பொது - 1050. அகல நீளம் யாதாலும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அகல நீளம் (பொது)


முருகா!

மோனமாகிய கோயிலில் ஞானமாகிய மலர்தூவி,

புருவ நடுவில் நாட்டத்தைச் செலுத்தி,

ஞானபூசை செய்யத் திருவருள் புரிவீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய

     அரிய மோன மேகோயி ...... லெனமேவி


அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான

     அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச்


சகல வேத னாதீத சகல வாச காதீத

     சகல மாக்ரி யாதீத ...... சிவரூப


சகல சாத காதீத சகல வாச னாதீத

     தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ


விகட தார சூதான நிகள பாத போதூள

     விரக ராக போதார ...... சுரர்கால


விபுத மாலி காநீல முகப டாக மாயூர

     விமல வ்யாப காசீல ...... கவிநோத


ககன கூட பாடீர தவள சோபி தாளான

     கவன பூத ராரூட ...... சதகோடி


களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அகலம் நீளம் யாதாலும், ஒருவராலும் ஆராய

     அரிய மோனமே கோயில் ...... எனமேவி,


அசையவே க்ரியா பீட மிசை புகா, மகா ஞான

     அறிவின் ஆதர ஆமோத ...... மலர்தூவி,


சகல வேதன அதீத, சகல வாசக அதீத,

     சகல மா க்ரியா அதீத, ...... சிவரூப,


சகல சாதக அதீத, சகல வாசனை அதீத

     தனுவை நாடி, மா பூசை ...... புரிவேனோ?


விகட தார, சூதான, நிகள பாத போதூள

     விரக ராக போது ஆர் ...... அசுரர்கால!


விபுத மாலிகா! நீல முக படாக மாயூர!

     விமல! வ்யாபகா! சீல ...... அக விநோத!


ககன கூட, பாடீர, தவள, சோபித ஆளான

     கவன பூதர் ஆரூட, ...... சதகோடி


களப காம வீர்! வீசு கர முக! ஆர! வேல்வீர!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


விகட தார, சூது ஆன நிகள பாத போதூள --- வேடிக்கையைத் தரித்த, வஞ்சனையாகிய பந்தத்தில் பதிதலைப் போகுமாறு தூள் படுத்துபவரே!

விரக ராக போது ஆர் அசுரர் கால --- காம நோயுடன் கூடிய மோகத்திலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களை அழித்தவரே!

விபுத மாலிகா --- தேவதருவின் மலர்மாலையைத் தரித்தவரே!

நீல முக படாகம் மாயூர --- நீலநிறத்தை உடையதும், முகபடத்தை உடையதும் ஆகிய மயிலை வாகனமாக உடையவரே!

விமல --- மலமில்லாதவரே!

வ்யாபகா ---  எங்கும் நிறைந்திருப்பவரே!

சீல அக விநோத --- நல்லொழுக்கத்தில் பொழுது போக்குபவரே!

ககன கூடம் பாடீரம் --- விண்ணுலகில் வாழ்வதும், சந்தனப் பொட்டு அணிந்ததும்,

தவள சோபித ஆளான --- வெண்மை நிறத்துடன் அழகியதும், அடிமைபோல் ஏவல் செய்வதும்,

கவனம் பூதரம் ஆரூட --- வேகமாகச் செல்வதும் ஆகிய மலை போன்ற அயிராவத யானை மீது ஏறி வரும்

சத கோடி களப காம வீர --- வச்சிராயுத பாணியாகிய இந்திரன் மனம் கலந்து அன்பு செய்கின்ற வீரரே!

கரம் வீசு முக --- ஒளியை வீசுகின்ற திருமுகத்தை உடையவரே!

ஆர  ---  கடப்ப மாலை அணிந்தவரே!

வேல் வீர  --- வேலாயுதத்தை ஏந்திய வீரமூர்த்தியே!

