முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

-----

 

     "முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்" என்பது ஔவைப் பிராட்டியார் அருளிய "கொன்றைவேந்தன்" என்னும் நூலில் காணப்படும் அருமையான அறிவுரை.

 

இதன் பொருள் ---

 

     ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால்,பிற்பாகத்தில் தனக்கு அத் தீங்கு உண்டாகும். 

 

     முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்பட்டது. முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன் செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால்முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். என்றவேநன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம். 

 

     "மறந்தும் பிறன்கேடு சூழற்க,சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிகஎண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும்வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும்,"தீயவை செய்தார் கெடுதல்,நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் அதே "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும்,அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனாரால் சொல்லப்பட்டது காண்க.

 

     திருவள்ளுவ நாயனார் இதை மேலும் தெளிவாகவே "இன்னா செய்யாமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால்தமக்குத் துன்பங்கள்பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார்.

 

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."                 --- திருக்குறள்.

 

     நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் இந்தக் கருத்தைக் கண்ணகியின் வாயிலாகத் தெளிவித்து உள்ளார். மதுரையை எரித்து அழிக்கும் முன்னர்பாண்டியன் நெடுஞ்செழியன் தேவியைப் பார்த்து கண்ணகி கூறியதாக அமைந்து உள்ளது.

 

"கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்

யாவும் தெரியா இயல்பினேன்,ஆயினும்

முற்பகல் செய்தான் பிறன்கேடு,தன்கேடு

பிற்பகல்காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே"

 

இதன் பொருள் ---

 

     பேரரசனாகிய பாண்டியன் பெருந்தேவியே! கணவனை இழந்த தீவினைடையேன் ஆகிய நான் ஒன்றும் அறியாத தன்மையேன்.ஆயினும் பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தான் ஒருவன்,தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணல் உறும்தன்மையைடையன வினைகள்(என்பதை அறிவாயாக)

 

     பிறனுக்குக் கேடு செய்தான் ஒருவனுக்குச் செய்த அன்றே கேடு எய்தும் என்பது தோன்ற இவ்வாறு இளங்கோ அடிகளால் கூறப்பட்டது.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"இரணியனைக் கொன்று இருக்க,எண்ணினவர் கேடும்

அரன் வெகுளப் பின்நிகழும் ஆற்றால் ---  ஒருவர்

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."

 

      திருமால் நரசிங்கமூர்த்தியாகத் தோன்றி இரணியகசிபுவைக் கொன்றபின்தருக்குற்று அட்டகாசம் செய்வதைப் பிரமன் வாயிலாகக் கேள்வியுற்ற சிவபெருமான்,எட்டுக் கால்களையும் இரண்டு தலைகளையும் உடைய சரபப் புள்ளாக வந்து நரசிங்கத்தின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார் என்பது வரலாறு. திருமால் செய்த அட்டகாசத்தைச் சிவபெருமான் உடனேயே அடக்கினார்.

 

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"பிள்ளையார் வைப்பினில் தீப் பெய்வித்த மீனவன்தீத்

துள்ளு வெப்பு நோய் உழந்தான்,சோமேசா! - எள்ளிப்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யில் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்."

 

இதன் பொருள்---

 

      சோமேசா! திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்எழுந்தருளி இருந்த திருமடத்தில்சமணர்கள் தீக் கொளுவுவதற்குக் காரணனாய் இருந்த கூன் பாண்டியன் தீக் கொதிப்பு மிக்க சுரநோயால் வருந்தினான். ஆதலால்இகழ்ந்து பிறர்க்குத் துன்பங்களைஒரு பகலினது முற்பகுதியில் செய்வாராயின்தமக்குத் துன்பங்கள்அதன் பிற்பகுதியில்,அவர் செய்யாமல் தாமே வரும் (என்பது திருக்குறள் வாயிலாக அறியப்படுகிறது.)

 

     பாண்டி நாட்டை சமணக்காடு மூடவேகூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக வருந்தி என்று பாண்டியன் நல்வழிப்படுவான் என்று இருக்கும்கால்திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமெனக் குறையிரந்தமையான்பிள்ளையார் அவர்க்கு விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிடப் பிள்ளையார் அத்தீ, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம்புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க....

 

"பெருகும் அச்சமோடு ஆர்உயிர் பதைப்பவர்பின்பு

திருமடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து,

கருமுருட்டு அமண் கையர் செய் தீங்குஇதுகடைக்கால்

வருவது எப்படி ஆம்" என மனம் கொள்ளும் பொழுது."  

