவம் இல்லை.
"உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு"
என்பார் திருவள்ளுவ நாயனார்.
கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நிரயம் உறுவர்.
ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.
எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது. ஆகவே, இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்து உய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றாரெனினும் கல்லாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.
கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.
"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நள்ளார் தொழாஅர் எனின".
"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால், கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் கலா மூடர்" என்கின்றார் அடிகள் பிறிதொரு திருப்புகழில்.
தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.
கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும்.
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை
சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி
நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்
பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. --- தாயுமானார்.
இங்ஙனம் இன்றி, வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று தருக்குற்று, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.
முன்கூறிய படி, அறிவு நூல்களைக் கற்றவர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, பாலும் தேனும் கலந்ததுபோல் மகிழ்ந்து அளவளாவுவர்.
நல்தாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். --- மூதுரை.
பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.
இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர். இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.
இவர்களுடைய நிலையைக் கண்டு இரக்கமுற்ற தமது பரம குருநாதராகிய அருணகிரிநாதர், " காதிமோதி வாதாடு நூல் கற்றிடுவோர் மாறிலாத மாகாலன் ஊர்புக்கு அலைவார்" என்று பாடி உள்ளார்.
லோக ஆசாரத்து உ(ள்)ளம் வேறாய் ---
லோகம் - உலகம்.
லோக ஆசாரம் - உலகியல் பழக்க வழக்கங்கள். இவற்றில் மனம் பதியக் கூடாது. இவற்றில் விருப்பு வெறுப்புக் கொள்ளுதல் கூடாது.
உலகியல் பழக்க வழக்கங்களில் மனம் பதிந்தால் அமைதி உண்டாகாது. கொதிப்பு உண்டாகும். "உலகாசார சங்கற்ப விகற்பங்கள் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்" என்பது வள்ளல்பெருமான் அருளிய சன்மார்க்க விண்ணப்பம்.
"கொதித்த லோகாசாரக் கொதிப்பு எல்லாம் ஒழிந்தது,
கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது.
இது நல்ல தருணம்"
என்று வள்ளல்பெருமான் பாடினார்.
நானே நீயாய் நீயே நானாய் ---
"இருவினை, மும்மலமும் அற, இறவியொடு பிறவி அற, ஏக போகமாய், நீயும் நானுமாய் இறுகும்வகை, பரமசுகம் அதனை அருள், இடைமருதில் ஏக நாயகா! லோக நாயகா! இமையவர் பெருமாளே" என்றும், "நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர" என்றும் பிற இடங்களில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.
பிறவாமைக்குக் காரணங்கள் இருவினை ஒப்பும் மலபரிபாகமும் ஆம்.
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக் கொண்டுஅருள் சத்திமுன் கூட்டிப்
பெருமல நீக்கிப் பிறவாமை சுத்தமே. --- திருமூலர்.
நல்வினை தீவினை என்ற இருவினைகளும் ஒப்பு வந்தபோது, ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் விலகும். அப்போது சத்திநிபாதம் எய்தும். அங்ஙனம் அருள் பதிந்த பின் ஆன்மா பதியுடன் ஒன்று படும்.
ஆன்மா இறையுடன் இரண்டறக் கலத்தலே அத்துவித முத்தி ஆகும். கட்டையில் தீயும், தீயில் நீரும், தேனில் சுவையும், மலரில் மணமும், வானில் வளியும், கண்ணில் ஒளியும் போல் ஆன்மா பதியுடன் அத்துவிதம் ஆகும்.
இந்தனத்தில் அங்கி, எரிஉறுநீர் தேன்இரதம்
கந்தமலர்ப் போது, வான்கால், ஒளிகண் --- சந்ததமும்
அத்துவிதம் ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை. --- சிவபோகசாரம்.
முத்தியைப் பலர் பலவாறு கூறி உழலுவர். சிவசமவாதம், ஐக்கியவாதம் முதலிய பல பேதங்கள் உள. அவைகளை எல்லாம் நெறி செய்து அடிகள் கூறிய முத்தியை அடியில் வரும் முத்தி நிச்சயத் திருவெண்பாவால் அறிந்து தெளிந்து உறுதியும் உய்வும் பெறுக.