கருணை மேருவே ---  கருணையில் மேருமலை போல் உயர்ந்தவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய --- இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்று யாராலும் அளந்து ஆராய்ந்து அறிய முடியாததாகிய

மோனமே கோயில் என மேவி அசையவே --- மெளனமாகிய திருக்கோயிலை அடைந்து இருந்து,

க்ரியா பீடம் மிசை புகா --- கிரியையாகிய பீடத்தின் மீது அமர்ந்து,

மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி ... பெரிய மெய்யுணர்வாகிய ஞானமலரை அன்புடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அர்ச்சித்து,

சகல வேதன அதீத --- எல்லா அறிவுகட்கும் அப்பாற்பட்டதும்,

சகல வாசக அதீத ---  எல்லாச் சொற்களுக்கும் அப்பாற்பட்டதும்,

சகல மா க்ரிய அதீத ---  எல்லா வகையான பெரிய கிரியைகளையும் கடந்ததும்,

சிவரூப சகல சாதக அதீத --- நன்மை வடிவான எல்லா அளவைகட்கும் அப்பாற்பட்டதும்,

சகல வாசன அதீத --- எல்லா மணங்கட்கும் மேலானதும்,

தனுவை நாடி ---  புருவநடுவில் வில் பிறை போல் விளங்கும் குறியைக் குறியாது குறித்து நின்று,

மா பூசை புரிவேனோ --- பெரிய வழிபாட்டை அடியேன் புரியமாட்டேனோ? (புரிதல் வேண்டும்).


பொழிப்புரை

வேடிக்கையைத் தரித்த, வஞ்சனையாகிய பந்தத்தில் பதிதலைப் போகுமாறு தூள் படுத்துபவரே!

காம நோயுடன் கூடிய மோகத்திலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களை அழித்தவரே!

தேவதருவின் மலர்மாலையைத் தரித்தவரே!

நீலநிறத்தை உடையதும், முகபடத்தை உடையதும் ஆகிய மயிலை வாகனமாக உடையவரே!

மலமில்லாதவரே!

எங்கும் நிறைந்திருப்பவரே!

நல்லொழுக்கத்தில் பொழுது போக்குபவரே!

விண்ணுலகில் வாழ்வதும், சந்தனப் பொட்டு அணிந்ததும், வெண்மை நிறத்துடன் அழகியதும், அடிமைபோல் ஏவல் செய்வதும், வேகமாகச் செல்வதும் ஆகிய மலை போன்ற ஐராவத யானை மீது ஏறி வரும் வச்சிராயுத பாணியாகிய இந்திரன் மனம் கலந்து அன்பு செய்கின்ற வீரரே!

ஒளியை வீசுகின்ற திருமுகத்தை உடையவரே!

கடப்ப மாலை அணிந்தவரே!

வேலாயுதத்தை ஏந்திய வீரமூர்த்தியே!

கருணையில் மேருமலை போல் உயர்ந்தவரே!

தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்று யாராலும் அளந்து ஆராய்ந்து அறிய முடியாததாகிய மெளனமாகிய திருக்கோயிலை அடைந்து இருந்து, கிரியையாகிய பீடத்தின் மீது அமர்ந்து, பெரிய மெய்யுணர்வாகிய ஞானமலரை அன்புடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அர்ச்சித்து, எல்லா அறிவுகட்கும் அப்பாற்பட்டதும்,  எல்லாச் சொற்களுக்கும் அப்பாற்பட்டதும், எல்லா வகையான பெரிய கிரியைகளையும் கடந்ததும், நன்மை வடிவான எல்லா அளவைகட்கும் அப்பாற்பட்டதும், எல்லா மணங்கட்கும் மேலானதும், புருவநடுவில் வில் பிறை போல் விளங்கும் குறியைக் குறியாது குறித்து நின்று, பெரிய வழிபாட்டை அடியேன் புரியமாட்டேனோ? (புரிதல் வேண்டும்).

விரிவுரை

அகல நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் --- அறிவு வடிவாக விளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில் எல்லையாகத் திகழ்வது மோனம். "மோனம் என்பது ஞானவரம்பு" என்று உபதேசிக்கின்றார் ஔவையார்.

மன சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர். வாய் பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது 'வாய்மௌனம்' எனப்படும். 