                                                       

இதன் பொருள் ---

     மேன்மேலும் பெருகும் அச்சத்துடன்அரிய உயிர் பதைக்கும் அவர்கள் இருவரும் (மங்கையர்க்கரசியாரும்குலச்சிறை நாயனாரும்) அதன் பின்பு திருமடத்தின் வெளியில் தீங்கு இல்லாமையைக் கேட்டதால் தெளிவடைந்து, `கரிய முருட்டு உடல் உடைய சமணர்கள் செய்த இத்தீங்கு இதன் மூலமாக விளைவது எப்படியாகுமோ?' என்று உள்ளம் கொண்ட பொழுது,

"அரசனுக்கு வெப்பு அடுத்தது" என்று அருகு கஞ்சுகிகள்

உரை செயபதைத்து ஒரு தனித் தேவியார் புகுத,

விரைவும் அச்சமும் மேல்கொளக் குலச்சிறை யாரும்

வரைசெய் பொன்புய மன்னவன் மருங்குவந்து அணைந்தார்.

 

இதன்பொருள் ---   

 

     `மன்னனுக்கு வெப்புநோய் உண்டாயிற்று\' என்று அவன் அருகில் இருக்கும் கஞ்சுகி மாக்கள் (காவலாளர்கள்) வந்து சொல்லத் துடித்துஒப்பில்லாத அரசமாதேவியார் அரசனது இருப்பிடத்தில் புகவிரைந்த செலவும் அச்சமும் பொருந்தக் குலச்சிறையாரும்,  மலை போன்ற அழகிய தோள்களையுடைய மன்னனின் அருகே வந்து சேர்ந்தார்.

 

"ஆன வன்பிணி நிகழ்வுழிஅமணர்கள் எல்லாம்

மீனவன் செயல் கேட்டலும்வெய்து உயிர்த்துஅழிந்து,

"போன கங்குலில் புகுந்ததின் விளைவுகொல்" என்பார்,

மானம் முன் தெரியாவகை மன்னன் மாட்டு அணைந்தார்.

 

இதன்பொருள் ---  

 

     இங்ஙனம் வன்மையாக அந்நோய் மூண்டு கிடந்த போழ்துசமணர்கள் அனைவரும் மன்னனின் நிலைமையைக் கேட்டலும்,பெருமூச்சு விட்டுவருத்தம் அடைந்தனர். அச்சமணர்கள், `கடந்த இரவில் செய்த செயலால் வந்த விளைவுதானோ இது?' என்று ஐயம் கொண்டுதமக்கு நேர்ந்த கீழ்நிலை (அவமானம்) முன் தெரியாதவாறு மறைத்துஅரசனிடம் வந்து சேர்ந்தனர்.

 

     முன்னிரவில் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் தங்கி இருந்த மடத்திற்குச் சமணர்கள் இட்ட தீயானது பாண்டிய மன்னனுக்கு உடனே வெப்பு நோயாக வந்து சேர்ந்தது என்று சமணர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் என்பதில் இருந்தேமேற்படி திருக்குறளின் பொருள் தெளிவாகும்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற"இரங்கேச வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

 

"பாந்தள் முனிமேல் படுத்த பரிச்சித்தன் தான்

ஏந்து துன்பம் உற்றன்,இரங்கேசா! - மாந்தர்

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்." 

 

இதன் பொருள்---  

 

     திருவரங்கநாதக் கடவுளே! வனத்தில் தவம் செய்திருந்த முனிகள்மேல் பாம்பைப் போட்டபரிசித்தன் என்னும் சந்திரகுலத்து அரசன்தான் சாபத்துக்கு ஆளாகி மிகுந்த துன்பம் அடைந்தான்ஆகையால்இதுமனிதர்கள்பிறர்க்குக் கெடுதிகளைகாலையில் செய்தால்அவர்களுக்குக் கெடுதிகள்அன்று மாலையிலேயேஎதிர்பாராதபடி தாமே வந்து சேரும் என்பதை விளக்குகின்றது.