உள்ளமல நீங்கி ஓங்கு சிவானந்த
வெள்ளம் திளைத்ததுவாய் மேவுதலே --- கள்அவிழ்பூங்
கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்தில்
சித்தாந்த முத்திஎனத் தேறு.
ஆன்மா, ஆணவமலம் முதலானவற்றை நீங்கி, ஒரு காலத்தும் குறைவில்லாத சிவானந்தப் பெருங்கடலில் திளைத்து, அச் சிவமும் ஆன்மாவும் ஒன்று என்றும், இரண்டு என்றும் பிரித்து அறியமாட்டாத அத்துவித நிலையைப் பெறுதலே, தேன் ஒழுகும் ஆத்திப்பூ மாலையை அணிந்த விரிசடை விமலன் திருவாய் மலர்ந்து அருளிய சிவாகமத்தில் கூறும் சித்தாந்த முத்தி எனத் தெளிவாயாக. இதனைப் பட்டினத்தடிகளும் கூறுமாறு காண்க.
பூதமும் கரணமும் பொறிகள்ஐம் பூலனும்
பொருந்திய குணங்களோர் மூன்றும்
நாதமும் கடந்த வெளியிலே நீயும்
நானுமாய் நிற்குநாள் உளதோ
வாதமும் சமய போதமும் கடந்த
மனோலய இன்ப சாகரமே
ஏதும்ஒன்று அறியேன் யாதும்நின் செயலே
இறைவனே ஏக நாயகனே.
ஆன்மா பதியுடன் பொருந்தும் போது உண்டாகும் இன்பத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை. ஆதலினால், அதுவே பரம சுகமாம். ஏனைய சுகங்கள் எல்லாம் சிறிது போது மின்னலைப் போல மறைந்து ஒழிபவைகளாகும்.
தண்அமுத மதிகுளிர்ந்த கிரணம் வீச,
தடம்பொழில்பூ மணம்வீச, தென்றல் வீச,
எண்அமுதப் பளிங்குநிலா முற்றத் தேஇன்
இசைவீச, தண்பனிநீர் எடுத்து வீச,
பெண்அமுதம் அனையவர்விண் அமுதம் ஊட்டப்
பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட்டு ஓட,
கண்அமுதத்து உடம்புஉயிர்மற்று அனைத்தும் இன்பம்
கலந்துகொளத் தரும்,கருணைக் கடவுள் தேவே! --- திருவருட்பா.
அந்த இன்பம் எய்தியவர்க்கு ஏனைய இன்பமெல்லாம் கசந்து போகும்.
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்,
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. --- திருமந்திரம்.
நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய் ---
வேதங்களாலும் அறியப் படாத பொருள் இறைவன். "வேதத்தில் கேள்வி இலாதது" என்றார் அடிகளார். "வேதங்கள் ஐயா என, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்பது திருவாசகம்.
ஈடேறாதே நாயேன் மாயக் கடவேனோ ---
பெறுதற்கு அரிய மனிதப் பிறவி வாய்த்தது. அதன் பயன் என்ன? என்றால், "தில்லைக் கூத்தற்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ!" என்கிறார் அப்பர் பெருமான். பிறவாத பெருநிலையைப் பெற்று உய்தல் வேண்டும். பிறந்து இறந்து உழலுவது கூடாது.
மாயா மானே ---
மாயா - அழியாத.
மான் - பெரியோன்.
மானார் வாழ்வே ---
மானார் - பெண்டிர். இங்கே திருமுருகன் தேவியர் ஆகிய தேவசேனை அம்மையாரையும், வள்ளிநாயகியாரையும் குறிக்கும்.
வேளே ---
வேள் - மன்மதன், முருகன் இருவரையும் குறிக்கும். திருமாலின் மகனாகிய மன்மதன் கருவேள் எனப்படுவான். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் செவ்வேள் எனப்படுவார்.
பூவே ---
பூ - அழகு.
தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரற் கிரியோனே ---.
இப் பாலடல் குன்றக்குடி என்னும் திருத்தலத்திற்கு உரியதாகவும் ஒரு கருத்து உண்டு.
கருத்துரை
முருகா! எனது ஆவி ஈடேறுமாறு அருள்வாய்.
No comments:
Post a Comment