கைகால் அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு 'காஷ்டமௌனம்' என்று பேர். 

மனமே அற்ற நிலைக்குத் தான் 'பூரணமௌனம்' என்று பேர்.  அங்கே தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.  

அந்த இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.

இந்த மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகப் பெருமானை வேண்டுகின்றார்.

"அருவம் இடைஎன வருபவர், துவர்இதழ்

  அமுது பருகியும் உருகியும், ம்ருகமத

    அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார

அசல முலைபுள கிதம்எழ, அமளியில்

  அமளி படஅந வரதமும் அவசமொடு

     அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்


தருவை நிகரிடு புலமையும் அலம்அலம்,

  உருவும் இளமையும் அலம்அலம், விபரித

    சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்

சலில லிபியன சனனமும் அலம்அலம்,

   இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு

     தமர பரிபுர சரணமும் மவுனமும் ...... அருள்வாயே."   ---  திருப்புகழ்.

அந்த மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...

"ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்

மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து

சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,

எல்லாம்நல் மோனவடி வே."


"எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்

நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத

நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு

ஏன்அலைந்தேன் மோனகுரு வே."


"மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,

ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி

நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது

என்றுஅறிந்தேன் ஆனந்த மே."


"அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,

மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே

நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை

கூட்டினான் மோன குரு."


"குருஆகித் தண்அருளைக் கூறும் முன்னே, மோனா!

உரு, நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன

வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்

ஈங்குஒருவர் உண்டோ இனி."


"இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டால்

நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்

பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்

கற்றிலேன் ஏதும் கதி."


"ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த

சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து

நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்

கொன்றதற்கோ பேசாக் குறி."


"குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து

அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்

சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்

கைம்மாறு நான்ஒழிதல் காண்."


"நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை

வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்

வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து

துய்த்துவிடும் ஞான சுகம்".


"ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி

தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு

தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை

கோயில்என வாழும் குரு."


"சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற

நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை

பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்

கற்றோமே மோனக் குரு."


கிரியா பீடம் ---

இங்கே மோனமாகிய கோயிலில் கிரியையாகிய பீடத்தில் இருத்தல் வேண்டும். கிரியை என்பது இங்கே ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற நான்கு பாதங்களில், ஞானத்தில் கிரியையைக் குறிக்கும் என உணர்க.

மோனமாகிய கோயிலில் புறக் கிரியைகட்கு இடம் இல்லை.

"சரியையா ளர்க்கும் அக் கிரியையா ளர்க்கும், நற்

     சகலயோ கர்க்கும் எட் ...... டரிதாய"

என்று கதிர்காமத் திருப்புகழில் அடிகளார் கூறியிருப்பதையும் இங்கு உய்த்து உணர்க.

மகாஞான அறிவு ஆதார மோத மலர் ---

மோனக் கோயிலில் ஞான மலர் கொண்டு அர்ச்சிக்கவேண்டும். அந்த ஞானம் மகாஞானம் ஆகும். பாசஞான பசுஞானம் அல்ல. அது அன்பையும் இன்பையும் அங்கமாகக் கொண்டது. அறிவின் பயன் அன்பு. அன்பின் சிகரம் இன்பம் எனத் தெளிக. அகப்பூசைக்கு உரிய ஞானமலர்கள், கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆவன. இவை "நலம் சிறந்தார் மனத் தகத்து மலர்கள் எட்டும்" என்று அப்பர் பெருமான் அருளிய தேவாரம் கூறும்.

மோனமாகிய கோயிலில் ஞானக் கிரியையாகிய பீடத்தின்மேல் இருந்து, அறிவே வடிவாகிய ஆண்டவனுக்கு மெய்யுணர்வாகிய மென்மலர் இட்டு வழிபடும் இவ் வழிபாடு ஞானபூசை ஆகும்.

"நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீர், பூசைகொள்ள வாராய் பராபரமே." ---  தாயுமானார்.