 

     கருத்துரை--- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

 

     விளக்கவுரை--- சந்திரகுலத்துப் பரிசித்து என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது வனத்தில் ஒரு முனிவன் கண்மூடித் தவம் செய்திருந்தான். அது உணராமல் கண்மூடித் தன்மையாய் அவன் அந்த முனிவரைச் சில கேள்விகள் கேட்டான். அதற்கு அவர் விடை கூறாமைக்குக் கோபித்துக் கொண்ட பரிசித்தன் அங்கு மரித்துக் கிடந்த பாம்பு ஒன்றை எடுத்து அவர் கழுத்தில் மாட்டிச் சென்றான். பிறகு அம் முனிமகன் வந்துதந்தை கழுத்தில் பாம்பு மாட்டியிருக்கக் கண்டு கோபித்து,  "இது செய்தவன் இன்றைக்கு ஏழாம் நாள் தட்சன் என்னும் பெரும் பாம்பு கடித்து மாளக்கடவன்" என்று அருஞ்சாபம் இட்டான். அப்படியே அவனுக்கு மரணம் உண்டாயிற்று. இதனால் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது விசதமாகின்றது. (விசதம் - வெளிப்படை) நன்மையும் இப்படியே வருவதனாலும் அது எல்லாரும் விரும்பத் தக்கதுசெயற்கரியது. ஆகையால்தீமையே இங்கு எடுத்தோதினார். பிறர்க்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருப்பது நலம்.


     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்துசென்ன மல்லையர் பாடி அருளிய,"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"புறம்பியத்து மின்னைஉயிர் போக்கவந்தான் பட்ட

திறம் தெரியாதோ,சிவசிவா! - பிறழ்ந்து

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்."

 

     மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன்,உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பயம் என்னும் சிவத் திருத்தலத்திற்கு வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவிஇரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம்மடைப்பள்ளிகிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி புகன்றார் இறைவர்.. வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல (திருப்புறம்பயம்) இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும்தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஈசானிய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும்மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம். செட்டிப் பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....

"நெடியாது காண்கிலாய் தீ எளியைநெஞ்சே!

கொடியது கூறினாய்,மன்ற - அடியுளே

முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் கண்டு விடும்."     ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சேதீங்கின் பயனை அடைதற்கு நீண்ட நாட்கள் செல்லும் என்று நினைப்பதை விடு. உடனேயே பயனை அடைவாய். ஆதலால்யார்மாட்டும் தீங்குசெய்ய நினைத்தலை விட்டுவிடு. 

 

"பிறர்க்கு இன்னா செய்தலில் பேதைமை இல்லை,

பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டுத் - தனக்கு இன்னா

வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலில்

பித்தும் உளவோ பிற."                  --- அறநெறிச்சாரம்.

     

இதன் பொருள் ---

 

     மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும்அறியாமை வேறு ஒன்று இல்லைமற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்துதனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும்பிற அறியாமைதான் வேறு உண்டோநீயே கூறு.

 

"முன்னைச் செய்வினை இம்மையில்வந்து

     மூடும்தலின் முன்னமே

என்னை நீ தியக்காது எழும்மட

     நெஞ்சமே! எந்தை தந்தையூர்

அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள்

     கூடிச் சேரும் அணிபொழில்

புன்னைக் கன்னி களக்கரும்பு

     புறம்பயம் தொழப் போதுமே."    --- சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     அறியாமையை உடைய மனமே!  ஒருவர் முற்பிறப்பில் செய்த வினைஇப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின்அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பேஎமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய ,அன்னப் பேடைகள்அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டுபின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு .  

 

"முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

    மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்,

    சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,

அந்தி வெண்பிறை சூடும் எம்மானே!

    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!

எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய்,

    இடைமருது உறை எந்தை பிரானே.    ---  சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனேதிருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனேஎன் தந்தையே! திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனேமுற்பிறப்பில் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால்அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின.  நன்மை தீமைகளைச் சிந்தித்துஉலகப் பற்றை அகற்றி,உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதவன் ஆயினேன்.உலகியலிலும்இரப்பவர்கட்கு அவர் விரும்பியதது ஒன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன் எனக்குநீஉய்யும் நெறியை வழங்கியருளாய்.

 

"பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தனஇம்மை வந்து

சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே,வந்து அமரர் முன்னாள்

முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடி வணங்கும்

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்டநன்னெஞ்சமே".  --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாகிய நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?

 

"பொற்பகல் சிகரியுள் பொருந்தி ஆழ்பவர்

அற்பகல் நுகரும் மீன் அவரை நுங்குமால்;

முற்பகல் ஓர்பழி முடிக்கின்,மற்று அது

பிற்பகல் தமக்கு உறும் பெற்றி என்னவே".--- கந்தபுராணம்.