சகல வேதன அதீத ---

வேதனம் - அறிவு. அறிவு அறிகின்ற வகையால் பல திறப்படும்.  கடலைப் பற்றி அறிகின்ற அறிவு. மண்ணைப் பற்றி அறிகின்ற அறிவு. விண்ணைப் பற்றி அறிகின்ற அறிவு. நீரைப் பற்றி அறிகின்ற அறிவு. தீயைப் பற்றி அறிகின்ற அறிவு. நோயைப் பற்றி அறிகின்ற அறிவு.  உயிரைப் பற்றி அறிகின்ற அறிவு. இந்த அறிவுகள் எல்லாவற்றிற்கும் அப்பாலுள்ள அறிவு அருளறிவு என உணர்க. அந்த அருளறிவை அன்றி, ஏனைய அறிவுகளை எல்லாம் கடந்த இடத்தில் ஞானபூசை நிகழும்.

சகல வாசக அதீத ---

வாசகம் - சொல். "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே" என்ற மணிவாசகத்தின்படி, சொற்களை எல்லாம் கடந்தது அது. சொல்லே அற்ற இடத்தில் தண்டபூப நியாயப்படி, பொருள் தானே அற்றுவிடும்.  "சும்மா இரு சொல் அற என்றலுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே" என்பது கந்தர் அனுபூதி. "சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடர ஒண்ணா அருள்நெறி" என்பார் தாயுமானார்.  இங்கே வாசகமாகக் கூறும் மந்திரங்களையும் கடந்து நிற்கும் பூசை என்பதும் அறிக. அஜபா நலத்துடன் கூடியது அது.

சகல மா க்ரியா அதீத ---

முன் கூறியபடி ஞானபூசை எல்லா வகைப்பட்ட கிரியைகளையும் கடந்தது.  இதனால், கிரியா பூசை தாழ்ந்தது என்பது பொருளன்று.  அது ஜீவபோதம் உள்ளவரை செய்யத் தக்கது ஆகும். தூங்கியவன் கைப்பொருள் தானே நழுவுதல் போல், மெய்யுணர்வு எய்தி, தான் அதுவாய் நிற்கும் தனிப்பெரு நிலையில் கிரியைகள் தாமே கழன்றுவிடும்.

சகல சாதக அதீத ---

சாதகம் - பயிற்சி. ஞானத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் பயிற்சிகள் பல உள்ள. ஞானநிலை எய்தியபோது பயிற்சிகள் தன்னால் விலகும். ஏணி மேல் ஏறி மாடிமீது சேர்ந்தவன் ஏணியை விட்டுவிடுவது போல் என அறிக. அதைக் கண்டு பாதி ஏணிமேல் நிற்போன் ஏணியை உதறித் தள்ளுவானாயின் தலை மண்டை உடைந்து போகும். ஆகவே, அனுபவத்தில் தானே வரக்கூடிய நிலையை வலிந்துகொண்டு, அனுபவம் வராமுன், கொண்ட பயிற்சிகளை விடக் கூடாது.

சகல வாசன அதீத ---

முன் பற்றி இருந்த பொருள்களில் உள்ள பற்றுக்களின் வாசனை.  பெருங்காயம் எடுத்த பின்னும் அதன் வாசனை அந்தப் பெட்டியில் வருவது போல், வாசனையாக வந்து சில பற்றுக்கள் ஆன்மாவைத் தாக்கும். ஆகவே, வாசனைகளையும் கடந்து சென்று நிற்கவேண்டும்.

தனுவை நாடி மா பூசை புரிவேனோ ---

தனு - வில்.

புருவநடுவே வில்போன்ற ஒரு குறி உண்டு. நிலாப் பிறை போன்ற அதன் நடுவே, 'ய' என்ற எழுத்து விளங்கும். அக் குறியைக் குறியாது குறித்து நின்று அசைவற்று கருவி கரணம் கழன்று சித்திர விளக்குப்போல் நிற்கவேண்டும்.

"எட்டு இரண்டும்அறி யாத என்செவியில்

  எட்டு இரண்டும்இது வாம் இலிங்கம்என,

   எட்டு இரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே." ---  கட்டிமுண்டக திருப்புகழ்.

இலிங்கம் - குறி. எட்டும் இரண்டும் பத்து. அது 'ய'.  இந்த 'ய' ஆக்ஞா என்ற புருவநடுவில் இருக்கின்றது. அதில் நாட்டத்தை வைத்தாருக்கு வாட்டமில்லை.

"நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டம் இல்லை, மனைக்கும் அழிவுஇல்லை,

ஓட்டம் இல்லை, உணர்வுஇல்லை, தான்இல்லை,

தேட்டம் இல்லை, சிவன்அவன் ஆமே." ---  திருமந்திரம்.

புருவ நடுவே ஞானத்தின் ஊற்று இருப்பதனாலேயே அங்கு பொட்டு இட்டு அடையாளம் செய்கின்ற வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு வருகின்றது.

விகட தார சூதான நிகள பாத போ தூள ---

நிகளம் - சங்கிலி. இங்கே ஆன்மாவைக் கட்டும் பந்தத்தைக் குறித்து நின்றது.

விகடத்தைத் தரித்த வஞ்சனையால் வரும் பந்தத்தைப் போகும்படி தூள் செய்பவனே என்று முருகனை விளிக்கின்றார்.. 'போக' என்பது ஈறு கெட்டு 'போ' என வந்தது.

விரக ராக போதுஆர் அசுரர் கால ---

விரகம் - காமநோய். ராகம் - மோகம். போது - பொழுது. ஆர் - நிறைதல்.  

காமநோயைத் தரும் மோகத்திலேயே பொழுதைப் போக்கும் அசுரர்கட்கு அழிவைப் புரிபவர் முருகப் பெருமான். "நிருதராரக்கு ஒரு காலா" என்றும் பிறிதொரு திருப்புகழில் கூறுகின்றார்.

விபுத மாலிகா ---

விபதர் - தேவர். தேவர்கள் தெய்வ தருக்களில் பூக்கும் மலர்களை எடுத்துத் தொடுத்து முருகனுக்கு மாலை சூட்டுவர். அம்மலர் மாலை மாறாத மணம் நிறைந்தது, வாடாதது.

நீல முகபடாக மாயூர ---

முகபடம் - யானைக்கு முகத்தில் அனியும் அழகிய துணி. மயிலுக்கும் அதுபோல் அதன் முகத்தில் அழகிய படம் விளங்குவதாகக் கூறுகின்றனர்.

ககனகூடம் – விண்ணுலகம்.

பாடீரம் - சந்தனம். யானைக்கு சந்தன திலகம் அணிவது மரபு.

சோபிதம் - அழகு.

ஆளான – இந்திரனுக்கு ஒரு அடிமைபோல் ஐராவதம் என்ற யானை பணிபுரியும்.

கவனம் - வேகமாகச் செல்லக்கூடியது.

பூதரம் - மலை. இங்கு உவம ஆகுபெயராக யானையைக் குறிக்கின்றது.

சதகோடி - வச்சிராயுதம்.

களபம் - கலத்தல்.

சாப – பிரியம்.

பொன்னுலகத்தில் உறைவதும், சந்தன திலகம் அணிந்திருப்பதும், வெண்மை நிறம் உடையதும், அழகியதும், பணி செய்வதும், வேகம் உடையதும், மலை போன்றதும் ஆகிய அயிராவதத்தின் மேல் வரும் வச்சிராயுதபாணி மனம் கலந்து விரும்புகின்ற தெய்வம் முருகவேள்.

வீசு கர முக ---

கரம் - ஒளி.  ஒளி வீசுகின்ற திருமுகத்தை உடையவர்.

கருணை மேருவே ---

முருகப் பெருமான் கருணையில் மேருமலைக்கு நிகரானவர்.  கருணைத் தெய்வம்.

கருத்துரை


முருகா!

மோனமாகிய கோயிலில் ஞானமாகிய மலர்தூவி,

புருவ நடுவில் நாட்டத்தைச் செலுத்தி,

ஞானபூசை செய்யத் திருவருள் புரிவீர்.


No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...