 

     முற்பகல் இன்னா செய்தவர்பிற்பகல் இன்னல் உற்று அழிவர் என்னும் தன்மை போல்போரில் அழிந்து கடலில் வீழ்ந்த தானவரை,மீன்கள் நுங்கின. முன்பு தம்மை உண்ட அவர்களைஇன்று அவை தின்று களித்தன. 

 

"விடுக இந்த வெகுளியைப் பின்பு உற,

அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே,

வடுமனம் கொடு வஞ்சகம் செய்பவர்

கெடுவர் என்பது கேட்டு அறியீர்கொலோ.  --- வில்லிபாரதம்அருச்சுனன் தவநிலைச் சருக்கம்.

 

இதன் பொருள் ---

 

     நீங்கள் கொண்ட கோபத்தை இப்பொழுதே விடுவீர்களாகவனவாச அஜ்ஞாத வாசங்களின் பின்பாகஉம்முடைய பல பராக்கிரமங்கள் வெளிப்படும்படி பகைவர்களைக்  கொல்லுவீராககுற்றத்தையுடைய மனத்தை உடையவர்களாய்வஞ்சனை செய்பவர்கள் கெட்டே விடுவர் என்னும் வார்த்தையை நீங்கள் கேட்டு அறியவில்லையா?

 

    மனக் குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமை செய்பவர் கெடுவர். ஆதலால்இப்போது சீற்றங்கொண்டு துரியோதனாதியரைக் கொல்லுதல் ஆகாது. 'கெடுவான் கேடு நினைப்பான்என்ற பழமொழிக்கு ஏற்பதுரியோதனாதியர் கேடு நினைத்தலால் தாமே கெடுவார்: அவரைக் கெடுக்க வேணும் என்றும்  இப்போது வெகுளி கொள்ளவேண்டாம் என்றும் பாண்டவர்களின் சினத்தைத் தவிர்க்கும் பொருட்டு கண்ணன் இவ்வாறு சொன்னான். 

 

     "பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும்" என்ற திருக்குறளின் கருத்து மிகவும் பேசப்படுகிறமேற்கோளாகச் சொல்லப்படுகிற ஒன்று.  ஆனால் பெரும்பாலும்சொல்பவர்களே பழக்கத்தில் கொண்டு வர மறந்துவிடுவதும் உண்டு. ஒருவர் பிறர்க்கு முற்காலத்தில் செய்த துன்பமானதுஅவருக்கே தீம்பாய் பிற்காலத்தில் வந்து சேரும். 'இட்டார்க்கு இட்ட  பயன்எனறு ஒரு பழமொழி உண்டு. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்தினை விதைத்தவன் தினை அறுப்பான்என்னும் பழமொழியும் உண்டு. முற்பகல் செய்தவை என்பதுஇப்பிறவியிலே செய்தவை மட்டுமல்லாதுமுந்தைய பிறவிகளில் செய்யப்பட்டவையும் ஆகும். பிற்பகல் என்பதுமுந்தைவினை இப்பிறப்பிலும்பின்வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வருவதையும்வரப்போவதையும் குறிப்பது.

 

     வள்ளல் பெருமான்முந்தை வினையால் இப்பிறப்பில் தான் நிந்தையுறும் நோய்க்கு ஆட்பட்டதை எண்ணி வருந்திப் பாடுகையில்திருவொற்றியூரின் எழுத்தறியும் பெருமான் ஆகிய சிவபிரானைக் குறித்துப் பாடுவது இக்குறளின் கருத்ததினை ஒத்து இருப்பது காணலாம்.

 

"சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை      

முந்தை வினைதொலைத்து உன் மொய்கழற்கு ஆள் ஆக்காதே 

நிந்தை உறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ?     

எந்தை நீ,ஒற்றி எழுத்தறியும் பெருமானே!"

 

இதன் பொருள் ---

 

     திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் எழுத்தறியும் பெருமானே மனம் கலக்கம் உற்று தெளிவு இழந்து உள்ள நாயினேனை வருத்துகின்ற பழவினையைப் போக்கி,உன் வீர கண்டையணிந்த திருவடிக்குத் தொண்டன் ஆக்காமல்,கண்டார் இகழும் நோய் வகை வந்து அடியேனை வருத்துமாறு எந்தையாகிய நீ என்னை விடுதல் நீதியாகுமா

 

 

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...